வசியம் அல்லது செட்யூஸ்
வசியம் அல்லது செட்யூஸ்
இந்த பிரபஞ்சத்தில் ஆண் என்கிற உயிரி உள்ளளவும்,பெண் என்கிற விலங்கு உள்ளளவும் ஒருவரையொருவர் வசியம் செய்ய முயன்று கொண்டுதான் இருப்பார்கள்.இப்படி இதனை இல்லாமலாக்குவதற்கான ஒரு மந்திரமும் ஒருவரிடம் கிடையாது .அடிப்படை அன்பும் காதலும், உறவும் கலவியும் இதன் பாற்பட்டவையே.வயதோ நெறிகளோ அதற்கு ஒருபோதும் பொருட்டாவதில்லை.
இந்த ஆதாரமான அடிப்படை உணர்ச்சியை கைவிட்டு விட்டது போன்று பாசாங்கு செய்ய முடியுமே தவிர அனைத்து ஆற்றல்களுக்கும் அடிநாதமாக விளங்குவது இது.ஆண் எப்போதும் வசியம் செய்ய முயன்று கொண்டிருப்பதையும் பெண் ஆணை வசியம் செய்ய முயன்று கொண்டிருப்பதையும் ஒன்றுமே செய்வதற்கில்லை.அவர் இப்படி செய்யலாமா என்றால் ? அவள் இப்படி செய்யலாமா என்றால் ? அதற்கு விடையேதும் கிடையாது.
சக்தியும் சிவனும் மேற்கொண்டிருக்கும் திருவிளையாடல் இது.அனைத்து மாயையும் புகைமூட்டத்துடன் கிளம்புகிற தாய் நதி இது.இந்த ஆதார உணர்ச்சியிலிருந்து விலகும் எவர் ஒருவரும் அவர் தம் அளவில் வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் நாளடைவில் அன்பற்றவர்களாகச் சுருங்கி விடுகிறார்கள்.இதற்கு அர்த்தம் ; காண்போர் அத்தனை பேரையும் கூடிக் கலப்பது என்பதல்ல .அப்படி இதனைப் புரிந்து கொள்வோருக்கு இந்த அடிப்படை உணர்ச்சியின் பெருமதிப்பு எதுவுமே விளங்காது.
கடல் அடியில் கோலமிட்டு, வசீகர கோலங்களை வரைந்து தொடர்ந்து தனது இணையை செட்யூஸ் செய்கிற மீன் இனம் ஒன்றிருக்கிறது.அது வரைந்த கோலங்கள் எதுவும் மனிதர்களால் வரையும் சாத்தியங்கள் கொண்டதல்ல என்று சொல்கிறார்கள்.ஒரு கோலத்தை அழித்து மீண்டும் அது மறுகோலத்தை உண்டு பண்ணுகிறது.கோலம் சரியில்லாமல் போனால் ; இணை அதனை நிராகரிக்கிறது.நிராகரிப்பு மேலும் சிறந்த கோலத்தை வரைந்து காட்டு என்கிற கோரிக்கையே.மீண்டும் அது வரைகிறது.கடலடியில் சதா இவ்வாறான விளையாட்டு ஒன்று நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.இது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான விளையாட்டு.சாதாரண கோலத்தை ஏன் இணை மீன் நிராகரிக்கிறது ? நமது பார்வைக்கு நிராகரிக்கப்பட்ட கோலமும் அழகாகத்தான் தெரிகிறது.ஆனால் இணை அதில் அன்பின் தீவிரக் குறைவைக் கண்டுபிடித்து விடுகிறது.அன்பின், காமத்தின் தீவிரக் குறைவில் வரையப்படும் கோலம் நிராகரிப்பிற்குரியது.அந்த தீவிர நிலையை அங்கே அந்த இருவர் மட்டுமே உணரவும் பரிமாறிக் கொள்ளவும் முடியும் .பிறருக்கு அதில் பொறுப்பேதும் கிடையாது.இந்த விஷயத்தில் யாருக்கும் யாரும் முதன் மந்திரிகள் இல்லை.ஒவ்வொரு தீவிர கதி நிலைக்கும் அதே தீவிர நிலையில் வேறொரு இணை காத்திருக்கிறது
எனக்கு ஆர்வமூட்டிய பாலியல் வழக்கு ஒன்று ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் செய்தி ஊடகங்களில் பிரபலமானது.ஒரு ஆண் நல்லவன் கதாபாத்திரம் .கடுமையான பாலியல் புதரில் சிக்கிக் கொண்ட ஒரு பெண்ணை மீட்கிறான்.இருவரும் இணைந்து ஊடகங்களுக்கு எத்தனை பேர் புதரின் பின்னணியில் இருந்து அந்த பெண்ணின் கறியை பச்சையாகத் தின்றார்கள் என்பதனை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துகிறார்கள்.அந்த நல்லவன் கதாபாத்திரம் அந்த பெண்ணை தனது என்ஜிவோ விடுதியில் வைத்து பாதுகாக்கிறான் . அவன் ஊடகங்களில் பேசும் போது அவனுடைய ரத்த நாளங்கள் அனைத்தும் விடைக்கின்றன.பெண்களுக்கெதிரான அனைத்து பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றியும் அவன் மிகவும் நன்றாக பேசினான்.அவன் பேசிய அனைத்துமே புறக்கணிக்க இயலாத உண்மைகள் நிறைந்தவை .ஒரு வாரத்தில் அவனுடைய விடுதியில் இருந்து மீண்டும் தப்பித்துச் சென்ற அந்த பெண் ; தன்னை அவன் எப்படி மாமிசமாக புசித்தான்; பின்னர் எத்தனை பேருக்குப் பகிர்ந்தான் என்பதை ஊடகத்தில் பேசிக் கொண்டிருந்தாள்.நமது அத்தனை பேருடைய நல்லவன் கதாபாத்திரங்களும் இந்த அளவிற்கு பரிதாபமானவையே இந்த விஷயத்தில் . இதில் மேதையென்றோ ,ஞானியென்றோ ஒரு வேறுபாடுகளும் இல்லை.
