அம்மா என் கவிதையின் மொழியானாள் - லக்ஷ்மி மணிவண்ணன்

அம்மா என் கவிதையின் மொழியானாள் -லக்ஷ்மி மணிவண்ணன்

நேர்காணல்-முகமது மதார்


1
கவிதையை முதன்முதலில் எங்கு சந்தித்தீர்கள் ?
முதல் கவிதையை கண்டடைந்த அனுபவம் எனில் "ஆடும் முகங்களின் நகரம் " என்ற
தலைப்பில் தொண்ணூறுகளில் என நினைவு "இன்டியா டுடே "இலக்கியச்
சிறப்பிதழில் வெளிவந்த கவிதையைச் சொல்வேன்.பெரு நகருக்குச் சென்று
திரும்பும் வழியில், நகர் கடந்ததும் சாலையிலும் அதன் ஓரங்களிலும்
பெருகிய தனிமையைக் கண்டடைந்த கவிதையைச் சொல்லலாம்.சுந்தர
ராமசாமியும்,தோப்பில் முகம்மது மீரானும் சிலாகித்த கவிதை அது.இவ்வளவு
சிறிய வயதில் இப்படி எழுத முடிவது ஆச்சரியமானது என்று தோப்பில் நண்பர்கள்
மத்தியில் வைத்து அந்த கவிதை பற்றி பேசினார்.நெருங்கிய நண்பர்கள் பலரிடம்
அந்தக் கவிதையைப் படித்தீர்களா என்று சுரா கேட்டுக் கொண்டிருந்தார்.
2
ஒரு கவிஞனால் கவிதையை வைத்துக் கொண்டு என்ன செய்து விட முடியும்?
குடும்ப அநீதிகளில் துயருற்று வாடிய காலங்களில் ,சிறு பிராயத்திலேயே
கவிஞர்கள் எனக்கு உவப்பானவர்களாக ,ஏதோ ஒருவிதத்தில் தர்மத்தை நிலை
நிறுத்துபவர்களாகத் தெரிந்தார்கள்.அல்லது அவ்வாறு புரிந்து கொண்டேன்.அதனை
அவ்வளவு சரி என்று சொல்வதற்கில்லை.பாரபட்சங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என
கவிகளை அர்த்தம் செய்து கொண்டேன்.இது ஒரு ஆரம்ப நிலை அர்த்தம்
மட்டுமே.அதன் வழியாகத் தான் உள்ளே நுழைந்தேன். பாரதியை ,கவிமணியை எல்லாம்
அவ்வாறுதான் பார்த்தேன்.அவர்கள் ஒவ்வொருவரையும் போல, ஒவ்வொரு காலத்திலும்
என்னை பாவனை செய்திருக்கிறேன்.
முதன் முதலாக வாழ்க்கை, அநீதியின் முன்பாக நிறுத்திய போது அதனிடம் "நான்
கவிஞன் இன்னும் ஓரடி எடுத்து வைத்தால் நீ அழிந்து போவாய்" என்று
பாரதியின் துள்ளலில் பதில் சொன்னேன். அந்த பதிலில் தீமை அஞ்சுவதை
,பின்வாங்குவதை சிறுவயதிலே எனது கண்களால் கண்டேன்.பிற்காலங்களில்
யோசித்துப் பார்க்கையில் சிறுவயதில் தோன்றிய எண்ணம் சரிதான்
என்றுபடுகிறது.கவிஞர்கள் தங்களை பலிபீடத்தில் நிறுத்தி உலகைக்
காக்கிறார்கள்.
காக்கப்படுவதற்கான எண்ணங்களை உருவாக்குகிறார்கள்.
நுண்ணுணர்வுள்ளவர்கள் அதனைக் கண்டு கொள்கிறார்கள்.அல்லது கவிதை தன்னை
முன்னிறுத்தி கவிஞனைக் காக்கிறது ஒரு விதத்தில்.
