கோடுகள் இணைய இதழில் வெளிவந்துள்ள என்னுடைய நேர்காணல்



 லக்ஷ்மி மணிவண்ணனோடு ஒரு நேர்காணல்


கேள்வி 1 - தேடல் என்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? படைப்பார்ந்த ஒரு
செயல்பாட்டிற்குள் தேடல் என்பது என்ன ?

பதில் - தேடல் என்பது அனிச்சையானது.குறி வைத்து தேட முடியாதது.குறி
வைத்துத் தேடினால் அதற்கு வேட்டை என்று பெயர்.ஒருவரின் ஆர்வத்துடன் தேடல்
தொடர்பு கொண்டதுதானெனினும் ; அதனை ஒருவரின் தனிப்பட்ட ஆர்வம் என்றும்
பொருள் கொள்ள முடியாது.

எவ்வளவோ விஷயங்கள் நாள் தோறும் நடக்கின்றன.எவ்வளவோ விஷயங்களை தினமும்
காண்கிறோம் .அனைத்தையும் ஆழ்மனது சேமிப்பதில்லை.சிலவற்றை நாம்
அறியாதவகையில் ,அறியாத வடிவில் சேமித்து வைக்கிறது.பலவற்றைத் துப்பி
விடுகிறது.ஒருவர் சேமிப்பவற்றை மற்றொருவரின் ஆழ்மனம் துப்பி விடுதலும்
உண்டு.மற்றொருவர் துப்பி விடுவதை சேமிப்பதும் நடக்கும்.பொதுவாக மனித
ஆழுள்ளத்தால் சேமிக்கப்படும் விஷயங்களும் உள்ளன.சில கனவுகளை எல்லோரும்
பொதுவாகக் கண்டிருப்பார்கள்.பிரத்யேகமாக பல இருக்கும்.இவற்றை எல்லாம் ஏன்
என அறிவது கடினம்.அப்படி அறிந்து கொண்டும் ஒன்றும் ஆவதில்லை.அறிந்ததாக
நாம் சொல்வதெல்லாமே பெரும்பாலும் தோராயமான காரணங்கள் தாம்.அவற்றுக்கு
பெரிய அர்த்தம் ஒன்றும் கிடையாது.

தேடல் என்பது மனம் மகிழ்ச்சியுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும்
ஓரிடம்.அதற்கு காலமில்லை,வயதில்லை,இடமில்லை.ஒரு காரியத்தை பின்பற்றும்
போது அவருடைய உற்சாகம் பெருகக் காண்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.அந்த
காரியத்தை நோக்கி மனதை திரும்பச் செய்தலுக்குப் பெயரே தேடல்.

படைப்புச் செயல்பாட்டில் ஆழுள்ளம் வெளிப்படுவதை ,தானறியாத விதத்தில்
அறியாத வடிவில் அவை வெளிப்படுவதை படைப்பாளி உணருகிறான்.அது பேருவுவகையை
ஏற்படுத்துகிறது.வழிநடத்துகிறது அடுத்த அடுத்த அறிதல்களுக்கு இட்டுச்
செல்கிறது.தமிழில் ஜெயமோகனை இத்தகைய படைப்புச் செயல்பாட்டிற்கு சான்றாகக்
கொள்ளலாம். ஆழுள்ளத்தால் அழைத்துச் செல்லப்படுகிற பயணம்
அவருடையது.ஆழுள்ளத்தின் பங்கின்றி புதிய படைப்புச் செயல்கள் இல்லை.

கேள்வி 2 - ஒரு இலக்கிய படைப்பாளிக்கு மற்ற உலகங்களை விட – தத்துவம்,
அறிவியல் – ஆன்மீக உலகம் மிக நெருக்கமானது என நினைக்கிறேன். கடவுள்
நம்பிக்கையற்ற படைப்பாளிகளுக்கு கூட. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
ஒருவேளை இது சரி எனில் ஏன் என கூற முடியுமா ?

பதில் -இது சரி இல்லை.

தத்துவம் ,அறிவியல் ,ஆன்மிகம் இவையெல்லாம் அறிந்திருந்தால்
நல்லதுதான்.படைப்புக்கு நெருக்கமற்றது என்று இந்த உலகில் ஒருபொருளும்
கிடையாது.அது படைப்பாளிக்கும் அவன் மேற்கொள்ளவிருக்கும் படைப்பு
செயல்பாட்டினையும் பொறுத்தது.ஆனால் இவையே படைப்புக்கு இன்றியமையாதவை
என்று சொல்வதற்கு இல்லை.

