எழுத்தாளனுக்கு வாசகனே உறவு

எழுத்தாளனுக்கு வாசகனே உறவு

எழுத்தாளனுக்கு வாசகனே உறவு

தென்காசியில் சில கோயில்களை பார்த்து விட்டு திரும்பும் வழியில் விக்ரமாதித்தன் அண்ணாச்சி "நானோ நீயோ பத்துப் பதினைந்து வாசகர்களேனும் அமையாமற் போயிருந்தால் இந்நேரம் இருந்திருக்க முடியாது இல்லையா ? என்று கேட்டார்.பெருந்துர்க்கையை கண்டு திரும்பும் வழி அது.அவருடன் செல்கையில் வினோதமான கடவுள்களையெல்லாம் கண்டிருக்கிறேன்.பிறர் கண்டிருக்கிறார்களா தெரியாது.ஒருவேளையில் நானும் அவரும் இணைகையில் காணும் தெய்வங்கள் தாமோ அவை ! வெறி கொண்ட கோலம் .விஸ்வரூபம்.பெண் சாதாரணமாக இருக்கையிலும் விஸ்வரூபமே.இதில் விஸ்வரூபத்தில் நின்று கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? தமிழின் பெருங்கவிஞன் ஒருவன் ,தனது வாழ்வின் அநேக காலத்தை தெருவிலேயே முடித்தவன்,பெருந்துர்க்கை கண்ணிலேயே நின்று கொண்டிருக்கும் போதே கேட்ட கேள்வி இது.ஒரு சில வாசகர்கள் தான்.இந்த பிறவிப் பெருங்கடலை கடக்க உடன் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.ஒருவன் அலுக்கும் வேளையில் மற்றொருவன் பிறந்து விடுகிறான்.செய்ய நினைப்பவை எதுவாயினும் எந்த தடங்கலும் ஏற்பட்டதில்லை.குறையில்லை.
எப்படி தமிழில் எழுதுகிற கலைஞன் ஒரு அரிய உயிரியோ,அது போலவே அவனுக்கு அமைகிற வாசகனும் அரிய உயிரியே.மனைவி வசை பாடிக் கொண்டிருக்கலாம்.குழந்தைகள் கோபம் கொள்வார்களாக இருக்கலாம்.அவன் எதன் பேரிலும் லச்சையின்றி தலையை அரிந்து தாம்பாளத்தில் வைத்து எங்களிடம் தந்து கொண்டேயிருக்கிறான்.அவன் இருக்கும் வரையில் எங்களுக்கும்; நாங்கள் இருக்கும் வரையில் அவனுக்கும் மரணமென்பது கிடையாது.இருவரும் இணைந்து தற்கொலை செய்து கொண்டால்தான் உண்டு.
உறவினர்களை பொறுத்தவரையில் எழுதுகிறவனிடம் சிறுவயதிலேயே தோன்றுகிற சராசரித்தனத்திற்கு மேலான ஒன்று தென்பட்ட உடனேயே விலகத் தொடங்கிவிடுவார்கள்.அவன் சராசரியாக இல்லை.பலசரக்கு வாங்கித் தர அவன் பயன்பட மாட்டான்.நமது பல்வலிக்குரிய மாத்திரைகளை அவனிடம் இருந்து பெற முடியாது.தங்களுடன் எது இருந்தாலும் இல்லையென்றாலும் அவனைக் கவர முடியாது.அவன் நம்மிடம் இயல்பான ஈர்ப்பு கொள்ள மாட்டான் என்பதையெல்லாம் உணர்ந்து விடுகிறார்கள்.அப்படி அவர்கள் உணரவில்லையானால் அவன் எழுத முயற்சித்தாலும் சாராசரியே.சந்தேகம் வேண்டாம்.சராசரியான விஷயங்களில் சரிந்து உதிரக் கூடியவனாகவே அவன் இருப்பான்.ஒவ்வொன்றாகவோ கூட்டமாகவோ அவர்கள் வைசூரி கண்ட உடலில் இருந்து பொருக்குகள் உதிர்வதை போல உதிர்வார்கள்.அவன் சராசரியில்லை என்பதை பின்னர் வாழ்நாள் முழுதும் குற்றமாகச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
