தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 15




 "புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"


நான் சந்திக்கிற இளைஞர்களில் பத்தில் ஏழுபேர் சொல்லுகிற குறை மிகவும் பொதுவானது." என்னை எவரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் " என்று சொல்கிறார்கள்.பெரும்பாலும் அவர்களிடம் உங்களை எதற்காக பிறர் புரிந்து கொள்ள வேண்டும் ? என்றே திருப்பி கேட்கிறேன்.நீங்கள் யார் யாரை புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ? இருக்கட்டும் .பிறர் உங்களை புரிந்து கொள்வதற்கு முதலில் நீங்கள் யார் ? ஏதேனும் கறவை மாடுகள் வைத்து விவசாயம் செய்கிறீர்களா ? இல்லை வாத்து மேய்க்கிறீர்களா ? எதற்காக உங்களைப் பிறர் புரிந்து கொள்ள வேண்டும் ? நீங்கள் யார் ?

இப்படி கேட்பதால் பெரும்பாலும் அவர்கள் அகம் உடைந்து போகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.பிறகு இப்படி அகம் உடைப்பவனோடு வாழ்நாள் முழுதும் பகையாகவே இருப்பார்கள்.தமிழில் இப்படித்தான் நடக்கிறது.ஏனெனில் இது அகம் உடைகிற இடம் மட்டுமல்ல அகந்தை உடைகிற இடமும் கூட .

பெரும்பாலும் இந்த குரல் செயலின்மையின் குரல்.நான் எதுவும் செய்ய மாட்டேன் ஆனால் என்னை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் எப்படி நடக்கும் ?

எதையேனும் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.செயல்பட்டுக் கொண்டிருப்பீர்கள் எனில் நீங்கள் ஆற்றும் செயலை வைத்து உங்களை நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் ஏதுமின்றியே புரிந்து கொள்வார்கள்.செயலே நீங்கள் யார் என்பதைக் காட்டும் .மற்றபடி யாரும் இங்கே அதிதேவதைகள் கிடையாது.அதிதேவதைகள் என்றால் அதற்குரிய காரியங்களை ஆற்ற வேண்டும்.

ஒரு கணம் உங்கள் இருப்பின்மையை யோசித்துப் பார்ப்பீர்களேயாயின் இது அப்பட்டமாக விளங்கும்.நீங்கள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள் அந்த நிலை ஒரு சிற்றெறும்பிற்கேனும் உங்கள் தேவையை உணர்த்துமாயின் நீங்கள் எதையோ செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.அதுவே நீங்கள்.செய்ய வேண்டும்.செய்யாது எதுவுமே திரும்பி வருவதில்லை.

தொழில் செய்யுங்கள் ,கவிதை எழுதுங்கள் ,அரிய நாடகங்களை தேடிச் சென்று பாருங்கள் ,அரிய நூல்களை அறியுங்கள் ,ஏன் ஏதேனும் பறவையை வேண்டுமானாலும் பின் தொடர்ந்து பாருங்கள் . சாலையோர மரக்கன்றிற்கு தண்ணீர் விட்டுப் பாருங்கள்,அறியாதவர்கள் அல்லல்களில் உடன் நின்று பாருங்கள்.நீங்கள் உணரப்படுவீர்கள்.

செய்வது என்பதற்கு தொடர்ந்து செய்வது என்று பொருள்.செய்யாமல் வாய்ப்பேச்சு நோய்.விடாது. உடலுக்கும் அது நோய்.மனதிற்கும் அது நோய் .செயலில்லாத வாய்ப்பேச்சு சமூகமாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம்.எச்சரிக்கையாக இதன் பொதுத் தன்மையிலிருந்து விலகிவிடுங்கள்.எதையாவது செய்து கொண்டே இருங்கள்.உடலுறவாக இருந்தால் கூட நீ செய்ய வேண்டும்.அதிலிருந்தே அவள் உன்னைப் புரிந்து கொள்வாள்.செய்யாமல் அவள் புரிந்து கொள்ள வேண்டுமாயின் சென்று விடுவாள்.இது கடினமாக உதாரணமே.வேறு வழியில்லை.

