வெளியிலிருந்து உள்ளே ஓடி விடலாம்



ஊழ் வினை இன்றி வியாதியில்லை

1

யாருக்கும் நோயென்று ஏதுமில்லை
யாருக்கும் மருந்தென்றும்
ஏதுமில்லை
நோய்க்குத் தக்க மனம்
மனதிற்கு தக்க மருந்து

வியாதி அனைத்தும் ஊழ்வினை
தானே

2

வினையறுபட்டால்
வியாதி விடுபடும்

3

சந்தனக் குடமெடுத்தாலும்
உன் வினை
வேறொருவன் தோளுக்கு
இடம் மாறுவதில்லை

4

உடல் ஒத்துழைப்பது
அது ஏறி அமர்ந்திருக்கும்
மனதினைப்
பொறுத்தது

5

மனம் குப்பையானால்
உடலது
குப்பைக் கூடை

6

தனித்து வந்து தாக்கினாலும் சரி
கூட்டமாய் வந்து தொற்றினாலும் சரி
ஊழ் வினை இன்றி
வியாதியில்லை

###


அந்தச் சிறுவன்
அப்படி ஏங்கி நிற்கிறான்
எவ்வளவு உயரம் என்று பார்க்கிறான்
நீங்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறீர்கள்
இதுவே உயரமென்றால்
அவன் எவ்வளவு
பள்ளத்திலிருக்கிறான் பார்த்தீர்களா ?

அவன் இரண்டுமாடி போட்டுவிட்டான்
இவன் கார் வாங்கியாச்சு
புனித அன்னை பத்துநாள் திருவிழாவில்
பத்து நாளும் புதுத்துணி
வாங்குகிறார்கள்

இந்தத் தெருவில்
எப்படி
வாழமுடியும் ?
சொல்லுங்கள் அண்ணா
என்று கேட்கிறான்

எந்த வேலை வேண்டுமாயினும்
இருக்கட்டும்
முதலில் இச்சிறுவன் பார்க்கும்
உயரம் குறைத்து
பள்ளம் நிரப்புங்கள்
ஆண்டவரே

அவன் இடம்பெயருவதைப் பற்றிகூட
ஒன்றுமில்லை
என்றாலும்
இந்த எலிக்குகையை
இவ்வளவு உயரமென்று
அவன்
எண்ணக் கூடாது

அவனும்
இதே தெருவில்
வசித்தவன்
பார்த்தீர்களா?


நீ வெளியில் வந்ததும்
ஓடி விடலாம்
செய்தியின் அறையைக் கடந்து வா
பற்றின் பள்ளியறை
விட்டு வா
வெளியில் தான்
பொன் வண்டுடன்
நின்று கொண்டிருக்கிறேன்
ஓடி விடலாம்

பகலென்றும் இல்லை
இரவென்றும் இல்லை
எப்போது வேண்டுமானாலும் வா
பகலை விட
இரவு நுட்பம்
இரவைக் காட்டிலும்
பகல் அலங்காரம்
வெளியில் வா
ஓடிவிடலாம்

செய்தியின் அறையைத் தூக்கி
எறிந்து விட்டு
பற்றின் பிடியில்
இறங்கி
உள்ளேயே கூட இரு
வெளியிலிருந்து
உள்ளே உள்ளே
ஓடி விடலாம்


உருவம் ?

1

உன்னை ஏன் தேடுகிறேன்
அச்சமா
காதலா ?
இல்லை
நீ என்னைத் தேடிக் கொண்டிருக்கிறாய்
அதனால் தேடுகிறேன்

2

அம்மன் உருவம்
உருவத்திலிருந்தும் செய்யப்பட்டதுதான்
உருவம் பார்த்தும் செய்யப்பட்டதுதான்
செய்து கொண்டிருக்கையில்
ஒரு கணத்தில்
கையில் விடுபட்டு
சிற்பம்
ஒரு இஞ்ச்
மேலேறி அமர்ந்ததும்
சிற்பி
நிறுத்திக் கொண்டான்

அரூபம்
வந்து இறங்கவில்லையெனில்
அதற்கு எதற்கு
ஒரு உருவம் ?

