என் சாமிதான் .என் குருதான் . ஆனால் எனக்கு மட்டுமல்ல

என் சாமிதான் .என் குருதான் . ஆனால் எனக்கு மட்டுமல்ல
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சந்திப்பின் போதும் அகம் புதிதாய் இருக்க முயன்று கொண்டே இருப்பார் சுந்தர ராமசாமி.ஒருவாரத்திற்கும் முன்புதான் பார்த்திருப்பீர்கள் , அடுத்த வாரத்தில் பார்க்கும்போது முந்தைய வாரம் பார்த்தவர் போல் இல்லையே எனத் தோன்றும்படி செய்வார்.ஒரு புத்தகத்தைப் பற்றியோ,ஒரு நபரைப் பற்றியோ,ஒரு இடத்தை பற்றியோ,ஒரு விந்தையை பற்றியோ புதிதாக ஏற்படுத்துவார்.அவரை அலங்காரப் பிரியன் எனலாம்.அலங்காரம் என்பது பௌடர் அதிகம் பூசிக் கொள்வதல்ல.அகத்தை அழகு குன்றாமல் பார்த்துக் கொள்வது.புதுப்பிக்க , ஏற்க மனம் கொண்டிருப்பது.
வயது வித்தியாசம் உட்பட பேதங்கள் எதுவும் அவரிடம் கிடையாது.பழகும் ஒவ்வொருவரைப் பற்றியும் சித்திரமாக அவருக்குத் தெரியும்.அவர்கள் அவரிடம் பகிர்ந்து கொண்ட தனிப்பட்ட விஷயங்களில் அவற்றின் இன்றைய நிலை என்ன என்பது பற்றி ,அவற்றில் உண்மையான அக்கறை கொண்டு நினைவு கொண்டிருக்கவும்,விசாரிக்கவும் தவறுவதே இல்லை.தன்னைப் பற்றி தெரிந்து கொள்ள பிறரை வற்புறுத்துவதைக் காட்டிலும் பிறரைக் கூடுமானவரையில் புரிந்து கொள்ளமுயலும் விரிந்த காது கொண்டவர் அவர்.
ஆலோசனைகளை மிகவும் அந்தரங்கமாக மிகவும் கூசி சன்னமாகச் சொல்லக் கூடியவர்.கேட்பவர்களுக்கு அது ஒரு ஆலோசனை என்றே தட்டுப்படாது.அவ்வளவு இயல்பாக இருக்கும் . ஏற்கனவே பேசிய ஒரு விஷயத்தை மீண்டும் பேசிய நபரிடமே திருப்பிச் சொல்லுவதில் ஆர்வமே கிடையாது அவருக்கு.அப்படி சொல்ல நேர்ந்தால் வெட்குவார்.அந்த வெட்கம் வெளிப்படையாகத் தெரியும்.
இவரிடம் இதுகுறித்து ஏற்கனவே பேசிவிட்டோம் என்பதில் பெரும்பாலும் உறவுப்பிழை தோன்றாது.பேசத் தொடங்கும் போதே ஏற்கனவே சொல்லியிருக்கேனா ! ம் , என்றால் உடனடியாக அந்த பேச்சை நிறுத்தி விடுவார்.ஒருவேளை நம்முடன் வந்திருக்கும் ஒருவருக்கு அது புதிதாகக் கூட இருக்கலாம்.இருந்தாலும் பேச ஆர்வப்பட மாட்டார்.ஒருவரைப் புரிந்து கொள்ளும் முன்னரே வாய்பேசும் வல்லமை அவருக்குக் கிடையாது.புரிந்து கொள்ளும்வரை அவர் காதுகள் எதிராளியிடம் திறந்தே இருக்கும்.
அவரிடம் பழக்கம் கொண்டவர்கள் அனைவரிடமும் அந்தரங்கரீதியிலான தனித்த ஒட்டு ஒன்று அவரிடத்தில் உண்டு.இவ்வளவும் இருந்தாலும் எல்லாவற்றிலும் விலகியே இருப்பார் ஒட்டமாட்டார்.நமது ஆட்கள் பொதுவாகக் கிளப்பும் உணர்ச்சியில் பிறரை ஒட்ட வலியுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.அத்தகையவர்களுக்கு அவர் ஒரு புதிர் போல தோன்றுவார்.