எத்தனையோ தலித் ஆதரவு வேஷம் போடும் நண்பர்களை நான் அறிவேன்.அவர்களிடம் கேட்டுப் பார்த்தால் ஒரு தலித் ஏழை குழந்தையை கூட தத்தெடுத்து படிக்க வைத்திருக்க மாட்டார்கள்.அதில் மனோலயம் கொண்டவர்கள் அல்லர்.வெறும் வாய்ப்பேச்சாளர்கள்.நீங்கள் அக்கறை கொள்கிறீர்கள் என்பதன் அடையாளம் செய்வதுதானே அன்றி பாவனை புரிவதல்ல.பாவனையாளர்களே பெரும்பாலும் "என்னைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் " என்கிற குறையை முன்வைக்கிறார்கள்.

தினந்தோறும் நாம் ஆற்றுகின்ற காரியத்தில் மனமும் உடலும் நிறைவடைய வேண்டும்.அதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன.உண்ணும் சோற்றுக்கு பங்கம் வரக் கூடாது.அது நம்மைப் பார்த்து சாபமிடக் கூடாது.எதுவும் ஆற்றாமல் என்னை "அள்ளியெடுக்கிறாயே" என்று சோறு சொல்லக் கூடாது.சோறு அவ்வாறு சொல்லக் கூடியது.சொல்லுமென்று என்னுடைய தாத்தா ஆதி நாராயணன் நாடார் சிறுவயதிலேயே படிப்பித்திருக்கிறார். ஒரு கவிதை எழுதி விட்டு சாப்பிட உட்கார் தவறில்லை.ஒரு நூலைப் படித்து விட்டு தாயே என கூக்குரலிடு,அன்னபூரணி அன்னத்தோடு காத்திருப்பாள்.அன்னத்தில் செய்கிற அலட்சியம் இருக்கிறதே அது அனைத்திலும் தொடரும்.எச்சரிக்கை எச்சரிக்கை.



தொழில் செய்.எனக்குத் தொழில் கவிதை.உனக்குத் தொழில் வேறொன்றாக இருக்கலாம்.பணம் கிடைக்கிறதா ,பலன் கிடைக்கிறதா என்பதெல்லாம் இரண்டாவது.முதலில் ஓயாமல் தொழில் செய்.தொழிலுக்கு உடந்தையாயிரு.காரியமாற்று . காரியத்திற்கு உடந்தையாக நில்.கலைமகள் துணையிருப்பாள்.

2

யுகாந்தா
ஒரு யுகத்தின் முடிவு

[மகாபாரதம் மற்றும் அதன் பாத்திரங்கள் பற்றிய புகழ் பெற்ற புத்தகம் ]



ஐராவதி கார்வேயின் "யுகாந்தா" பல நண்பர்களிடமும் வாசிக்கக் கோருகிற நூல்.மகாபாரதம் பற்றிய என்னுடைய முன்முடிவுகளை இந்த நூலின் வாயிலாகத்தான் கழற்றிக் கொண்டேன்.அந்தவகையில் இந்த நூலுக்கும் ஐராவதி கார்வேக்கும் கடமைப்பட்டவன்.தமிழில் அழகியசிங்கர் மொழிபெயர்ப்பு. ஓரியன்ட் லாங்மன் தமிழில் இந்த நூலை 1994லில் முதற்பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.மறுபதிப்புகள் இந்த நூலுக்கு தமிழில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.மராத்தியில் இந்த நூல் வந்தது 1967லில் .ஆங்கில மொழியில் பெயர்த்து 1969லில் வெளியிடப்பட்டிருக்கிறது.

நண்பர் தளவாய் சுந்தரத்தின் அவர் கையொப்பு இடப்பட்ட பிரதியை மீண்டும் கையில் எடுத்திருக்கிறேன்.ஒருவாரமாகக் கையிலேயே வைத்திருக்கிறேன் என்பதே சரி.மகாபாரதத்தை இவ்வண்ணம் அணுகிப் பார்க்க முடியுமா எனும் விந்தையை அது மீண்டும் ஏற்படுத்துகிறது.மீண்டும் மீண்டும் வாசித்தலில் சலிப்படையாத நூல் இது .இது மானுடவியல் அணுகுமுறை இல்லையெனில் வேறொன்று என ஆயிரம் வியாக்கியானங்கள் இதற்கு சொல்லலாம்.இந்த புத்தகம் கொண்டுள்ள ஈர்ப்பிற்கு எத்தகைய வியாக்கியானங்கள் சொன்னாலும் பற்றாக்குறையாகவே அவை செலவாகும்.இது போன்றதொரு படைப்பை உருவாக்க முடிந்தால் போதும் இந்த குறைபட்ட ஆன்மாவிற்கு என்றே படுகிறது.

