இஸ்லாமிய இசக்கி

இஸ்லாமிய இசக்கி

எங்களூரில் ஒருசிறிய இசக்கி உண்டு.தேவகுளத்தில் இருந்து இங்கே வந்து
அமர்ந்து கொண்டாள் என்று சொல்வார்கள்.சிறுவயது தொடங்கி இப்போதுவரையில்
அவளை  பார்த்துக் கொண்டிருக்கிறேன்.சன்னதம் துளிர்த்து ஆடுகையில்
படையலில் இட்ட பிச்சுவெள்ளைகளில் நறுமணம் போதவில்லை
என்கிறாள்.ஆரம்பத்தில் அவள் இருந்தது சிறிய குடில் .ரொம்பவும் அழகான
குடில் அது.மர அளிகள் கொண்ட தணுப்பான குடில்.இந்த குடிலில் நீ இருப்பாயா
? உன் பிள்ளைகள் இருக்குமா ? என ஊர் பெரியவர்களைக் கேவலமாகக்
கேட்பாள்.பிறகு கோட்டை அமைத்து இருத்தினார்கள்.இப்போது குடில் போல வருமா
? கூட்டாளி தெய்வங்கள் பலரும் இன்னும் குடில் விட்டு இங்கே கோட்டைக்கு
வந்து சேரவில்லை என்று அடுத்த தலைமுறையினரை கலவரப்படுத்துகிறாள்.ஏராளம்
மின்விளக்குகள் வந்தாயிற்று ,புதிய புதிய பெருஞ்சாலைகள் அதனால் என்ன
அவளுக்கு பிச்சி வெள்ளையில் மணம் குறைவு.என் இடை ஒடிந்து விழும் மலர்
அலங்காரம் எப்போது வைப்பாய் ? என்னும் கேள்வி . இப்படி இப்படி அவளுடைய
பிரச்சனைகள்.ஒருவிதத்தில் இசக்கி என்பவள் பெண்ணின் ஆழ்மனதிற்கு அசல்
சான்று.அதனாலேயே அவளை ஒருபோதும் புறக்கணிக்கவே இயலாது.ஆழ்மனதை
புறக்கணிக்கும் சாமர்த்தியமும் அறிவும் இங்கே யாருக்கேனும் இருக்கும் என
நம்புகிறீர்களா ? பெண் கவிகள் ஒருவிதத்தில் இசக்கிக்கு
ஒப்பானவர்கள்,ஆழ்மனதின் சோறு தின்று நடப்பவர்கள்.

பெண்மனம் தனது ஆதாரமாகவே துயரார்ந்த காதலில் தித்திப்பது.துயர் ஒரு
தித்திப்பே.அப்படியானால் துயரத்தின் நிலையுணராத பெண்கள் உண்டா ?
உண்டு,ஆனால் அவர்கள் பெண்களாக அல்லாமல் அந்த நிலையில் ஆண்களாக
மாறிவிடுகிறார்கள்.ஒருவிதத்தில் அதனை பெண்ணின் கீழான நிலையென்றே சொல்ல
வேண்டும்.பெண் பெண்ணாக  இருத்தலே அவள் நிலை.

ஜீனத்தின் கவிதைகள் பெரும்பாலும் துயரம்,காதல்,தனிமை என்னும் மூன்று
விதமான பள்ளத்தாக்குகளில் புழங்குபவை.இந்த மூன்று பள்ளத்தாக்குகளுமே
தன்னகத்தே ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு கடக்கும் வழிகளை கொண்டவை. அவருடைய
தனிமைக்குச் சான்றாக ஒரு பிரத்யேகப் பாடல் என்கிற கவிதையைக்
குறிப்பிடலாம்.

"ஒரு பிரத்யேகப் பாடல்

அவள் எப்போதும் ஒரு ராணிதான்
தனியாய் ஒரு பரிவாரமும் உண்டு
கண்ணசைப்பில் ஓடிவரும் பணியாளர்கள்
ஆணையிட்டால் சேவைகள் நிகழ்ந்திடும்
சுழற்றிடும் விரலினால் இயக்கிடுவாள்
தன் உலகத்தை
எந்தப்பொருளின் விலையும் அரசிக்குத் தெரியாது
விலைகள் ஒரு பொருட்டல்ல
எழிலகமும் மருத்துவமனையும்
ராணியின் திசைநோக்கிப் படையெடுக்கும்
அரசனுக்கு நாளெல்லாம் மக்கட்பணி
ஓய்வு நேரங்களிலோ இடைவிடாத கலையார்வம்
களைப்பைப் போக்க கொஞ்சம் மதுவும் இணையும்
ராணியின் அறையினில் கேட்கும் காதல் பாடல்களுக்கு
இரகசியமாய் நகைக்கும்
பணிப்பெண்களின் கவனம் ஈர்க்காத இரவுகளில்
மெல்லிய விசும்பல்களினிடையே
எப்பொழுதேனும் ஒலிக்கும்
“குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா”

