அவள் மலர்த்தியிருக்கும் பூ - 13 கவிதைகளின் தொகுப்பு

 1






என்னுடைய பதின்ம வயதுகளில் கிறுக்கனாயிருந்தேன்

என்பதை இருபதுகளில்
கண்டு பிடித்தேன்
பதின்ம வயதின் நம்பிக்கைகளை
கிழிந்த ஆடைகளைப் போல கழற்றி
அதனதன்
கள்ள ஆசான்களின் மீது விட்டெறிந்தேன்

முப்பதுகளின் தொடக்கத்தில்
இருபதுகளில் எப்படி
முழு கிறுக்கனாக இருந்தேன் என்பதைக்
கண்டுபிடித்து
அதற்குத் தூக்க மாத்திரை
பரிசளித்தேன்

நாற்பதில் அதற்கு முன்னர்
இருந்ததெல்லாம் கிறுக்கே என்று
கத்தத் தொடங்கியது
உள்ளத்தில் அமர்ந்து சிரித்த
கள்ளத் தெளிவு

ஐம்பது வர தெளிவும் ஒரு கிறுக்குதான்
என்பது தெரிந்து விட்டது

இப்போது
காலையில் கிறுக்கு பிடிப்பது
மாலையில் தெரிந்து விடுகிறது
மாலைக்கிறுக்கு காலையில்
தெளிகிறது

ஆக கிறுக்கும் தெளிவும் இரண்டு கால்கள்
ஒரு கால் முன்னே செல்லும் போது
மற்றொரு கால்
பின்னால் வருகிறது
பயணத்தில்
இருப்பவனுக்கு

2

மூக்கில் சிறுகோணல்
உதட்டில் சிறுபிளவு
பல்லொன்றில் அழகிய ஒடிவு
எல்லாம் இணைந்து அற்புதமாய்
அமைந்த அழகி
இல்லையென மறுத்து
இல்லையை
அகத்துக்குள் போட்டு கொண்டேயிருந்தாள்
உள்ளத்தில் சிறுகோணல்,
சிறுபிளவு பெரிதாகி
ராக்ஷ்த ஒடிவு
உடைந்து துகள்துகளாய்
தொங்குகிறது
சிற்பம்

3

ஆசையின் தலைதான் எவ்வளவு பெரியது ?
1
விளைவின்றி
ஒரு பழம் எடுக்க வழியுண்டா?
ஒரு குடம் உடைக்க வழியுண்டா?
உலை வடிக்க வழியுண்டா
சொல்
2
எந்தக் குடம் உடைந்தாலும்
அதன் விளைவு
அதனருகில்
இருக்கும்
3
படம் எடுப்பதற்கே பாம்பிற்கு
விஷம்
காளைக்கு கொம்பு
சாமிக்கு ஈட்டி
பாபிக்குப் பெண்டிர்
5
ஐந்து தலை நாகமும் சாதுதான்
தலைவைத்துப் படுத்திருப்பது யார்
என்பதைப் பொறுத்திருக்கிறது
அது
ஆசையின் தலைதான்
எவ்வளவு பெரியது
6
முட்டாத மாடுண்டா
மோதாத எருதுண்டா
கடிக்காத எறும்புண்டா
திருப்பி எடுத்து அடிக்காத வினை உண்டா?
7
காத்துக் கொண்டேயிருக்கிறாள்
அரண்மனையில் தேவி
ஆலமூட்டில்
பகவதி
நடுத்தெருவென்றாலோ
ஆறாது நிற்பவள்
இசக்கி
எல்லாயிடத்திலும்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
போர்
அரண்மனையில்
அதற்கான போர்
ஆலமூட்டில்
அதற்கான போர்
நடுத்தெருவில்
அதற்கான போர்
உச்சக்களியாட்டம்
எந்த போரில் கலந்துகொண்டாய்
என்பதைப் பொறுத்து
அமைகிறது
விதி
8
போரில் வென்று
எடுத்தது அத்தனையும்
அடுத்த போரில்
கைவிடத்தான் வேண்டும்
வழியே இல்லை
வேறு வழியென்னவென்றால்
தெய்வத்திற்கு கொடுக்கலாம்
விருப்பமில்லையானால்
ஜோதிவளர்த்து
இடலாம்
கொளுந்து விட்டேனும் சிறிதுநேரம்
எரியும்
9
செய்வினை செய்தவனுக்குத் திரும்பும்
தன் வினை
தன் முன்னே திரும்பும்
10
எல்லோரும் சொல்லிவிட்டார்கள்
என்றுதானே
நினைக்கிறீர்கள்
ஆமாம்
இப்போது
வந்தவனும்
சொல்லிவிட்டேன்