பாலியலும் காமமும் மனித சமூகத்தில் மிகவும் சிக்கலான விஷயங்கள்.பொது நெறிகளில் வைத்து உரையாட விளையும் போது ஒவ்வொருவரும் பிறருக்கு போலீஸ்கார் ஆகிறோம் .
எங்கள் பகுதியில் பேர்பெற்ற ஒரு மூத்திர சந்து உண்டு.மூத்திர சந்து என்றால் மூத்திர சந்து தான்.சாதாரணமானவர்களும் அங்கே வந்து செல்வார்கள்.அவர்கள் யாருக்கும் அந்த மூத்திர சந்தின் பிற உருப்படிகளை அது கண்ணில் காட்டாது.அப்படி வருகிறவர்கள் யவருக்கும் அது தேவையுமில்லை.அவர்கள் வந்து கடந்து செல்வார்கள்.ரகசிய உலகத்திற்கும் அவர்கள் பொருட்டல்ல.பொருட்படுத்துகிறவனுக்கு மட்டுமே அது பொருட்டு.ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை வந்து அங்கே பிராந்தி பாட்டிலில் தன்னுடைய சிறுநீரை பிடித்து வைத்து விட்டுப் போகிறவர்கள் உண்டு.அது எதற்கான குறியீடு என்பதை தேவையற்றவர்கள் அறிய கூட தேவையில்லை.ஆனால் அவனே அந்த முத்திரச் சந்தின் எஜமானன் .அவனிடம் பேச்சு கொடுக்க வேண்டும் ,எதிர்வினையாற்ற வேண்டும் என்கிற தூண்டுதல் உங்களுக்கு ஏற்படுமாயின் மெல்ல அவனுடைய மாயலோகத்திற்குள் சரிந்து விழத் தொடங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
இந்த உலகத்தில் ஏராளமான விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.நடந்து கொண்டே இருக்கும்.இவற்றை நல்லவை தீயவை என நீங்கள் பிரித்துக் கொள்ளலாம்.அது உங்களுடைய சவுகரியம்.ஆனால் இங்கே நடக்கும் அனைத்திற்கும் மிகவும் வலுவான காரண காரியங்கள் இருக்கின்றன.எதுவும் சாதாரணமாக வந்து அல்லல்படுவதில்லை.தீமையாவதும் இல்லை.உங்கள் தேர்வில் உங்கள் மகிழ்ச்சியில் தெளிவு இருக்குமாயின் ஒரு துன்பமும் இல்லை.உங்கள் தெருவில் ஒரு கொலை நடக்கிறது பட்டப்பகலில் என்று வைத்துக் கொள்ளுங்கள்,அதற்காக மறுநாளில் நீங்கள் கொலை செய்யப்படுவீர்கள் என்று அர்த்தமில்லை.ஒரு போதும் நீங்கள் கொலை செய்யப்பட மாட்டீர்கள்.அதன் இலக்கு வேறு . எலலாவற்றிற்கும் இலக்கு உண்டு.அந்த உலகிற்குள் வலிய நுழைந்து குடைச்சல் தராத வரையில் இலக்கு உங்களிடம் தன் முகத்தைக் காட்டுவதில்லை.
அரச மரங்களையும் ஆலமரங்களையும் கவனித்துப் பாருங்கள்.அவை மிகப்பெரிய கட்டுமானங்களை தின்று செரித்து மண்ணாக்கி துப்புவதற்குப் பிறந்தவை.வாழ்க்கை உருவாக்காத நிர்பந்திக்காத எந்த இருளுக்குள்ளும் மயக்கம் கருதி செல்ல முயலாதீர்கள்.அதுவே மிகவும் ஆபத்தானது .இது பாலியலுக்கும் பொருந்தும்.
பாலியல் வழக்குகள் ஒருவிதத்தில் கஞ்சா வழக்குகளுக்கு நிகரானவை.சமயங்களில் அவை சரியாகவும் இருக்கக் கூடும்.ஏமாற்றங்களில் , பழிவாக்குதல்களில் இருந்தும் வெளிப்படக் கூடும்
காதலில் காமத்தில் பெண் ஆணை பொறுப்புணர்ச்சிக்குள் நகர்த்த விருப்புபவள்.அதில் அடையும் ஏமாற்றங்கள் அவளை பழிவாங்குதலுக்கும் தூண்டும்.
சமூகத்தில் முன்பாக நடிப்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இருவருக்குமே கைவந்த கலை.தீராது.
இதில் விஷேசம் என்னவெனில் ஒருவர் மீது ஆணோ ,பெண்ணோ ; பாலியல் பழி சுமத்தப்படும் போது ,அந்த தீவிரம் தேவைப்படுகிற மற்றொரு எதிர் இணை இனம் கண்டு அவரை நோக்கி வேகம் வரத் தொடங்கி விடுகிறது.புதிய கிளாமரோடு புறப்படுகிறது அந்த புதிய விலங்கு மீண்டும் 🤣
Comments
Post a Comment