ஜீனத் அடிப்படையில் இஸ்லாமிய பெண்ணாக இருந்தாலும் அவருடைய ஆழ்மன
தொன்மங்கள் காளியையும் ,நீலியையும் ,குலசாமிகளையும் உள்ளடக்கியதாக
இருக்கிறது.அவர்கள் கவிதைகளிலும் வெளிப்படுகிறார்கள். அவர் கவிதையில்
சிறுவயது நினைவாக கருப்பசாமி வந்து செல்கிறார்.ஜீனத்தின் கவிதைகளை
முன்வைத்து யோசிக்கும் போது ;மனம் காலமற்றது என்றே சொல்லத் தோன்றுகிறது.
அதிலும் பெண்மனத்திற்கு காலம் இல்லை.அது எங்கிருந்து தொடங்குகிறது
என்றும் இல்லை எங்கு சென்று முடிகிறது என்றும் இல்லை.பேரியக்கத்தின் பாதை
ஒன்றே அது.

"எங்களூர்க் கருப்பசாமி மலையில்
செதுக்கிய பாதங்களின்மேல் கால்வைத்து
மூன்றுமுறை
தூரத்துக் குழியொன்றில் எறியும் கற்களில்
குழிசேர்ந்தவை பள்ளித்தேர்வில் பாஸென்றும்
தப்பிய குறிகள் ஃபெயிலென்றும் விளையாடும் வழக்கமுண்டு

வாழ்வில் பாஸா ஃபெயிலா
சோதிக்கக் கல்லெறிந்து பார்த்தேன்
விழுங்கிவிட்டார் போலும் கருப்பசாமி
புரிபடாத புதிராய் வளரத் தொடங்கியிருந்தது
மலை."

இந்த கவிதை மிகவும் முக்கியமானதொரு கவிதை.வெளியிலிருந்து பார்க்கும் போது
மிகவும் வெற்றியடைந்ததாக; நாம் கருதிக் கொள்கிற பெண்கள் தங்கள்
வாழ்க்கையில் தோல்வியடைந்தோம் என்று அல்ல.தோற்கடிக்கப்பட்டதாகக்
கருதுகிறார்கள்.ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.வாழ்வு வஞ்சித்து விட்டது
என்கிறார்கள்.ஏன் இப்படி ? இப்படி எண்ணம் வராத பெண்கள்
சொற்பம்.இயங்குதலின் ஆதாரத்தை சதா தனது மனதில் வலுவேற்றிருக்கும் பெண்
,இவ்வாறு மனம் கொண்டிருப்பது சரியே என்றே ஜீனத்தின் கவிதைகளை படிக்கும்
போது தோன்றுகிறது.

"கரும்பச்சை நிற பாசி படர்ந்த
சுற்றுச்சுவற்றின் மேல்
ஒரு காகம்
தன் கரிய அலகை
சுவரில் தேய்த்துக் கொண்டிருந்தது.
அவளோ
இன்னும் உரையாடிக் கொண்டிருக்கிறாள்
என்றோ சென்று விட்ட
அபூர்வ விருந்தாளியுடன்"

என்கிற கவிதையும்

" வழிப்போக்கனுக்கு தெரிவதில்லை
நிழல் தரும் மரத்தின் துயரம் " போன்ற பல வரிகளும் அவருடைய தனிமையின்
அழகியலை முன்வைப்பவை.

பெருஞ்சமயங்கள் ,பெரிய பண்பாடுகள் .பெருந்தத்துவங்கள்; அனைத்தையும்
அறிந்து கொண்டு விட்டோம் என்று அறைகூவல் விடுகிறபோது,ஒரு பெண் தனியே
சிரித்துக் கடப்பது போலவும் இருக்கின்றன ஜீனத்தின் சில
கவிதைகள்."அன்னாசிப் பழத்தை தோல்சீவி துண்டுகளிடுகையில்
நகைச்சுவையோடு சோகமரிவர்." என்கிற வரி அத்தகையதொரு வரி.எல்லாவற்றையும்
செய்து கொடுத்தாயிற்றே எனும் போது உருவாகும் நகைப்பு.அடைதலின்
அதிகாரத்தின் மீதான எள்ளல்.

