மற்றது தின்றது போக

 



1


மற்றது தின்றது போக
ஆமைக் குஞ்சில்
ஆயிரத்தில்
ஒன்று தேறும்
மற்றது தின்றது போக
பறவைக் குஞ்சில்
நூற்றில் பத்து தேறும்
விலங்கில் பத்தில் ஒன்று

வாழ்வது வீடெனில் விதிவசம்

தானே தின்றது போக
மனிதனுக்கு
லட்சத்தில்
ஒன்று
தேறும்
மீதம் நீறும்

2

ஆடுகடித்து காயம் பட்ட
சரக்கொன்றையை
மிசுறு எறும்புகள் கூடி
காப்பாற்றுகின்றன
ஒரு காரணத்திற்குள் ஒன்று
ஒன்று மற்றொன்று என
நீள்கிறது யாத்திரை

யாருடைய காரணத்திற்காகவோ
நீங்கள்
என்னுடைய காரணத்திற்காக அவர்
அவருடைய காரணத்திற்காக
மற்றொருவர் என

ஒரே பொதிதான்
பிரிக்க பிரிக்க
பொதி பொதியாக வருவது

3

உடல் விடர்த்து
தளிர்க்கும் அரசமரம்
மரத்தின் எலும்புக்கூடென
நிற்கிறது

அதன் மேல் அமர்ந்திருக்கும்
காகங்கள்
கிளிகள்
கொக்குகள் அரசின் கனிகள் போல
தொங்குகின்றன

அடுத்த பருவம்இவை உதிர்த்து
பச்சயம் பூக்கும்

எல்லாமே வெட்ட வெளியில்
நடக்கின்றன
ஒளிவு மறைவு என்று
ஒன்றுகூட இல்லை

பிரதான சாலையோரம்
இது

4

இருக்கும் போதே இறந்தவன்
இறந்து போனான்
உதிர்ந்த மாலைகள் கொண்டு அவனுடைய தேர் அலங்கரிக்கப்படுகிறது.
புதிய புதிய மாலைகள்தாம் ஏனிப்படி
உடனுக்குடன் உதிர்கின்றன ?

விழாக்களுக்கு அவன் வந்து செல்லும் போது
பொது மண்டபங்கள் அவனைப் புகைப்படம் எடுப்பதில்லை
ஒருமுறை வாயிற்காவலன் ஏற்கனவே இறந்து போனவர்தானே?
எனக் கேட்டே விட்டான்.

சுய செல்பியை நிராகரித்த தெரு நிர்வாகிகள்
நீங்கள் வாழுங்காலத்தில் சுய செல்பி
கிடையாது என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்
என்று அறிவுரை சொன்னார்கள்.

பந்தி பரிமாறியவன்
இவன் இலையை கடந்து சென்றதை
இவனும் ஏனென்று கேட்கவில்லை
அவனும் ஏனென்று சொல்லவில்லை

இவன் ஏன் இங்கு வந்து நிற்கிறான் ?
யாராவது விளக்குங்களேன் என்று கும்பிடப் போன சாமி
கேள்வி கேட்டதை விளங்காத இவன்
இறந்து கிடக்கிறான்.
எல்லாம் நடைபெறுகின்றன
ஆனால் எதுவோ நடைபெறவில்லை
இறந்தவனின் ஊர்வலம்போல இந்த ஊர்வலம் செல்லவில்லை.

எனக்கோ அவன் இன்னும் இருக்கிறானோ ?
என்னும் சந்தேகம்
வீதி வலம் வந்து கொள்ளிக்குடமுடைத்து
என்னென்னமோ என்னய்யோ சப்தமிட்டு
எரியூட்டித் திரும்பிய பின்னும்
முதலில் இருந்தே மீண்டும் வாசித்துப் பார்
என்கிறது

5

சுலபமில்லை
1
காலையிலேயே சிடுசிடுக்கத்
தொடங்குபவள்
அரக்கி
2
நிராகரிப்புகளின் பேரில் எல்லாம் பேராசை
கொண்டவள்
வல்லரக்கி
3
மூத்த விதவைக்குள்
அரக்கியும் ,வல்லரக்கியும்
போரிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்
4
பெண் என்பது
நான்காயிரம் பண்புகள்
தாய்மை அதில் ஒன்று
பேய்மை அதில் ஒன்று
5
பெண் எப்படியிருந்தாலும்
தெய்வம்
ஆணுக்கு
அப்படி சுலபமில்லை
6
அரக்கியின் இரவுகள்
உறங்கா கதைகள் நிரம்பியவை
7
வல்லரக்கி நிராகரிப்புகளை
கொலை செய்ய
நினைக்கிறாள்
8
ஒருபொழுதின் அரக்கி
மறுபொழுதில்
தாயாகி நிற்றலால்
அவள்
பேயாக இருந்தாலும்
பெருந்தெய்வமே

###

6

எல்லாமே நிபந்தனைகளுக்கு உட்பட்டவைதான்
1
கர்மா
தனக்கு
தாமதமுண்டாக்குகிறது
தனக்கு நடக்கவேண்டியவை
பிள்ளைகளுக்கு நடக்கின்றன
அதற்கும்
தடுமாறாதிருக்கவேண்டும்
2
கலை
பேரர்களுக்கு நடக்கவிருப்பதை
காலம் தாண்டி
தனக்கு
கொண்டுவருகிறது
ஆனால்
களிம்பு ஏறக்கூடாது
எல்லாமே
நிபந்தனைகளுக்கு உட்பட்டவைதான்

3

பாரதி தனக்கென்று நினைத்தது
எனக்கு
வந்து சேர்ந்திருக்கிறது

4
அகந்தை உடைந்து பின்
மீண்டெழல் வேண்டும்
எப்போது உடைந்தது
எப்படி மீண்டது எனும் சிறுமணிச்சப்தம்
இடுப்புக்குக்கீழே
ஓயாது
ஒலிக்கவேண்டும்

5
நான் நானாக இருப்பதும் ஆச்சரியம்தான்
நீ நீயாக இருப்பதும்
ஆச்சரியம்தான்

6
கடும் இருளுக்குள் உள்ள
ஒளிக்கு
ஒளி
அதிகம்

7
முப்பத்து முக்கோடி தேவர்களில்
நீயும்
உண்டுதானே?

