Skip to main content

நூல்களை அடுக்குதல்

 நூல்களை அடுக்குதல்

நூல்களை அடுக்குவது பற்றி ம. நவீன்
Navin Manogaran
சுவாரஸ்யமான பதிவு ஒன்றினை அவருடைய பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் "நூல்களை அடுக்குதல் ஒருவகையில் மனதையும் அடுக்குவதுதான் "என்று ஆரம்பித்துள்ளார். பெரும்பாலும் அவர் குறிப்பிட்டிருப்பது சரியே. நூல்கள் எவ்வாறு உங்கள் மனதில் அடுக்கப்பட்டுள்ளதோ ,தோராயமாக அதை ஒத்தே உங்கள் மனமும் இருக்கும் .நூலற்றவர்களின் மனம் ;மனமாகப் பொருள் கொள்ள தக்கது அல்ல
இனம் தெரியாத ஒருவருடைய வீட்டிற்குள் நுழைந்தால் கூட வீட்டில் நூல்கள் அடுக்கப்பட்ட விதத்தை வைத்தே ,அது யாருடைய வீடாக இருக்கும் என கணித்து விட முடியும். எம் எல் ஏ ;எம் பி வீடுகளெனில் அடுக்கும் பணியை பெரும்பாலும் வெள்ளையடிக்க வந்தவரே செய்திருப்பார். அடுத்து வீடு வெள்ளையடிக்கப்படும் வரையில் நூல்கள் அதே வரிசையில் இருக்கும் .வாசிக்காதவன் கையில் மாட்டிக்கொள்கிற நூல்கள் ;விலங்கு மாட்டி ஜெயிலில் இருப்பது போலத்தான். குறைந்த பட்சம் வாசிக்காதவன் எனினும் ஆசையுள்ளவன் கையிலேனும் போய் சேருதற்கே நூல்கள் விரும்பும். எப்போதேனும் படித்துவிடமாட்டானா ?
புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் கல்கியின் பொன்னியின் செல்வன் ,அடுத்து உப பாண்டவம் ,சுஜாதாவின் சிறிய நூலான "தமிழில் திரைக்கதை எழுதுவது எப்படி ?,ல சா ராவின் தடித்த நூல் ,புஷ்பா தங்கதுரை ,ஜீரோ டிகிரி இப்படி...முக்கியமாக கார்க்கியின் தாய் ,இடையிடையே ரஷ்யன் புக்ஸ் எனில் , தாறுமாறான அடுக்குதல் எனில்; ஒரு வெற்றிப்படம் கண்டுவிட்ட சினிமா இயக்குனர் வீடாகத்தான் இருக்கும். எழுத்தாளர்கள் இவர்களிடம் அதிகம் மாட்டிக் கொள்ளாமல் பிதுங்கி வெளியேறிவிட வேண்டும். நூல்கள் அதிகம் வீட்டிலிருக்க வேண்டியதின் அவசியம் பற்றி மணிக்கணக்கில் இவர்கள் பேசுவார்கள். எழுத்தாளர்களுக்கும் அதுபற்றி பாடம் சொல்வார்கள். எதிரில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பதே இவர்களுக்கு மறைக்கப்பட்டிருக்கும். புதிய பவிசில் இருப்பவர்கள் எவருக்கானாலும் சரி; இப்படி எதிரில் மறைக்கப்பட்டுவிடுகிறது. புதிதாக யோகா பயில்பவன் ,புதிதாக கிறிஸ்தவத்திற்கு மாறியவன் ,இப்படி இந்த வரிசை நீளமானது, புதிதாக வெளிநாடு சென்று வந்த கவிதாயினிகள் வரையில் நீளக் கூடியது. ஒருமுறை ஜெர்மன் சென்று வந்த கவிதாயினி ஒருவர் ஜெர்மானிய வானம் மிகச் சிறப்பு என பேட்டி கொடுத்திருந்தார்
நான் கண்டு வியந்த நூலகங்கள் என ராஜ மார்த்தாண்டனின் நாகராஜ் மேன்ஷன் அறை நூலகத்தையும்,தென்காசியில் அண்ணாச்சி விக்ரமாதித்யன் நூலகத்தையும் சொல்வேன். சி. மோகனின் அறையில், அந்த அறைக்குள் நுழைய போகிற தேவதைக்காக ,அவள் நின்று சுற்றி காண்பதற்காக சில புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும். தேவதைகள் புத்தகங்கள் பேரில் கடும் அலட்சியம் கொண்டவை என்பது அந்த அறைக்கு இப்போதுவரையில் தெரியாது.அந்த அறையில் புத்தகங்களின் அருகில் மதுவற்ற கண்ணாடிக் குவளைகள் உண்டு.

