ஜெயமோகன் மீதான தாக்குதல் உணர்த்தும் பாடங்கள் - 1

ஜெயமோகன் மீதான தாக்குதல் உணர்த்தும் பாடங்கள் - 1

சுந்தர ராமசாமி மீதோ ,அல்லது ஒருவேளை நாம் அருகிருக்கும் போதே வைக்கம் முகம்மது பஷீர் மீதோ இப்படியானதொரு தாக்குதல் நடந்திருக்குமாயின் எப்படியானதொரு நிலை குலைவு ஏற்பட்டிருக்குமோ அப்படியானதொரு நிலைகுலைவே எனக்கு ஏற்பட்டது.ஆனால் ஜெயமோகனின் இடம் என்பது அவர்களிலும் மேலானதொரு இடம் என்பதே என்னுடைய மதிப்பீடு.அவர்களின் தொடர்ச்சியிலிருந்து எழுந்து வந்த வேறொரு காலகட்டத்தின் இடம் ஜெயமோகனுடையது.புதுமைப் பித்தனிலும் சிறப்பானது.தொடர்ச்சியாக அவரை வாசிக்கும்தோறும் இந்த எண்ணம் வலிமையடையவே செய்கிறது.அவர் முகத்திலும் கழுத்திலும் உடலின் பிற பாகங்களிலும் காயங்களை காண மிகவும் கடினமாக உணர்ந்தேன் .சொற்கள் விக்கின.

தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ,புற நகர்களில் தலித்தாக வாழ்வது எவ்வளவு சிரமானதோ,அதே அளவிற்கு தனி மனிதனாக வாழ்வதும் சிரமமானது.தலித்தாக ஒருவர் இருந்தால் அவர் தலித் என்பதற்காகவும் ,தனிமனிதனாக இருந்தால் அவன் பிறரில் இருந்து ஒதுங்கியிருக்கிறான் என்பதாகவும் சமூகம் தொந்தரவிற்குள்ளாக்கும்.தனி மனித வாழ்வை மேற்கொள்ளும் பலரும் தங்கள் சொந்த சாதியினருக்கு கோயில் கொடைகள் என கப்பம் கட்டிக் கொண்டிருப்பதற்கு காரணம் இதுவே.தனி மனிதர்களை ஒன்றும் அறியாதவர்களாகக் கருதி சூறையாட அது முயற்சி செய்யும்.இந்த தொந்தரவுகள் கான்ஷியஸ் ஆனவை என்று மட்டுமே சொல்வதற்கில்லை.காலம் காலமாகக் கற்றுத் திரண்டு பிறரை தொந்தரவுபடுத்துவதற்கான நுட்பங்களை அது ஏராளம் கற்று வைத்திருக்கிறது.அது தனிமனிதனுக்கு தருகிற மதிப்பின் பின்பாகத்திலும் தாக்குவதற்கான கூரிய கத்தி முனை உண்டு.தமிழ் சூழலில் எழுதுகிற அறிவாளிகளாக இருக்கிற பலருக்கும் தனி மனிதனாக ஓரிடத்தில் வாழ்வதென்றால் எப்படி என்பதே தெரியாது.நாய்களிடும் ஊளைகளுக்கு இது முக்கிய காரணம்

தழிழ் எழுத்தாளர்களில் .பெரும்பாலோர் சாதியவாதிகள். தன் கூட்டத்தை தன்னிடம் கொண்டவர்கள்.அல்லது சித்தாந்தக் கூட்டத்தில் பதுங்கி வாழ்பவர்கள்.கட்சி ,சங்கம் இன்ன பிற இன்ன பிற ...அவையெல்லாம் வளர்ந்து வருகிற புதிய சாதிகள் அவ்வளவே.கூட்டமாகத் தாக்குவதற்கு கூட்டமாக பதில் சொல்வதற்கு என்று.