3
கவிஞனை எந்த வகையில் கவிதை காப்பதாக சொல்கிறீர்கள்?
கவிதை மட்டுமே தற்காப்பிற்கான ஒரே வழியாக எனக்கு அமைந்தது.இவன் வேறு
ஒருவன் என்பதை சுற்றியுள்ள சமூகத்திற்கு அதுவே சொல்லிற்று.வேறு எந்த
விதத்தில் முன்வைப்பதையும் நான் விரும்பியிருக்கவில்லை. உங்களில்
மேம்பட்டவன் என்பதை கவிதையை முன்வைத்தே அடைந்தேன். இல்லையெனில்
அழித்திருப்பார்கள்.பெருகிவரும்
வெறுப்பை,கசப்பை,புறக்கணிப்பை,ஒடுக்குமுறையை என அனைத்தையும் கவிதைகளால்
எதிர்கொண்டேன்.ஒருவர் என்னை வலுக்கட்டாயமாக மறைத்து நின்றால் அவரிடம்
என்னுடைய கவிதையைக் காட்டினேன்.இடித்துத் தள்ளினாலும் கவிதையைத் தான்
முன்வைக்கிறேன்.
4
ஒரு கவிஞன் அவசியம் வாசிக்க வேண்டியது எது ?
கவிஞன் அனைத்தையும் படிக்க வேண்டியதுதான்.ஆனாலும் அவன் தன்னைத்
'தற்காத்துக் கொள்வதற்கான அனைத்தையுமேனும்' அவசியம் கற்றிருக்க
வேண்டும்.தொடர் கல்வி மட்டுமே அவனை உயிர்வாழ வைக்கிறது.
கவிஞன் இறந்த காலத்தில் நின்று கொண்டிருக்க முடியாது எனவே தனது
சமகாலத்தன்மையைக் காக்கும் அனைத்தையும் கற்றிருக்க வேண்டும்.கவிஞன் இறந்த
காலத்தைக் கைவிட முடியாதவன்.நினைவின் பிறழ்ச்சி கொண்டவன்.எனவே பழந்தமிழ்
இலக்கியங்கள் ,மரபு நூல்கள் அவனுக்கு முக்கியமானவை.கனவு காணும் தொழில்
அவனுக்கு.எனவே எதிர்காலத்திற்கான தீர்க்க தரிசனங்களை உருவாக்கும்
நூல்களையும் அவன் அறிந்திருக்க வேண்டும்.கவிஞன், ஒரு பண்டிதன்
எதையெல்லாம் தெரிந்து கொண்டிருப்பானோ அதிலெல்லாம் புலமை கைவரப்
பெற்றிருக்க வேண்டும்.கவிதை காலமின்மையைக் கோரி நிற்பது எனவே காலத்தைக்
கடக்கும் வித்தையும் அவன் அறிந்திருக்க வேண்டும்.
5
கவிஞனை பரிசோதிப்பது எது?
கவிஞனுக்குள் ஒரு புலவன் இருக்கிறான்.இருக்க வேண்டும்.அந்த புலவன் அவனுள்
இருக்கிறானா இல்லையா? என்றுதான் பரிசோதிப்பார்கள்.கவிதையைப்
பரிசீலிப்பதில்லை.இயலாது,இல்லையெனில் அது கடினம்.காலமே கவிதையைப்
பரிசீலிக்கிறது.
