ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ?


ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ?

1

சாலையின் மத்தியில் ஆலிலை ஒன்று
சற்றே பழுப்பு சற்றே பச்சை
நிமிர்ந்து நிற்கிறது
அந்த பக்கமாக வாகனம் செல்கையில்
இந்த பக்கமாக சுழன்று
திரும்புகிறது
இந்த பக்கம் வாகனத்திற்கு அந்த பக்கம்

ஒற்றைக்கால் நடனம்

என்ன நினைத்தானோ சிறுவன்
ஊடே புகுந்து
இலையை
ஓரத்திற்கு உயரே
எறிந்தான்

நடனம் இப்போது மேலே
பறக்கிறது.

2

ஒன்பது மகன்களை பெற்ற
அப்பாவின் இளைய மகன்
அப்பாவின் ஒரு கைமட்டும் பறந்து செல்வது போல
வாகனத்தில் விரைகிறான்
அப்போதுதான் கவனித்தேன்
மீதமுள்ளோர்
மீதமுள்ள அவயங்களாயிருப்பதை

ஒன்பது அவயங்கள்
பதினெட்டு கைகள் கால்கள் கண்கள் செவிகள்
ஒரே புருஷன்

3

ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ?
மிச்சம் வைத்த ஆசைகள்
மிச்சம் வைத்த தகிப்புகள்
மீதமிருக்கும் தாகங்கள்
மீதமிருக்கும் வஞ்சம்
உறுப்பு தேடித் கொண்டிருக்கின்றன
ஒவ்வொன்றும்

4

சரியாகவே வாழ்ந்ததாகச் சொல்லி ஒரு பிழை விட்டீர்கள்
அந்த பிழையே நானாக வளர்ந்து பெரிதானது
இந்த பிழையைக் கொண்டு போய் அந்த இடத்தில்
நட்டு வைக்க வேண்டும்
இல்லாமல்
தர்க்கம் பண்ணுவதில்
ஒரு பலனும் இல்லை

5

நீ செய்ததை நீ மட்டுமே
எடுக்க முடியும்
நீ செய்தது சீறுமானால் அதுவும் நீ செய்ததுவே
நீ செய்தது பணியுமானால் அதுவும் நீ செய்ததுவே

6

யாருக்கோ நடப்பவையெல்லாமே
எல்லோருக்குமே நடக்கும்
இன்பமானாலும் சரிதான்
துன்பமானாலும் சரிதான்

எடுத்தகற்ற விரும்பினால்
யாருக்கோ நடக்கையில் எடுத்தகற்றவேண்டும்
இன்பமென்றாலும் சரிதான்
துன்பமென்றாலும் சரிதான்

7

அதர்மம்
காத்திருந்து அழும்
அப்போதும் அதற்கு அது
தனது அதர்மம்
என்பது
விளங்காது

அதனால்தான் அது அதர்மம்

8

என் கையில் எல்லாம் ஒழுகுகிறது
என்னது இது சிவன் கை
பாத்திரமல்லவா ?

என் கையில் ஏன்
இருக்கிறது

9

பிரம்மகத்தி தோஷத்திற்கு பரிகாரம்
ஜீவகாருண்யம்

10

எம தர்மனைப் பார்த்துத் திரும்பியவன்
சொல்கிறான்
எம தர்மனும்
தர்மன்தான் என்பதை

###

முற்றத்தில் நிலவு விழும் போது வேறு எங்கும் செல்லாதே

1

தூரத்தில் இருக்கிறேனா
அருகில் இருக்கிறேனா என்பது
தூரத்தில் இருக்கிறாயா அருகில் இருக்கிறாயா
என்பதை பொறுத்தது

2

சன்னிதியின் முன்பு நேருக்கு நேராக நிற்கையில்
அப்பட்டமாக தெரிந்து விடுகிறது
இன்னும் எவ்வளவு தூரம் என்பது

3

ஆளில்லாத சன்னிதியில்
ஏராளம் கூட்டம்
யாரோ வருவதற்காக
நடை திறந்திருக்கிறது

4

விளக்கு வைத்தாயிற்று
அலங்காரம் செய்தாயிற்று
அடியவர் வருகிறாரா என்று பெருமாள்
பார்த்துக் கொண்டிருக்கிறார்

5

எவ்வளவு பேர் வந்தாலும் பின்னர்
யாரோ ஒருவர் வரவேண்டியிருப்பது
பெருமாளுக்கு
மட்டுமில்லை

