எண் திசைகள் எல்லாவற்றுக்கும்


 


1


பிறந்த குழந்தை
மடியில்
கனவு காண்கிறது
தூங்கி விளையாடுகிறது
அசைத்து விடப்பட்ட ஊஞ்சல் போல
சுய நினைவற்று
மெல்ல ஆடுகின்றன தாய் மடியில்
தாயின் தொடைகள்
தாய் மடியாக
எவ்வளவு விரிகிறது
இந்த மடி
பிரபஞ்சம் அளவிற்கு
பிரபஞ்சம் அளவிற்கு விரிந்த மடி
ஆணிடம் வரும் போது
சுருங்கிச் சுருங்கி ; சுருங்கி
சிறு யோனியின் அளவிற்கு
ஒரு துளையாகிறது
அதை பிரபஞ்சம்
அளவிற்கு
பெரிதாக்குகிறது
பூமியில் பிறந்தவுடன்
குழந்தை


2


மூக்கில் சிறுகோணல்

உதட்டில் சிறுபிளவு
பல்லொன்றில் அழகிய ஒடிவு
எல்லாம் சிற்பமாய்
அமைந்தன
இல்லையென மறுத்து உள்ளே
கடத்தினாள்
உள்ளில் சிறுகோணல்
உள்ளில் சிறுபிளவு
ராக்ஷ்த ஒடிவு
உடைந்து துகள்துகளாய்
தொங்குகிறது
சிற்பம்

3


ஆசையின் தலைதான் எவ்வளவு பெரியது ?
1
விளைவின்றி
ஒரு பழம் எடுக்க வழியுண்டா?
ஒரு குடம் உடைக்க வழியுண்டா?
உலை வடிக்க வழியுண்டா
சொல்
2
எந்தக் குடம் உடைந்தாலும்
அதன் விளைவு
அதனருகில்
இருக்கும்
3
படம் எடுப்பதற்கே பாம்பிற்கு
விஷம்
காளைக்கு கொம்பு
சாமிக்கு ஈட்டி
பாபிக்குப் பெண்டிர்
5
ஐந்து தலை நாகமும் சாதுதான்
தலைவைத்துப் படுத்திருப்பது யார்
என்பதைப் பொறுத்திருக்கிறது
அது
ஆசையின் தலைதான்
எவ்வளவு பெரியது
6
முட்டாத மாடுண்டா
மோதாத எருதுண்டா
கடிக்காத எறும்புண்டா
திருப்பி எடுத்து அடிக்காத வினை உண்டா?
7
காத்துக் கொண்டேயிருக்கிறாள்
அரண்மனையில் தேவி
ஆலமூட்டில்
பகவதி
நடுத்தெருவென்றாலோ
ஆறாது நிற்பவள்
இசக்கி
எல்லாயிடத்திலும்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
போர்
அரண்மனையில்
அதற்கான போர்
ஆலமூட்டில்
அதற்கான போர்
நடுத்தெருவில்
அதற்கான போர்
உச்சக்களியாட்டம்
எந்த போரில் கலந்துகொண்டாய்
என்பதைப் பொறுத்து
அமைகிறது
விதி
8
போரில் வென்று
எடுத்தது அத்தனையும்
அடுத்த போரில்
கைவிடத்தான் வேண்டும்
வழியே இல்லை
வேறு வழியென்னவென்றால்
தெய்வத்திற்கு கொடுக்கலாம்
விருப்பமில்லையானால்
ஜோதிவளர்த்து
இடலாம்
கொளுந்து விட்டேனும் சிறிதுநேரம்
எரியும்
9
செய்வினை செய்தவனுக்குத் திரும்பும்
தன் வினை
தன் முன்னே திரும்பும்
10
எல்லோரும் சொல்லிவிட்டார்கள்
என்றுதானே
நினைக்கிறீர்கள்
ஆமாம்
இப்போது
வந்தவனும்
சொல்லிவிட்டேன்

###


4

நீருக்குள் இருக்கிறது கடல்
1
என்னைப் பற்றி
எழுதுவதாக சிலர்
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
என்னைப் பற்றியெழுத என்ன இருக்கிறது
உங்களிடம் இல்லாதது ?
என்னைப் பற்றியெழுதும் போதும்
என்னைப் பற்றியல்லாத
ஒன்றே
என்னில் இருக்கிறது
2
எதையேனும் கற்று வைத்திருந்தால்
கழற்றி வைத்து விட்டு
குளத்தில் இறங்குங்கள்
தண்ணீருக்கு உங்களோடு பேச
வேண்டும்
என்கிற ஆசை
உண்டு
3
ஒரு பறவைக்கு
தானியமிட்டீர்கள்
அனைத்து பறவைகளும்
நீங்கள் யார் என்பதை
அடையாளம் கண்டு கொண்டன
4
ஒருமுறை அந்த பறவையின் இசையைக் கேட்டீர்கள்
பின்னர்
உடல்
உயிருள்ளவரையில்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
5
ருசியெல்லாம்
பரந்தாமனே
6
குளிக்கிற படித்துறையில்
சேர்ந்து ஒரு எருமையும் குளித்துக் கொண்டிருந்தால்
அது எவ்வளவு பெரிய
ஆசிர்வாதம்
7
படித்துறை என்பது பெருங்காலம்
அதில்
இன்று
நான்
குளித்தேன்
8
இந்த பக்கம் முழுக்க வயல்கள்
அந்தப் பக்கம் முழுக்க வயல்கள்
நான் பகவானைப் பார்க்க சென்று கொண்டிருக்கிறேன்
அவர் என்னைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறார்
9
நீருக்குள்
இருக்கிறது கடல்
10
பத்து குழந்தைகள் குளத்தில்
இறங்கி விளையாடத் தொடங்கினால்
யார் குளம் யார் குழந்தைகள்
என்பதே
குழம்பி விடுகிறது
11
குளத்தில் சற்று நேரம் மூழ்கியிருந்தேன்
குளத்திற்கு கரைகள் கிடையாது
என்பது
தெரிந்து விட்டது
12
இந்த உடலைக் கொண்டு
அறிய முடிந்ததெதுவும்
உடலில்
இல்லை
வேறெங்கோ இருக்கிறது