கவிஞனுக்குள் புலவன் இல்லையெனில் அவனுக்கு சோறு
கிடைக்காது.நடுத்தெருவில் நின்று கொண்டிருப்பான்.ஏதேனும் ஒன்றிலேனும்
அவனுக்குப் புலமை அவசியம்.அது ஜோதிட சாஸ்திரமாக இருக்கலாம்,திருட்டாக
இருக்கலாம்,கணிதமாக இருக்கலாம்,பொய் பேசுதலில் உள்ள திறமையாகவும்
இருக்கலாம்.புனைவின் திறமையாகவும் இருக்கலாம். ஏதேனும் ஒன்று.ஒன்றுமே
இல்லாமல் கவிஞனால் பிச்சை கூட எடுக்க முடியாது.வெறுமனே யாசகத்திற்கு
வருபவன் பிச்சைக்காரன் என்றால்,ஏதேனும் ஒன்றைச் சொல்லி பிச்சைக்கு
வருபவன் கவிஞன்.ஒரு பொன்வண்டையேனும் கொண்டுவந்து காட்டி யாசகம் வேண்ட
வேண்டும்.
ஒரு பைத்தியத்திற்கும் ஒரு சம்சாரிக்கும் இடையில் நின்று
கொண்டிருப்பவன் கவிஞன்.எல்லாம் தவறாக இருந்தாலும் அவன் கவிஞனில்லை.அறிய
முடியாத நிறக்குருடு.அனைத்தையும் ஐயமின்றி அறிந்து வைத்திருந்தாலும் அவன்
கவியில்லை.அவன் ஞானி.ஞானி தெளிவில் நின்று விடுகிறான்.அந்தத் தெளிவையும்
தாண்டுபவன் கவிஞன்.ஞானி ஒன்றில் நிறைவுற்று நிற்கிறான் பாருங்கள்,அதில்
கடந்து இருப்பதே கவிஞனின் இடம்.எத்தனைமுறை கூட்டிவைத்த அகம்
உடைந்தானோ;அத்தனைமுறை சிதைந்ததைக் கூட்டி அள்ளியிருப்பான்.அதுவே அவனைக்
கூடுதல் அழகூட்டுகிறது.
6
இளமைப் பருவக் கவிதைப் பயணம் எப்படி அமைந்தது ?
சாதாரணம் மிகமிகச் சாதாரணம்.சராசரி.கவிதை பற்றிய பரிச்சயமே அப்போது
ஏற்படவில்லை.பச்சைக் குழந்தைகளுக்கு என்ன தெரியுமோ அதுகூட எனக்குத்
தெரியாது.ஆரம்பம் பெரும்பாலோருக்கு நம்முடைய சூழலில் அப்படித்தான்
முடியும்.அதன் பொருட்டு தாழ்வுணர்ச்சி தேவையில்லை.அறிய அறிய மாற்றிக்
கொள்ளவேண்டும்.அறிய அறிய அகந்தையை முன்வைத்து முரண்பட்டு நிற்கக் கூடாது.
முதல் தேவை கவிதையின் மீதான பேராசை .அதுவே பிறகு வழி நடத்துகிறது.மரபின்
தாளத்தை மட்டுமே கவிதை என்று அப்போது புரிந்து கொண்டிருந்தேன்.வெற்றுத்
தாளம் அல்ல கவிதை என்பது பிற்பாடு தெரிந்து கொண்டது.தாளத்திற்கு
கவிதையில் முக்கிய இடமிருக்கிறது என்பதும் பின்னர் தெரிந்து
கொண்டதுதான்.சுந்தர ராமசாமியே நல்வழிகாட்டினார்.நான் சுராவின்
குருமடத்தைச் சார்ந்தவன்.ஆனால் ஜெயமோகன் வழியாக அதனையும்
கடந்தவன்.நவீனத்துவமே என்னுடைய தொடக்கம்,காலபோக்கில் அதனைக் கடந்தேன்.
