வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி

வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி ; மனதால் எழுந்து வந்த பாதை



பெரும்பாலானவர்களை பாதித்தவர் கல்யாண்ஜி . கவிதை எழுத விரும்பும் ஒருவர் அவரால் பாதிப்படையவில்லையெனின் இனி பாதிப்படைவார் .இரண்டு வகையினர் இங்கே இருக்க முடியும் .ஒன்று அவரால் ஏற்கனவே பாதிப்படைந்தவர் இல்லையெனில் இனி பாதிப்படையவிருக்கிறவர்.அன்றாடத்தின் பல நுட்பங்களை அவர் வாசகனுக்கும் கடத்திவிடக் கூடியவர்.சீண்டும் பண்பும் கொண்டவர்தான் என்றாலும் அது அவரில் மிகவும் சிறிய பகுதி.அன்பால் மூடியிருக்கும் பகுதி அது.தமிழில் வாசகர்கள் அதிகம் உள்ள கவிஞரும் அவரே.

கவிஞர்களில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படையாகப் பேசியவர்கள் மிகவும் குறைவு.நவீனத்துவ விமர்சகர்கள் அவரை பொருட்படுத்தி பலமாக நிராகரித்தார்கள்.அதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம்.இந்த நிராகரிப்பையும் மீறி அவர் ,தான் என்ன செய்ய வேண்டுமோ அதனை தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தார்.

தமிழ் சூழலில் இதழியல்,விமர்சனம் கலையிலக்கியம் எல்லாவற்றிலுமே ஏராளமான பாரபட்சங்கள் உண்டு.அவற்றில் பல கண்களுக்கு புலப்படாதவை.சாதி,மதம் ,கருத்தியல்,கொள்கை ,கட்சி என நிறைய . இவற்றையெல்லாம் ஒருவர் எதனால் எதனால் ? என்று தேடித் கொண்டேயிருக்க முடியாது.அடைப்படையில் தமிழர்கள் நாகரிகமான வேடம் தரிப்பவர்களே அன்றி நாகரீகமானவர்கள் கிடையாது.நாகரிகம் என நான் சுட்டுவது ஒருவர் எழுதுவதால் நமது உள் உலகை புரட்டிப் போடுகிறார் அல்லது மாற்றியமைக்கிறார் ,அல்லது உள் உலகுடன் தொடர்பு கொள்கிறார் எனில் அதனை மறைக்கக் கூடாது.அவர் அழுக்குச் சட்டையணிக்கிறார் என்பதற்காகவும் மறைக்கத் தேவையில்லை, புதுத் துணி உடுத்துகிறார் என்பதற்காகவும் மறைக்கத் தேவையில்லை.இங்கே மறைப்பவர்களில் பலர் வெளிப்படுத்தினால் இன்னாருக்கு எதிராகப் போய்விடுமோ என கருதுபவர்கள். இத்தகைய தந்திரங்கள் எதற்குமே இலக்கியத்தில் வேலையில்லை.

கடும் நிராகரிப்பிற்கு பதிலாகச் செய்வதற்கு ஒரேயொரு காரியமே உண்டு.நிராகரிக்க இயலாத இடத்திற்கு நகர்ந்து கொண்டேயிருப்பது.கடும் நிராகரிப்பைப் போல ,புறக்கணிப்பைப் போல அதிகபட்ச வாய்ப்பை நல்கும் ஆற்றல் வேறு எதற்கும் இல்லை.அங்கீகாரம் பல சமயங்களில் ஆற்றல் முழுதையுமே முடக்கிவிடும்.புறக்கணிப்பின் வழியாக எழுந்து இன்று அதிகபட்ச தமிழ் வாசகர்களின் கரங்களை சென்று சேர்ந்திருப்பவர் கல்யாண்ஜி.இது அவ்வளவு எளிதல்ல.

