Skip to main content

23 கவிதைகளின் தொகுப்பு - லக்ஷ்மி மணிவண்ணன்
1
நான் என்னைப் பற்றி
ஒன்றை நினைத்து வைத்திருக்கிறேன்
அது அப்பழுக்கு இல்லாதது
அது குற்றங்கள் புரியும்
தவறுகள் செய்யும்
பிழை புரியும் ஆனால்
அமிர்தமானது
ஒருவரை அழைத்தால் அங்கு நோக்கியே
அழைக்கிறேன்
ஒருவர் என்னைப் பிரிந்து சென்றால்
அங்கிருந்தே பிரிந்து செல்கிறார்
2
ஒருவர் உயிருடன்
இந்த முச்சந்தியை பார்த்துக் கொண்டு நிற்கிறார்
உண்மையாகவே ஒருவர்
உயிருடன் நின்று இந்த முச்சந்தியை
காண்கையில்
ஒரு வினோதம் நிகழ்கிறது
அவர் உயிருடன் நிற்கிற
வினோதம்
அவர் மட்டுமல்ல இந்த முச்சந்தியும் தோன்றி நிற்கிற
வினோதம்.
எவ்வளவு பொருள் கொடுத்தும்
வாங்க இயலாத வினோதம்
எத்தகைய அதிகாரத்தாலும் பறிக்க இயலாத வினோதம்
அவர் வேறு எதையுமே செய்யவில்லை
நின்று பார்க்கக்கூடிய வினோதத்தை
நின்று
பார்த்துக் கொண்டிருக்கிறார்
அவ்வளவுதான்
தோன்றி நிறைகிறது
மாபெரும்
வினோதம்
3
எதிரே அமர்ந்திருக்கிறேன்
ஒரு கைப்பிடியளவு முருங்கை இலைகள்
கண்களில்
அசைகின்றன
அதுவே இப்போதைய எனது காடு
அதன் மூட்டில் குழந்தை
சிறுநீர் களிக்கிறாள்
அதுவே இப்போதைய என்னுடைய கடல்
4
மேஜை பன்னீர் பாட்டில் நீர்
எதிர்பக்கமிருந்து வருகிற
விசிறியின் காற்றில்
குழந்தை நடனமென
அசைகிறது
என் உள்மன அசைவுக்குத் தக்க
இன்றைய
பிரபஞ்சம்
லேசாக
குலுங்குகிறது
5
என்னை கோபமூட்டுவது எளிது
என்னை சிறுமைப்படுத்துவது எளிது
அவமானப்படுத்துவது அதனினும் எளிது
தாழ்வுணர்ச்சியைத் தூண்டுவது எளிது மிக எளிது
காதலிப்பதும் எளிது
பின் கைவிடுவதும் எளிது
மிக எளிது
6
தினமும் தண்ணீர் வைக்கும்
நாய்களை
நான் கண்டு மூன்று நாளாச்சு
வேறுவேலைகளில் இருக்கிறேன் என்றால்
புரியுமா அவற்றுக்கு
நேரத்தில் வந்து காணாது
திரும்பி இருக்கும் .
என்னை நீரென நினைத்திருக்கும்
அவை ,
அள்ளியெடுக்க
எட்டாமல் சென்றிருக்கும்
தண்ணீர் வைக்கும் அந்த இடம் நோக்கித்தான் திரும்பிக் கொண்டிருக்கிறேன்
நண்பர்களே பொறுத்துக் கொள்ளுங்கள்
வேறு இடம் நோக்கிப் போகத் தெரியாதவன்
அங்குதான் திரும்பிக் கொண்டிருக்கிறேன்
தண்ணீர் வைக்கும் இடம் நோக்கி ...
நீங்கள் சளப் சளப் என
எடுத்துக் கொள்ளும் இடம் நோக்கி ...
அங்கு நோக்கித் தான் இழுபட்டுக் கொண்டிருக்கிறேன்
என்னவானாலும்
அதுதானே எனது இருப்பிடம்
இல்லையா?
7
எவரைப் பார்ப்பதற்கும் வெறுங்கையோடு
சும்மா வருவதில்லை நான்
மடங்கி மடங்கிச் செல்லும் மலைத்தொடரில்
நடுவில் தோற்றங்காட்டும் பௌர்ணமியை கொண்டு வந்தேன்
நேற்று உங்களிடம்
மொய் எழுதாமல் சோற்றில் கைவைக்கும் பழக்கம்
எனக்கில்லை
வழிநெடுக உதிர்ந்து கிடந்த மஞ்சள் பூந்தரையை
மரங்களுடன் அள்ளியெடுத்து வருவது எனது வாடிக்கை
கைபிடித்து என்னை வரவேற்றுப் பாருங்கள்
நீங்கள் விட்டகலும் காட்சிகளின் வெப்பம் உண்டு என் கையில்
சிறுவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பேருந்துக்கு வெளியே
ஓடிக்கொண்டிருக்கும் தாவரங்கள்
யுவதிகளுக்கோ பகலில் தருவேன்
இரவின் நட்சத்திரங்கள்
எனினும் குழந்தைகள் வசிக்கும் வீட்டில்
வேடிக்கையைத் தரயியலாமல் வெறுங்கையோடு செல்பவர்கள்
துரதிர்ஷ்டவசமானவர்கள்
கூர்ந்து என் கண்களை பார்க்கச் செய்தவர்களுக்குக்
கடல் காட்டுவேன்
8
அப்பா இறந்து போய்விட்டாரென
செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன
யாருடைய அப்பா ?
அப்பா இறந்து போனாரென பேசிக் கொள்கிறார்கள்.
எல்லோருடைய அப்பாக்களும் ஒரேநாளில் எப்படி
இறந்து போக முடியும் ?
யாரைக் கேட்டாலும் அப்பா இறந்து போய்விட்டார்
என்று சொல்கிறார்கள்
அப்பா எப்படி இறக்க முடியும்
நடுவயதுதானே ஆகிறது அவருக்கு ?
அம்மாவைக் காட்டிலும் ஓரிரு வயது அதிகம்
அவ்வளவுதானே விஷயம்
அப்பா அவ்வளவு எளிதில் இறந்து போய்விடுவாரா
என்ன
நடுவயதிற்குப் பிறகு வயதே ஆகாத
அப்பா
நீ பெரியவனாயிருந்தால் இனி அவர் உனக்குள் நுழைய போகிறார்
நீ தாத்தாவாயிருந்தால் உனக்குள் இருந்து சற்றைக்கு முன் அவர் வெளியேறினார்
நீ குழந்தையாயிருந்தால் உனக்குள் அவர் வளர்ந்து கொண்டிருக்கிறார்
நீ சத்ருவாக மாறினால் தொடர்ந்து அவர்
கொலைமுயற்சியில் ஈடுபடுகிறார்