7
கவிஞனுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதிலும்,வேலை நிலைக்காமல் இருப்பதிலும்
சாதியத்தின் பங்கு அதிகம்.அதே அளவிற்கு சுய சிந்தனை கொண்டவர்களையும்
தமிழ் சமூகம் நிராகரிக்கிறது.முழு நேரக் குடிகாரனாக ஆனந்த விகடனில்
ஒருவர் பணி செய்ய முடியும்.ஆனால் என்னை அப்படி அனுமதிக்க அதன் கதவுகள்
திறக்காது.அப்படியிப்படி என்றெல்லாமாகி கடைசியில் கவிஞன் யாசகம் கேட்கும்
நிலைக்கு வருவான்.அப்போது யாசகம் மறுத்த குரல்கள் ஒன்றுகூடி இழிவு
பகிர்வார்கள்.தொழில் பற்றி கேட்டமையால் இதனையெல்லாம் சொல்ல
நேரிட்டது.வேறோன்றுமில்லை.
வேலை ,தொழில் என்ன விதமாக இருந்தாலும் கவிதையில் ஒருவர் ஈடுபட
முடியும்.எழுதவும் முடியும்.அது கவிதையின் சிறப்புகளில் ஒன்று.ஆனால்
கவிதையில் சிறப்பானவராகக் கருதப்படும் ஒருவர் தன்னுடைய
வயிற்றுப்பாட்டிற்கான வேலையில் முதன்மையானவராக திகழ்வார் என்று
சொல்வதற்கில்லை.அங்கே அவர் அதன் கடைசி வரிசையில் அடையாளம்
காணப்படாதவராகவும் இருக்கலாம்.ஏராளம் வேலைகளைச் செய்திருக்கிறேன் ,எந்த
வேலையும் மனதில் இதுவரையில் பதிந்ததில்லை.அவை அனைத்துமே அந்தந்த
நேரங்களில் தெரிந்து வைத்திருந்தவை,அகன்றதும் மறந்து போனவை.
இந்த சமூகத்தில் ஓரளவு நிரந்தரத் தன்மை கொண்ட ஒரு வேலையை நம்மால் ஈட்டிக்
கொள்ளமுடியாது என்னும் யதார்த்தம் அறியும் வயதில் ; எனக்கு வேலைக்கு
செலவு செய்ய நேரமில்லாமற் போனது.
8
அன்று முதல் இன்று வரை கவிதை கவிதை என இதயத்தைத் துடிக்க வைப்பது எது ?
கவிதையில் ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்து வெளிப்படுகிறபோது உருவாகிற
மனநிலைக்கு நிகர் உலகத்தில் வேறு எதுவுமே கிடையாது.இருப்பதைக் காட்டிலும்
அந்த சமயத்தில் ஓரடி கூடுதலாக வளர்ந்து நிற்பேன்.அந்த சமயத்தில் ஒரு
விஞ்ஞானி,தத்துவவாதி யாரும் எனக்கு சமம் இல்லை என்பது நன்றாக
விளங்கும்.அந்த சமயத்தில் எவருமே எனக்கு சமமாக முடியாது.அது முற்றிலும்
மேன்மை நிறைந்த ஒரு நிலை.கணப்பொழுதில் கடவுளாகும் நிலை.அந்த நிலை
அடிக்கடி வாய்க்கப் பெற்றால் ,மற்றெல்லாமே அற்பமென்றாகி விடும்.பொருளும்
,பொருள் பெரிது என்று வாழும் வாழ்வுமே கவிஞனை சிறுமை செய்பவை.அதனாலேயே
பொருள் சார்ந்த வாழ்வும் சிறுமை எய்துகிறது.பொருள் சார்ந்த வாழ்விற்கு
இணையான வெளி கவிதையில் உள்ளது
9
பள்ளம்,சித்திரக்கூடம் வெள்ளைப் பல்லி விவகாரம் போன்ற வித்தியாசமான
சிறுகதை முயற்சிகளை பாதியில் விட்டது ஏன் ?