அவரிடம் உள்ள நல்லபண்புகளில் ஒன்று ஏற்பது.பின்னாட்களில் ஏதேனும் ஒன்றேனும் செய்வார்கள் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிற விதமாக கதைகளிலோ கவிதைகளிலோ ஒரு வரி எழுதியிருந்தால் கூட அவர்களுக்கு விரும்பி அந்த வரி சரியாக இன்னதெனச் சுட்டி கடிதம் எழுதியிருப்பார்.இப்படியெழுதியவன் கலைஞனாகத்தான் இருக்க முடியும் என்றும் ஒரு வரி சேர்த்து ஊக்குவித்திருப்பார்.இதில் 99 % பேர்கள் கலைஞனுக்கு கால் சட்டை தைத்துப் போடுவதற்கு கூட இயலாதவர்களாகப் போயிருப்பார்கள்.மீதம் மிஞ்சிப் பிழைக்கிறானே ஒருவன் அவனுக்காவே அத்தனை பேருக்கும் எழுதிக் கொண்டிருக்கிறார்.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடமிருந்த நூலகம் மிகப்பெரியது.இப்போது பலர் தேடித் கொண்டிருக்கும் நூல்களும் அதில் அடக்கம்;நான் சில சந்தர்ப்பங்களில் மீண்டும் தேடும் நூல்களும் அதில் அடக்கம். அபார நம்பிக்கையில் ஒவ்வொன்றாக எடுத்து விதைத்துக் கொண்டிருப்பேன்.யோசிக்கையில் ஒன்றிரண்டு முளைத்திருக்கிறது.இந்த ஒன்றிரண்டு முளைக்க இப்படியெல்லாம் செய்து கொண்டுதான் இருக்க வேண்டும்.அம்புட்டு விதையும் அரச மரம் ஆவதில்லை.ஆனாலும் தாங்காது.சு ரா இரண்டு பிரதிகள் இருக்கும் பல நல்ல நூல்களை எனக்குத்தந்திருக்கிறார்.விக்ரமாதித்யன் , ஜெயமோகன் ,கோணங்கி என எல்லோருமே தந்திருக்கிறார்கள்.சு.ராவிற்கு நாகராஜன் அன்புள்ள சுந்தர ராமசாமிக்கு என கையெழுத்திட்டு தந்த நாளை மற்றொரு நாளே பிரதி ஒன்றும் என்னிடம் இருந்தது.விதிவசமாக அது ஆன்டன் செகாவ்வுடன் இணைந்து நாலாந்தரமான ஒரு நபரிடம் போய் சேர்ந்தது.அதுகுறித்த கசப்புணர்ச்சி இப்போது வரையில் என்னிடம் இருக்கிறது.என்றாலும் என்ன செய்ய முடியும் ? அம்புட்டு விதையும் அரச மரம் ஆவதில்லை.ஆனாலும் தாங்காது.

கல்யாண்ஜி என்னுடைய முதல் கதை "36A பள்ளம்" புதிய பார்வை இதழில் வெளியான போது இன்லேண்ட் லெட்டரில் வண்ணதாசன் என ஒப்பிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.கடிதத்தின் பல வரிகள் இப்போதும் எனக்கு நினைவில் உள்ளது.பின்னர் ஒருமுறை தபால் கார்டில் ஒரு கடிதம் வந்தது.முப்பதாண்டுகளுக்கு முன்னர் உள்ள விஷயங்கள் இவை.பின்னர் அவர் மதுரையில் வேலை பார்த்த சமயங்களில் சென்று பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பத்தாண்டுகளுக்கும் மேலாக இலக்கியவாதிகள் சு.ரா ; ஜெயமோகன் ,விக்ரமாதித்யன் உட்பட பலர் எழுதிய கடிதங்களையும் அப்போது நாங்கள் வசித்த ஒழுகும் வீட்டில் பாதுகாத்தே வைத்திருந்தேன் . ஒழுகும் வீடெனில் மழை நின்றபின்னரும் பதினைந்து நாட்களுக்கு மேலாக ஒழுகிக் கொண்டிருக்கும்.

மழை நின்றபிறகு மின்விசிறி உட்பட அனைத்து மின்சாதனங்களையும் மாற்றுவோம்.மழையெனில் பயமாக இருக்கும், சில நாட்களில் தூங்கவே முடியாது.ஒரு கறுப்புக் குடை அளவிற்கு மழை விழாத ஒரு மூலை உண்டு.அதன் மீது இரண்டு கறுப்புக் குடைகளை வைத்து அதில் இரண்டு குழந்தைகளையும் கிடத்தியிருப்போம் . ஒருநாள் பார்க்கும் போது கடிதங்களெல்லாம் ஓரங்களில் பூஞ்சை ஏறியிருந்தன. கோணங்கி எழுதிய கடிதங்கள் வந்து சேரும் போதே பூஞ்சை அகப்பட்டே வந்து சேரும்.சு ராவின் கடிதங்களை அவருடைய மகனிடம் கொடுத்து விட்டேன்,என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டுமென்று.பிற கடிதங்களை ஏதேதோ நண்பர்களிடமெல்லாம் தேவையெனில் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி கொடுத்து விட்டேன்.உண்மையில் அப்போதெல்லாம் இதுவரையில் கூட உயிர்பிடித்து நிற்பேன் என நம்பிக்கையிருந்ததில்லை.

