10 கவிதைகள்

 10 கவிதைகள் 




1

எல்லா சராசரியும்

ஒன்றில் சராசரி
மற்றொன்றில்
மேதை
எல்லா மேதையும்
ஒன்றில் மேதை
மற்றெல்லாவற்றிலும்
சராசரி

2

இன்று பொறிக்குள்ளிருந்து வெளியே வந்து
பொறிக்கான பொறியொன்றை வாங்கி
பொறிக்குள் திரும்பினேன்
அதனை மேஜையாக்கி அதன் மீது சில வார்த்தைகளை வைத்தேன்
வெளியில் நின்றொருவன் மதுக்குவளையுடன்
பொறிக்குள்ளிருக்கிறாய் தெரியவில்லையா உனக்கு என
கத்திக் கொண்டிருந்தான்
மேஜையிலிருந்த வார்த்தைகள் இதுவொரு கனவென்பது உனக்கு விளங்கவில்லையா?
என்று கேள்வி கேட்கின்றன
அவனை நோக்கி

3

காய்ச்சலில் எடுத்துக் கொண்ட
புகைப்படத்தில்
எப்படி மறைக்க முயன்றாலும்
காய்ச்சல்
தனக்கு
வெளியே
தெரிகிறது

4

இன்றைய காலை இளவெயிலுக்கு
மிதமான காய்ச்சல்,உடல் வேதனை
மங்கலாக கண்கள் கூசுகின்றன
தென்னைவோலைகளில்
ஒளி
வைர மின்னல்
பாராசிட்டமால் 650 தந்திருக்கிறேன்
மதியத்திற்குள்
என் மதியம்
திரும்பிவிடும்
என் வெயில் எவ்வளவு என
சரியாகக் காண்பேன்
அல்லது காணாமலும் இருப்பேன்
எப்படியாயினும்
அதுவே வெயிலின்
என்னுடைய சரியான
அளவு
இந்த இளவெயிலொரு
மிகை



5

யாரும் பார்க்காத ஒரு பாம்பு
சட்டையை தடயமென
விட்டுச் சென்றது
மீட்டர் பெட்டிக்குள் கிடந்த சட்டை
பாம்பின் நீளம் இதுவென வழங்கியது
மின்சார வயர்களுள் ஒயராக வளைந்து அது படமெடுத்து
ஆடியிருக்கவேண்டும்
இப்போது சட்டையில்லை
எடுத்து அகற்றிவிட்டேன்
பாம்பு இருக்கிறது என்கிறாள் மனைவி
யாரும் பார்க்காத பாம்பு
ஒவ்வொரு நாளும் அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது
சட்டையை எடுத்து அகற்றியது போல
இல்லாத பாம்பை எடுத்து அகற்றுவதும்
சாத்தியமில்லை
அது வளர்வதைக் குறைப்பதும் சாத்தியமில்லை
இப்போது வந்து சென்றதைக் காட்டிலும் அதிகமாக பூரண இருப்பு கண்டு விட்டது
பாம்பின் சுவையில் திளைக்கிறது
இந்த மழைக்காலத்தில்
என்வீட்டு
மீட்டர் பெட்டி

6

குழந்தைகள் யாருடையவையும் அல்ல
இறைவனுடையவை
எலிக் குஞ்சுகள் தொடங்கி
ஆனை வரைக்கும்
புலிக்குட்டி தொடங்கி பூனை வரைக்கும்
வளர வளர நானோ நீங்களோ
பெற்றோர்
ஆகலாம்
பேணலாம்
வளர வளர தாங்கி நிற்கும்
தன் கரத்தை அவன் பின்வலிக்கிறான்
பின்வலிக்கும் இடத்தில்
நானோ நீங்களோ
சரியாகப்
பற்றிக் கொள்ளலாம்
மெல்ல மெல்ல தரப்படும்போது
வாங்கிக் கொள்ளலாம்
என்றாலும் நாம் வாங்கிக் கொள்வது
குழந்தைப் பருவம் தாண்டி வளரும்
குழந்தையின்
சக்கையைத்தான்
என் அன்பே