3

யாரிடமிருந்தேனும்
ஒரு தூண்டுதல் வருகிறது
எதனிடமிருந்தேனும்
ஒரு தூண்டுதல் வருகிறது
சில சமயம்
என்னிடமிருந்துகூட
தூண்டுதல்
வருகிறது


மறந்து போன ஒன்று

1

மறந்து போன ஒன்று
மறந்து போன வேறு ஒன்றுடன்
தொடர்பு கொண்டிருந்தது
வேறு ஒன்றைத் திரட்டத் தொடங்கினேன்
நினைவு திரும்பிற்று
மறந்து போன ஒன்று

2

கருடன்
மனதில் தொடர்பு கொண்ட கணம்
வீட்டிற்கு
வந்ததும்
விடைபெற்றது
ஏன் என்று காண
விட்ட இடத்திற்கு
மீண்டும் சென்று
கொண்டிருக்கிறேன்

விட்டுவந்த கணத்தில்
இருந்தது
பறவை

3

கந்தசாமி அண்ணாச்சியை
பலசரக்குக் கடை
பட்டறையில் இல்லையென்றால்
அடையாளம் காணுவதற்கில்லை
உண்மையில்
கந்தசாமி
கருவறை விட்டு
வெளியே நின்றாரென்றால்
சீந்துவாரில்லை

###



முதன்முறையாக பார்த்த மனிதருடன்
பேசிக் கொண்டோம்
அவ்வளவு
புத்துணர்ச்சியுடன் இருந்தார் அவர்
புத்துணர்ச்சியுடன்
பேசினார்
அவரைப் பற்றி எனக்குத் தெரியாது
என்னையும் அவருக்குத் தெரியாது
என்னிடம் புத்துணர்ச்சி கண்டார்

கொஞ்சம் கொஞ்சமாக அவரை எனக்குத் தெரிந்தது
பாதகமாக ஒன்றும் இல்லை
அவருக்கும் என்னைத் தெரிந்தது
பாதகமாக ஒன்றும் கிடையாது
என்றாலும்
முதலில் பார்த்த மனிதனை
தொலைத்து விட்டோம்
சில நாட்களில்
இருவருமே


எத்தனை நாட்கள் ஆகும் ?

1

எனக்கு ஒரு குழி
வெட்டிக் கொண்டிருக்கிறேன்
அதற்கு இன்னும்
எத்தனை நாட்கள் ஆகும்
என்பதுதான் தெரியவில்லை

2

இரண்டு குழிகளுக்கு
ஆசைப்பட்டாலும்
ஒரு குழிதான்
கிடைக்கும்

3

எறும்பும் புழுவும் உண்பதற்கு
எவ்வளவு மேன்மை பொருந்திய
வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது ?

மேன்மை இங்கே தங்க
சவம்
மேலே செல்கிறது

4

சந்தனத்தில் வைத்து எரித்தாலும்
சுடலைக்கு ஒரே
மணம் தான்
ஒரே
ஜ்வாலை தான்

5

குழியை எவ்வளவு அழகாக வெட்டுகிறோம் என்பது
வாழ்வதைப் பொறுத்து
இருக்கிறது

6

மேற்கொண்டு அமைப்பு
ஏற்படுத்தாத குழிகளே
அழகாக
இருக்கின்றன

அவை பாவங்களைத்
துலக்குவதுமில்லை
துருத்துவதும் இல்லை

7

மழை நாளில் மரணம்
போகிறவனுக்கோ சிறப்பு
அழைத்துச் செல்பவர்களுக்கோ
சிரமம்

8

மரணம் அவ்வளவு எளிமையில்லை
நிறைய காத்திருக்கவேண்டும்


இருநூறு வருட ஜமீன் வீடு
சாலையில் பத்தடிக்கு தாழ்ந்து கிடக்கிறது
ஜமீன் வீட்டு மாடுகளுக்கு ஆயிரம் வயது
அவை சமவெளியில்தான்
மேய்கின்றன
தாழவில்லை

ஒவ்வோர் ஆண்டும் மணல் அள்ளிப் போட்டு
ஜல்லியடித்து
உயரும் தார்ச்சாலைகளை
பள்ளத்துக்குள்ளிருந்து
தலைநீட்டி
எம்மாம் பெரிய ரோடு
என வியக்கும்
சின்ன ஜமீனுக்கு
இன்றைய தேதியில்
துணை
பக்கத்தில் வாழும்
பொய்முலை
இசக்கி

10 

தென்காசி

ஒரு மடியில் மற்றொரு மடி
மற்றொரு மடியில் பிறிதொரு மடியென நீண்டு செல்லுகிற வீடுகள்
எல்லாமடிகளும் கால் நீட்டிப் படுத்திருக்கும் தெரு
கழிவு வாய்க்கால்கள் தெருவிற்குப் பின்புறத்தே
ஒளிந்து தெரியும் மஹா கோபுரம்

ஒரு மடியில் மற்றொரு மடி
மற்றொரு மடியில் பிறிதொரு மடியென படிந்த
ஓட்டுக் கூரை வீடற்ற வீடு

கவிஞனின் மடியில் படுத்துறங்க
இந்த நகரத்தில் வியாபாரிகள் அகன்ற பிறகு
வரும் இரவு
கோபுரத்திற்குப் பின்னே பவுர்ணமியில்
உதித்து வெளியேறுகிறான்
விக்ரமாதித்யன்

இப்போது இந்த நகரம்
அவனுடையதாயிற்றே

11 

வழக்கத்திற்கு மாறான ஒன்றும்
இந்தக் கடை வீதியில் இல்லை
வழக்கத்தைக் காட்டிலும்
குறைவே
என்றாலும் நெடுநாட்களுக்குப் பிறகு
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
எவ்வளவு பேரழகு
மயங்கும் இளவெயில்
அதனுள் அடங்கும்
மனித நடமாட்டம்

என்னுடைய வீதிதான்
இதில்தான் நாட்பகலாக
புழங்குகிறேன்
இப்பொழுது வினோதமாக இருக்கிறது

என்னுடையது போலுமில்லையோ
இது?

