ஆதிக்கப்படுத்திக் கொள்ளும் சப்தத்தை நிறுத்தப் பாருங்கள்
உங்களை ஆதிக்கப்படுத்திக் கொள்ளும் சப்தத்தை கொஞ்சம் நிறுத்தப் பாருங்கள்
அதுவே உடல் நலனுக்கும் மன நலனுக்கும் உகந்தது.
அதுவே உடல் நலனுக்கும் மன நலனுக்கும் உகந்தது.
தொடர்ந்து அரசியல் பதிவுகளை மட்டுமே செய்து கொண்டிருப்பவர்களிடம் அறிந்தோ அறியாமலோ கசப்பு உள்ளிறங்கி விடுகிறது.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மனநலப் பிரச்சனையாக உளவியல் பிரச்சனையாக மாறிவிடுகிறது.உடலில் வியாதி குடியேறத் தொடங்குகிறது.எப்படியாக இங்கு வந்து சேர்ந்தோம் என்பதே பிறகு யோசித்தாலும் பிடிபடுவதில்லை.வந்து சேர்ந்திருக்கும் இடம் எப்படியானது என்பதை சுயபரிசீலனை செய்யவும் இறுதியில் இயலுவதில்லை.ஆமோதித்தவர்களும் கூட விட்டுச் சென்று விட்டார்களே என்று தோன்றும்.வாழ்வென்பது இழுத்து ஓடுகிற ஆறு.அது ஒரேயிடத்தில் நின்று கொண்டிருப்பதற்கானது அல்ல.
ஒருவர் கவிஞர் .சில நல்ல கவிதைகளும் எழுதியிருக்கிறார்.அப்போது டிரண்டியாக இருந்த அரசியல் கருதுகோளை வாரி தன் மடியில் போட்டு வளர்த்துக் கொண்டிருந்தார்.கொள்கையை ஏற்காதோர் அத்தனை பேரையும் மானந்தானம் இல்லாமல் தாக்கினர்.பதினைந்து வருடங்களுக்கு முற்பட்ட கதை இது.கொள்கையையும் அவரையும் அவருடைய மனம் ஒன்றாக்கி விட்டது.கொள்கை குறித்து எந்தப்பக்கம் இருந்து எதிர் அதிர்வு ஏற்பட்டாலும் இவருடைய மனம் எதிர்வினையாற்றும்.எப்போதும் வெளியில் உள்ளதனைத்தையும் வெறுக்கிற மனம் வாய்க்கப்பெற்றார்.
நான் அவரிடம் எந்த அரசியல் கருத்தும் டிரண்டியாக வரும் போது ஐந்து வருடம் தாங்கி நிற்பதில்லை .அதனை உறுதியாகப் பற்றி நின்றால் உறுதியாக ஐந்து வருடத்தில் காலாவதியாவீர்கள்.குறைந்த பட்சம் ஐம்பது வருடங்களேனும் காலாவதியாகாத விஷயங்களை பற்றி நிற்பதே உளநலனுக்கு நல்லது.என்று சொன்னேன்.ஒரு கடைமடை பார்வை பார்த்து விட்டுச் சென்றவர்தான் ,இன்று அவருடைய பெயரை வாசகர்கள் சொன்னால் கூட அறியமாட்டார்கள்.சமீபத்தில் பார்த்தேன்.சில மரங்கள் வெளியே பட்டையுடன் இருக்கும்.தொட்டால் தொட்ட இடத்தில் பொடிந்து இற்றுப் போன தூசி வெளியில் வரும் அது போல இருந்தார்.எந்த இடத்தில் அவரை விட்டுச் சென்றேனோ அதே இடம் இப்போதும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பது.அதே விஷயங்கள் பேசிக் கொண்டிருப்பவை.அவர் பேசிக் கொண்டிருக்கும் கொள்கைகளில் கூட மாற்றம் ஏற்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாயிற்று.ஆனால் அவர் வாழும் உலகத்திற்குள்ளிருந்து மாற்றங்களை எட்டிப் பார்க்க இயலாது.தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் பற்றி பாதியும் கொள்கை பற்றி மீதியும் என கலந்து பேசுகிறார்.அத்தோடு பொறாமை, வஞ்சம் ,பழிவாங்கும் மூர்க்கம் என ஆள்கொல்லி அத்தனையுடனும் கூட்டு.அவர் எழுதிய சில நல்ல கவிதைகளை நினைவுபடுத்திப் பார்த்தேன்.அதில் அவருக்கு எவ்வித சந்தோஷமும் ஏற்படவில்லை.அரசியல் வழியே நகர்ந்து சந்தோஷமின்மையை சென்றடைவது எவ்வளவு பெரிய அபத்தம் ?
