நினைவின் தாய்க்கோழி

நினைவின் தாய்க்கோழி



இதோ இங்குபேட்டரில்
அடைகாக்கபட்ட குஞ்சுகள்
இரைபிடிக்கின்றன
யாரும் சொல்லித் தரவில்லை
யாரும் பாதுக்காக்கவில்லை
கால்களால் தரையை கிளறுகின்றன
அபாய அனக்கங்களுக்கு
நின்று சிணுங்குகின்றன
எல்லாமே செய்கின்றன
தாய்க்கோழி சற்று தள்ளி நிற்குமோ
என தோன்றும் படி
நடக்கின்றன
இங்குபேட்டருக்குப் பிறந்த
கோழிக்குஞ்சுகள்
கிருஷ்ணபருந்து நோட்டமிடுகையில்
சுழன்று சிதறி
பதுங்கி
உருவான கலவரத்தில்
தாய்க்கோழியின் சத்தமும்
எங்கிருந்தோ
கேட்பதுபோலத்தான்
இருக்கிறது
நினைவின் தாய்க்கோழி


###


இரண்டுபேராக நின்றார்கள்
ஒருவர் அறிமுகம் இல்லாதவர்
கைகளை அசைத்து
வணக்கம்
என்றேன்
அறிமுகமற்றவர்
கைகளை அசைத்து வணக்கம் சொன்னார்
எனினும் அவரில் நமக்குதானா ?
என்கிற எண்ணம்
தலைதிருப்பி
அறிமுகமுள்ளவரை பார்த்தார்
அவரிடம் அசைவில்லை
அப்படா தப்பித்தோம்
என்றிருந்தது
நடுங்கி நின்ற
வணக்கத்திற்கு

###

பருவம் ஒவ்வொரு வாசலாகத்
திறந்து செல்லும்
ஒருவழிப்பாதை
ஐம்பது வயது வரையில்
சமதளத்தில்
அதன் வாசல்கள் திறக்கின்றன
ஐம்பதிற்கு பிறகு
அதன் வாசல்
நீருக்குள் திறக்கிறது
மங்கி தெரிந்தவை தெளிவாக
தெளிவானவை மங்கலாக
நீருக்குள்ளும் அமைகின்றன
இறுதிவாசல் நெருப்பில்
திறந்து வெளியேறுவது


###

தான் பெண்ணென்று முகங்காட்டி
நடந்து வருகிறாள் பேதை
தான் பெண்ணென்று முகம் காணுகிறாள் பேதை
தான் பெண்ணென்று நளினம் காட்டுகிறாள் பேதை
தான் பெண்ணென்று குலுங்குகிறாள் பேதை
தான் பெண்ணென்று சிரிக்கிறாள் பேதை
தான் பெண்ணென்று வாழ்கிறாள் பேதை
பெண்ணென்றாலும் பேதையென்றாலும்
யாரென்று சொல்ல வேண்டாமா பெண்ணே
யாரென்று சொல்
தாய் என்றேனும் சொல் இல்லை
பேய் என்று சொன்னாலும் சரிதான்
ஏதாவது இன்னாரென்று
எதையாவது
சொல்
பிறகு பெண்ணென்று பெண்ணென்று
சொல்கிறார்கள் என்று
கதறினால் எப்படி ?
வாழ்வது முழுவதும் பெண்ணாக
பின்னர் பெண்ணாக பெண்ணாக
நடத்துகிறார்கள் என்றால்
எப்படி ?


###


சூத்திரம்
1
சுயநலன் தான்
வாழ்க்கை என்பதை
எவ்வளவு தாமதமாக
கண்டுபிடித்திருக்கிறேன்
என்றான்
ஒருவன்
அப்படியானால்
இன்னுமிவன்
சுயநலத்தைக் கைவிட்டால் தான்
மகிழ்ச்சி என்பதை அறிய
எவ்வளவு தூரம்
செல்ல வேண்டியிருக்கும் ?
2
அறிந்த ஒன்று
அறிந்திராத ஒன்றின்
முதற்படி
3
சூத்திரம் ஆனதுமே
உடைந்துவிடுகிறது
சூத்திரம்
4
அறிய அறிய
ஆழம் தெரிகிறது
5
ஆழம் தெரிந்தால் என்ன கிடைக்கும் ?
யோகம்
கிடைக்கும்
எப்போது
என்பதை மட்டும்தான்
கணிக்க இயலாது


###


கடந்துபோனபிறகு நின்றுநாம்

பிறரைத் திட்டும்போதெல்லாம்

நம்மைத்தான்
திட்டிக் கொள்கிறோம்
கடப்பதற்கு முன்பிருந்த
நம்மை
துள்ளத்துடிக்க
கண்கூடாக
உள்ளிருந்து
கண்ட சாட்சியல்லவா ?