12 

கடலொருபக்கம் வீடொருபக்கம்

கடலின் பக்கம் இருந்து
திரும்பினேன்
அதனினும் மிகச் சிறிதான
தோட்டத்துள் நுழைந்து
அதனினும் சிறிதான சாலையில் கேறி
அதனினும் சிறிதான தெருவில் கால் வைத்து
சிறிதினும் சிறிதான
வீட்டுக்கு

மீண்டும் கடல்நோக்கித் திரும்புகிறேன்
வீட்டினும் பெரிதான வீதியில் இறங்கி
வீதியிலும் பெரிதான சாலையில் கேறி
கடலுக்கு

வீட்டுக்கும் எனக்குமான தூரமே
வழி
நெடுகிலும்

வீட்டுக்கும் கடலுக்கும் இடையிலான தூரமே
மனம் முழுதிலும்

13 

ஒரு காலத்தில் உன்னைப் போலவே
இருந்திருக்கிறேன்
முதலமைச்சருக்கு ஆலோசனை
சொல்லியிருக்கிறேன்
ப்ரதான் மந்த்ரியை எதிர்த்திருக்கிறேன்

சாதுக்களிடம் சண்டையிட்டிருக்கிறேன்
தெய்வங்களையெல்லாம்
நிந்தித்திருக்கிறேன்

போவோர் வருவோரையெல்லாம்
தாக்கியிருக்கிறேன்
அடியாரை அடித்திருக்கிறேன்

உடன் ஒருவன் இருந்தால் போதும்
சாமியைத் தோள் எட்டி
மிதித்திருக்கிறேன்

எதற்கும் முயற்சித்ததில்லை
எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டிருக்கிறேன்

ஒருகாலத்திய
கலகக் கடவுள் நானிருந்த இடத்தில்
நீ வந்து முளைத்திருக்கிறாய்
அப்படியே உனக்கு என் வாலிப முகம்
அதே ஆற்றல்
அதனால்தான் எனக்கு பயமாக இருக்கிறது

முற்போக்கு கலக முகம் கழுவி
வீட்டு நெல்லி மரத்திற்கு
தண்ணீர் விடுவதிலிருந்தே தொடங்கி
முதலில் இருந்து
புறப்பட்டு களத்திற்கு வந்து சேர

நான்கு கடல் தூரம் இருக்கிறது
தாங்குவாயா தம்பி ?

14 

எட்டு மரப்பலகைகள் கொண்ட
கடை நீலவேணி அக்காவுடையது
வெற்றிலை பாக்கு ,சர்பத் ,தேன்குழல் மிட்டாய்கள்
குளிர்ந்த பானை மோர்
சுற்றுப் பீடிகள்
சுருட்டு வெம்மை

சாலை சிறுக சிறுக உயர்ந்ததில்
திண்ணை இரண்டடி பள்ளத்தில்
மாட்டிக் கொண்டது
நீலவேணி அக்கா
பாதி உயரத்தில்
நின்று தெரிகிறாள்
அவள் காலடிகள்
மூன்று தலைமுறைகளுக்கு
முந்தைய காலத்தில்
புதையுண்டிருக்கிறது

கடைக்குள் உள்ள காலம்
வெளியில் இல்லை

வெளியில் உள்ள காலத்தை
உள்ளே அனுப்ப
வழிகள் ஏதுமில்லை

நீலவேணி அக்காவாக இருக்கும் போது
அந்த கடைக்குள்
நுழைந்தாள்
அவள் முழு உயரம் அறிந்திருந்த
காலம் அது

இந்த பக்கம் இருந்தால்
அந்த பக்கத்திற்குள் நுழைய முடியாது
அந்தப் பக்கமிருந்தாலோ
இந்த பக்கத்திற்கு
வாசல்கள் இல்லை

இருவேறு காலங்களுக்கு மத்தியில்
வெறுமனே
எட்டு பலகைகள்

15 

தனக்கான நிழலையும்
சேர்த்து எடுத்துக் கொண்டே
வளர்கிறது செடி

என்னுடைய நிழலில் நிச்சயம்
நானுமிருக்கிறேன்

என் பின்னால் வருகிற நிழல்
என்னுடையதே

 




Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"