ஜெயமோகன் அப்போது எழுதிய கடிதங்கள் பலதும் முக்கியமானவை. நான் எழுதும் போது என்ன என்ன பிழைகள் செய்கிறேன் என்பதை சரியாக சுட்டிக் காட்டி எழுதியிருப்பார்.ஒரேவிதமாக வாக்கியங்கள் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் வரக்கூடாது என்றெல்லாம் சொல்லித் தந்தது அவரே.பல்வேறு கருத்தியல் மோதல்களை புரிந்து கொள்ளவும் விவாதிக்கவும் உதவிய நீண்ட கடிதங்களும் உண்டு.அவையெல்லாம் தவறிவிட்டன.யாரிடம் தந்தேனோ அவர்கள் பத்திரப்படுத்தியிருந்தால் இன்று வேறு பலருக்கும் உதவக் கூடியவை அவை.ஆனால் அந்த மழைவீடு ஏராளமான பேருக்கு இடம் கொடுத்தது என்கிற அந்தஸ்தும் உடையது.

சு ராவின் பாதிப்பு எனக்கு இளம் வயதில் அதிகம் இருந்ததாலும் கல்யாண்ஜியை மிகவும் இறுக்கமாக நான் நெருங்கியதில்லை என்பதையும் சேர்த்தே ஒப்புக் கொள்கிறேன்.சு ராவின் பாதிப்பு என்பது எதிர்மறையானதல்ல.நவீனத்துவத்தின் அழுத்தமான பாதிப்பு அது.இப்போது உதாரணம் சொல்ல வேண்டுமெனில் இளங்கோ கிருஷ்ணன் , கே.என் .செந்தில் ஆகியோர் ஒருவிதமான கறார் தன்மையை,பார்வையை வெளிப்படுத்துகிறார்களே அதனை நவீனத்துவத்தின் குணம் எனலாம்.எனக்கு முற்றிலுமாக உடுத்த உடுதுணி,அணிந்த அரைஞாண் கயிறு உட்பட அனைத்தையும் கழற்றியெறிந்து விட்டு விலகியோட , நவீனத்துவத்தின் அனைத்து பாதிப்புகளில் இருந்தும் விலக ; என்னுடைய வாழ்வே எனக்கு பேருதவி செய்தது.கல்யாண்ஜி எதோ ஒரு விதத்தில் நவீனத்துவம் கடந்தவர் என்றே நினைக்கிறேன்.

சின்னச் சின்ன விஷயங்களின் கடவுள் என்பது பிற்காலங்களில் உருவாகி வருகிறது.அருந்ததி ராய் அதன் மேல் வெளிச்சம் உண்டாக்குகிறார்.ஆனால் கல்யாண்ஜி என்கிற கவிஞனையும் சரி , வண்ணதாசன் என்கிற சிறுகதை ஆசிரியனையும் சரி அதற்கெல்லாம் முன்னரே தோன்றிய சின்னச் சின்ன விஷயங்களின் கடவுள் எனலாம்.

அவர் உடல் நலம் ,நீள் ஆயுள் ,நிறை செல்வம்,உயர் புகழ்,மெஞ்ஞானம் பெற்று நீண்ட காலம் வாழவேண்டும் என்று இந்த பிறந்த நன்னாளில் மனப்பூர்வமாக என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்க வளமுடன்

இவையெல்லாம் எப்போதோ முன்னரே தெரியப்படுத்தியிருக்க வேண்டியவை.ஒருவர் பேரில் நமக்கிருக்கும் மதிப்பை அவ்வப்போதே தெரிவித்து விட வேண்டும் என்பதை இப்போதுதான் உணர்ந்திருக்கிறேன்.பிறகு காலம் நமக்கந்த அவகாசத்தை தருமா என்றெல்லாம் தெரியாது.தாமதத்திற்கு அவர் பொறுத்துக் கொள்வாராக...

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"