பிறகு கொஞ்ச நாட்களில் எழுதுகிறவனின் உடல் முழுதும் பிலீகள் முளைக்கத் தொடங்கும்.பீலிகள் பிற்காலத்தில் வானமாக மாறக் கூடியவை.பீலிகள் மிகுந்த அருவருப்புடன் இருக்கும்.புழுக்கள் முளைத்த உடல் போல.உள்ளிருக்கும் புழுக்களெல்லாம் வெளிக் கிளம்பியதை போல.நண்பர்களில் பெரும்பாலோர் அந்த சமயத்தில் வெளியேறிவிடுவார்கள்.வெளியேறியாக வேண்டும் அதுவே நியதி.அவர்கள் இவன் இனி பறந்து விடுவான் என்பதை உணரும் தொடக்கம் அது.அதில் மிஞ்சுக்குற ஒன்றிரண்டு பேர் வாழ்வு முழுதும் தொடரக் கூடியவர்கள்.அவர்கள் உண்மையாகவே நீங்கள் பார்ப்பதை காண விரும்புபவர்கள்.பீலிகள் எப்போதும் வானத்தையே அதை மட்டுமே கனவு காணக் கூடியவை . நண்பர்கள் சிதறி ஓடவில்லையெனில் உனக்கு கண்டிருப்பது பீலிகள் இல்லை வெறும் தோல் நோய் என்று அறிக...இது இந்த வயதில் ஏற்படும் என்பதெல்லாம் இல்லை.எப்போது பீலிகள் புடைக்கிறதோ அப்போது நிகழும் .இருபதிலும் நடக்கலாம் நாற்பதிலும் ஏற்படலாம்.
நண்பர்கள் சிதறுவது கொஞ்சம் கடினமானது.அவர்கள் எதிரிகளாக உருமாறுவது அதனினும் சிரமமானது.உங்கள் அந்தரங்கங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் அவர்கள்.போதாக் குறைக்கு சொல்லக் கூடாத ரகசியங்கள் அத்தனையையும்; நீங்கள் வலிந்து பிடித்து ஒரு நள்ளிரவில் அழைத்து சொல்லியிருப்பீர்கள்.அழைத்து ரகசியங்களை தருகிறீர்கள் பாருங்கள் அவர்கள் நிச்சயமாக பின்னாட்களில் எதிரிகளாக மாறுவார்கள்.ஏன் நீங்கள் நள்ளிரவில் அழைத்து அவனிடம் பாவமன்னிப்பு கூறுகிறீர்கள் ? சதா உங்கள் ரகசியங்களை எதிரியாக மாறுவதற்காக சங்கல்பம் எடுத்து கேட்டுக் கொண்டிருந்தவன் அவனே...அவனிடம் அதனை ஒப்படைக்காமல் முடியாது.அதுவே அவன் காத்திருந்து ஏற்கும் இரை .
நள்ளிரவில் உங்கள் ரகசியங்கள் அவன் முன்பாக பலிபீடத்தில் வைக்கப்பட்டதும் அவன் கண்கள் மினுங்குவதைக் காண்பீர்கள் . உங்கள் எதிரி அப்போதுதான் பிறந்து கண்களில் மினுங்கிக் கொண்டிருப்பான்.நீங்கள் அவன் எதிரி என்பதையும் அந்த கணத்திலேயே அவன் கண்டறிகிறான்.அவனுக்குள் சல்லாப உணர்ச்சி மேலிடுகிறது.இதனை ஒப்படைக்காமல் இந்த நள்ளிரவு ஏற்படாமல் தற்காக்க முடியுமா என்றால் முடியாது.அவனை நள்ளிரவில் அழைத்த பின்னரே உங்களுடைய அடுத்த பயணம் தொடங்குகிறது.இல்லையெனில் பயணமில்லை.குந்தியிருந்த இடத்திலேயே இருக்க வேண்டியதுதான்.
பயணம் தொடங்கியதும் கொஞ்சமும் எதிர்பாராத திசைகளில் இருந்து உடன் பயணிக்க ஒன்றிரண்டு வாசகர்கள் வந்து நிற்பார்கள்.முதலில் இவர்கள் யார் என்றே உங்களுக்கு விளங்காது.அவர்களில் ஒருவன் விலக அதில் இருவர் புதிதாக வரவேண்டும்.அதன் பின்னர் இருவருக்கும் முடிவில்லை.எல்லையில்லா பயணம் அது.
வாசகனின் இடத்தில் சொந்தக்காரனை ,சாதிக்காரனை,தொண்டனை வைத்து அழகு பார்ப்பவன் பிணம்..ஒரு வாசகனையேனும் கண்டடையாதவன் ஒருபோதும் எழுத்தாளன் இல்லை.அவன் பொய்யன் .எழுத்தாளன் அணியும் ஆடைகளை மட்டும் அப்படியே எடுத்து அணியத் தெரிந்தவன்.மேலாடைக்கு உள்ளிருப்பது பிணம்
எழுத்தாளனுக்கோ,கவிஞனுக்கோ ஏற்படுகிற பாதிப்பு ;உள்ளபடியே தனக்கு ஏற்படுகிற பாதிப்பு என்பதை ,அதன் உண்மையான தளத்தில் அறிபவன் வாசகன் ஒருவனே.அவன் எப்போதும் குறைவில்லா நித்தியானந்தன்

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1