9

நீ வெளியில் வந்ததும்
ஓடி விடலாம்
செய்தியின் அறையைக் கடந்து வா
பற்றின் பள்ளியறை
விட்டு வா
வெளியில் தான்
பொன் வண்டுடன்
நின்று கொண்டிருக்கிறேன்
ஓடி விடலாம்
பகலென்றும் இல்லை
இரவென்றும் இல்லை
எப்போது வேண்டுமானாலும் வா
பகலை விட
இரவு நுட்பம்
இரவைக் காட்டிலும்
பகல் அலங்காரம்
வெளியில் வா
ஓடிவிடலாம்
செய்தியின் அறையைத் தூக்கி
எறிந்து விட்டு
பற்றின் பிடியில்
இறங்கி
உள்ளேயே கூட இரு
வெளியிலிருந்து
உள்ளே உள்ளே
ஓடி விடலாம்

10

நீ வெளியில் வந்ததும்
ஓடி விடலாம்
செய்தியின் அறையைக் கடந்து வா
பற்றின் பள்ளியறை
விட்டு வா
வெளியில் தான்
பொன் வண்டுடன்
நின்று கொண்டிருக்கிறேன்
ஓடி விடலாம்
பகலென்றும் இல்லை
இரவென்றும் இல்லை
எப்போது வேண்டுமானாலும் வா
பகலை விட
இரவு நுட்பம்
இரவைக் காட்டிலும்
பகல் அலங்காரம்
வெளியில் வா
ஓடிவிடலாம்
செய்தியின் அறையைத் தூக்கி
எறிந்து விட்டு
பற்றின் பிடியில்
இறங்கி
உள்ளேயே கூட இரு
வெளியிலிருந்து
உள்ளே உள்ளே