7

ஒரு நாளுக்காக
தன்னிலிருந்து வெளியே வருபவர்கள்
கடற்கரையில் குடித்தெறிந்து மதுப்புட்டிகளை
உடைக்கிறார்கள்
காட்டில் ஆனைப்பாதங்களுக்குள்
ஜலம் ஆகிறார்கள்
வேசிக்கு கொடுத்த பணத்திற்கும் அதிகமாக
புணர நினைக்கிறார்கள்
அந்த நாளில் அவர்களுள் உறங்கும் குழந்தையைத்
திறந்து விடுவதாக
குற்றபோதம் பேசுகிறார்கள்
பெரும்பாலும் அதே நாளில் அவர்கள்
புரட்சி பேசாமல் இல்லை
பிறகு பிறகு தனக்குள் புகுந்து கொள்கிறார்கள்
ஓராண்டுக்கு வெளியே வருவதில்லை
வானம் பயில்வதில்லை
தரை பார்ப்பதில்லை
அறியமலேயே
உடைத்தெறிந்த பாட்டிலில்
படுத்துத் துயில்கிறார்கள்
கரகரக்கும் தூக்கம்
ஆனை ஜலமே குடிக்கக் கிடைக்கிறது
வாந்தியுணர்வு மயக்கம்
தின்பதெல்லாம்
நாள் தோறும் விஷம்
குழந்தை ஏறிச் செல்கையில்
ஆட்டோக்காரனை சந்தேகிக்கிறார்கள்
மீன்காரனிடம்
பேரம்பேசி வாங்குகிறார்கள்
எப்போதும் புறத்திலேயே இருப்பவன்
ஒருநாள் உள்ளே வந்து பார்த்து
இவர்களையெல்லாம்
அதிசயித்து நிற்கிறான்
எவ்வளவு பெரிய மனிதர்கள் என்று ?


8

நீர்த்துளிகளெல்லாம்
மூழ்கித் திளைத்து
குளமானதும்
முதலில்
நீந்தத் தொடங்குவதும்
நீத்துளிகள் தாம்
பின்னர் அவர் கற்றுக்கொண்டார்
பின்னர் இவர் கற்றுக் கொண்டார்
அது கற்றுக் கொண்டது
இதுவும் கற்றுக் கொண்டது
முதல் நீச்சல் நீர்த்துளிகள்
இட்டது

9

கண்
நீர்த்துளிகள் ஒவ்வொன்றும்
அதன் நுனியில்
கண் கொண்டு பிறக்கிறது
எந்த பக்கமாக திரும்பினாலும்
அந்தப்பக்கமாக திரும்பி விடும் வளுக்கும் கண்
பூமியில் விழுந்ததும் அது கடல் நோக்கிப் பார்க்கிறது
கடல் நோக்கி நடக்கிறது
சில சமயங்களில் தவழ்கிறது
சில சமயங்களில் நடனம்
சில இடங்களில் பிரவாகம்
எல்லாம் கடல் நோக்கிச் செல்லுதலின் பாடே
உருண்டையில் இருந்து கீழே விழும்
ஒவ்வொரு துளியும்
விழுந்ததும் எழும்பி கடல் நோக்கிச் செல்கிறது
அந்த சொட்டு நீர் உள்ளேயிருந்து வெளியே
விழுந்தாலும் சரிதான்
வெளியிலிருந்து உள்ளே விழுந்தாலும் சரிதான்
அங்கிருந்து
கடல் காணத் தொடங்குகிறது
சிலசமயம் சின்ன கடல் சின்ன சமுத்ரம்
சிலசமயம் பெரிய கடல் மஹா சமுத்ரம்
2
ஓடுகிற நீரில்
ஒவ்வொரு துளியும் வரிசையாகச்
செல்கிறது
ஒவ்வொன்றும் ஒன்றன்பின் ஒன்றாக
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு கண்ணைத்
தூக்கிச் செல்கிறது
ஒரு துளியும் மறுதுளியின்
பின்புறத்தில் முட்டியபடி
ஏற்ற இறக்கங்களில் குட்டியிட்ட
நாய்குட்டிகளை போல
குமைகின்றன
ஒரு சமயத்தில் நீராக இருந்து
பின்னர் எல்லோருக்குமாக
வந்து ஒட்டிக் கொண்ட விழிகள்
நீராக ஓடுகின்றன
அதனை நதி என்கலாம்
குளம் என்கலாம்
கடல் என்கலாம்
மகா சுமுத்ரம் என்றும் சொல்லலாம்
3
துளி நீர்
கடல் நோக்கியிருக்கும் கண் என்றால்
மகா சமுத்ரம் வான் நோக்கித் திறந்திருக்கும்
கண்


10

எனக்கு வெல்ல ஒன்றுமில்லை
வெல்லமாட்டேன்
கடக்க ஒன்றுமில்லை
கடக்கமாட்டேன்
கடந்தால் அடுத்ததில்
சிக்குவேன்





Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"