என்னுடைய கதைகள் வேறுபட்டவை.வடிவாலும் சொல்லும் முறையாலும்
வேறுபட்டவை.அப்படி வேறுபடுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக நான்
எழுதுவதில்லை.இயல்பாகவே அப்படித்தான் இருக்கின்றன.இயல்பிலேயே நான்
வேறுபட்டதைப் போல ; அவையும் வேறுபட்டன.மன அமைப்புகளின் உள் அரங்க
தோற்றங்கள் பற்றியவை என் கதைகள்.உள் அரங்க தோற்றங்கள் , ஒவ்வொன்றிற்கும்
ஒரு வடிவம் இருக்கிறது.அதனைப் பற்றியெடுக்க முயலும் கதைகள் அவை.
10
நீங்கள் ஒரு நாவலும் எழுதியிருப்பதாக கேள்விப்பட்டேன். அதைப் பற்றி சொல்லுங்களேன் ?
"அப்பாவின் வீட்டில் "என்று ஒரு நாவலை இரண்டாயிரத்தில்
எழுதியிருக்கிறேன்.அகரம் வெளியீடாக வெளிவந்தது. கதையற்ற நாவல் அது.நகுலன்
தத்துவவிசாரமாக ஏற்கனவே இதுபோல எழுதிப் பார்த்திருக்கிறார்.என்னுடைய
நாவலில் எத்தகைய தத்துவ விசாரணைகளும் கிடையாது.ஆனால் வாழ்க்கை பற்றிய
ஒட்டுமொத்தப் பார்வை அதில் உள்ளது.வாழ்வியக்கத்தின் அந்தரங்க அகநிலை
அதில் ஆழமாக பதிவாகியிருக்கிறது.வெளிவந்த காலத்தில் அது ஏற்றுக்
கொள்ளப்படவில்லை.நம்பி ,கோணங்கி எல்லாம் அதுபற்றி தனிப்பட்டமுறையில்
சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.இப்போது மீண்டும் வாசித்துப்
பார்த்தால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.வாசகர்கள் தான்
சொல்லவேண்டும்.
11
" பீம ராஜா" விருது பெற்ற உங்களின் 'ஓம் சக்தி பரா சக்தி' கட்டுரைத்
தொகுப்பு பற்றி ?
என்னுடைய இரண்டு கட்டுரைத் தொகுதிகளும் விருது பெற்றிருக்கின்றன.முதல்
கட்டுரைத் தொகுப்பு அம்ருதா வெளியீடாக வந்தது.2008 என நினைவு.ஆனந்த
விகடன் பரிசுக்காக தேர்வு பெற்றது.பரிசு ஏதும்
தரப்படவில்லை.அறிவித்தார்கள்.அத்தோடு முடிந்தது.பீம ராஜா விருதை "ஓம்
சக்தி ..ஓம் பராசக்தி " பெற்றது.
என்னுடைய கட்டுரைகள் ஒருவிதமான புனைவுகள்.நான் எவ்வாறு கடந்து வந்தேன்
என்பதன் தடங்களை ஒருவர் அதில் காணலாம்.அது அவருக்கு அதே விதமாகக்
கடப்பதற்கும் உதவலாம்.ஆனால் நான் கடந்து சென்று கொண்டிருப்பவன்.எந்த
நிலையான கருத்துகளிலும் எனதிருப்பில்லை
12
வித்தியாசமான கவிதை மொழியை எவ்வாறு அமைத்துக் கொண்டீர்கள் ?
என்னை எனக்கே அலுக்கவிடாமல் பாதுகாக்கிறேன்.என்னை நான் மிகவும்
விரும்புகிறேன்.கொஞ்சம் அலுப்பென்றாலும் மாற்றியமைத்துக்
கொள்கிறேன்.தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கிறேன்.ஒருவர் இரண்டாவது
சந்திப்பில் முன்பிருந்தவர் இவரில்லையே எனத் திகைக்கும் அளவிற்கு மாறிக்
கொண்டிருக்கிறேன்.கண்டுபிடிப்பு இல்லாத எதையும் நான்
பேசுவதில்லை.என்னுடைய
பயணம் நிகழாதவற்றில் தலையிடுவதில்லை.