ஓடி விடலாம் 


11

தள்ளாடி ஆட்டோவில்
வந்திறங்கும் தந்தையின் கையில்
பால் பாக்கட்
கைக்குழந்தையை ஒரு கையால் தூக்கிச் செல்வது போல
செல்கிறான்
தள்ளாடுகிறது குழந்தை
அத்தனைத் தள்ளாட்டத்திலும்
அவன் கை
குழந்தையை
கைவிடவில்லை
பால்பாக்கட் முனையை
சுருட்டிப் பிடித்திருக்கிறான்
பால்பாக்கட்டை எடுத்து
கொண்டு தருகிறேன்
என்று சொன்னவனை சீறி கொண்டே
உள்ளே
நுழைகிறது
பால் பாக்கட்
அனாதையில்லை செல்லமே நீ
குழந்தை ஏசு
12
"எனக்கு நன்றாக சைக்கிள் ஓட்டத் தெரியும்
நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள்
டியூப் லைட் முதுகில் கட்டி
தலைகீழாகவும்
சைக்கிள் ஓட்டுவேன்
விண்ணில் கட்டியிருக்கும் அந்தரக்கயிற்றில்
இந்த துருவத்தில் இருந்து அந்த துருவத்திற்கு
சைக்கிள் ஓட்டுவது எனக்கு
தண்ணீரில் நீந்துவது போல
முன்சக்கரத்தில் நிறுத்தி பின்சக்கரத்தை
மேலுயர்த்தும் போது
மேளதாளங்கள்
முழங்கட்டும்
ஆனால் நீங்கள் வேறென்னவோ
கேட்கிறீர்கள்
கரகரக்கும் குரலில்
தகரத்தில் ஒலி கேட்கிறதா உங்களுக்கு
பதிலாக
அதனை உங்களுக்கு கேட்பதற்காகத் தான்
வைத்திருக்கிறேன்

13

நடிகை போல கதவு திறந்து
புதிய மாலில்
சிரித்த வண்ணம்
வெளியேறிச் செல்லும்
சாதாரண பெண்ணிடம்
எத்தனை பேர் சூழ வருகிறாய் என்று கேட்டேன்
நிறைய பேர் நிறைய பேர்
அதைத்தான் நீயும் பார்த்துவிட்டாயே
என்ற வண்ணம்
கலைந்து செல்கிறாள்

அவள் விட்டுச் சென்ற இடத்தில்
உதயமாயிற்று
ஆளில்லா
பெருஞ்சபை

அவள் குலுங்கி சிரித்ததில்
உருவானது
ஒரு
சித்திரச்சபை

14

சொற்களால் உண்டான கூடு
முடிவில் நாம் செய்து கொண்டது.
ஒவ்வொரு சொல்லாக எடுத்து
நாமே செய்து கொண்டோம்
எங்கு திறப்பது என்பது தெரியவில்லை
வெளியே வந்தாக வேண்டும்
தன் சொந்தச் சிறையிலிருந்து வெளியே
ஆனால் அதுவோ
திரண்டு திரண்டு
இரண்டு கதவுகளையும் சாற்றி
சிப்பியென
மூடிக் கொண்டது
நாம் பேசுவதெல்லாமே
சொந்தச் சிறையின்
வசனங்கள்
காண்பது எல்லாமே
சிறையின் காட்சிகள்
சொல்லொன்று உடைய
சிலசமயம்
ஒரு கவிதையுடன்
சிப்பியை இரு கைகளாலும் திறந்து
வெளியே வருகிறேன்
கூடு அதிர்கிறது
ஒரு மரங்கொத்தி இட்ட
துளையின் துவாரம்
சேகரித்த எல்லா
சொற்களிலும்
விழுகின்றன