###

4

பழைய வீடு
1
வெள்ளையடித்து பூசிக் கொண்டிருந்தார்கள்
திண்ணை
நடுமுற்றம்
நாலுகெட்டு
எல்லாம் புதிதாயிற்று
பழைய வீட்டின் வெளியே வீசிற்று புது மணம்
புது மணத்துக்கு அடியில்
அப்படியே இருந்தது பழைய வீட்டின்
தொல்மணம்
2
பழைய வீட்டிற்கு
வயதும் பருவமும் பல
பதநீர்
நொங்கு
கிழங்கு
கருப்பட்டி
கற்கண்டு பருவங்கள்
3
மாமிமார் வந்து அழுதால்
எப்போதென்றாலும் உடன்சேர்ந்து பழையவீடும் அழுகிறது
மாமிமார் வந்து சிரித்தால்
கொலுசுகட்டி
குலுங்கிச் சிரிக்கிறது
4
வெள்ளையடித்தால் தீராத
ரகசியங்கள்
நான்கடியாக உயர்ந்து விட்ட
சாலைமட்டத்திற்கு
கீழே
சென்று கொண்டிருக்கின்றன
5
பழைய வீட்டைப் புதுப்பிக்க
ஒரு வழிதான் உண்டு
சுவடே தெரியாமல்
இடித்துவிடுவது

###

5

உன் சிலையுடன்
என்னை நோக்கி வராதே
ஏனென்றால்
என் சிலையால்
உன்னை நான்
எதிர்கொள்வதில்லை

6

தவறு செய்தவன்
கொஞ்ச நேரம்
இளகி நிற்கிறான்
மழை வெள்ளமென
எல்லா திசைகளுக்கும்
ஓடி ஒழுகுகிறான்
கைநீட்டினால் தானமிடுகிறான்
பசிப்போரைக் கண்டால்
மடி இரங்குகிறான்
பின்பு ஓடிச் சென்ற இடங்கள் அனைத்தையும் பின்வலித்து வாரி
ஒன்று சேர்த்து
தான் ஆகிறான்
சற்று நேரத்திற்கு முன்பிருந்தவனை
நெடுநேரம் பார்த்துக் கொண்டே இருக்கிறது
அவன் ஆற்றிய
பிழை

7

நீ எங்கிருந்து வருகிறாய் என்றுதானே
கேட்கிறீர்கள் !
ஒரு பெண்ணை வதத்தில் இட்டுப்புதைத்த மையக்குழியில்
இருந்து...

எனது ஊர் எங்கேயிருக்கிறது என்பதுதானே
உங்கள் பேராவல் !
இருப்புக்கு மேலே காட்டு விலங்குகள் ,துலங்க
ஓடியாடும் சமாதி .

நீ யார் என்பது தானே உங்கள் சந்தேகம்?
ஏற்கனவே இறந்ததுபோல தோன்றி மறையும் இருத்தல்.
நாளைய உங்கள் தோட்டத்தில் காணவிருக்கும்
கண்கொள்ளா கிரேந்தி மலர்க் குருகுருப்பு

நீங்கள் காண சகிக்காமல் இன்று கடந்து சென்ற
விபத்தில்
வரைபடமாய்
சொட்டிக் கிடக்கும் ரெத்தம்


8

வெகுநாட்களுக்குப் பிறகு
ஐந்தாம் வகுப்பிலேயே எல்லோருக்கும்
தந்தையை போன்று
நடந்து திரியும் பால்ய நண்பனைப் பார்த்தேன்

எப்போதும் யாரைக் கண்டாலும்
உடனடியாக
தந்தையாகிறவன் அவன்

அவன் எப்படி குழந்தையிலேயே
எல்லோருக்கும்
அப்பாவானான்
என்கிற
வரலாற்றை
அறிய மாட்டேன்.

சிறுவயதிலேயே அப்பாவானதே
அவன் பிரச்சனை என்பது தெரியும்

நீ இப்போது எத்தனை குழந்தைகளுக்கு
தந்தை என்று கேட்டேன் ?

விபத்தில் கால்
முறிந்து விட்டது மக்கா ...
என்றவன்
துணியை ஒதுக்கி
ஒளிந்திருந்த கால்களைக் நீட்டினான்

முதல்முறையாக அவன்
குழந்தையான
ஒரு தருணம் இது

அதனை எடுத்துக் கொண்டேன்
தந்தையாக அவன் எனக்குள் இருக்கும்
சிலைக்கு பக்கத்தில்
இதனை வைத்தேன்
வெள்ளந்தியாக
சிரிக்கிறது
தானொரு தந்தையாக
இல்லாதது
குறித்து
இச்சிலை

ஒடிந்தது உனது தந்தைக்குத்தான் மக்கா
உனக்கல்ல
ஓய்வெடு
சரியாகும்
என்றேன்


9

மீறுகிற பெண்

உலகத்தின் உச்சியில் நின்று
ஒரு அடி எடுத்து வைக்கிறாள்
துர்க்கை எடுத்து வைக்கும் முதல் அடி .
அனைத்தும் ஆடத் தொடங்குகின்றன
பெண் சாபம் பெற்றவனின் மேலேறி நின்று
அவள் ஆடுகிறாள்
அவள் காலடியில் நசுங்குகிறது
அந்த ஆணின்
தலை