13
வரிக்கு வரி வாசகனை அடுத்தடுத்த உலகங்களுக்குள் கடத்தும் விந்தையை
கவிதையில் எவ்வாறு நிகழ்த்துகிறீர்கள் ?
தெரியவில்லை.
14
கவிதையில் வாசகனின் பங்கு என்ன ?
தெரியவில்லை
15
உற்சாகமற்ற பழைய பியட் கார்,
ருக்மணி அக்கா, கணவன் காதலன், கைப்பிடியில் தொங்கும் இளவரசி என உங்களின்
கவிதைகளில் பெண்களின் உலகம் சிறப்பாக பதிவாகிறதே ?
என்னுடைய கவிதைகளில் என்னுடைய அம்மா அமர்ந்திருக்கிறாள்.அவளே அவற்றின்
விசை.அது காரணமாக இருக்கலாம்.
அம்மா இல்லாமல் வளர்ந்த குழந்தைகள் நாங்கள்.அம்மா சாத்தூரில் உயர் நிலைப்
பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் போது இளைய தம்பி பிரவசத்தில்
மறைந்தார்கள்.அப்போது எனக்கு வயது ஐந்து. அப்பா இல்லாமல் போவதும் ஒரு
இழப்பே ஆனாலும் அம்மா இல்லாமல் ஆனதும்,உங்கள் மீது இருக்க வேண்டிய
இயல்பான ஈர்ப்பு அத்தனையும் பிறரிடம் போய்விடும்.பாவனைகளால் உங்களைத்
தொடுவார்கள்.பாசாங்கான அன்பு செலுத்துவார்கள்.பொய்யான வாக்குறுதிகளால்
உங்களை மூடுவார்கள்.புகார்கள் சொல்லிச்சொல்லி குற்றபோதம்
தூண்டுவார்கள்.அப்பா அளிக்கும் வாக்குறுதிகளைக் கூட உங்களால் நினைவூட்டக்
கூட முடியாது.பாரபட்சம் என்னும் தீமை உங்கள் மீது நிலைகொள்ளும்.உங்கள்
மீது இருக்கவேண்டிய காந்தம் அகன்று விடும்.எந்த பெண்ணாலும் அடுத்தவர்
குழந்தைகளை பாரபட்சம் இல்லாமல் கவனிக்க முடியாது.இது அசலான உண்மை.அப்படி ஒருத்தி கவனித்தால் அவளைப் பெண்ணென்று சொல்லக் கூடாது.அவள் தெய்வம். நெறிபயின்று தெய்வமாகக் கூடியவள்.

பொதுவாகவே பெண்ணிடம் தீமை அதிகம்.சிறு
வயதில் பிறிதொரு பெண்ணிடம் நாங்கள் குழந்தைகளாகக்
கைவிடப்பட்டோம்.எங்களைச் சுற்றியிருந்த அனைவருக்கும் எங்களை எப்படி
வேண்டுமானாலும் நடத்துவதற்குரிய அதிகாரம் கிடைத்திருந்தது.நான் கடவுளை
ஒரு கையிலும் கவிதையை மறுகையிலும் எடுத்துக் கொண்டேன்.அப்பாவும்
ஆசிரியர்தான்.ஆனால் பெண்ணின் தீமையின் முன்பாக உலகிலுள்ள அனைத்து
ஆண்களுமே மிகவும் சிறியவர்களே.சிறு வயதிலேயே அறிந்து கொண்டது இது.தீமைமிகவும் வலியது.

எந்த காந்தத்தை இழந்தேனோ அதே காந்தம் என்னிடத்தில்
கவிதையானது.அம்மா என் கவிதையின் மொழியானாள்.