தனி மனித என்கிற கருத்தாக்கத்திற்கு வாழ்க்கை முறைக்கு தமிழ் சமுதாயத்தில் சிறுமதிப்பும் கிடையாது.நானறிந்த வரையில் சுந்தர ராமசாமி தனி மனித வாழ்க்கை கொண்டிருந்தவர்.அவருடைய சொத்துக்களை அனைத்து விஷயங்களும் அவருக்கு சாதகமாக இருந்த நிலையிலும் கூட மீட்டுப்பெற இயலாவண்ணம் ஒருவன் அபகரித்து வைத்திருந்தான்.ஜெயமோகன் மேற்கொள்வதும் தனி மனித வாழ்க்கையே.நான் வாழ்வதும் தனிமனித வாழ்வே

இடர்பாடுகள் ஏற்பட்டாலும் தனிமனித வாழ்வே அனைத்திலும் மேலானது.ஆனால் தமிழர்களுக்கு தனிமனித வாழ்க்கை மேலானது என்பதே தெரியாது.இப்போதும் சொல்கிறேன்.கேரளாவில் தனிமனித வாழ்விற்கு சற்றே இடமுண்டு.

ஜெயமோகன் தாக்கப்பட்ட அரை மணிநேரம் தொடங்கி மூன்று தினங்கள் பெரும்பாலும் அவருடன் இருந்தேன்.நானும் என்னுடைய மகன் ரிஷி நந்தனும் அவரை முதலில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம்.நேசமணி நகர் காவல் நிலையம் அவர் தாக்கப்பட்ட இடத்தில் இருந்து சுற்றி வளைத்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.ஜெயமோகனை தாக்கியவன் முதலில் கடையில் தாக்கியதை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே கும்பலாக வீட்டிலும் சென்று தாக்குதல் செய்து விட்டு சந்திப்பிற்கு வரும் வழியில் அவனை போலீசார் கெஞ்சி பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள்.நான் ஜெயமோகன் வீட்டிற்கு சென்ற போது அருண்மொழி நங்கையும் ,சைதன்யாவும் பயத்திலும் பதற்றத்திலும் இருந்தார்கள்.

நாங்கள் காவல் நிலையத்திற்கு சென்று காலடி வைத்த போதே எதிரி மிகவும் பலம் பொருந்தியவன் என்பதை உணர்ந்து விட்டேன்.அரசியல் கட்சியினர் ஏழு நவீன ரக கார்களில் வந்து அங்கே நின்றிருந்தார்கள்.துணையாக பல வழக்கறிஞர்கள் . மிகவும் முக்கியமான சகல செல்வாக்கும் படைத்த அரசியல் பிரமுகர் ஒருவர் எதிரிக்காக நின்று கொண்டிருக்கிறார். மட்டுமல்லாது என்னை மிரட்டவும் செய்தார் .என்ன மிரட்டிப் பார்க்கிறீர்களா ? என்று கேட்ட பின்னரே கொஞ்சம் தணிந்தார் .இஸ்லாமியர் ஒருவரால் நடைபயிற்சியின் போது கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி தற்போது எல்லாநேரங்களிலும் துப்பாக்கியேந்திய போலீஸ் பாதுகாப்புடன் வெளியில் வரக் கூடியவர்.அப்படித்தான் அவர் வெளியில் வரவேண்டும்.அவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் வரக் கூடாது.அதுவே முறை .ஆனால் எதிரிக்காக அவர் பாதுகாப்புகளை துறந்து வந்து நின்று கொண்டிருந்தார்.இரண்டு மூன்று தினங்கள் வரையில் அவர் எதிரியை சுற்றி பாதுகாப்பது ஒன்றையே வேலையாகக் கொண்டிருந்தார்.ஏன் அரசியல்வாதிகள் அத்தகையவர்களுக்காக வந்து நின்று உயிரை விடுகிறார்கள் என்றால் அரசியல் காரணங்களுக்காக பத்து பேருந்துகளை உடைக்க வேண்டும்,நகரை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்றால் இவர்களிடம் ஆணையிடுவார்கள்.ஆணைகளை இவர்கள் நிறைவேற்றுவார்கள் .பகிரமாக அவர்கள் ஆபத்தில் சூழ்ந்து நின்று அவர்களைக் காப்பாற்றியாக வேண்டும்.அடிமட்ட அரசியல் தமிழ் நாட்டில் சகல கட்சிகளிலும் இவ்வாறே நிலை கொண்டுள்ளது.