மனித நாகரீகத்தை காப்பாற்ற கடைசி அற்றம் வரையில் முயற்சிப்பவர்.மனிதன் மேல் நம்பிக்கை கொண்டவர்.அவனிடம் ஏதேனும் ஒரு நன்மை இல்லாமல் போகாது என்கிற தீர்க்கம்.நன்மை இருக்கும் என்பதை கண்டுபிடித்து சொல்வதிலும் அவருக்கு ஆசை உண்டு."உறவின்போது ஒருவர் தற்செயலாக நிகழ்த்தும் பிழைகளைக் கொண்டு அவரை மதிப்பிடக் கூடாது.நீண்ட காலத்தின் அடிப்படையிலேயே மதிப்பீடு அமையவேண்டும் "என்னும் அவருடைய வாக்கு எப்போதும் என்னிடத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் அசரீரி.
நான் அவரது நல்ல மாணவன் இல்லை.ஆனால் நேசிப்பிற்குரிய மாணவனாக இருந்தேன்.இன்று இருந்திருப்பாரெனில் என்னைப் பற்றிப் பெருமை கொள்ள ஏதேனும் ஒரு சிறு விஷயமேனும் அவருக்குக் கிடைத்திருக்கும் .நான் ஒருபோதும் அவரை என்னைக் காட்டிலும் வயதில் பெரியவர் என்று இருக்கும்வரையில் பார்த்ததே இல்லை.அப்படி பார்க்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.
உடன் நடந்து போகும்போது அடிக்கடி மெய் மறந்து இருபது முப்பது கணங்கள் அப்படியே நிற்பார் . அவருடன் கூட்டாக யாரும் இணைந்து செல்லாத போதும் இது நடக்கும்.
அவரை நடைவழிப் பாதைகளில் கண்டோர் அனைவருக்கும் இந்த காட்சி மனதில் பதிந்திருக்கும்.வானத்தில் கூட்டாகப் பறவைகள் பறந்து செல்லும் காட்சி அவருக்கு மிகவும் விருப்பமானது.நின்று விடுவார்.ராம கிருஷ்ண பரமஹம்சருக்கு பெண்கள் டென்னிஸ் விளையாடும் காட்சியைப் பார்ப்பதில் மிகுந்த விருப்பம் உண்டு என்று சொல்லும் போதே அவர் மனம் உணரும் பரவசம் முகத்தில் வெளிப்படும்.மோசமான பெண்கள் என்று ஊரும் தெருவும் பழி சொல்லும் பெண்கள் தான் நம் மனதில் நிலைத்து அகப்பயணத்தில் வந்து கொண்டே இருக்கிறார்கள்.பிறர் எவருமே இருப்பதில்லை என்று ஒருமுறை சொன்னார்.பாரதி ஒருவேளை இருந்து இந்த பெண்குழந்தைகள் பைக்கில் செல்வதைப் பார்த்தால் நின்று நின்று பார்த்து சந்தோசம் கொண்டிருப்பான் , பாரதிதாசனுக்குக் குறை இருந்திருக்கும் என்றார். முற்போக்கை அன்றாடத்தில் வைத்து மதிப்பிடும் மனம் அவருக்கு.
அவருடன் எஸ் .எல்.பி.மைதானத்திற்குள் செல்வதற்கு முன்பாக எனக்கு கொளுத்திக் கொள்ள இரண்டு மூன்று சிகிரெட்கள் வாங்கிக் கொள்வேன்.சில சமயம் அவருக்கும் சேர்த்து கிங்க்ஸ் சைஸ் சிகிரெட் ஒன்று வாங்கக் கேட்பார்.அவருக்குப் புகைப்பதில் ஈடுபாடு உண்டு என்று எனக்குத் தோன்றியதில்லை.ஆனால் அவர் புகைப்பதைக் காண எனக்கு மிகவும் பிடிக்கும்.அவரோடு சேர்ந்து உணவருந்தும்போது அவர் உண்பதைக் காண்பது பேரழகு.ஒரு பருக்கை கூட அதிகம் எடுத்துக் கொள்வதில்லை.அவ்வளவு ரசித்து உண்பார்.அவர் உணவுத்தட்டில் அமரும் தான்யங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.உணவை வீணாக்குவதே இல்லை.அந்த உணவு உடனடியாகவே ரத்தமாக மாறிவிடும் .அவ்வளவு ரசனை.அவரது உணவுத்தட்டு காலியான பின்னிருக்கும் சாற்றின் சுவை உடனிருபவர்களுக்குத் தித்திக்கும்.
