நீட் தேர்வு வெளிப்படையான அரசியல் மோசடி

நீட் தேர்வு வெளிப்படையான அரசியல் மோசடி

ஒரு சமூகத்தின் கல்வி என்பது படிப்பது ,வேலை பார்ப்பது ,தொழில் புரிவது என்பவற்றோடு மட்டும் தொடர்புடைய ஒரு காரியம் அல்ல.எந்த சமூகம் கல்வியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறதோ அப்போது முதற்கொண்டு அது தனது அரசியல் உரிமைகளை நிலைநாட்டத் தொடங்குகிறது என்று பொருள்.நமது நவீன சமூகத்தில் மருத்துவம் நேரடியான அரசியல் தொடர்பை வெளிப்படுத்தாத போதும் ,அல்லது வெளிப்படுத்தும் போதும் அரசியல் உரிமைகளை மீட்கும் சக்தி கொண்டதொரு படிப்பு .மருத்துவர்கள் அதிகம் உள்ள ஒரு சமூகம் அதிகபட்ச பாதுகாப்பையும் பெறுகிறது ,அரசியல் அதிகாரம் பெறுகிறது  என்பது கடந்த காலங்களில் நிகழ்ந்த அரசியல் எழுச்சிகளின் உண்மை.தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளுக்கு கூட நமது சமூகத்தில் இல்லாத மறைமுக அதிகாரம் இது.அரசியல் அதிகாரத்தை அடைவதில் மருத்துவம் முதற்படி.இந்த அதிகாரத்தை  மாநில அரசியலில் நிலை கொள்ளுதலில் இருந்து பிடுங்கி மத்திய அதிகாரத்தோடு இணைக்கும் முயற்சியே நீட் நுழைவுத் தேர்வு என்னும் அரசியல் மோசடி.

பெரும்பாலும் தமிழ்நாட்டில் உருவான மருத்துவர்கள் முத்துக் கருப்பனும்,பேச்சி முத்துவும் மாநில அராசாங்கத்தின் அதிகாரத்தில் உள்ளீடாக வினையாற்றியவர்கள்.காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளில் பங்கெடுத்த மருத்துவர்களும் கூட இதுவரையில் மாநில அரசின் அதிகாரத்தில் அடையாளத்தில் பங்கெடுத்தவர்கள்தாமே அன்றி மத்திய புரோக்கர்களாக தொழில் பட்டவர்கள் இல்லை.மாநிலத்தில் அரசாங்கம் ஸ்திரமாக அமைவதில் தமிழகத்தில் மருத்துவர்கள் பங்காற்றியிருக்கிறார்கள்.இந்த இணைப்பு இதுநாள் வரையில் குலைந்ததில்லை.நீட் தேர்வு வழியாக அவர்களை அப்படியே ஒரு எலைட் சமூகமாகப் பிடுங்கி மத்தியில் கொண்டுபோய் நிறுவுதலுக்கான முயற்சியை டெல்லி இப்போது துரிதப் படுத்துகிறது.தகுதி போன்ற பழுதடைந்த கருத்தாக்கங்கள் வழியே மருத்துவத்தை அதிகாரக் கடத்தல் செய்வதில் டெல்லி வேகமெடுக்கும் நூதன முயற்சியே நீட்.பச்சையாகச் சொன்னால் முத்துக் கருப்பனை  "இனி நீ முத்துக் கருப்பானாக இருந்தது போதும் ,முடியுமானால் ரெட்டியாக இரு இல்லையெனில் இந்த சிஸ்டத்தை விட்டுவிட்டு வெளியேறி விடு " என்கிறது டெல்லி.