15

பெருநகரத்தின் பழைய மேம்பாலம் ஏறி இறங்குகையில்
திருநெல்வேலி சந்திப்பு
பேருந்து நிலையம்
தோன்றுகிறது
சிலயிடங்களில் வந்து மறைகிற
நாகர்கோவில் சிற்றூர்கள்
கோவில் வெளிப்பிரகாரங்களில்
நிலா வெளிச்சத்தில் நீண்டு படுத்திருப்பது
நிச்சயமாக வேறெந்த ஊரும் இல்லை
தன்மடியில் தன்தலை சாய்த்து
கிழவியின் சாயலில்
அது இந்த பெருநகரத்தின் ஒரு
தோற்றம்
விடியலில் நகரத்தைச் சுத்தம் செய்யும் பணியாளர்கள்
நேற்றைய கொடு நினைவுகளோடு
போராடிக் கொண்டிருக்கிறார்கள்
அதன் கடுஞ்சாபத்தை உதாசீனம்
செய்கிறாள்
சுட்ட இட்லிகளை நடைமேடையில் பரத்தும் செல்லியம்மன்
இந்த நகரம் விரைவாக வயோதிகம் பெற்று வருகிறதா என்பதை
பாடிகாட் முனீஸ்வரரிடம் கேட்டுத்
திரும்பிக கொண்டிருக்கிறேன்
இந்த மாபெரும் நகரத்தின் ராணி தேனி
எந்த கருவறையில்
இருக்கிறாள்
சிறுமியாக
என்கிற
கேள்வியோடும்
கூடுதலாக

16

அவர் மரணம் அடைந்தார்
பேருந்துகள் வழக்கம் போல ஓடுகின்றன
இவர் ஒருமுறை காலமானார்
எல்லோரும் அலுவலகங்களுக்கு சென்றார்கள்
பிரமுகர் முக்தியடைந்தார்
குழந்தைகள்
மூன்றாம் நேரத்து உணவை உண்ணத் தொடங்கினார்கள்
ஞானி இறந்து தொலைத்தார்
அன்றாடம் அன்றாடமாகவே இருந்தது
எதுவும்
முடிவடையவில்லை
இதனை இருந்து பார்ப்பதற்கு
இறந்தவர்களுக்குத்தான் வாய்க்கவில்லை
அவர்கள் பாவம்
என்னவெல்லாம் நினைத்திருந்தார்களோ

17

முதல்நாள் காலையில் இரண்டு கிருஷ்ண பருந்துகள்
பதினோரு மணிக்கு
இரண்டு
மாலை நான்கு மணிக்கு இரண்டு
மொத்தம் ஆறு கிருஷ்ண பருந்துகள்
என கணக்கு போட்டு வைத்திருந்தேன்
பத்துநாட்கள் ஆயிற்று
மொத்தம் இரண்டே கிருஷ்ண பருந்துகள் தான் என்பதை அறிய
அவை
கீழே ஒரு மனிதன்
என்பதை
அறிந்து கொள்வதற்கும்

18

ரயில்பெட்டிக்குள் வேகமாய் நுழைந்த பாடல்
துள்ளி வெளியேறிக் குதித்தது
படிக்கட்டில் சாய்ந்து
அதனை மீண்டும் இழுத்து பெட்டிக்குள்
போட்டேன்
பயணம்
தொடங்கியது
கொய்யாய் பெண்
அவள் ஊர்க்கதைகளைச் சுமந்து
நிலத்தின் சுவையை
பகிர்ந்துச் செல்கிறாள்
பள்ளிக்குச் சென்றிருக்க வேண்டிய சிறுவன்
கொண்டு நீட்டிய மல்லிகைப் பூக்களில்
தாயாரின் முகம்
இந்தரயில் இப்போது பகலைக் கிழித்து
ஜந்து நிலம் கடந்து
ஆறாவது நிலத்திற்குள்
பாய்ந்து
கொண்டிருக்கிறது
மணி நண்பகல் பனிரெண்டு
தூரதேசம் வருவதற்குள்
இன்னும் சிலர் பெட்டிக்குள்
நுழையக் கூடும்
அவர்களும் சில ரசானயங்களை
இப்பயணத்தில் ஏற்றுவார்கள்
கோணங்கியின் வெள்ளரிப்பெண்
இறங்குகிற நிலையத்தில்
நானொரு பாம்பாட்டியை
எதிர்பார்த்துப்
படுத்திருக்கிறேன்
பாடலை அவனிடம்
ஒப்படைக்க