6

குழந்தைகள் வருவதை பெருமாள்
தூரத்திலிருந்தே
பார்த்து விடுகிறார்

7

நான் என்னுடைய கவிதைகள் மீது
அமர்ந்திருப்பவன்
இத்தனைக்கும் என்னுடைய கவிதைகள் எதுவும்
என்னுடையவையும் அல்ல

8

மனமே முருகனின் மயில் வாகனம்
என்பது
முருகனின் மனதைக் குறிக்கிறதா
வந்தவன் மனதைக் குறிக்கிறதா
வந்தவனும் முருகனும் இணைந்த மனதைக்
குறிக்கிறதா

9

மனத்தைப் பயிர் செய்
பூமியெல்லாம்
விளையும்

10

தூரம் என்பது
இன்னும் தீராத கரை
கறையென்றும் சொல்லலாம்

12

விஷத்தைக் குடிக்கிறேன்
தொண்டையோடு
நிறுத்தி விடுகிறார்
பெருமாள்

13

கறை தீர்ந்தவன்
கண்டடைந்து விடுகிறான்

14

முற்றத்தில் நிலவு விழும் போது
வேறு எங்கும் செல்லாதே

15

குழந்தைகள் பொல்லாதவர்கள் என்பதால்
நாம் பெரியவர்களாகிக் கொண்டிருக்கிறோம்

16

எல்லா கதவும் அடைத்திருக்கிறது என்றவனிடம்
பரவாயில்லை
ஒரு கதவு திறக்கும் சென்று விடுவாய்
எனக்கு எல்லா கதவும் திறந்திருக்கிறது
எந்த கதவில் செல்வது என்று தெரியவில்லை
என்கிறான் வேறொருவன்

17

மூடியிருக்கிறது என நினைத்துக் கொண்டிருப்பது
பிரேமை
கையை எடுத்துத் தொடாதவரையில்
எந்த கதவும்
திறப்பதில்லை

18

எந்தக் கதவும் வெளியே இல்லை
உள்ளேயிருக்கிறது
திறந்து பார்
திறக்கும்

19

இசையில் சப்தமிருக்கிறது
இசைக்கு வெளியிலும்
ஒரு சப்தம் இருக்கிறது

நாக்கில் சுவையிருக்கிறது
நாக்கிற்கு வெளியிலும்
அதே சுவையிருக்கிறது

20

யாரிடம் பேசினால் இன்பமோ
அந்த இன்பம்
இருவருக்கும்
உரியது

21

எடுத்துக் கொள்ளச் சொல்லி விட்டு விட வேண்டும்
வேண்டியவன் வந்து சேர்வான்
மணம் பிடித்து

###

இல்லாத போது வருகிறவன்

1

இல்லாத போது வருகிறவன்
எனது இருப்பையும் இன்மையையும்
ஒருசேர காண்கிறான்
நான் அவனுடைய
இருப்பை மட்டும் காண்கிறேன்

2

பயணம் இவ்வளவு குறுகியது
என்பது தெரிவதற்குள்
பாதி வழி
கடந்து விட்டேன்

3

உப்பளத்தை ஒட்டிய ஊரில்
ஒரு பகல் இருக்கிறது
அந்த பகலை தனியே கடக்கிறான் ஒருவன்

தென்னைகளின் ஊரில் பகல்
நிழல் இருள் தனிமை

தனிமைக்குள் ஒரு பகல்
எப்படியிருந்தால் என்ன

ஆனால் மதிய வெயிலில்
கடற்கரை நாயின் தனிமை
அகோரமாக
உச்சியைப் பிளக்கிறது

4

இருக்கும் போது வந்தவன்
அவன் இருப்பை காண்கிறான்
என்னை எனதிருப்பை காணச் செய்கிறான்

5

உறுதுணைக்கு ஒரு சிட்டுக் குருவியை
எடுத்துச் செல்லுங்கள்
பயணம்
நல்லபடியாக
இருக்கும்

###

ஆளில்லாத கடையில்
ஆளில்லை
பையன் வந்து அமர்ந்திருக்கிறான்
அப்போதும்
ஆளில்லை என்றே
சொல்கிறது கடை
பொருட்களை வாங்க வருவோர்
ஆளில்லையா
எனக் கேட்கிறார்கள்
ஆளில்லை
என்கிறது கடை