படைப்பிற்கு இன்றியமையாதவை என்று சொல்ல வேண்டுமானால் வாழ்வையும்,
அவனுடைய அன்றாடத்தையுமே சொல்ல வேண்டும்.அன்றாடமும் வாழ்வுமே அவனுடைய
பௌதீகமான உடலாக இருக்கிறது.அதிலிருந்தே அவனால் மேலும் கீழும் செல்ல
முடியும்.அன்றாடம் என்பதற்கு தினசரி வாழ்க்கை என்பது பொருள்
அல்ல.வாழ்விலிருந்து பெரும் தரிசனங்களை படைப்பாளியை அடையச் செய்கிற இடமே
அன்றாடம்.வாழ்வே பிரதானம்,வாழ்வின்றி எவ்வித தரிசனங்களும் கிடையாது.

கேள்வி 3 - ஒரு படைப்பை பற்றி முன்னரே திட்டமிடுவது அப்படைப்பின்
தன்னிச்சையான சாத்தியங்களை குறைத்து விடுகிறதா ? ஆம் எனில் ஏன் ?
படைப்பு, படைப்பாற்றல், நவீன இலக்கியம் இதனுள் இருக்கும் மதிப்புவாய்ந்த
கூறாக எதை நீங்கள் பார்க்கிறீர்கள் ?

பதில் - படைப்பை முன்கூட்டி திட்டமிட முடியாது எனினும்,ஒரு படைப்பின்
பொதுவரைவை ,வடிவை முன்கூட்டி திட்டமிட முடியும்.திட்டமிட வேண்டும்.அல்லது வேறுவகையில் சொல்லிப்பார்ப்பதாக இருந்தால் ,
வடிவம் வந்து சேர்ந்த பிறகே படைப்பாளியால் எழுத முடியும்.ஒரு
படைப்பின் உடல் ஏகதேசமாக முன்கூட்டியே கிடைக்கிறது.அதன் உள்ளமைப்பும்
,உள்ளிறச்சியும் பொங்கி வரக் கூடியவை. இந்த பொங்கி வருகிற அம்சத்தைத்
திட்டமிட முடியாது.

"பெருமாள் புரண்டு படுக்கும் போது ஒருயுகம் முடிவுற்று மறுயுகம் பிறந்து
விடுகிறது " என்கிற வாசகம் அல்லது உருவகம் மனதில் தோன்றியதில் இருந்தே
விஷ்ணுபுரம் உருவாயிற்று என்கிறார்.ஜெயமோகன்.ஜோசப் ஜேம்ஸ் என்கிற பெயர்
மனதில் ஏற்படுத்திய எழுச்சியே ஜே.ஜே சில குறிப்புகள் நாவலாயிற்று என்று
சொல்லியிருக்கிறார் சுந்தர ராமசாமி.ஷோபா சக்தியின் நாவல்கள் அனைத்திலுமே
வடிவம் முன்தோன்றி விடுவதையும் ,பின்னர் அவர் அதனைப் பின்பற்றிச்
செல்வதையும் உணர முடிகிறது.

தமிழில் நவீனத்துவப்படைப்புகள் அதன் உச்சபட்ச சாத்தியங்களை அடைந்தவை
என்றே சொல்வேன்.தமிழின் மிக முக்கியமான காலகட்டம் நவீனத்துவ
காலகட்டமே.ஏராளம் தினுசுகள் படைப்புகளில்.ஒருவர் போல் மற்றொருவர்
இல்லை.எப்போதேனும் உலக இலக்கியத்தின் பார்வை தமிழ் இலக்கியத்தின் மீது
ஏற்படும் போது;லத்தீன் அமெரிக்க படைப்புகள் பேரில் உலகிற்கு ஏற்பட்டது
போல ,தமிழ் நவீன இலக்கியங்கள் பேரிலும் ஆச்சரியம் உண்டாகும் என்பதில் ஒரு
சந்தேகமும் இல்லை.ஆனாலும் நவீனத்துவ நோக்கு அறிவின் குறுகிய எல்லைகள்
சார்ந்ததே ஆகும்.நவீனத்திற்கு அடுத்த காலகட்டத்திலேயே படைப்பில்
ஆழுள்ளத்தின் செல்வாக்கு என்ன என்று கண்டறியப்பட்டது.தமிழில் என்றில்லை
உலகம் முழுதிலும் இதுவே நிலை.படைப்பில் அறிவின் மதிப்பே அகற்றப்பட்டு
ஆழுள்ளத்தின் இயக்கம் மெருகேறியிருக்கும் காலம் சமகாலம்.