19

முதன்முறையாக பார்த்த மனிதருடன்
பேசிக் கொண்டோம்
அவ்வளவு
புத்துணர்ச்சியுடன் இருந்தார் அவர்
புத்துணர்ச்சியுடன்
பேசினார்
அவரைப் பற்றி எனக்குத் தெரியாது
என்னையும் அவருக்குத் தெரியாது
என்னிடம் புத்துணர்ச்சி கண்டார்
கொஞ்சம் கொஞ்சமாக அவரை எனக்குத் தெரிந்தது
பாதகமாக ஒன்றும் இல்லை
அவருக்கும் என்னைத் தெரிந்தது
பாதகமாக ஒன்றும் கிடையாது
என்றாலும்
முதலில் பார்த்த மனிதனை
தொலைத்து விட்டோம்
சில நாட்களில்
இருவருமே

20

பைத்தியத்துக்கு மிக அருகில் சென்று
கடைசியில் திரும்பி விட்டோம்
அவன்
திரும்புதலை அறியாதவன்
தெருவில் நடந்து திரிகிறான்
குற்றத்தை நெருங்கி பின்வலித்தோம்
அவனுக்கு இயலவில்லை
தற்கொலை வரை போனோம்
செய்து கொள்ளவில்லை
நமக்குள்ளிருந்தவன் வெளியில்
நடந்து திரிகையில்
நாம் தானே தெரிகிறோம்?
சற்றைக்கு முன்பு
பின்வலித்துக் கொண்ட நாம்
எங்கெல்லாமோ சுற்றி
இறுதியில் ஓரிடத்திற்கு வந்து சேர்ந்தோம்
அவன் நாம் வந்தடைந்த இடத்திற்கு
வெளியில் நின்று கொண்டிருக்கிறான்
தூரமொன்றுமில்லை
கண்ணாடிக்கு அந்தப்பக்கமாக
பார்க்கிற பிம்பமும்
நம்முடையதுதான்
நமது சுயரூபம்
அது

21

அந்தச் சிறுவன்
அப்படி ஏங்கி நிற்கிறான்
எவ்வளவு உயரம் என்று பார்க்கிறான்
நீங்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறீர்கள்
இதுவே உயரமென்றால்
அவன் எவ்வளவு
பள்ளத்திலிருக்கிறான் பார்த்தீர்களா ?
அவன் இரண்டுமாடி போட்டுவிட்டான்
இவன் கார் வாங்கியாச்சு
புனித அன்னை பத்துநாள் திருவிழாவில்
பத்து நாளும் புதுத்துணி
வாங்குகிறார்கள்
இந்தத் தெருவில்
எப்படி
வாழமுடியும் ?
சொல்லுங்கள் அண்ணா
என்று கேட்கிறான்
எந்த வேலை வேண்டுமாயினும்
இருக்கட்டும்
முதலில் இச்சிறுவன் பார்க்கும்
உயரம் குறைத்து
பள்ளம் நிரப்புங்கள்
ஆண்டவரே
அவன் இடம்பெயருவதைப் பற்றிகூட
ஒன்றுமில்லை
என்றாலும்
இந்த எலிக்குகையை
இவ்வளவு உயரமென்று
அவன்
எண்ணக் கூடாது
அவனும்
இதே தெருவில்
வசித்தவன்
பார்த்தீர்களா?

22

என்னுடைய பதின்ம வயதுகளில் கிறுக்கனாயிருந்தேன்
என்பதை இருபதுகளில்
கண்டு பிடித்தேன்
பதின்ம வயதின் நம்பிக்கைகளை
கிழிந்த ஆடைகளைப் போல கழற்றி
அதனதன்
கள்ள ஆசான்களின் மீது விட்டெறிந்தேன்
முப்பதுகளின் தொடக்கத்தில்
இருபதுகளில் எப்படி
முழு கிறுக்கனாக இருந்தேன் என்பதைக்
கண்டுபிடித்து
அதற்குத் தூக்க மாத்திரை
பரிசளித்தேன்
நாற்பதில் அதற்கு முன்னர்
இருந்ததெல்லாம் கிறுக்கே என்று
கத்தத் தொடங்கியது
உள்ளத்தில் அமர்ந்து சிரித்த
கள்ளத் தெளிவு
ஐம்பது வர தெளிவும் ஒரு கிறுக்குதான்
என்பது தெரிந்து விட்டது
இப்போது
காலையில் கிறுக்கு பிடிப்பது
மாலையில் தெரிந்து விடுகிறது
மாலைக்கிறுக்கு காலையில்
தெளிகிறது
ஆக கிறுக்கும் தெளிவும் இரண்டு கால்கள்
ஒரு கால் முன்னே செல்லும் போது
மற்றொரு கால்
பின்னால் வருகிறது
பயணத்தில்
இருப்பவனுக்கு