8
ஊழை உடைக்க விரும்பினால்
கூட்டு சேராமல்
ஒன்றுபடு

9

அடுத்தவனைக் காயப்படுத்தினால்
தன் மேல்
வடுப்படும்

10


வடுவுண்டாக்கவேண்டும்
அது பேற்றுக்காய் இருப்பின்
பரவாயில்லை

11
உடைந்தவுடன் கூட்டி எடுத்தால்
உடைந்த பொருள் திரும்பிவிடும்
உடைந்த பொருள் திரும்பிவந்தால்
மீண்டுமது
உடையும்

12
தன்னைத்தானே உடைக்கும்போது
தரணியெல்லாம்
தெரிகிறது

13
அனைந்தும் அறிந்தவன்
மீண்டும்
முதலில் இருந்தே
வரவேண்டியவன்

###

7

எண்ணங்களெல்லாம் தெய்வங்கள்
1
எவ்வளவு நாட்களுக்குத்தான்
போலியாகவே இருப்பது
என்று தோன்றிய மறுகணமே
எவ்வளவு நாட்களுக்குத்தான்
உண்மையாகவே
இருப்பது
என்றும்
தோன்றி விடுகிறது
2
தான் தோன்றிச் சாமியார்
தோன்றும் போது மட்டும்தான்
சாமியார்
3
வாழ்க்கை உன்னிடம்
வாய்விட்டுப் பேசுவதற்கு
அனுமதி வழங்கு
4
ஒன்று கூட
வெளியில் இல்லை
5
அகம் புறமாகும்
புறம் பின்னர்
அகமாகும்
6
நிப்பந்திக்கிற செயல்கள்
உன்னுடையவை
7
நோயை நடிக்க
நோய் வரும்
8
தன் காரியம் எதுவென்று அறிவதுவரையில்
எல்லோருமே
தரையில் தான் நீந்திக் கொண்டிருக்கிறோம்
9
பயம்
சத்ரு
10
நீ எப்படியிருக்க வேண்டும்
என்பதை யாருமே
சொல்லித் தரமாட்டார்கள்
நீதான்
கண்டுபிடிக்க வேண்டும்
11
கைக்கருகில்
புதையல் இருந்தாலும்
போரிட்டுத்தான்
அதனை எடுக்க முடியும்
12
அர்ஜுனனுக்கு என்ன சொல்ல வேண்டும்
என்பது
கிருஷ்ணனுக்குத்
தெரிந்திருக்க வேண்டும்
கிருஷ்ணன் என்ன சொல்கிறான்
என்பது அர்ஜுனனுக்கு
புரிய வேண்டும்
அப்படியானால் மட்டுமே
அவன் கிருஷ்ணன்
இவன் அர்ஜுனன்
13
ஒரு குவளை நீருக்குண்டே
கடலின்
சக்தி
14
எண்ணங்களெல்லாம் தெய்வங்கள்
எண்ணங்கள் அகன்றால்
அது முக்தி
15
முக்தியடைந்தவனுக்கு
மறுபிறப்பில்லை

###

8

அவள் முன்னைப்போல இல்லை
நல்ல பக்குவம்
வீண் பேச்சில்லை
அணுகவியலா மிடுக்கு
சாமர்த்தியம்
எல்லாவற்றையும் சமாளிக்கிறாள்
முக்கியமாக
அவளை திருடவோ பறிக்கவோ
முடியாது இப்போது.
நளினம் குறைந்தது
வந்தது
கம்பீரம்

எல்லாம் சரிதான்
ஆனால் என்ன ?
பகுதி ஆண்போல இருக்கிறாள்

புஜங்கள் ஆண்
புருவம் ஆண்
ஆண் சிரிப்பு
ஆண் பாவனை

ஆணின் பொய்கள்

9

வேசியின் மகள்
ஆண்களின் அனைத்து பாசாங்குகளையும்
அறிந்து கொள்கிறாள்

செல்ல கூடிய வாக்குறுதிகள் என்ன
செல்லாதவை எவை
வருமுன் பேசியவை
சென்ற பிறகு பேசுபவை
என
அனைத்தும்
தலைக்கு மேலாக விருட்சமாக
வளர்ந்து நிற்கிறது
அவளை தீமை அண்டாது காக்கும்
விருட்சம்
தீமையே வடிவான விருட்சம்

வாங்கியனுப்பும் நோட்டு புத்தகங்களில்
முன்னர் அனுப்பியதா
பின்னர் அனுப்பியதா
என்னும்
வாசனை
பட்டிருக்கிறது
அதே மீதபண்டங்களின்
வாசனை
கறை போல

அனைத்து பாவனைகளையும்
கடந்த ஒரு ஆண்முகம்
அவள் கற்பனை செய்வது
எல்லா ஆண்களிலும்
அவர்கள் உண்டா என்றே
நோக்குகிறாள்

சக தோழியரைப் போல
இருக்க இயலாமற் போயிற்றென்ற
துயரம் படிந்திறுக்குகின்றன
சாயுங்காலங்களை

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"