மாநில அரசாங்கத்தின் கைக்குள் கல்வி  இருக்கும் வரையில்தான் மட்டுந்தான்  இந்தியா போன்றதொரு நாட்டில் அரசியல் பாதுகாப்பும் சமநிலையும் இருக்கும்.மாநிலத்திற்கு மாநிலம் இங்கே கலாச்சார வேறுபாடுகள் அதிகம்.கதகளியை ஒரு மலையாளி மத்திய அரசின் பாடத் திட்டத்திலிருந்து ஒரு   கற்க வேண்டிய நிலை ஏற்படுமேயானால் அது எவ்வளவு துன்பியலாக இருக்குமோ அது போலத்தான் திருவள்ளுவனை சி.பி.எஸ்.ஈ வழியே கற்க முயல்வதும்.இது பண்பாட்டுத் துறைகளுக்கு மட்டுமல்ல.தொழில் துறைகளுக்கும் பொருந்தும்.பஞ்சாபின் விவசாயமும் கேரளத்தின் தொழில்பேட்டைகளும் ,தமிழ்நாட்டின் வியாபாரமும் ஒன்று அல்ல. கல்வி ஒன்று போல அமைய வேண்டும் என்கிற குரல்கள் இந்தியாவை பொறுத்தவரையில் ஆபாசமானவை.மாநிலத்திற்குள் உள்ள ஏற்ற தாழ்வுகளையும் ,அவற்றில் ஏற்பட்டாக வேண்டிய சமநிலையையும் அதிகார பகிர்வையும் மாநில அரசு தான் கணிக்க ,சரிப்படுத்த இயலும் அன்றி எல்லாவற்றையும் கொண்டு போய் மேலிடத்தில் ஒப்படைக்க இயலாது.இத்தகைய முயற்சிகள் பின்னாட்களில் ஏற்படவிருக்கிற ,அதிகார சமநிலையின்மையிலிருந்து தோன்றவிருக்கிற கலகங்களுக்கான இரைகள்.இந்தியா போன்ற பன்முகத் தன்மைகள் அதிகம் கொண்டதொரு நாட்டில் முற்றிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசும் குரல்கள்  எவ்வளவு ஆபத்தானவையோ,அதே அளவிற்கு மாநில உரிமைகளை கீழிறக்க உதவிகரமாக இருக்கும் குரல்களும் மிகவும் ஆபத்தானவை.

தகுதி பற்றிய பேச்சு  என்பது உண்மையில் தகுதி பற்றிய பேச்சு அல்ல.அது சுதந்திரத்திற்குப் பிறகு அதிகாரமடைந்து வருகிற பிற சமூகங்களின் எழுச்சியில் அதிருப்தியை வெளிப்படுத்திடும் குரலின் கருத்தாக்கம்.இந்த கருத்தாக்கம் எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஒரு அபாயமான உட்பொருள் நிரம்பியிருப்பதை உணர இயலவில்லை எனில் அதனை அரசியல் இம்பொட்டன்சி என  கருதவேண்டும்.  இந்த தகுதி என்கிற அந்தரத்தில் தொங்குகின்ற கருத்தாக்கம் அதிபயங்கரமான வஞ்சகமும் சூதும் நிரம்பியது.சாதிய கண்ணோட்டங்களின் ஆணி வேரிருக்கும் பதுங்கு குழி இந்த கருத்தாக்கம்.

மாநில அதிகாரங்களைப் பறித்து மையத்திற்கு கடத்துகிற ஜோலி இப்போது பா.ஜ  .க அரசிற்கு மட்டுமே உரியது என்று சொல்லயியலாது ஆனால் பா.ஜ.க அதனை நோக்கி விரைவு படுத்துகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.டெல்லிக்கு என்றே சில விஷேஷ குணாம்சங்கள் உள்ளன.கட்டுடைத்தால் சிதறி விகாரமாகத் தோற்றமளிக்கக் கூடிய குணங்கள் அவை.மீண்டும் மீண்டும் டெல்லியிடமிருந்து தன்னை மீட்கும் குணங்களும் சாமர்த்தியமும்  கொண்ட தலைமையும் ,பிரதிநிதித்துவமும் இந்திய மாநிலங்களுக்கு எப்போதும் அவசியம்

எனக்கு எப்போதும் இரண்டு தலைநகரங்கள்.ஒன்று டெல்லி எனில் மற்றொன்று கவர்ச்சி மிக்க சென்னை.எனக்கு எப்போதும் ஒற்றைத்  தலைநகரம் கிடையாது.சென்னைதான் என்றால் அருகில் வராதே ஓடிப்போய் விடு என்பேன்.டெல்லி மட்டும்தான் என்றால் கல் கொண்டு எறிவேன்.கலகம் புரிவேன் .இங்கே நான் என்பது நான் மட்டுமல்ல.

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1