23

1
எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள
நான் முயல்வதே இல்லை
அதற்கு அவசியமும் இல்லை
2
தெரிந்து கொண்டால் தெரிந்து கொண்டதை
உடனே கடக்க வேண்டியிருக்கும்
கடக்கும் வரையில்
அது உன்னை பிடித்துக் கொண்டு
நிற்கும்
3
இந்த உலகிற்கு ஏராளம் பணிகள்
பலாபலன்கள்
பிறிதொன்றின் பணிக்குள்
சிக்கிக் கொள்பவன்
சிதறுண்டு போகிறான்
4
உன் பணி சங்கல்பமாக
பிறிது பணிகளை
கைவிட்டொதுங்கு
5
குறுக்கேமறுக்கே நடப்பவற்றுக்குக்
காரணங்கள் தேட வேண்டாம்
அதனை குறுக்கே மறுக்கே நடப்பவர்கள்
பார்த்துக் கொள்வார்கள்
6
பூரணமான கொலை
பரிசுத்தமான வடிவம்
குறுக்கே சென்று
முதுகைக் கொடுக்காதே
7
தெரியாதவை வந்து வழி நடத்துமளவிற்கு
சின்னவனாய் இரு
சின்ன பூதம் காக்கட்டும்
8
பெரியவனாய் இருந்து தடுக்காமலிருந்தால் மட்டுமே
பெரிய பூதமும்
வேலை செய்யும்
9
நிகழ்வதெல்லாம் நிகழ்வுகள்
நீ விரும்பினாலும் சரிதான்
விரும்ப மறுத்தாலும் சரிதான்
மழை போல ஒளி போல
இசை போல
இசை இன்மை போலவும் தான்
10
ஆபத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பவனால்
ஆபத்து வருகிறது
11
கொதித்து யாரும் சாபமிடாதவாறு
நடந்து செல்
புல் கொதித்து எழுந்தாலும்
பூலோகம்
அழியும்
12
நத்தைக் கூடுதான்
நாட்டிலே பெரியது
எறும்பு புற்றுதான் இறைவனின்
கோட்டை

Comments

Popular posts from this blog

விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்

  இவர்களோடொப்பமெல்லாம் - 1 "விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்" தமிழ்க் கவிதையில் பாரதி இனி எப்படி சாத்தியமில்லையோ,அது போலவே விக்ரமாதித்யனும் . நிகழ்ந்த அற்புதங்கள். மறுபடி மீண்டும் சாத்தியங்கள் அற்றவை. குற்றாலம் கவிதைப் பட்டறையில் திருமேனியும் ,முத்து மகரந்தனும் ஆளுக்கொரு பக்கமாக கைத்தாங்கலாக விக்ரமாதித்யனை தூக்கிக் கொண்டு வந்த காட்சி இப்போதும் என்மேல் நிலவுகிறது. தள்ளாடிய மகா ராஜன் பல்லக்கில் வருவது போல அக்காட்சி.திருமேனியும் சரி , முத்து மகரந்தனும் சரி அப்போது இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டிய கவிஞர்கள்.திருமேனியின் கவிதைகளை கைப்பிரதியாக ஒரு முறை சுந்தர ராமசாமி படிக்கக் கொடுத்து படித்திருந்தேன்.நிகழ்ச்சி நடைபெறும் திவான் பங்களா வாசலில் இருந்து தொடங்கிய இந்த பல்லக்கு பவனி ; திவான் பங்களாவின் உள்ளறைக்கு வர சாமி இறக்கி வைக்கப்பட்டார்.படையலுக்கு தினுசான பலவகை ரசாயனங்கள்.உண்டியை யாரும் பொருட்படுத்துவதில்லை.ஆனால் அவையும் வேடிக்கைக்காக வந்து உட்கார்ந்திருந்தன. திரவ ஆகாரத்தின் மீது மட்டும் நம்பிக்கை கொண்ட கூட்டமே அப்போது அவரை வட்டமடித்துக் கறங்குவது .அது வெறுமனே திரவத்திற்காக மட