பலசமயங்கள் பெண்களை பசுவைக் காட்டிலும் அதிக மேன்மையுடன், மென்மையுடன்,
புனிதத்தன்மையுடன் அணுக வேண்டிய விலங்கு என்றே கருதிக்
கொண்டிருக்கின்றன.அவளுக்கு தேவைப்படுவதெல்லாம் செய்து தரப்பட்டுவிட
வேண்டும் என்று கற்றுத் தருகின்றன.நடைமுறை உதாரணங்கள் கிடைக்கும் போது
அச்சமயக் கருத்துக்கள் உண்மையென்றும் தோன்றக் கூடியவை.ஏனென்றால் பெண்
ஒருபோதும் வரையறுக்க முடியாதவளாக இருந்து கொண்டிருக்கிறாள்.அந்தந்த
நேரத்து அறங்களே அவளிடமிருப்பவை.ஆனால் பெண்களை பசுவைக் காட்டிலும் அதிக
மேன்மையுடன், மென்மையுடன், "புனிதத்தன்மையுடன் அணுக வேண்டிய விலங்கு"
என்று கருதிக் கொண்டிருக்கிறோம் பார்த்தீர்களா ? அந்த கருத்தினைத்தான்;
அவள் ஒவ்வொரு இல்லத்திலும் இருந்து உடைத்துக் கொண்டிருக்கிறாள் .

பர்தா பற்றி  எவ்வளவோ பேசியிருக்கிறோம்,விவாதித்திருக்கிறோம்.ஆதரவாகவோ
எதிராகவோ ; மதங்களின் நிலைப்பாட்டில் இருந்தோ அதனைப் புறந்தள்ளியோ
எவ்வளவோ விவாதங்கள் .ஜீனத்தின் கவிதையொன்று அனைத்தையும் அறுத்து
எறிகிறது.மிகவும் பிரமாண்டமான, இயல்பான கோஷ நெடியற்று அமைத்த கவிதை
அது.மனம் மறைக்கும் மேலாடை .

"மனம் மறைக்கும் மேலாடை

நிகழ்ச்சியொன்று
நடந்து முடிந்த
வீட்டின் அறையில்

பேச்சின் நடுவே
புழுக்கமாயிருக்கிறதென
பர்தாவை கழற்றி
பின்கட்டிலிருந்த கொடியில் போட
வரிசையாய் வந்தமர்ந்தன
பிற பர்தாக்கள்.
ஏதோ ஒரு சாவி
குழுமியிருந்த பெண்டிரின்
அகம் திறக்க
அறையெங்கும் சிதறின
துயரக் கட்டுக்கள்
பெய்து தீர்த்த பெருமழையில்
நனைந்த பர்தாக்களின்
கனம் தாளாது
அறுந்து வீழ்ந்தது கொடி"

இந்த கவிதையின் முன்பாக சுத்த மனசுடன் நின்று பர்தாவை ஆதரித்து  ஒருவரால்
பேச முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.முதலில் ஒருவர் புழுங்குகிறது
என்று சாக்குப் போக்கு சொல்லியபடி, கழற்றி கொடியில் போடுகிறார்.ஒருவர்
முதலில் செய்யத் துணிந்தால் துணிவு அனைவருக்கும்
ஏற்பட்டுவிடுகிறது.தொடர்ந்து பிறர் போடுகிறார்கள்.அகம் திறந்த
உரையாடல்கள் பின்னர் நடைபெறுகின்றன.கனம் தாளாத பர்த்தாக்களை அறுத்து
எறிகிறது மழைக்கொடி. யாரும் செய்ய முடியாததை இயற்கை செய்கிறது.ஜீனத்தின்
மிகச் சிறந்த கவிதைகளில் ஒன்று இந்த கவிதை.இந்த கவிதை ஒரு நிகழ்வாகத்
தொடங்கி பெரிய உருவகமாக முடிவடைகிறது.முடிவடைந்த பின்னர் மீண்டும் மனதில்
அது வளர்கிறது.

அதன் நிமித்தமாகவுமே ஜீனத்தை இஸ்லாமிய இசக்கி என்கிறேன்.

ஜீனத்திற்கு என்னுடைய ஆசீர்வாதங்கள்.அவருடைய சொற்கள் மேலும் மேலும்
மந்திரமாகட்டும்.வாழ்க வளமுடன்

அன்புடன் ,
லக்ஷ்மி மணிவண்ணன்
05  -01 -2020
நாகர்கோயில்

[ ஜீனத்தின் கவிதைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை ]

Comments

  1. Did you hear there's a 12 word phrase you can tell your crush... that will trigger intense feelings of love and impulsive appeal to you buried inside his chest?

    Because deep inside these 12 words is a "secret signal" that triggers a man's instinct to love, worship and care for you with all his heart...

    =====> 12 Words That Fuel A Man's Desire Impulse

    This instinct is so hardwired into a man's mind that it will make him work better than before to do his best at looking after your relationship.

    Matter-of-fact, fueling this dominant instinct is absolutely mandatory to having the best ever relationship with your man that the moment you send your man a "Secret Signal"...

    ...You'll immediately notice him open his heart and mind for you in a way he haven't expressed before and he'll identify you as the one and only woman in the galaxy who has ever truly interested him.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"