###




5

எண் திசைகள்
எல்லாவற்றுக்கும்
1
இந்த தாவரம் இடம்விட்டு
எங்கேயும் சென்றதில்லை
அனைத்தையும்
அறிந்து வைத்திருக்கிறது
இந்த பறவை எங்கேங்கோ
சென்று திரும்புகிறது
எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறது
இந்த மனம் கூடுவிட்டு கூடு
என செல்லாத இடங்களே இல்லை
எதையும் தெரிந்து கொள்வதும் இல்லை
2
இந்த இடத்தில் பட்டால் இவ்வளவு
வலிக்கும்
அடிவிழும்போது அறிந்து கொண்டது
வலி தணிந்ததும் அதே இடம் நோக்கி
நடக்கிறது
3
எவ்வளவு சொன்னாலும் ஏறுதில்லை
சறுக்கிச் சறுக்கி விழுகிறது
விழுந்தே இடத்திலேயே விழுகிறது
பட்ட இடத்திலேயே படுகிறது
4
ஏனிவ்வளவு பதற்றம் என்பவனுக்கு
ஏறவும் தெரியவில்லை
தவறி ஏறிவிட்டானெனில்
இறங்கவும் தெரியவில்லை
5
ஐயாயிரம் மரக்கிளை கண்ட குரங்கிற்கும்
தவறி விழுவது போலதான் கனவு
6
கரையின் நிற்பவன் காணும் தண்ணீர் ஒன்று
தண்ணீரில் குதித்து நீஞ்சுபவன் அடையும் தண்ணீர் வேறொன்று
தத்தளிப்பவன் அடைந்த தண்ணீர் ஒன்று
தண்ணீர்
முற்றிலும் வேறொன்று
7
அணைத்துப் பார்த்து அறிபவன்
அறிவது
கதகதப்பு
8
எண் திசைகள்
எல்லாவற்றுக்கும்
ஒன்றைச் சாதிக்கிறான்
ஒன்றுமறியாதவன்
9
சுத்தம் சோறு போடும்
சந்தேகமில்லை
பசியின் அளவிற்கு
சுத்தமிருந்தால் போதும்
பாதகமில்லை
10
முற்றிலும் சுத்தம்
சுடுகாட்டுச் சாம்பல்

###




6

குழந்தை மண்ணைத் தின்றது
வாய் திறந்து பிரபஞ்சம் கண்ட தாய்க்கு
அவதார புருஷன் பிறக்கிறான்

கடற்கரையில்
காத்திருக்கும் தாய்
அவன் அவதார புருஷனே என
அறிந்து விடுகிறாள்

அறிந்த பின்னரே
அவன் உனக்கும் எனக்கும்
இனி தொடர்பேதுமில்லை என்று
மறுமொழி சொல்கிறான்

அவதார புருஷனாக அன்னையிடமிருந்து
எவ்வளவு தூரம்
செல்ல வேண்டியிருக்கிறது ?

அருகில் குழந்தை

அந்நியப்பட்டு பிறக்கிறான்
அவதாரம்
###

7
அவன் ஓயாமல் அரசியல் பேசுகிறான்
அடங்கா காமம்
நுரை தள்ளிக் கொண்டேயிருக்கிறது

அவன் எப்போதும்
கருணையிலேயே
காலம் கடத்துகிறான்
மேலாதிக்கத்தில்
கொள்ளை விருப்பம்

வெறுத்துக் கொண்டேயிருக்கிறான்
உடலில் அவ்வளவு
வியாதிகள்

அதெல்லாம் இருக்கட்டும்
அவள் மீது எவ்வளவு
வெறுப்பிருந்திருக்குமேயானால்
அவளைக் காதலிக்கிறேன்
என்றும்
சொல்லியிருப்பான்
###

8

மாணிக்க வாசகன் வந்தான்
பின்னர்
நம்பியும் நீயும் வந்து நிற்கிறீர்கள்
எல்லாம் சற்றைக்கு முன்னே பின்னே
அவ்வளவுதான் விஷயம் என்கிறாள்
கோமதியம்மன்

நான் சற்றைக்கு முன்னும் பின்னுமாக
இருக்கும் அவளை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அவ்வளவுதான் விஷயம்
சற்றைக்கு முன்னும் பின்னும்
தளிர்க்கும் எவ்வளவு உடல்களுக்கு
மத்தியில்
ஏறி நின்று கொண்டிருக்கிறாள்
இந்த கோமதி ?