கேள்வி 4 - சிறுகதையை, நாவலை விமர்சிப்பதை விட – எந்த அளவிற்கு
மெனக்கெடுகிறோம் என்பது வேறு - கவிதையை விமர்சிப்பது சற்று சிக்கலான
விஷயம் போல் தெரிகிறது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? கவிதையை மற்ற
இருவகை படைப்புகளிலிருந்தும் – வேறுபடுத்தி பார்ப்பதாக இருந்தால் -
எப்படி வேறுபடுத்தி பார்ப்பீர்கள் ?

பதில் - கவிதை தின்பண்ட விநியோகம் போல தமிழில்
மாறியிருக்கிறது.காதலிப்பதற்கு ,பரிசுகள் பெறுவதற்கு ,மேலதிக சமூக
அதிகாரம் பெறுவதற்கான அடையாள அட்டையாக என பலவிதங்களில்
தொழிற்படுகிறது.ஒவ்வொரு குக்கிராமங்களிலும் தெருவிற்கு இரண்டுபேர் வீதம்
கவிஞர்கள் என போட்டுக் கொள்கிறார்கள்.இதனை யாரும் தட்டிக் கேட்கவும்
முடியாது.இயலாத காரியம்.தமிழ்நாட்டின் பெருநகரங்கள் பெரும்பாலும்
நான்கைந்து கவிஞர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றன.தமிழ்நாட்டு
முதல்வர்களுக்கு அறுபது வயது,எண்பது வயது என ஒவ்வொரு பத்தாண்டுக்கும்
பாட்டுப் பாட நூற்றுக்கும் மேற்பட்ட கவிகள் தேவைப்படுகிறார்கள்.எல்லோருமே
சுய கவிகள் தாம்.தாமே தங்களை கவிஞர்கள் என அழைத்துக் கொள்பவர்கள்
தாம்.கவிஞன் என்றோருவன் தன்னை அழைத்துக் கொள்கையில் உண்மையாகவே எனக்கு ;
அவன் அவனுக்கு இல்லாத தொழுநோயை எடுத்து அணிந்து கொள்வதான
அருவருப்புணர்ச்சியே ஏற்படுகிறது.எப்படி இவ்வளவு பேர் இதற்குத்
துணிகிறார்கள் என்பதை என் போன்றோரால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.
ஒருவர் வார்டு கவுன்சிலர் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானாலும் கூட ,
இப்போதோ அல்லது எப்போதோ அவர் வார்டு கவுன்சிலர் ஆக இருந்திருக்க
வேண்டும்.கவிஞர் என்று ஒருவர் தன்னை அழைத்துக் கொள்வதற்கு மட்டும் எந்த
நியதியும் தமிழ்நாட்டில் தேவையில்லை.புலவர் என்று அழைக்கப்படுவதற்கு கூட
இப்போதுவரையில் ஏதோ ஒரு சிறப்பம்சம் அவரிடத்தே தேவையாக இருக்கிறது.
வில்லிசையிலென்றாலும் அவருக்கு புலமை இருந்தாக வேண்டும்.ஆனால்
கவிஞருக்கில்லை.முக்குக்கு முக்கு நின்று தமிழ்நாட்டில் கவிஞர்களும்
கவிதாயினிகளும் கண்சிமிட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உண்மையாக கவிஞர்கள் மட்டுமே தங்களை கவிஞர்கள் என்று
பொதுவில் அழைத்துக் கொள்வதில்லை.ஊரெல்லாம் கவிஞர்களாக இருக்கும் ஊரில்
உண்மையான கவிகள் தலைமறைவாகவே வாழ நேரும்.

கவிதை என்பது ஆதி இலக்கிய வடிவம்.அதனாலேயே அது மிகவும் சிறப்பும்
வாய்ந்தது.கவிஞன் என்பவன் ஞானியரிலும் ,நாவலாசிரியனிலும்
மேலானவன்.உயர்நிலை எய்தியவன்.இந்திய அளவிலும் ,தமிழக அளவிலும் சமகால
உதாரணங்களாகச் சொல்லவேண்டுமெனில் தாகூரை ,பாரதியை சொல்லலாம்.நவீன தமிழ்
இலக்கியத்தில் எனில் ஞானக்கூத்தன் ,விக்ரமாதித்யன்,தேவதச்சன் ஆகியோரைச்
சொல்லலாம்.வாழ்வும் மொழியும் வேறுபாடின்றி ஒன்றானவனே கவிஞன்.