பையன் அமர்ந்திருக்கிறான்
இல்லாத ஆளின் இருப்பை
ஓங்கி
கத்திக் கொண்டிருக்கிறது கடை
இல்லாத ஆள் ஏன் இருந்தான்
என்பதனையும்
சேர்த்து

###

சொன்னவை

நோயற்ற உடல் அழகு
அகந்தை உடையாதவன் அரை மனிதன்
உடைந்து சிதறியவன் பிராந்தன்
உடைந்து பாதி பிழைத்துக் கொண்டவன் கவிஞன்
உடைந்தாலும் பெண் பேய் உடையாதிருந்தாலும் பேய்
உடையாதறிபவள் தெய்வம்
பேயகன்ற மனம் அழகு

நானிருப்பது அகந்தை
நானில் சிவம் ஆனந்தம்

உடையாதவன் பேசுவது குப்பை
உடைந்தவன் பேசுவது குழப்பம்
உடைந்து மீண்டவன் சொல்வது வாக்கு

நெல்லையும் வயலையும் விற்காமல் கல்வியில்லை
தலைமுறை நிலக்கிழார் தூக்கிட்டுச் சாவார்
வீட்டுத் தெய்வங்கள் நிலைக்கெட்டோடும்

பழையது பேசுவோனுக்கு
பழஞ்சோறும் கிடைக்காது
பழம்பெருமை
புதைச்சேறு

மீள நினைப்பவனுக்கு கலையிலக்கியம்
மீளாதிருப்பவனுக்கு மதம்

தானாய் நடிப்பவனுக்கு
தன் கையும் உதவாது

பாவனை அகன்றதா ?
பாதி உண்மை
விளங்கிவிடும்

###

எப்படியும்
புறப்பட்ட இடத்திலிருந்து
ஒரு சுற்று
சுற்றி வரவேண்டியிருக்கும்
எப்படிச் சுற்றினாலும்
சரிதான்

###

எதிலிருந்து உங்களுடைய வாழ்க்கையை
கண்டுபிடித்து விடுவீர்கள் என்று
சொல்லவெல்லாம் முடியாது
எதிலிருந்தாவது
கண்டுபிடித்து விடுவீர்கள்
ஒரு பொறி கிடைத்தது போல
புலப்பட்டுவிடும்
அதற்காக
எதையேனும் செய்து
கொண்டேயிருக்க வேண்டும்

அதில் கிடைக்குமா என்றால் கிடைக்காது
இதில் விளையுமா என்றால் இல்லை
செய்து கொண்டிருப்பதன் இடைவெளியில்
இருக்குமது

###


அந்த இடத்தில் நிற்கையில்
மீண்டும் என் பிள்ளைப்பருவம் துளிர்க்கிறது
துளிர்த்து வனமாகிறது
அதற்காகவே
மீண்டும் மீண்டும் அந்த இடத்திற்குச் செல்கிறேன்
மற்றபடியாக
அந்த இடத்திலொன்றும் என் பிள்ளைப்பருவம்
இல்லை

###

ஒருவருக்கு பரிசு கிடைக்கும் போது
மனம் சொல்கிறது எனக்கு கிடைத்திருக்க வேண்டிய பரிசு
ஒருவரைப் பாராட்டும் போது
இல்லை நானே பாராட்டப்பட வேண்டியவன்

அவனிடம் ஒரு பெண் கொஞ்சுகையில்
இல்லை அவள் என்னிடம் கொஞ்சுவதே
முறையாக இருந்திருக்கும்

இப்படியாகச் சென்று
நானே முதல்வராக இருந்திருக்க வேண்டும்
நானே பிரதமராக இருந்திருக்கவேண்டும்
என ஓங்கி சப்தமிட்டுக் கொண்டிருக்கும் ஒருவர்
ஆளில்லா முச்சந்தியை
ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்
இரவுக் காவலுக்கு
நாற்பது நாய்ப்படைகள்

மற்றொருவர் உண்மையாகவே
நானே முதல்வராகவும் நானே
பிரதமராகவும்
ஆகிவிட்டார்

இரண்டிற்கும்
ஒரே தகுதியே
வச்சா குடுமி
செரச்சா மொட்ட

###

நான் நடந்து வந்த பாதைகள்தாம் இவையெல்லாமே
கல்லும் முள்ளுமாக கடந்து
நெருங்க நெருங்க
பல்லக்கில்
வந்தது போலும்
இருக்கிறது

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1