###


பூப்பதைக் காட்டு புரிந்து கொள்கிறேன்

1
உன்னுடைய அகம் நான் அறியத் தேவையில்லாதது
அகத்தைக் காட்டாதே
அகம் பூப்பதை மட்டும் காட்டு
நான் எடுத்துக் கொள்கிறேன்
2
உனதகம் எவ்வாறென்பதை என்னிலும்
அதிகம்
உனக்குத்தான் தெரியும்
எவ்வளவு புழுக்கள் ?
எவ்வளவு வஞ்சம் ?
எவ்வளவு அகங்காரம் ?
எவ்வளவு சிறிது பெரிது
எவ்வளவு அழுக்கு ?
எல்லாம் நீயே அதிகம் அறிவாய்
எதுவும் எனக்குத் தேவையற்றது
அதனால்தான் சொல்கிறேன்
திறந்து காட்டாதே
பூப்பதைக் காட்டு
புரிந்து கொள்கிறேன்

###

உன்னுடைய ஆயிரம் கைகளுடன்
என்னிடம் வராதே
இரண்டே இரண்டு கைகளுடன்
மட்டுமே வா
யுத்ததிற்கென்றாலும் சரிதான்
இரப்பதற்கென்றாலும் சரிதான்
நான் சாமானியன் சாமானியன்
ஆயிரம் கைகளுடன் வந்தால் என்ன செய்வேன் ?
உன்பேயை எரிப்பேன்
உன் பட்டினியை ரசிப்பேன்
சாமானியனாக வா
சத்தமிடாமல் வா
அப்படியானால் மட்டுமே
எனக்கு
உன் பசியும் புரியும்
பாஷையும் புரியும்
கூக்குரலிட்டவண்ணம் வந்துசேர்ந்தால்
பாறையாய் என் கதவடைப்பேன்
மோதாமலே உன் சிறகுதிர்ப்பேன்
நீ வனபுத்திரன்தான் தெரியும்
நான் சாமானியன் சாமானியன்
வனபுத்திரன் என்பதாலேயே
சாமானியனுடன் நீ
சண்டையிட முடியாது
போய் வா போய் வா

###

விடியலில் ரயில் நிலையம்
இருள் விலக்கி வெளிவருகிறது
குளிரும் காட்சியாக
நிலையத்து அரளிகளின் சிவப்பில்
வடிந்த இருளின் தடங்கள்
பச்சை வயல்களை ஒரு பக்கத்தில்
மறைத்திருந்த ரயிலொன்று கிளம்பிச்
செல்கிறது
செவலை நாய்
அடிபட்டு பின் தேறிய தனதிடுப்பை
எடுத்துக் கொண்டு நிலையத்தை
நீளத்தில் அணிவகுக்க
அடிபட்ட இடுப்பென்றே தோன்றாத
முன்பக்க மிடுக்கு
ராஜ கம்பீரம்
நாய்க்கரசர் போலும்
நல்லதோர் சூரிய
ஊடுருவல்
பின் தொடரும் ராணியைத்
திரும்பி
நிலையம்
நமது
கட்டுப்பாட்டில் இருக்கிறதா
என்று முகம் நோக்க
ஆமாம் ராஜாவே என்கிறாள்
ராணி
இந்த ரயில் நிலையம் தனக்கானது
என்று நினைத்திருந்தவனை
எடுத்துக் கொண்டு
அடுத்த ரயில்
நிலையம் விட்டுக்
கிளம்புகிறது
நிலையம் முழு கட்டுப்பாட்டில்
இருப்பதை
ஊர்ஜிதம் செய்த அவர்கள்
மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்