விமர்சனம் என்பது ஒருவகையில் படைப்பின் முழுமையடையாத் தன்மையை சுட்டிக்
காட்டுவதுதான்.பன்முகத்தன்மை இன்மையை , ஆழமின்மையை உணர்த்துவதுதான் . இது
சிறுகதைக்கு ,நாவலுக்கு பொருந்தக்கூடியது.

கவிதையை விமர்சனப்படுத்தும்
முயற்சியை தமிழில் பிச்சமூர்த்தி,மா.அரங்கநாதன் ,சுந்தர ராமசாமி போன்றோர்
செய்து பார்த்திருக்கிறார்கள்.என்றாலும் தமிழ்க் கவிதையை அணுக ஐரோப்பிய
முறைமைகள் உதவக் கூடியவை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.கல்விப்புலம்
சார்ந்த கவிதை ஆய்வுகள் அனைத்தையும் தோல்வியுற்றவை என்றே சொல்ல
வேண்டும்.அவற்றால் உருப்படியாக ஒன்றையுமே சொல்ல முடியவில்லை.அவை
அனைத்தும் ஐரோப்பிய முறைமைகளை பின்பற்றி அமைந்தவை.

கவிதைகளுக்கு உரையாசிரியர் மரபே இருப்பதில் சிறந்தது,உகந்தது என்று
எனக்குத் தோன்றுகிறது.ஜெயமோகன் கவிதைகளை அணுகும் விதத்தில் ரசனை
விமர்சனம் என்பதையும் தாண்டி உரையாசிரியர் மரபு அவரிடம் ஒழுகி வருவதை காண
முடிகிறது.மற்றபடி உரையாசிரியர் மரபால் நவீன கவிதைகள் இன்னும்
அணுகப்படவில்லை என்பதே நிதர்சனம்.

கேள்வி 5 - யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் நாம் – பயின்றால்,
பயிற்றுவித்தால் – படைப்பாளியாக மாற்ற முடியுமா? அல்லது அதற்கென்று
இயற்கையாகவே பிரத்யேகமாக ஏதேனும் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களா ?

பதில் - படைப்பாளிகளைப் பயிற்றுவித்தோ ,பாடம் சொல்லியோ ,பயிற்சி அளித்தோ
யாரும் உருவாக்க இயலாது.ஓலைப்பாய் முடைபவர்களை வேண்டுமானால் உருவாக்கலாம்
? யாரேனும் புதுமைப்பித்தனையோ ,பஷீரையோ,ஜெயகாந்தனையோ உருவாக்கித் தர
முடியுமா ?

மனித உத்வேகத்தின் அடுத்த அடுத்த உயர்நிலையை நோக்கிய ,ஏழாவது உணர்தல்
நோக்கிய பெரும்பாய்ச்சல் அது.யாரேனும் சிலரில் நிகழ்கிறது.எப்படி
நிகழ்கிறது என்பதற்கு ஒரு உத்திரவாதமும் கிடையாது. ஏன் நிகழ்கிறது
என்பதும் அறிய முடியாதது.அறிவதான பாவனைகள் இதுவரையில் குறையுடையனவாகவே
இருந்திருக்கின்றன.

கேள்வி 6 - நீங்கள் என்ன அடிப்படையில் அந்தரங்கமாக ஒரு படைப்பை ஏற்கவோ,
நிராகரிக்கவோ செய்கிறீர்கள் ? கவிதை, சிறுகதை, நாவல் உட்பட. அங்கு என்ன
செயல்படுகிறது என கூற முடியுமா ?

பதில் - ரசனையே அடிப்படை.நான்கு மிகச் சிறந்த திரைப்படங்களை நீங்கள்
பார்த்திருந்தால்,அது உங்களை எட்டிய விதத்திலிருந்து, பாதித்த
விதத்திலிருந்து ஒரு ரசனை உங்களிடம் உருவாகி விடுகிறது.ஏற்கனவே நீங்கள்
பார்த்த எளிமையான தீனிப்பண்டங்களின் குறை என்ன என்பதையும் அதுவே சொல்லி
தந்து விடுகிறது.சிறந்த நாவல்களை சிறுகதைகளை படித்திருந்தால்
அப்படியில்லாதவற்றை அவை உங்களிடம் சுட்டிக் காட்டி விடும்.அவற்றின்
போதாமைகள் என்ன என்பதை உங்களுக்கு சொல்லித் தந்து விடும்.