மீறுகின்ற பெண் எதன் பொருட்டு மீறுகிறாள்
அதில் அவளுக்கு லாபமுண்டா எனில்
மீறுதல் மட்டுமே அது
லாபக் கணக்கிற்கு இடமற்ற
கணக்கு அது
உலகின் உச்சத்து பலிபீடத்தில்
தன்னை மலர்த்தி வைக்கிறாள் அவள்

ஓரடிக்கு ஓரடி இடம் உண்டாகிறது
மங்கள நாயகியர் உட்கார்ந்து கொள்வதற்குரிய
இடம்
எல்லா மங்கள நாயகியரும்
வந்து சேரும் இடம்

ஒரு கவிஞனின் கண்ணுக்குத்
தெரிகிற சிறிய இடம் அது .
அவனால் ஆராதனை செய்யப்பட வேண்டியது
உலகின் உச்சியில்
அவள் மலர்த்தியிருக்கும்
பூ

தேவர்கள் என்றால் அது அவர்கள் வணங்குதலுக்குரியது


10

சொல்லிக் கொள்ளும் படியாக
ஒரு வேலையும் இல்லாமல்
வந்து திரும்புகிறவனிடம்
வேறொரு மொழியில் இந்த நகரம் உரையாடத் தொடங்குகிறது

தனது ஒப்பனைகளில் ஏன் உனக்கு ஆர்வமில்லை என அது
கேட்பதில்லை

ஒளி ஆபரணங்களைப் பூட்டி
அவனை அந்தியில் வழியனுப்பும் போது
என்னைப் பரபரப்பில்லாமல் பார்த்துச் செல்பவனே நீ வாழ்க என வாழ்த்துகிறது

வாழ்த்தொலி கேட்கையில் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டேன்

எனினும் சபையில் கவனிக்கப்படாத பேரரசியை ஒப்ப
எனது முதல்பார்வையில் நகரத்தின் உடல் நடுங்கியதை
நகரமும் பார்த்தது
நானும் பார்த்தேன்


11

ஒன்றுமில்லாத நாள்
தள்ளித்தள்ளி
கரைசேர்க்கப்பட்டது
ஒன்றுமில்லாத நாளுக்கு
ஒரு காதலிலும் இல்லாத நாள் என்று அர்த்தம்
அன்பு வெகுதொலைவில் மாட்டிக் கொண்ட நாள் என்று பொருள்
உணவு தரப்பட்டது
இனிமைக்கு பஞ்சமில்லை
கருணைக்கோர் குறைவில்லை
இரண்டு முறை குளித்தேன்
என்றாலும் ஒன்றுமில்லாத நாளில்
ஒன்றுமிருப்பதில்லை

ஒன்றுமில்லாத நாளைத் தள்ளி
கொண்டு சேர்த்துவிட்டு
இன்றைய நாளை மூடி
அதன் மேல்
படுத்திருக்கிறேன்

முன்கூட்டியே ஒன்றுமில்லாத நாளுக்கு
அடுத்த நாளின் மடிநுனியில்
ஏக ஜிலுஜிலுப்பாக உள்ளது

12

நாங்கள் ஒன்றாகத் தான் இருந்தோம்
அவனைக் கைது செய்தார்கள் அதன் பிறகு
அவனைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டோம்
ஒன்றாகத்தானிருந்தோம்
அவன் வீட்டில் சோதனையிட்டார்கள் அதன் பிறகு
ஒன்றாக இருப்பதைத் தவிர்த்து விட்டோம்
ஒருநாளில் அவனை மர்மமாக்கினார்கள்
அதன் பிறகு நாங்கள் அனைத்திலும் பின்வாங்கி விட்டோம்
நாங்கள் பிறழ்வடையாமல்
தப்பித்துக் கொண்டதன்
வரலாறு
இதுதான்
அவனைப் பைத்தியம் என்று
ஊர் கூடிக் கத்திய நாளில்
அப்படியே ஆமோதித்துத் திரும்பினோம்
அவன் எப்படிப் பைத்தியமானான் என்பது மேலதிகமாக
தெரியும் என்பதால்

13

ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனை
ஒரு மரம் இன்னொரு மரத்தை இடித்து விலக்குவது போல
தள்ளிக் கொண்டிருக்கிறான்
தொலைவில் நின்று காண்பவர்களுக்கு
இரண்டும் சேர்ந்து
தழுவிக் கொள்வது போல
தெரிகிறது

இரண்டு மரங்களும் தனித்திருக்கவே இடித்துக்
கொள்கின்றன
அருகில் நின்று காண்பவர்களுக்கு
இரண்டு கவிஞர்கள்
பிரிந்திருக்கவே
சேர்ந்திருக்கிறார்கள் என்று
தோன்றுகிறது

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"