கமலாம்மா

கமலாம்மா

அரிதாகச் சிலரே தங்களுடைய தேவதைத்தன்மையைத்  தவிர்த்து பிறவற்றை பிறருக்கு வெளிப்படுத்தாத தன்மையைப் பெறுகிறார்கள்.அதற்கு மிகவும் மனத் துணிச்சலும் ,வாழ்க்கை மீதான நிதானமான பார்வையும் தேவை.ஆழ்  சமுத்திரம் போலும் சலனமின்மை அவசியம்.  நான் அவ்வாறாக உணர்ந்த ஒருசிலரில் கமலாம்மா ஒருவர்.அவர் நிச்சயமாக தேவ பிரகாசம். அவரை கடைசியாக ஒரு பொது நிகழ்ச்சியொன்றில் பார்த்தேன்.பல வருடங்கள் இருக்கும் .இப்போது நண்பர் ஒருவர் அவருடைய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.ஸ்ரீனிவாசன் நடராசன்.அவரின் தன்மையை வெளிப்படுத்தும் புகைப்படங்கள். எவ்வளவோ நினைவலைகள்.

சுராவின் மறுபக்கம் கமலாம்மா. அவருடைய மன அலைவரிசையில் அவ்வளவு தூரத்திற்கு நெருங்கிக் கைகோர்த்திருந்தவர் கமலாம்மா.பெரிய ஆளுமைகளின் துணையாக அமைவது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சிரமங்கள் நிறைந்ததுதான்.நான்கு தலைமுறை எழுத்தாளர்கள் வந்து தங்கி உரையாடி மீண்டும் கூடும் வண்ணம்  வேகமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு வீட்டை நிர்வாகம் செய்தவர் அவர்.எட்டு வருடங்கள் அந்த வீட்டோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த நான் ஒருபோதும் முகமலர்ச்சியற்றோ ,நிதானமற்றோ கமலாம்மாவை  கண்டதில்லை.பொதுவாக இப்படியிருக்க வாய்ப்புகளே கிடையாது.அப்படிதான் இருக்க வேண்டும் என்கிற அவசியமுமில்லை.ஒரு வீடு என்பது எவ்வளவோ பணிகளை கலங்கலைக் கொண்டதுதுதான்.வீடு என்பதே லௌகீகத்தின் அனைத்து போராட்டங்களும் நிரம்பியதுதான்  . வீட்டை நிர்வகிப்பது என்பது களைக்குச்சியின் உயரத்தில் நின்று களை கூத்தாடுவது போல.வீட்டின் ஆண்,அல்லது பெண் யாரேனும் ஒருவர் இதனைப் புரிந்து கொள்ள வில்லையெனில் வீடு நடுங்கத்  தொடங்கி  விடும்.அப்படியானதொரு அமைப்பு அது. அதிலும் எழுத்தாளனின் ,கலைஞனின் வீடு விசித்திரமானது .சொல்லிக் கொண்டு வருவோரும் இருப்பார்கள்.திடீரென வருவோரும் உண்டு.வருவோருக்கு முதலில் ஒரு காப்பி கிடைக்கும்.காப்பி என்றால் அது காப்பி போல இராது.காப்பியாகவே இருக்கும் .அது வரும்போதே கமலாம்மாவின் முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் ஒருவர் உணர முடியும்.அப்படி ஒருவர் உணர்வாரேயெனில் இந்த முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் ஒருபோதும் நீங்காதவர் கமலாம்மா என்பது தெரிந்து விடும். களைப்புற்று நோயுற்று நான் அவரைக் கண்டதேயில்லை.எப்போதும் குளித்து விட்டு வருகிற போது இருக்கிற மனநிலையில் சதா இருக்கிறவராகவே அவர் எனது மனதில் பதிவாகியிருக்கிறார்.ஏராளமான வேலைகளை செய்து கொண்டே இருக்கும் போதும் கூட ஏராளமான வேலைகளை செய்து கொண்டிருப்பவரைப் போல ஒருபோதும் அவர் தோன்றுவதில்லை.எல்லாவற்றிற்கும் மேலாக அவர் சுராவிடம் மிகுந்த நிறைவை அடைந்திருந்தார்.அவர் யார் என்பதையும் உள்ளூர அவர் அறிந்து கொண்டிருந்ததாகவே நான் கருதுகிறேன்.பல எழுத்தாளர்களின் ,கலைஞர்களின் வீட்டில் அவர்கள் யார் என்பதை   துணையாக இருப்பவர்களால் அறிய  இயலுவதில்லை.தஸ்தேவெஸ்கி ,மார்க்ஸ் போன்றோருக்கு இப்படியமைந்திருக்கிறது.  