பின்னாலும் முன்னாலும்
போகிற பாதை நடுவில்

###

8

நான்கு தாய்மார்கள்
அந்த தாய்
திண்ணையின் ஓரத்தில்
சுருண்டு படுத்திருக்கிறாள்
முதலில் தனக்குள்ளிருந்த குழந்தையை
வெளியேற்றினாள்
குழந்தை விட்டு வெளியேறிய இடத்தில்
பிரகாசமாயிருக்கிறது
தாயின் முகம்

அந்த தாய் நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள்
மனதின் சிறுமி வெளியேறிய தடத்துடன்
பூரித்துப் போயிருக்கிறது
வெளிப்படும்
சொல்

அந்த தாய் ஓலைக்கீற்றில்
பாய் முடைந்து கொண்டிருக்கிறாள்
தனது உள்ளத்தில் இருந்த மாமியாரை
வெளியேற்றிய பின்னர்
அவளிடம்
ஒட்டிக் கொண்டிருக்கிறாள்
இப்போதைய
அன்னை

அந்த தாய் பிரகாரத்தில்
வந்து அமர்ந்திருக்கிறாள்
அனைத்தையும் வெளியேற்றிய பின்
காதலுடன்
சுடர்கிறது
அவள் நெருப்பு

###

9

கடக்காமலிருக்க வேறென்ன காரணம் ?
1

கேள்விப்பட்டதிலிருந்து வெறுக்கிறாய் என நினைக்கிறேன்
கேள்விப்பட்டதிலிருந்து நேசிக்கிறாய் என நினைக்கிறேன்
கேள்விப்பட்டதிலிருந்து யூகிக்கிறாய் என நினைக்கிறேன்
யூகத்திலிருந்து அறிகிறாய் என நினைக்கிறேன்
யூகத்தை அறிந்தாய் என நினைக்கிறேன்
அறிந்தாய் அறிந்தாய்
உன் யூகம் என்னவென்று அறிந்தாய்
அன்றி
என்னையும்
அறிந்தாயில்லை
உன்னையும் அறிந்தாயில்லை

2

உன் மேதமை தெரிந்து கொண்டேன்
உன் திறமை அறிந்து கொண்டேன்
உன் பேதைமை அறிந்து கொண்டேன்
பாசாங்கு தெரிந்து கொண்டேன்
அன்றி
உன்னைத் தெரிந்து கொண்டேனா
இல்லை
நீதான் எப்போதேனும் தெரிவித்தாயா
இல்லை
எப்போதும் இல்லை

3

நிரூபிப்பதிலேயே உன் காலமெல்லாம்
வீணானால்
எப்போது
நிரூபிப்பாய் ?
எதனை
நிரூபிப்பாய் ?
நிரூபிக்காமலிரு
சற்றே நிரூபிக்காமலிரு

4

யாரோ தவறுதலாக முந்திக் கொண்டேயிருக்க
உன்னைப் பயிற்றுவித்து விட்டார்கள்
முந்திக் கொண்டேயிருக்கிறாய்
முந்திப் பேசுகிறாய்
முந்தி கேள்வி கேட்கிறாய்
முந்தி கைநீட்டுகிறாய்
முந்துகிறாய்
கொஞ்சம் நாட்கள்
பிந்தித்தான் பாரேன்
கொஞ்சம் பிந்தி
முந்திப் பேசுவதை பிந்தி
முந்தி கேள்வி கேட்பதைப் பிந்தி
முந்தி கைநீட்டுவதைப் பிந்தி
முந்துவதைப்
பிந்தி

5

உனக்கும் அவனுக்கும் இடையிலுள்ள தூரமே
உனக்கும் எனக்கும் இடையிலும் இருக்கிறது
சற்றே நம்பிக்கைக் குறை அவனிடம் உண்டு
அதுவே என்னிடமும் உண்டு
அதுவே உன்னிடமும் உண்டு
ஒரு துளிக்கு அப்பால்
பறவை
பறந்து செல்லும்
தொலைவு
முதலில் கல்லால் அவனை வீழ்த்துகிறாய்
அது என்னை வீழ்த்துகிறது
நான் உன்னை
வீழ்த்துகிறேன்

6

எல்லாம் உனக்குத் தெரியும்
பிறருக்குத் தெரியாது என்று நீ நினைப்பதை போலத்தான்
பிறரும்
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
அவர்களுக்கு எல்லாம் தெரியும்
உனக்கு ஒன்றுமே தெரியாது என்று

இவையெல்லாம் சும்மா
கண்ணாமூச்சி விளையாட்டுகள் தாம்
தெரியும் தெரியாது
விளையாட்டுகள்

போக வேண்டியது...
தெரியும் தெரியாது என்பதற்கு
அடுத்த
தெரு

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"