பெரியாரியர்களின் தேவை

பெரியாரியர்களின்  தேவை


கௌசல்யா ,சக்தி திருமணத்தை முன்வைத்து பல்வேறு விதங்களில் யோசித்துப் பார்த்தேன்.ஒவ்வொரு திருமணத்திற்கும் பின்னால் ஒரு சமூகம் இந்திய வாழ்வில் அவசியப்படுகிறது.கௌசல்யா போல பெருந்துயருள் நுழைந்து விடும் குழந்தைகளுக்கு ஆதரவாக நிற்கும் பொதுச் சமூகங்கள் எவையேனும் நம்மிடத்தில் இருக்கிறதா ? இந்த திருமணத்தில் பல்வேறு தரப்பினர் நின்று கொண்டிருந்தாலும் கூட பெரியாரியர்களே சூழ்ந்து நின்று காக்கிறார்கள் என்பது வெளிப்படை .பெரியாரியர்களின் தேவை இன்னும் முடிவடையவில்லை என்பதனையே இது காட்டுகிறது.

பெரியாரியர்களின் சித்தாந்தங்கள்,கொள்கைகள் ,பிரகடனங்கள் எவற்றின் பேரிலும் எனக்கு நம்பிக்கையில்லை.அதற்கு காரணம் அவர்களை திட்டமிட்டு மறுப்பதும் அல்ல.அதற்கான ஒரு அவசியமும் எனக்கு இல்லை.அவர்களின் முழக்கங்கள் பலதும் தட்டையான புரிதல்களில் இருந்து வெளிவரக்கூடியவை .வாழ்வைப் பற்றிய மிகவும் எளிமையான முன்முடிவுகளை ஏற்படுத்துபவை என்பதனால் தான்.ஆனால் அவர்களுக்கும் இங்கே ஒரு சமுகமிருக்கிறது,அறவுணர்ச்சியிருக்கிறது.கலாச்சாரம் இருக்கிறது.பிறருடைய போலியான நீதியுணர்ச்சியைக் காட்டிலும் செயல்பாடுகளில் அவர்களுடைய நீதியுணர்ச்சி மேன்மை பொருந்தியதாக இருக்கிறது என்பதனை கௌசல்யா ,சக்தி திருமணம் உணர்த்துகிறது.இது பிற இதர தரப்புகளாலோ,சமூகங்களாலோ இயல கூடிய காரியமல்ல.

எந்தவொரு குழுவும் சமூகத்தில் இல்லாத தேவைகளின் மீது நின்று கொண்டிருக்கவே இயலாது.முற்றிலும் தனிமைக்கும்,சமுகமின்மைக்கும் தள்ளப்படுபவர்களுக்கு இலக்கியம் கலை எல்லாம் இருக்கின்றன.தற்செயலாக சமூக வாழ்விலிருந்து புறந்தள்ளப்பட்டு ,மீண்டும் வாழ்வில் இணைய விரும்பும் கௌசல்யா போன்றோருக்கு இங்கே என்ன இருக்கின்றன ? இந்த காரியத்தில் நண்பர் எவிடன்ஸ் கதிர்  மீதும் மதிப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த திருமணத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் மிகவும் ஆபாசமானவை.அவர் ஏன் தன்னை காதலிக்கவில்லை என்பது போன்ற லோபர் லெவல் கீழ்தரங்களிடம் இருந்து வெளிப்படுபவை ஒருவகை என்றால்,அவருக்கு சம்பந்தம் தாங்கள்தான் பார்க்க வேண்டும் என்பது போல தன்னிச்சையான அப்பா ஸ்தானம் எடுத்து கொள்பவர்களின் பரிதாபகரமான வகை மற்றொன்று.

தீர்க்கமான முக்கியமான  செயல்களுக்கு எழக்கூடிய  தீய எதிர்ப்புகள் ,அவதூறுகள் அத்தனையும் இந்த செயலிலும் எழுகின்றன.இந்த காரியம் ஒரு அருங்காரியம் என்பதற்கான சான்றுகள் அவை.

இவற்றிற்கெல்லாம்  இந்த தம்பதிகள் மிகச் சிறப்பாக வாழ்வதன் மூலம் மட்டுமே பதில் சொல்ல முடியும்.ஏராளம் இடர்கள் வந்தாலும் எதிர்கொண்டு வாழுங்கள்.வாழ்க்கை பல சமயங்களில் பதிலாக மாறிவிடும்.பொறுமை,விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகள் பிறரைக் காட்டிலும் உங்களுக்கு அதிகமாக தேவைப்படும்.

தைரியத்துடன் எதிர்கொண்டு வாழுங்கள்.வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன் 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்