பொதுவாக உள்ளூர்களில் இத்தகைய தாக்குதல் சம்பவங்களில் உடனடியாக பதில் தாக்குதல் நடந்துவிடும்.பின்னர் இரு தரப்பாருக்கும் காவல் நிலையத்தில் சமரசம் ஏற்படும்.பதில் தாக்குதல் நடைபெறாமல் ஒருவர் நேரடியாக காவல் நிலையத்திற்கு செல்கிறார் எனில் போலீஸ் அவரை தனி மனிதர் என்று கண்டு பிடித்து விடும்.அவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் செல்வாக்கு நிரம்பியவராக இருந்தாலும் அவர் தனி நபரே.தனி நபர் என்றால் காவல் துறையினரின் மொழியில் ஒன்றுக்கும் ஆகாதவர் என்று அர்த்தம்.சமூக அதிகாரம் துளியும் இல்லாதவர் என்று பொருள்.இத்தகைய சந்தர்ப்பங்களில் காவல் துறை நமக்கு வேலை செய்யாது.அதிகாரம் அற்ற எந்த இடத்திலும் நம்முடைய காவல் துறையால் வேலை செய்ய இயலாது.அப்படித்தான் அமைத்து வைத்திருக்கிறோம்.உடனடியாக முயற்சியைத் தொடங்கினால் கூட ,அதற்கான காரியங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றால் கூட இன்னும் இவை திருந்தி கரையேற ஒரு நூற்றாண்டிற்கும் அதிகம் ஆகும்.இத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் நம்மையறிந்த நண்பர்களில் உயர் பதவிகளில் இருப்போர்,செல்வாக்குடையோர் ஆகியோரையே சார்ந்திருக்க முடியும்.அது ஒரு அடையாளத்தை நமக்கு அங்கே பெற்றுத் தரும்.ஆனால் அதுவும் முழுமையாக வேலை செய்யும் என்றெல்லாம் சொல்வதற்கில்லை .

நாங்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்கு அதிகப்படியான நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.போலீஸ் ரைட்டர், ஜெயமோகனுக்கு தமிழ் வாக்கியங்களை எப்படி புகாரில் எழுதுவது என்று கண்டிப்புடன் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் நான் வாங்கி எழுதத் தொடங்கினேன்.காவல் ரைட்டர் டிக்டேட் செய்ததை எழுதினேன்.வீட்டில் வந்து தாக்கியதை எழுத வேண்டாமா என்றால் அது வேறு காவல் நிலைய ஏரியா அப்படியானால் அங்கு போய்விடுங்கள் என்கிறார்.சம்பவம் இரவு எட்டு மணிக்கு நடைபெற்று ஜெயமோகனை அவரை சிகிச்சை பிரிவில் சேர்ப்பிக்க பனிரெண்டு மணிக்கும் மேல் ஆயிற்று.

சரி இவையெல்லாம் நடைமுறை சிரமங்கள் .இருக்கட்டும்.சூழலில் இருந்து உதித்து வந்த காழ்ப்புகள் எதனை உணர்த்துகின்றன.அவர் மீதான தாக்குதல்களோடு இவை நிற்கவில்லை .உடன் நின்ற காரணத்திற்காக என்னையும் தாக்குகிறார்கள்.இவர்கள் கடைநிலை மதியாளர்கள் இல்லை.சமூகத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள்.நக்கீரன் கோபால் என்னை நீங்கள் ஜெயமோகனை தரப்பா ? எதிர் தரப்பா என முதலில் சொல்லுங்கள்,பிறகு பேசலாம் என்கிறார்.காலச்சுவடு கண்ணன் என்னைப்பற்றிய பதிமூன்று வருடங்கள் பழைய கேஸ் ஹீட்டரியின் அவனுடைய வெர்சனை தூசு தட்டி எடுத்து முகநூலில் புதுப்பிக்கிறான்.இந்த சமூகத்தில் வேட்டி காட்டியவனும் ஒன்று போலத்தான் சந்தர்ப்பங்களை பயன்படுத்துகிறான் .அம்மணமாயிருப்பவனும் ஒன்று போலத்தான் சந்தர்ப்பங்களை பயன்படுத்துகிறான்.குற்றப்பின்னணி கொண்ட ஒருவரால் தாக்குதலுக்குள்ளான படைப்பாளி ஒருவருடன் உடன் நிற்பதற்கு சாதிச் சான்றுகள் எதற்கு ? ஏன் ?

[ தொடரும் ]




Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1