வடிவரீதியில் இது ஒரு கட்டுரை நூல்தான் .மொத்தமே கிரவ்ன் சைசில் 224 பக்கங்கள்.ஆனால் அளப்பெரிய படைப்பாற்றல் .

எனக்குள்ளிருக்கும் அகமனிதனை கொலை செய்யாத நூல்களை நம்புகிற பழக்கம் எனக்கில்லை.அப்படியான நூல்களைப் பரிந்துரைப்பதும் இல்லை.யுகாந்தா அப்படியானதொரு நூலுக்கு ஒரு உதாரணம்.

3

டால்ஸ்டாய் ஒரு திருட்டில் சம்பந்தப்பட்டு என்னிடம் வந்து சேர்ந்தவர்தாம் ...

இதுபற்றி ஒருமுறை பத்தி எழுத்தொன்றில் குறிப்பிட்டிருக்கிறேன்.அவர் புகழும் பெருமையும் தெரியாத காலம் . எட்டாவதோ அல்லது ஒன்பதோ படிக்கும் போது.கனமான புத்தகங்களை திருடவேண்டும் என்கிற கொள்கைப்பற்றில் இருந்த காலம்.

பள்ளிக்கு வந்து சேரும் புத்தகச்சந்தையிலிருந்து டால்ஸ்டாய் அகப்பட்டுக் கொண்டார்.அவர் அவர்தான் என்பது கூட அப்போது தெரியாது.

லேவ்ஸ் தல்ஸ் தோயின் " சிறுகதைகளும் குறுநாவல்களும் " மாஸ்கோ பதிப்பு.மாஸ்கோ பதிப்பில் உச்சரிப்பு அப்படித்தான் இருக்கும்.இதனால்தானோ என்னவோ சு,ரா மாஸ்கோ புத்தகங்களைப் பார்க்கும் போது கால்பந்து விளையாட தோன்றுகிறது என கூறியிருப்பதாக நினைவு.மாஸ்கோ புத்தகங்களின் வாசனையே சரியில்லை என்பது போல ஏதோ சொல்லியிருப்பார்.

ஒரு நூல் வாசகனைச் சென்றடைவதும் ,வாசகன் ஒரு நூலைச் சென்றடைவதும் விசித்திரமான கதவுகளின் மூலமாகத்தான் . அது பாடசாலைகளிலோ,பயிற்சிகளிலோ அகப்படுவதில்லை .உங்கள் அந்தராத்மா முக்கியம் கருதும் நூல்களைப் பற்றி மட்டும்தான் சொல்கிறேன்.

திருட்டில் வந்து என்னிடம் மாட்டிக் கொண்டதாலோ என்னவோ பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அமைதி காக்கவேண்டியிருந்தது.இரண்டு ஆயுள் தண்டனைக் காலம்.அவரை அவர் இருக்கும் வரையில் எனக்கு அடையாளம் தெரியவில்லை.புத்தம் புதிதாக எனது அலமாரியிலேயே இருந்தார்.நல்ல பண்பாளர்.சிறு சிணுங்கல் கூட செய்ததில்லை.

அந்த நூல் எவ்வளவு மகத்தானது என்பதை உணரும் காலத்தில் அவர் விடை பெற்றுச் சென்றுவிட்டார்.அலமாரியில் காணவில்லை.எனக்கு இன்றுவரையில் அந்த நூலை என்னிடமிருந்து கடத்திச் சென்றவர்கள் யாராயிருக்கும் என்கிற சந்தேகம் அப்போது என்னிடம் நட்பாயிருந்தவர்கள் அனைவர் பெயரிலும் உண்டு. அந்த சந்தேகம் தீரவில்லை இருக்கிறது.திரும்பி வந்து விடமாட்டாராவென ? அவருடைய " நடனத்திற்குப் பிறகு "கதை எவ்வளவு பெரிய மகோன்னதம்
ஐயோ !