சுரா வீட்டிற்கு வந்து சேர்பவர்களிடம் வந்து சேர்ந்தவுடன் டாய்லட் போக வேண்டுமா ? என கேட்கும் சுபாவம் கொண்டவர்.நான் இப்பழக்கத்தை கற்றுக் கொண்டது அவரிடமிருந்துதான்.பிற எல்லாமே இரண்டாவதாக .எங்கிருந்தோ வருகிற பலருக்கும் இது அவசியமாகவே இருக்கும்.சிலர் கேட்கத் தயங்கி அடக்கிக் கொண்டிருப்பார்கள்.அந்த வீட்டை பற்றி சாதி சந்தேகம் கேட்பவர்கள் எல்லாம் தமிழ் சூழலில் இன்றுவரையில் இருக்கிறார்கள்.அந்த வீட்டின் எல்லா அறைகளும் எனக்கு நன்கு தெரியும் .அந்த வீட்டில் மதியம் யாரெல்லாம் இருக்கிறார்களோ , அவர்கள் ஒருங்கே அமர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். அப்படி சாப்பிடாதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்பது எனக்குத் தெரியாது.இது இயல்பாக நடைபெறுகிற காரியம்.எழுதுகிறவனை,அதிலும் நம்பிக்கையூட்டும் படி எழுதுகிறவனை அந்த வீடு ஏற்றுக் கொள்ள தயங்கியதே இல்லை. கமலாம்மா உணவு பரிமாறுவதில் உள்ள செய் நேர்த்தி சுராவின் உரைநடையில்  காணும் செய் நேர்த்திக்கு சமம்.

சுராவின் இழப்பு நேர்ந்தவுடன் ; தனக்கு என்ன தோன்றியது என்பதை பற்றி ,பின்னர்  கமலாம்மா எழுதியிருந்த பக்கங்களை மனம் கலங்கப் படித்தேன்.கமலாம்மா அது தவிர்த்து வேறு எதுவுமே எழுதியிருக்க இயலாது.புதுமைப்பித்தன் கடிதங்களில் சுரா கண்டடைந்ததெல்லாமே கமலாம்மா மீது ; தான் கொண்டிருந்த பெருங்காதலைத் தான் என்று இப்போது எனக்குத்  தோன்றுகிறது எனக்கு .சுராவிடம் மிகையோ ,ரொமெண்டிசமோ துளியும் கிடையாது.அக்கறைகளை செயலில் வைத்திருப்பவர் அவர்.அந்த வீட்டிற்கு மோசமான நடத்தைத் குழந்தைகள் என்றால்  ஜி.நாகராஜனும் அதன் பின்னர் நானுமாகத்தான் இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்.ஒருபோதும் அந்த வீடு எங்களைத் தட்டிக் கேட்டதில்லை.

எழுத்தாளர்களின் மனைவிமார்களின் மனோவோட்டம் பற்றி ஜே.ஜே.சில குறிப்புகளில் ஓரிடம் வரும்.நண்பர்களின் மனைவிமார்கள் ஆரம்பத்தில்  எழுத்தாளர்களிடம் காட்டுகிற விரோத மனோபாவத்தை கடுமையாக எதிர்க்கிற எழுத்தாளர்கள் ; நாள்போக்கில் அந்த விரோதத்தை பிரதிபலிக்கிறவர்களாக மாறிவிடுகிறார்கள் என்று .அப்படி மாறாத வீடு அவர்களுடையது.சுரா தவறாக ஏதும் செய்கிறார் என்று தோன்றினாலும் கூட  அது நிச்சயம் சரியாகத் தான் இருக்கும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டவர் கமலாம்மா.அவருடைய நம்பிக்கைதான் உண்மை .மிக உயர்ந்த வாழ்க்கை அவர்களுடையது .வாழ்வு முழுவதும் செய்தது நல்லறம்.

சுராவின் உடலின் முன்பாகவோ பின்னரோ சரியாக நினைவில் இல்லை. உங்களை போன்ற நண்பர்கள் அவரை பிரியாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் கூடுதல் காலம் வாழ்ந்திருப்பார் என்று கமலாம்மா சொன்னது நடுங்கும் வாக்கியமாக என்னுடைய மனதில் இருந்து கொண்டிருக்கிறது. சுரா என்னை பற்றி எல்லாம் அல்லது நண்பர்களை பற்றியெல்லாம் என்ன மதிப்பீடு கொண்டிருந்தார் என்பதனை விளங்கச் செய்து கொண்டிருக்கும் வாக்கியம் அது.  கமலாம்மாவிடமும் மிகையை நான் கண்டதில்லை.இந்த வாக்கியத்தையும் கூட அப்போதைய கடுமையான சூழ்நிலையிலும்  அவர் ஓரளவிற்கு நிதானத்தோடுதான் சொன்னார்.நான் நிதானமிழந்திருந்தேன்.

எல்லாமே சரியாகத்தான் நடந்தது என்று எடுத்துக் கொண்டாலும் கூட ,கமலாம்மாவைக் கடந்து செல்லும் துணிவை சுரா பெற்றிருக்கக் கூடாது.

நேற்று எழுத நினைத்திருந்தேன்.இன்று எழுதுகிறேன்.அந்த அம்மையின் காலடி சரணம் .அறிந்தோ ,அறியாமலோ தவறு செய்திருந்தால் மன்னிப்பீர்களேயாக.

Comments

  1. பலமுறை படித்துவிட்டேன். தீரவில்லை. சில மாதங்கள் அவர்கள் வீட்டில், காலச்சுவடு அலுவலகத்தில் வேலைசெய்யும்போது பார்த்திருக்கிறேன். அறிமுகம் ஆகவில்லை. யாரும் அறிமுகப்படுத்தவில்லை. எனக்கேயான ஒதுங்கிச்செல்லும் மனநிலையோடு ஒதுங்கிநின்றுவிட்டேன். பேச வாய்ப்புக்கிடைக்கவில்லை.
    நல்ல பதிவு; பலமுறை வாசித்துவிட்டேன். ஈரம் கசியச்செய்யும் மொழி.நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1