###

விடியலில் ரயில் நிலையம்
இருள் விலக்கி வெளிவருகிறது
குளிரும் காட்சியாக
நிலையத்து அரளிகளின் சிவப்பில்
வடிந்த இருளின் தடங்கள்
பச்சை வயல்களை ஒரு பக்கத்தில்
மறைத்திருந்த ரயிலொன்று கிளம்பிச்
செல்கிறது
செவலை நாய்
அடிபட்டு பின் தேறிய தனதிடுப்பை
எடுத்துக் கொண்டு நிலையத்தை
நீளத்தில் அணிவகுக்க
அடிபட்ட இடுப்பென்றே தோன்றாத
முன்பக்க மிடுக்கு
ராஜ கம்பீரம்
நாய்க்கரசர் போலும்
நல்லதோர் சூரிய
ஊடுருவல்
பின் தொடரும் ராணியைத்
திரும்பி
நிலையம்
நமது
கட்டுப்பாட்டில் இருக்கிறதா
என்று முகம் நோக்க
ஆமாம் ராஜாவே என்கிறாள்
ராணி
இந்த ரயில் நிலையம் தனக்கானது
என்று நினைத்திருந்தவனை
எடுத்துக் கொண்டு
அடுத்த ரயில்
நிலையம் விட்டுக்
கிளம்புகிறது
நிலையம் முழு கட்டுப்பாட்டில்
இருப்பதை
ஊர்ஜிதம் செய்த அவர்கள்
மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்

###

என்னுடைய நோய்கள்
வெளியே தெரிந்துவிடுகின்றன
வேறு வழியில்லை
என்னுடைய கவலைகள்
வெளியே கசிந்துவிடுகின்றன
வேறு வழியில்லை
எனது அகமும் முகமும் ஒன்றே
வெளியிலிருக்கின்றன
இப்படியொரு வெட்ட வெளி
இப்படியொரு வெட்டவெளி மனிதன்
2
காய்ச்சலின் போதுள்ள
பிரபஞ்சத்திற்கு
நாக்கசப்பு
3
என்னையொருத்தி எலிப்பிள்ளை போலும்
ஈன்றுச்
சென்றாள்
யாருக்கும் ஈடுபாடில்லாமல் போயிற்று
வந்து
தொட்டுப்பார்ப்பவர்கள் அத்தனைபேருக்கும்
இது
எலிப்பிள்ளை என்பது
தெரிந்துவிடுகிறது
முள் குத்துவதற்கெல்லாம்
ஓவென்று கத்தி ஊரை அழைப்பவர்கள்
உனக்குத்தானே இது
சாதாரணம் என்கிறார்கள்
4
இதற்கு
என்ன விலை ?
ஈடுபாடில்லாத விலை
இதற்கு மதிப்பு ?
ஈடுபாடில்லாத மதிப்பு
ஏன் இப்படி ?
இதுதெரியாதா
இதுவொரு
எலிப்பிள்ளை
5
பிள்ளையென்றெடுத்தாள் ஒருத்தி
எலிப்பிள்ளையென்றதும்
இறக்கி வைத்தாள்
எலிப்பிள்ளையென்றாலும்
என்பிள்ளை என எடுத்து வைத்துக்
கொண்டிருப்பவள்
பகவதி
விட்டவள் சராசரி
வைத்துக் கொண்டவள் இறைவி
6
நீங்கள் ஏன் உயிர் வாழ்கிறீர்கள்
என்பதே கேள்வி
நீங்கள் ஏன் மீண்டும் மீண்டும்
நடமாடுகிறீர்கள் என்பதே
குற்றச்சாட்டு
வேறுவேறு பாஷைகளில்
கேட்டுக்
கொண்டேயிருக்கிறார்கள்