ஏற்கனவே நீங்கள் புதுமைப்பித்தனை படித்து விட்டீர்கள் என வைத்துக்
கொள்ளுங்கள்.அவன் உங்களுக்கு மண்டோவையும் ,ருல்போவையும் அடையாளம்
காட்டுவான்.அது போல மலிவானவர்களையும் அடையாளம் காட்டி விடுவான்.இதுவே
விஷயம்.மாணிக்கவாசகரையும்,ஞானக்கூத்தனையும்
,விக்ரமாதித்யனையும்,தேவதச்சனையும் அறிந்திருந்தால் காளமேகத்தையும் அணுக
முடியும்,கண்டராதித்தனையும் அணுக முடியும்.இசை யார் என்பதும் போகன் யார்
என்பதும் தெரிந்து விடும்.இது மாயம் எல்லாம் ஒன்றுமில்லை.

அறியாமையில் இருப்பவர்களுக்கே கோட்பாடுகளின் துணை தேவைப்படுகிறது.மற்றபடி
இலக்கிய விமர்சனத்திற்கு அடிப்படை ரசனையே.

என்னைப் பொறுத்தவரையில் ஹெமிங்வேயின் ஒரு கூற்று மனதில் எப்போதும்
முதன்மையாக இருந்து கொண்டிருப்பது.படைப்பாளி மிகவும் சிக்கலான
விஷயங்களையும் எளிமையாக மொழியில் முன்வைத்து விடுகிறான் என்கிறார்
அவர்.அது போல எளிமையான விஷயங்களையும் சிக்கலாக்கி முன்வைப்பவனை அறிவாளி
என்கிறார் அவர்.செயற்கையான சிக்கல்களை பாவிப்பவர்களை நான் அடிப்படையிலேயே
ஏற்பதில்லை.அவர்கள் அடிப்படையிலேயே பொய்யர்கள், எனவே நிராகரித்து
விடுகிறேன்.அதுபோல எளிமையான விஷயங்களை மட்டுமே ,எல்லோருக்கும் தெரிந்த
விஷயங்களை மட்டுமே பேசுபவர்களை நான் படைப்பாளிகளாகவே கருதுவதில்லை.
நிராகரித்து விடுகிறேன்.செயற்கையான அனைத்து பாவனைகளும் மேலாதிக்கத்தை
மட்டுமே இலக்காகக் கொண்டவை.

கேள்வி - 7

மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் வாசகப்பரப்பு மிக குறைவாக இருக்கிறது
என்று தான் சொல்ல வேண்டும்வாழ்வின் பரப்பிற்கு முன் இலக்கியத்தின்
முக்கியத்துவம் பொதுவாக மக்களுக்கு ஏன் சிறுத்து விடுகிறது என்பதைப்பற்றி
ஏதேனும் சொல்ல முடியுமா ?
.
பதில் :

மக்கள் தொகைக்கும் வாசகபரப்பிற்கும் என்ன சம்பந்தம் ?

கலையும் இலக்கியமும் ஒரு சமூகத்தின் உயர்நிலையில் இருப்பவை. அதனைக்
காட்டிலும் பிற உயர்நிலைகள் இல்லை . விளையாட்டு,விஞ்ஞானம்,ஆன்மிகம்
,அரசியல் போன்றவை ; ஒரு சமூகத்தின் தரத்தை தீர்மானிக்கின்றன என்பது
உண்மையே . ஆனால் ஒரு சமூகத்தின் உயர்நிலை அதன் கலையிலக்கியத்தாலேயே
உருவாகிறது . அதன் அளவு கடந்த மதிப்பிற்கு அதுவொரு காரணம்.
புதுமைப்பித்தனே நமக்கு உலகளாவிய தன்மையை உண்டாக்குகிறார் ,நவீனமடைய வைக்கிறார்

பாரதி நமக்கு சமகால பிரக்ஞயை உருவாக்கித் தந்தவர் எனில் புதுமைப்பித்தனே
உலகளாவிய சமூகத்துடன் நம்மை இணைக்கிறார்

கேள்வி - 8

ஒரு இலக்கிய படைப்பிற்குள் பூடகம், மர்மம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது அவசியம் இருக்க வேண்டுமா? அதை நாம் உருவாக்க வேண்டுமா? அதில்
பிரத்யேகமாக ஏதும் கவனம் செலுத்த வேண்டுமா?