திரு அண்ணாமலை பா.ஜ.க

  திரு அண்ணாமலை பா.ஜ.க தமிழ் நாட்டில் ஒற்றைக் குரலுடன் ஒலிக்கும் அனைத்து தி.மு.க ஊடகங்களும் கழிந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பலமாக உடைக்கப்பட்டிருக்கின்றன.திரு அண்ணாமலையால் வெகுமக்கள் முன்பாக அந்த காரியம் நடைபெற்றிருக்கிறது.இது உண்மையாகவே அற்புதமான ஒரு காரியம்.எளிதானதல்ல. இந்த ஊடகங்கள் அனைத்துமே வேறு வேறு பெயர்கள் கொண்டவை.இவற்றின் உரிமையாளர்கள் வேறு வேறு நபர்கள்.அவர்களில் ஒருவர் கூட இந்த வெற்றுச் சித்தாந்திகளோடு தொடர்புடையவர்கள் அல்லர்.இதில் ஆர்வத்திற்குரிய விஷயம் இது.சென்னை ஊடகங்கள் கடந்த முப்பதாண்டுகளில் இந்த போலி சித்தாந்திகளால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.ஒருவகையில் சூழல் இவர்களால் கடத்தல் செய்யப்பட்டிருக்கிறது.இது முன் எப்போதையும் காட்டிலும் கடினமானது.இந்த ஒற்றைப்படையான சித்தாந்திகளை உடைத்து பொது மக்களுக்கு புரிய வைக்காமல் தமிழ் நாட்டில் எத்தகைய அரசியல் மாற்றங்களும் சாத்தியம் அற்றவை.அண்ணாமலைக்கு இந்த ஞானம் பிடிபட்டிருக்கிறது.அவர் இன்று பெருமளவில் இவர்களை உடைத்து இவர்களின் பின்னணிகளை,நோக்கங்களை பொது மக்கள் முன்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இதனைச் செய்கிற அறிதலும் ,திறனும் உடைய பாஜ.க

25 கவிதைகளின் தொகுப்பு - லக்ஷ்மி மணிவண்ணன்

  1 பிறந்த குழந்தை மடியில் கனவு காண்கிறது தூங்கி விளையாடுகிறது அசைத்து விடப்பட்ட ஊஞ்சல் போல சுய நினைவற்று மெல்ல ஆடுகின்றன தாய் மடியில் தாயின் தொடைகள் தாய் மடியாக எவ்வளவு விரிகிறது இந்த மடி பிரபஞ்சம் அளவிற்கு பிரபஞ்சம் அளவிற்கு விரிந்த மடி ஆணிடம் வரும் போது சுருங்கிச் சுருங்கி ; சுருங்கி சிறு யோனியின் அளவிற்கு ஒரு துளையாகிறது அதை பிரபஞ்சம் அளவிற்கு பெரிதாக்குகிறது பூமியில் பிறந்தவுடன் குழந்தை 2 டியூஷன் முடிந்து குழந்தைகள் சென்றபின் இருக்கைகள் கலைந்திருக்கின்றன அமர்ந்திருந்த குழந்தைகள் வளைத்த விதத்தில் சரிப்படுத்தச் சென்ற கரங்களைப் பின்வலிக்கிறேன் அவை அவ்வாறே இருப்பதுதானே நன்று? 3 இந்த காலையை உருவாக்க சில பறவைகள் பாடிக் கொண்டிருக்கின்றன. ஒருத்தி முற்றத்தில் எழுப்புகிற கோலம் பாடலுக்கு ஒத்தாசை செய்கிறது. டிப்பர் லாரி இன்னும் புலரவில்லை அதன் நெற்றியில் நேற்றைய பூளை கோவில் மணிச் சத்தம் இந்த காலையைத் தொடங்கி முடிக்கவும் தயாரான காலையை தனது சாக்குப்பைக்குள் சிறுகச் சிறுக சேமித்த வண்ணம் கடினம் இழுத்துக் கொண்டோடுகிறான் இன்றைய நாளின் பைத்தியம். 5 உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் போது வாருங்கள்