4

சாமிகளும் தூக்க மாத்திரையில்தான் துயில்கிறார்கள் ; கவலை வேண்டாம்.



நண்பர் ஒருவர் தூக்கம் சரியாக வருவதில்லை என்ன செய்யலாம் என்று கேட்டார்.தூக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.இரவில் தூக்கம் நின்றுபோய் ,பகலில் அதை ஈடு செய்யும் வாழ்க்கை இருக்குமேயானால் பகலில் படுத்துத் தூங்கலாம்.பகலிலும் இல்லை .இரவிலும் இல்லையெனில் தூக்கமாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.வேறு வழியில்லை.

"இல்லை ...தூக்கமாத்திரைகள் எடுக்கத் தொடங்கினால் பழக்கமாகி விடும் " இது அவர்

பழக்கமானால் என்ன ? இங்கே பல்வேறு விஷயங்கள் பழக்கம்தான்.சட்டை போடுகிறோம் .பழக்கமின்றி வேறென்ன காரணம் ? அரிசியும் கூட பழக்கம்தான்.வாய்க்கரிசியும் இதற்கு விதிவிலக்கில்லை.கொலை,களவு ,பக்தி ,குடும்பம்,புரட்சி எல்லாமே பழக்கம்தான்.கவனித்துப் பாருங்கள் குறிப்பிட்ட காலங்களில் நடைபெறுகிற கொலைகள் குறிப்பிட்ட விதமாகவேதான் நடக்கும்.கழுத்தறுப்பு என்பது ஒரு சீசன்.கல்லைத் தூக்கித் தலையில் போடுவது மறு சீசன்.ஒருபழக்கம் கைவிட்டு மற்றொன்று உருவாகி - பழக்கமாகி கைகூட ,காட்சிகள் மாற நிறைய கால அவகாசம் தேவைப்படும். எனக்கு இந்த ஐநூறு வருடங்கள் வாழப் போகிறவர்களைப் போல பேசுபவர்களைக் கண்டால் தமாஷாக இருக்கும்.பட்டுனு எல்லோருமே போகத்தானே போகிறோம் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை .அவர்கள் பிறர் மட்டும்தான் பட்டுனு போவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நினைப்பு அகலும் வரையில் நோய் குறையாது. வாழ்க்கை என்பதை வருடக்கணக்கில் கூட்டிக் கழித்துப் பார்ப்பதைக் காட்டிலும் நாட்கணக்கில் பாருங்கள் விஷயம்
விளங்கும்.பொழுதுபொழுதாய் பார்க்கத் தெரிந்துவிட்டால் ஞானம் கூடிவிட்டது என்று கொள்க ...

இருபது வருடங்களாக தூக்க மாத்திரைகளில்தான் உறங்குகிறேன்.அதனை உறக்கமென்பது தவறு மயக்கம்.சில உறக்கமூட்டிகள் காலையில் கண்ணெரிச்சலை உண்டாக்கும்.ஏகதேசமாக அனைத்துவிதமான தூக்கக் குளிகைகளையும் உண்டிருப்பேன்.இப்போது அப்படியல்லாத,கண்ணெரிச்சலை ஏற்படுத்தாத மேம்பட்ட பொருட்கள் வந்துவிட்டன.

தூக்கக்குளிகைகள் இல்லாத எனது இரவுகளில் பேய்கள் துணைக்கு வந்துவிடும். வரலாற்றின் எந்தெந்த முடுக்குகளிலிருந்தெல்லாம் கிளம்பி வருகின்றன இவை என்று கணிக்கவே முடியாது.பத்துப் பதினைந்து பேய்கள் ஒரேசமயத்தில் வந்து விடுமாயின் எந்த சம்சாரியாலும் தாங்க முடியாது. கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும் பேய்கள்தான் அவை.உறக்கமூட்டிகளால் நான் அவற்றை மூடி அழகூட்டி வைத்திருக்கிறேன்.திறந்தால் வெளியே கிளம்பிவிடும். அவ்வளவுதான் விஷயம்.அவற்றையெல்லாம் மடக்கிப் கவிதையாக்கி விடுவதற்கு வேறெந்த விந்தையும் காரணமில்லை.என்னுடைய "அப்பாவைப் புனிதப்படுத்துதல் "கவிதைத் தொகுப்பை படித்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.நான் அந்தத் தொகுப்பை தூக்கக்குளிகைகளுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