பதில் -

திட்டமிடப்பட்ட பூடகமும் மர்மமும் போலி எழுத்தின் பிரதானமான குணங்கள்.
படைப்பு எப்போதும் சிக்கலான விஷயங்களை கூடுமானவரையில் எளிமையாக
பாசாங்கின்றி வெளிப்படுத்துகிறது,பேச முற்படுகிறது. அதில் சிலசமயங்களில்
சற்றே கடினத்தன்மை உண்டாகலாம் .அப்படி உண்டாவதுண்டு. அதுவும் செயற்கையாக
ஏற்படுத்தப்படும் பூடகமும் ஒன்று அல்ல

தெளிவற்ற தன்மையை பூடகமாக வெளிப்படுத்துபவன் எழுத்தாளன் அல்ல பொய்யன்
என்கிறார் ஜெயகாந்தன் .அவர் சொல்வது முற்றிலும் உண்மை .தேவையற்ற சிக்கலை
உண்டாக்குவது படைப்பின் வேலை அல்ல

கேள்வி - 9

ஏன் எழுத்தாளர்கள் பெரும்பாலும் கடினமான வாழ்க்கையை வாழக்கூடியவர்களாக
இருக்கிறார்கள்? இப்போது இது குறைந்திருந்தாலும் இன்னும் இருக்கவே
செய்கிறது. எழுத்தாளனாக இருப்பதாலையே அக்கடினமான வாழ்க்கை என்பது
நிகழ்கிறதா?

பதில் -

இந்த கேள்வி எழுத்தாளன் பேரில் கழிவிரக்க தொனியை ஏற்படுத்த
விரும்புமானால் நான் அவ்வாறு இல்லை என்றே பதில் சொல்வேன்

எல்லோரும் வாழுகிற வாழ்வையே எழுத்தாளர்களும் வாழ்கிறார்கள்,ஆனால்
சராசரியான வாழ்வை வாழ்பவர்களைப் போல அல்லாமல் அதன் கடினத்தன்மையை
எழுத்தாளர்கள் உணருகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்

வாழ்வின் கடினத்தன்மை என்பது ஒருபோதும் அதன் பொருளாதாரக் காரணியால்
மட்டும் அமைவதில்லை

கேள்வி - 10
சொந்த அனுபவங்களிலிருந்து ஒரு படைப்பு வரும் போது மட்டுமே அப்படைப்பு
மிகச்சிறந்த படைப்பாக வருவதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆனால் அதனால்
தோன்றும் நடைமுறை பிரச்சனைகளை ஒரு படைப்பாளி எப்படி எதிர்கொள்வது ?

பதில் -
சொந்த அனுபவங்களில் இருந்து மிகச் சிறந்த படைப்புகள் ஒருபோதும்
உருவானதில்லை ,படைப்பு மேலதிகமாக பல விஷயங்களைக் கோருவது. முதலில் விலகி
நின்று பார்க்கத் தெரியும் பண்பு மிகவும் அவசியம். சொந்த அனுபவங்கள்
என்பதை, பக்கத்து வீட்டுக்காரனை அப்படியே எழுதுவது என்று எடுத்துக்
கொண்டால் எது நடக்குமோ அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். பஷீர்
எதார்த்தத்தையே எழுதுகிறார்,ஆனால் விலகி நின்று எழுதுகிறார். விலகி
நின்று எழுதத் தெரியாதவன் தன் அனுபவங்களின் தற்சார்பாளனாக நின்று
கொண்டிருப்பான் .அவன் எழுதுவதற்கே தகுதி அற்றவன்

சொந்த அனுபவங்கள் என கோருவதற்கு ஒன்றுமில்லை அப்படியான ஒன்று
இல்லை,எல்லோருக்கும் உள்ள அனுபவமே உங்களுக்கும் இருக்கும் அதில்
சிறப்பொன்றும் இல்லை

கேள்வி- 11
தற்போதைய சிறுபத்திரிக்கைகளின் செயல்பாடு தங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறதா ?