###

கடல் தானாக வரும்
1
கடற்கரையில் இருந்து
சிப்பி கொண்டு வந்தேன்
சங்கு கொண்டு வந்தேன்
சிறுமணல் கொஞ்சம்
கடலும் உடன் வந்ததை
கவனிக்கவில்லை
நெடுநாள் கழித்து
சிப்பியை தொட்டேன்
அலையடித்தது
சங்கில் கடற்காற்றின் விசில்
சிறு மணலில் கடல்
அப்போது பார்த்தது
எப்போதோ வருகிறது
எப்போதோ பார்க்கத் தானா
அப்போது காண்பது ?
2
குடிகாரன் பார்த்த சாமி
தரிசனம் தந்தார்
மங்கலாக விஸ்வரூபத்தில்
நடுங்கிய வண்ணம் .
அப்போது
குடிகாரனுக்கு அருளிய
சாமியும் மிதமிஞ்சிக் குடித்திருந்தார்
3
என்ன செய்வது இப்படி இருக்கிறது
என்றாள் ஒருத்தி
இப்படியிருப்பதுதானே
உனக்கு சௌகரியமாக இருக்கிறது
என்றானொருவன்
இப்படியிருப்பது மாறினால் எப்படியிருப்பாயோ
அப்படியிருக்கத் தொடங்கு
என்றார் பகவான்
இப்படியிருந்தால் இப்படித்தானிருப்பாய்
என்றானொருவன்
அப்படியிருந்த பின்னர் இருவரும்
வந்து சேருங்கள்
என்கிறார் பகவான்
4
முள் குத்துவது போலும் இருக்கின்றன
உங்கள் வார்த்தைகள்
குத்திக்கிழிக்கட்டும்
உள்ளிருக்கும் தேனை மீட்க
வேறு என்ன தான் வழி ?
5
என்னை என்னை புகார் சொல்லாதே
நான் வழியில் நிற்பவன்
உள்ளே போ என்று சொல்வது என் கடன்
உள்ளே இருப்பதே உட்பொருள்
உள்ளே இருப்பது
உனக்குள்ளும் இருக்கிறது
உனக்குள்ளிருப்பது தெரியவில்லையானால்
உள்ளே இருப்பதும் தெரியாது
வெளியேறு
இனி அடுத்தவருக்கானது
நேரம்
6
யாருக்கும் இல்லையென்று சொல்லாதவன்
இறைவன்
நீ எப்படி கேட்டாயோ
என்னவோ ?
குடிபோதையில் கேட்டிருந்தால்
அவனும்
குடிபோதையில்
தருகிறான்
கேட்கத் தகாததைக் கேட்டிருந்தால்
கேட்கத் தகாததை தந்து விடுகிறான்
அனைத்தையும் கேட்பவனுக்கு
அள்ளியெடுத்துக் கொள்ளச் சொல்லி
பிராந்தைத் தருகிறான்
அல்லல் கேட்டவனை அல்லல்படுத்துகிறான்
ஆகாரம் கேட்டிருந்தால்
அமுது செய்கிறான்
அறிந்து கேட்பானென்றால் மட்டும்
முன்னமே செய்கிறான்
7
முன்னர் வினைகளை ஒன்றுமே செய்ய இயலாது
கேட்கும் அத்தனைக்கும் அடியில்
அது இருக்கும்
விடை கேட்கும்
துடிகொள்ளும்
வலியேற்கும்
8
முதலில் கடற்கரைக்கு போ
சிப்பி எடுத்து வா
சங்கு எடுத்து வா
பின்னொரு நாளில் கடல் தானாக வரும்

###

நெடுஞ்சாலையில்
நாம் ஓட்டிச் செல்கிற வாகனத்தை
எதிரில் வருகிறவனும் சேர்ந்தே
ஓட்டிச் செல்கிறான் இல்லையா?
நாம் இங்கு வளைக்கிறோம்
அவன் அங்கு வளைக்கிறான்
நாம் தவறுகையில் அவன் சரி செய்து விடுகிறான்
திடீரென எமன் ஓட்டுனர் இருக்கையில்
ஏறி அமர்ந்து இறங்கிச்
செல்கிறார்
எதற்கு ஏறினார் என்பதற்கும் ஒன்றும் சொல்வதற்கில்லை
எதற்கு இறங்கினார் என்பதற்கும் ஒன்றும் சொல்வதற்கில்லை
கடவுள் ஏறியமர்ந்து வண்டியோட்டும் நாளில்
மழை பெய்கிறது
நாம் ஏறி அமர்கிறோம்
யார் யாரோ ஓட்ட
வண்டி ஓடுகிறது
அப்படித்தானே?
நாம் ஓட்டுவது போன்ற
பிரேமை மட்டும்
வாழ் நாள் முழுக்க
தீருவதேயில்லை

###

மரணத்திற்கு முந்தைய தினத்து
மகளின் திருமணக் காட்சி
குளுக்கோஸ் புட்டி
சொருகிய கோலத்துடன்
அலங்கரித்து
அவனை அழைத்து வந்திருந்தார்கள்
மேள தாளங்கள்
மங்கலாகக் கேட்க
கனவுச்சாயல் நிரம்பியிருந்தது
மணமேடை
கையைப் பிடித்து
கையில் ஒப்படைத்தான்
அவன் காணவிரும்பிய
காட்சியை
உடன் அழைத்துச் செல்லும்படிக்கு
கடைசியில் அவனுக்கு
அருளப்பட்டது
மங்கலாகத்தான் இருந்தது
இருந்தாலும் என்ன ?
இறுதியஞ்சலியில்
இந்திரனைப் போல காணப்பட்டான்
என்றார்கள்

###


Comments

  1. மிகச் சிறந்த கவிதைகள்.
    செல்வராஜ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"