சபரிமலைக்கு செல்லும்போதும் கூட உறக்கமூட்டிகளை கையிலேயே எடுத்துச் செல்வதே எனது பழக்கம்.பேய்களை அடக்கி ஆள உறக்கமூட்டிகளும் ஒரு மாந்ரீகமே.நாயைக் கட்டுவது போல நாமவற்றைக் கட்டிவிடலாம். சபரிமலை செல்லும்போது எப்படியேனும் உறக்கம் கெடும்.ஒன்றிரண்டுநாட்கள் உறக்கம் கெடுமாயின் என்னிலிருந்து வலிப்பு வெளிக் கிளம்பும்.வலிப்பென்பது ஒவ்வொருமுறையும் மரணத்தைக் கண்முன்னே கொண்டுநிறுத்தி அவமானத்தையும் ஒருசேர வழங்கும் வியாதி.

சாமிகளுக்கே கூட இப்போதெல்லாம் உறக்கமூட்டிகளையே பரிந்துரைக்கிறேன்.இந்த கவிதை அய்யனாருக்கு தூக்கமாத்திரைகளை கொடுத்து வந்தது பற்றியதும் கூட . சாமிகளுக்கு இதுதான் நிலமையென்றால்; நமெக்கென்ன ? நன்றாக தூக்கமாத்திரை சாப்பிடலாம். சதாம் ஹுஸைனை தூக்கிலேற்றும் போது புஷ்ஷை காப்பாற்றியது இந்த உறக்கமுட்டிதான் என்பது தெரியுமா ! தூக்கம் வராமல் தவிக்கும் ஆருயிர் நண்பரே ? எடுத்துக் கொண்டு தூங்குங்கள் ஒன்றும் ஆகாது.பேயும் நோயும் அழகு பெறுகிறார்கள் ,கவிதையாகி விடுகிறார்கள் என்றால் உண்ணுவதை உண்ணாமல் தகுமா ?

#

மேலாளர் வேலை

ஓட்டுப்புரை ரயில் நிலையத்தின்
மோட்டார் பம்பு அறையின் முன்பாக தெரிந்தோ
தெரியாமலோ
மாட்டிக் கொண்டு குதிரையின் மேலேறி
அமர்ந்திருக்கிறார்
அந்த சிமெண்ட் அய்யனார்
கீழிருக்க பயந்து மேலொடுங்கி இருப்பது போலே
குதிரையில் அவர் தோற்றம்

அவர் குளித்து பலகாலமிருக்கும்
உடனிருந்த ஒட்டுண்டி சாமிகள் தாங்கள்
அகன்று சென்ற தடயம்
விடாமல்
அகன்று விட்டார்கள்

அம்மையை மட்டும் பிரிவில் பறித்து
இடுப்பில் வைத்த வண்ணம்
குதிரையிலேறி அமர்ந்திருக்கிறார்
பதினெட்டுப்பட்டியை சுற்றி அரசாண்டு
காவல் காத்த அய்யனார்.
முதிய வேம்பின் பின்மதியம் துணை

கழுத்தைத் திருக்கி
மங்களூர் எக்ஸ்பிரஸ் கிழக்கு நோக்கிச் செல்லும் போது
கிழக்கு நோக்கியும்
குருவாயூர் மேற்கில் நகரும் போது
மேற்கு நோக்கியும்
கடைசி பெட்டி வரையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்
ஏனென்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

உடல்வலிக்கு பாராசிட்டமால் மாத்திரையும்
இரண்டுநாள் தூக்கத்திற்கு தூக்கக் குளிகையும்
கொடுத்து விட்டு வந்தேன் .

தூக்கக் குளிகையை வைத்து
நானென்ன செய்ய ? எனக் கேட்டவரை
நீண்டகாலம் நானும் இதைத்தானே செய்து
கொண்டிருக்கிறேன் மனுஷா -
ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகும் -
என ஓங்கித் திட்டினேன்.

அப்படியா தெய்வமே -
என என்னிடம் சன்னமாகச் சொல்லிய
குதிரைவீரன் அய்யனாருக்கு
இப்போது ஆளில்லாக் கழிவறையின்
மேலாளர் வேலை.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"