பதில் -
காலகட்டம் மாறியிருக்கிறது. சிற்றிதழ்களின் வடிவம் மாறியிருக்கிறது ,அது
இணையம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது

அச்சில் சிற்றிதழ்கள் தமிழின் நவீன காலகட்டத்துடன் தொடர்பு கொண்டது. மாடு
வளர்ப்பு கூட்டுக் குடும்பத்தோடு தொடர்புடையது என்பது போல

இன்று இருப்பவை எல்லாம் இடைநிலை இதழ்கள் .அவற்றை நாம் சிற்றிதழ்கள் என
நினைத்துக் கொண்டிருக்கிறோம். தொண்ணுறுகளின், தொடக்கத்திலேயே தமிழில்
சிற்றிதழ்களின் தேவை முடிந்து விட்டது. இப்போதும் கூட யானை வளர்ப்பவர்கள்
இருக்கிறார்கள். ஏனென்று கேட்க முடியுமா ? வளர்ப்பவர்கள் வளர்க்கிறார்கள்
.ஆனால் அதற்குரிய தேவை இப்போது இல்லை,அது இணைய வெளி நோக்கி திரும்பி
விட்டது .முக்கியமாக புதிய வாசகர்கள் யாரும் இப்போது அச்சு இதழ்களின்
பக்கமாக இல்லை. யானை வளர்ப்பதில் உள்ள ஆசை போல நானும் அவ்வப்போது சிலேட்
இதழை கொண்டு வருகிறேன் . கோணங்கி கல்குதிரை கொண்டு வருகிறார். பெயர்தான்
கல்குதிரை மற்றபடி அதுவும் யானை வளர்ப்புதான். யாரும் படிப்பதில்லை
அன்பும், பழைய நினைவும் கருதி வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்
,கொல்லிப்பாவை,ழ போன்றவையே சிறுபத்திரிகைகள்

கேள்வி - 12 பொருள் நஷ்டமில்லாமல் ஒரு சிறுபத்திரிக்கையை நடத்துவது
ஏறக்குறைய சாத்தியமே இல்லையா ?

பதில் - பொருள் நட்டமா லாபமா என கருதி நடந்தவன் எவனுமே இலக்கியவாதியாகவோ
,சிறுபத்திரிகையாளர்களாகவோ இருந்ததில்லை போலிகளே இவ்வாறு நிறைய
புலம்புகிறார்கள்

குடும்பம் நடத்துகிறீர்கள் லாபமா நட்டமா ? தொழில் நடத்துகிறோம் லாபமா
நட்டமா ? ஒரு விஷயத்தில் ஈடுபட்டால் லாபமோ நட்டமோ வைத்துக் கொள்ள
வேண்டியதுதான் இல்லையெனில் வரக் கூடாது

கேள்வி -13
கணினியில் நாம் ரொம்ப நேரம் வாசிக்க முடியாது. நவீன இலக்கியத்திற்கான
இணையதளங்கள், மின்னிதழ்கள் இவற்றை பற்றி ஏதெனும் சொல்ல முடியுமா?

பதில் -இணையம் ,மின்னிதழ்கள் எல்லாம் தொழிநுட்பம் உருவாக்கும் மாற்றங்கள். தவிர்க்க
முடியாதவை .கணினியில் நீண்ட நேரம் வாசிக்க முடியாது என்பதெல்லாம் சில்க்
சேலை வந்ததும் கற்பு பறிபோய்விடும் என பயந்தவனின் குரல் .இணையத்தால்
வாசிப்பும் வாசிக்கும் நேரமும் அதிகப்பட்டிருக்கிறது. இன்று யோசித்துப்
பார்த்தால் , யாருக்குமே "காத்திருக்கும் காலம்
" என்ற ஒன்று இல்லை. பயணங்களின் போது இல்லையெனில் பொதுவாகவே காத்திருக்க
வேண்டிய தேவைகள் ஏற்படுகிற போது ;மனிதர்கள் இப்போது வேறு ஏதேனும் செய்து
கொண்டிருக்கிறார்கள். அப்படி வேறு ஏதேனும் செய்பவர்களில் புத்தகம்
படிப்பவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். காத்திருக்கும் நேரங்களை
நீங்கள் இழப்பதால் நீங்கள் பல விஷயங்களை இழக்கிறீர்கள்,பல புதிய
விஷயங்களை பெற்றுக் கொள்ளவும் செய்கிறீர்கள்

கேள்வி 14
தங்களுக்கு மிக ஆதர்ஷமான எழுத்தாளர்கள் யார் ? ஏன் என சொல்ல முடியுமா ?

பதில் -

சுந்தர ராமசாமி. அவர்தான் என்னுடைய கலை இலக்கிய மனோபாவத்தைப்
படைத்தார்,பின்னர் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஜெயமோகன்.