அவர் கலங்கித் தெரிந்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.அவருக்கு ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது.மாலையில் நடைசெல்லும் போது வழக்கறிஞர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று வருவார்.வெளியில் காத்து நிற்பேன்.ஒருமுறையோ , இருமுறையோ மட்டும் என்னையும் உள்ளே வரும்படி அழைத்திருக்கிறார்.அந்த வழக்கு அவருக்கு இழத்து அடித்துத் தீராமலிருந்த வழக்கு.அவரால் வழக்குகளை சரியாகக் கையாளத் தெரியாது.நேர்த்தியான பாதையில் நீதியை அடைய முடியும் என்று நம்பினார்.அந்த அலுவலகம் அவரை என்ன செய்யுமோ தெரியாது.வெளிவந்த பின் அவர் பேசத் தொடங்க கொஞ்சம் தாமதமாகும்.
ஒருமுறை ஒரு நிறுவனத்தில் நான் வேலைக்குச் சேர வேண்டியிருந்தது .செல்லும் முன் என்னிடம் ஒன்று கேட்டார்."பிறருடைய பணம் அதிக தொகை உங்கள் கையில் இருக்கிறது.நாளைக்கு அந்த தொகையை வங்கியில் போட வேண்டும்.மிகுந்த ஆபத்தில் உங்களிடம் ஒருவர் வந்து நிற்கிறார் . என்ன செய்வீர்கள் ? என்று கேட்டார்.எடுத்துக் கொடுத்து விடுவேன் என்று சொன்னேன்.அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.அதன் பொருள் விளங்க எனக்கு இருபதுஆண்டுகள் ஆயின.
அதுபோல ஜெயமோகன் எனக்குத் திருமணமான புதிதில் 2000 ரூபாய் எப்போதும் நம் வீட்டில் இருக்க வேண்டும்.5000 ரூபாய் வங்கிக்கணக்கில் இருக்கவேண்டும்.மேற்படி உள்ள ரூபாய்தான் செலவிற்கு என்று இருங்கள் என்றார் .அவர் சொன்னது 1996ல் . அப்போது ஒரு சவரன் 3000 ரூபாய்தான்.சொன்னது சொன்னவாறு இருக்கிறது.மேம்படவேவில்லை இதுகாறும்.
விக்ரமாதித்யன் அண்ணாச்சி எப்போதும் சுந்தர ராமசாமி பேரில் குறை சொல்லிக் கொண்டே இருப்பவர்.ஒருமுறை சு.ரா.வீட்டில் வைத்து அண்ணாச்சி அவரை காலில் விழுந்து ஆசி கேட்டார்.சு.ரா.இதில் ஒவ்வாமை கொண்டவர்.அண்ணாச்சி அத்துடன் நிற்கவில்லை.உடன் வந்திருந்த பிரேமையும் விழச் சொன்னார்.நான் தடுத்தேன்.பிரேமா,சந்தோஷா ? சரியாக நினைவில்லை.இருவரில் ஒருவர்.ஆனால் அண்ணாச்சி செய்ததுதான் சரி என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது.இப்போதெல்லாம் பெரிவர்களின் ஆசி பெற குழந்தைகளிடம் கேட்டுக் கொள்வது மட்டுமல்ல.நானும் இடறி விழுந்து விடுகிறேன்.
அதற்கு தனிமனிதன் கால்களில் விழுவதாக மட்டும் அர்த்தமில்லை.அந்த கால்கள் அனுபவத்தின் எத்திக்கெல்லாம் சென்றிருக்குமோ அத்தனைக்கும் சேர்த்து வணக்கம் சொல்லும் முறை அது.
சு ராவின் மிச்சம்தான் நான்.அவர் ஒரு நட்சத்திரமெனில் அதில் சிதறி விழுந்த எரி கற்கண்டு.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"