பெண்ணை என்னுடைய ஆன்மா கூர்ந்து பார்த்துக்
கொண்டிருக்கிறது.பெண்ணால் அடைந்த வலியும் துன்பங்களும் ,அவளால் அடைந்த நேர்மறை விஷயங்களைக் காட்டிலும் அதிகம்.அவளுடைய எதிர்மறைப் பண்புகளை பெரும்பாலும் அறிவேன்.ஆனால் அவ்வாறு மட்டுமே அவள் இருக்கலாகாது என்று உளம் கொள்கிறேன்.நேர்மறையாக அவளிடம் ஒரு விஷயம் கிடைத்தாலும் என்னை அது கவருகிறது.இருப்பிற்கு உயிரூட்டுகிறது.அவை எனது கவிதைகளிலும் இடம்மேற்கொள்கின்றன.
16
ழாக் பிரவெரின் கவிதைகள் உங்களை பாதித்ததாக ஒரு கவிதைத் தொகுப்பின்
முன்னுரையில் சொல்லியுள்ளீர்கள். அந்த பாதிப்பு உங்கள் கவிதையில்
நிகழ்த்திய மாற்றங்கள் என்ன ?
நாங்கள் எழுதத் தொடங்கிய காலங்களில் நவீன கவிதைகள் செயற்கையான
இறுக்கங்களால் பூட்டிக் கிடந்தன.கஷ்டப்படுத்தினார்கள்.திருகி
எழுதினார்கள்.அந்த திருகல்களிலிருந்தும்,செயற்கை நெடியிலிருந்தும் வெளியேற
ழாக் பிரவெர் உதவினார்.மற்றபடி அவர் மிகவும் சாதாரணமானவர்.இன்று ஒரு
புதிதாக எழுத வரும் ஒரு தமிழ் கவிஞனுக்கு அவர் உதவுவாரா என்று
தெரியவில்லை.
17
ஒரு நல்ல கவிதையை எப்படி அடையாளம் காண்பது ?
ஒரு நல்ல கவிதை உங்களிடத்தில் உள்ள நல்ல கவிதையொன்றைத்
தூண்டுகிறது.நீங்கள் எழுதவில்லையென்றாலும் கூட இந்த தூண்டுதல் அகத்தில்
நிகழ்கிறது.ஒரு நல்ல கவிதையைப் படித்து முடித்ததும்; அப்படியா ,அதனால் என்ன ? என்று கேட்டுப் பாருங்கள்.இந்த கேள்விக்குப் பின்னரும் அதில் ஏதேனும் மிச்சம்
இருக்கும்.மிச்சமிருந்தால் அது நல்ல கவிதை.

18
கவிதையில் தொடர்ந்து நீடித்து வருகிற மாற்றம் எப்படி சாத்தியமாயிற்று ?
கவிதை ஒரு தொடர் இயக்கம்.அதனாலேயே அது மிகமிகச் சவாலான காரியமாக
ஆகிறது.கவிதை எழுதத் தொடங்கி பத்துப் பதினைந்து ஆண்டுகள் கழிந்த
பிறகுதான் நீங்கள் ஒரு கவிஞரா இல்லையா என்பதையே தெரிந்து
கொள்ளமுடியும்.வேறு ஒரு துறையிலும் இப்படியிராது.நிலை கொண்டு
விடுவீர்கள்.கவிதையில் ஒருவேளை இல்லையென்றானால் இழந்தது
இழந்ததுதான்.ஆனால் கவிதையை முன்னிட்டு அடையும் இழப்பை பேறடைதல் என்றும் சொல்லலாம்.கண்டராதித்தன் ஒரு கவிஞன் என்பது திருச்சாழல் தொகுப்பிலேயே உறுதிப்படுகிறது.அதற்கு அவர் பதினைந்து ஆண்டுகளை ,முதல் தொகுப்பு வெளிவந்தகாலத்திலிருந்து செலவிட்டிருக்கிறார்.
ஆரம்பத்திலிருந்து நம்மால் செய்ய இயன்றதெல்லாம்,ஒப்புக் கொடுப்பதை
மட்டும்தான். கவிஞன் அதன் ஏதோவொரு கிளையில் இருந்து தோன்றுகிறான்.