ஜெயமோகன் மனதில் சமகாலத்தைப் படைத்தார்

இருவருமே எனக்கு ஆதர்ஷமாக இருப்பவர்களே

கேள்வி- 15
தங்களது எழுத்தாள நண்பர்கள் யார் யார்? அவர்களைப்பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா?

பதில்- நிறைய பேர் இருக்கிறார்கள் ,புதியவர்கள் முதற் கொண்டு பழையவர்கள்
வரையில் ,பிரபலங்கள் வரையில்

இளமையில் இணைத்து சேர்ந்தே இருந்து விட்டு திரும்பியே வராதவர்களும்
இருக்கிறார்கள்,எப்போதும் உடனிருப்பவர்களாவும் சிலர்
இருக்கிறார்கள்,எல்லோரையும் பற்றி ஒவ்வொரு வரி சொல்ல வேண்டுமானாலும் கூட
மிகவும் நீளமாகி விடும். எஸ் .ராம கிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் எல்லோரும்
கூட ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்களே

ஜெயமோகன்,கோணங்கி ஆகியோருடனான நட்பு தொடர்ந்து இருப்பது. தமிழச்சி
தங்கபாண்டியன் என்னுடன் எப்போதும் நன்மையிலும் இன்மையிலும் உடனிருக்கும்
தோழி

கேள்வி -16
தமிழின் மிகச்சிறந்த கவிஞர்கள் என யாரையெல்லாம் சொல்வீர்கள்
?

பதில் - நவீன காலத்தை மனதில் வைத்து இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள் என
நினைக்கிறேன்.அப்படியானால் ஞானக்கூத்தன் ,விக்ரமாதித்யன் ,தேவதச்சன்
ஆகியோரைச் சொல்வேன்

கேள்வி -17
கவிஞனை சிறுகதை, நாவலாசிரியனை விட சற்று கீழிறக்கி பார்ப்பது போல்
தெரிவது எதனால் ? ஒருவேளை கவிஞனும், கவிதையும் போதுமான அளவு
புரிந்துகொள்ளப்பட வில்லை என நினைக்கிறீர்களா ?

பதில் - தமிழில் தற்போது மிகப் பெரிய கவிஞர்கள் யாரும் இல்லை.
லௌகீகத்தைத் தாண்டி எழுதுபவர்கள் கூட குறைவு. கவிஞன் ஞானியிலும் பெரியவன்
தாகூர் போல பாரதி போல நவீனத்தில் யாரும் இல்லை. அப்படி இருந்தால் தான்
சமூகத்தில் அது உணரப்படும். இப்போது இருப்பவர்கள் எவ்வளவு உரத்து
சத்தமிட்டாலும் ஐந்து வருடத்திற்குள் மறக்கப்பட்டுக்
கொண்டேயிருக்கிறார்கள். தமிழ் கவிஞன் என சொல்லிக் கொண்டு என் முன்னே
வருபவனைப் பார்த்து உண்மையாகவே பயப்படுகிறேன். எதற்கும் லாயக்கற்றவனாக,
லாயக்கற்றவர்களாக இருக்கிறார்கள். புளியில் பொக்கு புளி என்று ஒன்றுண்டு.
வெளியில் பார்க்க புளிபோலவே இருக்கும். உடைத்தால் புகையாக வரும் ,வலை
அடைந்திருக்கும். இவர்களிடம் ஒன்றுமே கிடையாது;அது வெளியில்
தெரியாமலிருக்க தினசரி அரசியலையும் கோட்பாடுகளையும் வைத்து அடைத்துப்
பார்க்கிறார்கள். எதை வைத்தாலும் தோட்டுப்புளி நிரம்பாது.

உண்மையாகவே நான்கு கவிகள் ஒரு மொழியில் இருந்தால் அது பிரமாதமாக
உணரப்படும். நாவலாசிரியர்கள், ஆன்மீக ஞானியர்,சிறுகதையாளர்கள்,சிற்பிகள்,
சினிமா இயக்குனர்கள் கவிஞன் முன்பாக சிறுத்துத் தெரிவார்கள். கவிஞன் அந்த
தரத்தில் தமிழில் இல்லாத காரணத்தால் அவனை "சிறுகதை எழுது நாவலுக்குப் போ
"என்று சமூகம் துரத்திக் கொண்டிருக்கிறது .இதுவொரு பரிதாபகரமான நிலை

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"