இப்படி பல உதாரணங்கள்.கட்சியின் தீவிர விசுவாசிகளில் ஒருவராயிருந்த நண்பர். கட்சி என்றால் எந்த கட்சி எந்த கொள்கை என்றெல்லாம் ஒன்றுமில்லை.எல்லாமே ஒரேவிதமான மனோபாவங்கள் தாம்.இந்த பக்கம் இருந்தால் இந்த பக்கம்.அந்தப் பக்கமிருந்தால் அந்தப் பக்கம்.அவ்வளவுதான். மனநல மருத்துவரும் நண்பர்.அவரும் நண்பர்.மருத்துவர் ஒன்று சொன்னால் அதில் காரணம் கண்டு பிடித்து இவர் வேறொன்று சொல்வார்.மோதுவார்.பத்தாண்டு காலமாக பொது அறைகளில் அவர் மேற்கொண்ட பயிற்சி அத்தகையது.கடைசியில் மருத்துவ நண்பர் களைத்து போய் ; உங்கள் இனிய நண்பர் இப்படி இருப்பதற்கு காரணம் கண்டுபிடித்து மோதுகிறார் பார்த்தீர்களா ? இதுதான் இவருடைய பிரச்சனை .ஆமாம் நீங்கள் அழைத்து வருகிற உருபடிகளெல்லாம் இப்படியப்படி என்றே இருக்கிறார்களே ? எப்படி நீங்களெல்லாம் இந்த லோகத்தில் தான் வாழுகிறீர்களா ? இல்லை உங்களுக்கென்று பிரத்யேக லோகம் இருக்கிறதா ? என்று கேட்டார்.பிரத்யேக லோகமே என்று பதில் சொல்லிவிட்டு வந்தேன்.
வாழ்வில் பற்றி கொள்வதற்கென்று கலங்காத நியதிகள் தேவை.பதவி பணம் என எதிலும் கலங்காத நியதிகள்.குறுகிய காலத்தில் அகன்று விடாத பற்றுகள் நமக்கு சோர்வுண்டாக்குவதில்லை .கலைகள்,இலக்கியம் ,சேவைகள்,கவிதை , காதல் ,காதலென்றால் எப்போதும் நிரம்பி வழியும் காதல் என உறுதியானவற்றை பற்றிக் கொள்ள தெரிய வேண்டும்.மன்னித்தல் மீண்டும் மீண்டும் மன்னித்துக் கொண்டேயிருத்தல். ஏதேனும் சேவையை எதிர்பார்ப்பின்றி இயல்பாக கைக்கொண்டிருத்தல் இவையெல்லாம் காப்பாற்றும்.தடுமாறி விழுந்தாலும் காப்பாற்றும்.