19
கவிதைக்கு அங்கீகாரம் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
கவிதைக்கு அங்கீகாரம் என்பது முதலில், சமூகம் கவிதையை உணரும் திறத்தால்
அமைகிறது.பாரதி பிற்காலங்களில் தான் உணரப்படுகிறான்.சமகாலத்தில் அவன்
கண்டடையப்பட்டவனில்லை.இப்படி பலரைச் சொல்லலாம்.ஞானக்கூத்தன்
அறியப்படுவதற்குள் அவருக்கு வயது பிந்திவிட்டது.
கவிதை காலத்தில் முந்தி நிற்கும் ஒரு கலை வடிவம்.காலந்தாழ்ந்தே அது
உணரப்படுகிறது.ஆனால் முந்தி உணர்ந்து கொள்ளும் சமூகமே சிறந்தது,துடி
கொண்டது.
20
கவிதைக்கு உடல்(வடிவம்) முக்கியமா? உயிர்(ஆன்மா) முக்கியமா ?
கவிதைக்குச் சொல் முக்கியம்.ஒரு சொல் எவ்வளவு ஆழத்தில் இருந்து வருகிறது
என்பது முக்கியம்.எவ்வளவு பொய்யில்லாமல் இருக்கிறது என்பது அதனினும்
முக்கியம் .கவிதையின் வடிவம்,பொருள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து
நிற்பவை.தனியே அவற்றுக்குப் பொருள் இல்லை

21
ஆரம்பக்கட்ட வாசகர்கள் நவீன கவிதைச் சூழலை எவ்விதம் உள்வாங்கிக் கொள்ளலாம் ?
முதலில் தன்னைக் கவிஞன் என்று அழைத்துக் கொள்வதை நிறுத்த
வேண்டும்.ஒப்புக் கொடுக்க வேண்டும்.கவிஞன் என்று
அறியப்படுவீர்கள்.அறியப்படுவது வரையில் எழுதிக் கொண்டிருங்கள்.
சூழல் கற்றுத் தருவதை எடுத்துக் கொண்டு விலகி நடங்கள்.நீங்கள் யாருக்கும்
,எதற்கும் பொறுப்புதாரி இல்லை.வாழ்வை முழுமையாக விரும்பி வாழத்
தொடங்குங்கள்.நீங்கள் இங்கே மலை பார்க்க,கடல் பார்க்க ,நலம் காண
வந்திருப்பவர் .ஆர்வக் கோளாறில் பிற பொறுப்பு எடுக்க வேண்டாம்.
பொறுப்புதாரி ஆகவேண்டாம்.
கவிஞன் இறுதிவரையில் இயங்க வேண்டியவன்.எந்த ஒன்றிலும் நிலை கொள்ளவேண்டியவன் அல்ல.
22
கவிதை ஏன் எழுதப்பட வேண்டும்?
உயிர் ஏன் வாழ வேண்டும் என்பதைப் போன்ற கேள்வி இது.உலகம் உள்ளளவும் கவிதை
எழுதப்பட வேண்டும்.ஏனெனில் கவிதையிலிருந்தே மறுவுலகம் தோன்றுகிறது.உலகின்
இணை உலகம்.மறுவுலகம் வாழும் உலகைத் தோற்றுவிக்கிறது.

23
சமகால கவிதைப்போக்கை எப்படி பார்க்கிறீர்கள்?
உங்கள் பார்வையில் தமிழின் சமகால முக்கிய கவிகள் யார் யார் ?
ஆரோக்கியமாகவே உள்ளது.எப்போதும் போலவே.முன்னோர்களில் நிறைய கவிகள்.ஆழம்
கொண்டவர்கள்.புதியவர்களில் இசை,போகன்,சபரி நாதன் ஆகியோர் சிறப்பாக
எழுதுகிறார்கள்.

[ மீள் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்