இவை எதிலும் பற்றில்லாத காரணத்தால் பெரும்போலோர் அரசியலில் வீழ்கிறார்கள்.ஒருவகையான தோட்டுப் புளி உண்டு.வெளியே பார்ப்பதற்கு புளியை போலவே இருக்கும் .தொட்டு உடைத்தால் உள்ளே நூலாம்படைகள் எழுந்து வரும். எத்தகைய விஷயங்களிலும் நேர்மையான பற்றில்லாதவர்களே தொடர்ந்து அரசியல் எதிர்வினையாளர்களாகிறார்கள்.சின்னச் சின்ன காரியங்களைக் கூட தொடர்ந்து செய்யும் திராணியை இழந்தவர்கள்.வெற்று மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு அரசியல் ஒரு வழிமுறை போல பின்பற்றப்படுகிறது.பெரும்பாலான அரசியல் சப்தங்கள் தங்களை காரியங்கள் எதுவுமின்றி ஆதிக்கப்படுத்திக் கொள்ளும் சப்தங்களாக உள்ளன.
அரசியல் எதிர்வினையாளர்கள் பலரை கவனிக்கிற போது;இவர்களுக்கு குறிப்பிடும்படியான நெருக்கடிகளோ ,வாழ்வு குறித்த கேள்விகளோ இல்லை என்பது தெளிவாகிறது.எவ்வித அகநெருக்கடியும் இல்லாதவன் அரசியல் கவிஞனாகிறான் .உலகிலேயே மிகவும் எளிய பணி இதுவே.ஊஞ்சலும் ஆட்ட வேண்டாம் தொட்டிலிலும் தூங்கலாம்.
தொடர்ந்து சில ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பதற்கான உதவியை செய்து பாருங்கள்.பிற்காலங்களில் அவை உதாசீனம் செய்து விட்டுப் போனாலும் கூட உங்கள் செயல் உங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.எத்தனையோ அனாதை ஆசிரமங்கள் உள்ளன.எதனெதனாலோ அனாதையானவர்கள்.ஒரு காரணத்தில் கூட அவர்களுக்கு பொறுப்பு கிடையாது.ஆனால் என்னவென்று தெரியாமலே அனாதையானவர்கள்.பெரும்பாலான அனாதை ஆசிரமங்கள் சிறிய வகை சிறைச்சாலைகளே.அங்கே அபூர்வமாக நன்றாகக் படிக்கிற குழந்தைகள் இருக்கிறார்கள்.அவர்களை ஒரு குழந்தைக்கு பொறுப்பெடுத்துப் பாருங்கள்.உங்கள் வாழ்வே மகிழ்ச்சியடையத் தொடங்கும்.இதற்கெல்லாம் ஒரு அரசியலும் தேவை கிடையாது.நீங்கள் கோயிலுக்கு கூட செல்லத் தேவையில்லை.பகவான் உங்களை நோக்கி வரத் தொடங்கி விடுவார்.
நானும் சிறு வயதிலேயே அனாதை ஆனவன்.தெருவில் நிற்க வைத்து குடும்பத்தினர் பிரிந்து சென்றார்கள்.ஒரு சிறிய சஞ்சலம் கூட ஏற்படாமல் எப்படி கழன்றார்கள் எப்படி இயன்றது ? என்கிற கேள்விகள் இப்போதுவரையில் எனக்கிருக்கிறது.மோசமான எந்திரத்தில் பணிபுரிந்தாக வேண்டிய நிர்பந்தம்.மனதிற்கு ஒவ்வாத வேலை.சாப்ளினின் மாடர்ன் டைம்ஸை நினைவுபடுத்தி கொள்ளுங்கள். பயிற்சிக்காக கடலூருக்குச் சென்ற போது சுந்தர ராமசாமி ஒரு கடிதம் எழுதியிருந்தார்.இப்போதுதான் நீங்கள் அதிகமான கவிதைகளை படிக்க வேண்டும் என்கிற வரி அந்த கடிதத்தில் இருந்தது.இப்போதுவரையில் என்னைக் காப்பவை கவிதையும் இலக்கியமும்.அனைத்து சோர்வுகளையும் தாண்டவும் நம்பிக்கை பெறவும் அவையே உதவுகின்றன.
Comments
Post a Comment