பிரபஞ்சனின் அறை நூலகம் இயல்பானது ,அக்கறையற்றது ,அதன் மீதமர்ந்து பெண்கள் பேசிக் கொண்டிருந்தால் அவருக்கு காண்பதெல்லாம்
இன்பமாகிவிடும் .நாம் அடுத்து காணச் செல்லும் போது; ஒரு பெண் இப்போதுதான் வந்து சென்றார் என்பதற்கான ஒரு தடயமும் அவரிடம் இராது அறையிலும் இராது. நாம் தான் கற்பனையால் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். எந்த புத்தகக்கட்டின் நடுவில் கால்களை மடக்கி அவள் சுகாசனத்தில் இருந்திருப்பாள் என்பதை; பிரபஞ்சன் காந்த கண்களுடன், கைகளை பின்தலைக்கு மடக்கி சிரிக்கும் சிரிப்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம் .அல்லது வந்திருந்த பெண்ணிடம் பேச நினைத்து தவறிய விஷயங்களையே அவர் நம்மிடம் பேசிக் கொண்டிருப்பார் .அதுகொண்டடையலாம்
மார்த்தாண்டனின் நூல்கள் கால்கள் கொண்டவை. பத்துக்குப் பத்து சிறிய அறையில் நடுவில் இரண்டு ஒற்றை மரப்பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அதற்கு மூன்று பக்கமும் வளர்ந்து சுவர் போல நின்று கொண்டிருக்கும் புத்தகங்கள். எந்த புத்தகத்தை கேட்டாலும் முதலில் மறுப்பதும், பின்னர் நிபந்தனையோடு கொடுப்பதும் சிறிது நேரத்திலேயே நிபந்தனையை மறந்து விடுவதும் அவர் இயல்பு.தினமணியில் வேலைபார்த்ததால் நிறைய நூல்கள் அவரை நோக்கி வந்து கொண்டேயிருக்கும். அவரால் நினைத்தாலும் கொடுக்காமல் முடியாது.
நிபந்தனையும் பெரிதாக ஒன்றுமில்லை கட்டுரை எழுத தேடும்போது கிடைக்காது என்பார். ஏகதேசம் அறையிலுள்ள எல்லா நூல்களையும் படித்திருப்பார் மார்த்தாண்டன் . நம்பி நிறைய நூல்களை அவரிடம் பெற்றுக் கொள்வார் .சில சமயங்களில் சென்றதுமே நம்பி ஏதேனும் கேட்பார். அதற்காக மார்த்தாண்டன் சில பத்திரிகைகளையெடுத்து அந்த வளரும் நூல்ச் சுவர்களில் அடிப்பார். பயமாக இருக்கும். புகைபோல எழும்பும், தூசு அடங்க ஒன்றிரண்டு மணிநேரங்களேனும் ஆகும்
அந்த அறை அவருடைய நிறைய நண்பர்களுக்கான விருந்து அறையும் கூட. மீதமுள்ள குப்பையிடங்களில் மூன்று பேராகத் தூங்கியிருக்கிறோம். மார்த்தாண்டனின் அறையை நம்பி ,ஒரு இளைஞன் தமிழ்நாட்டின் எந்த ஊரிலிருந்தும் கிளம்பி சென்னைக்கு அப்போது சென்று வரலாம். அவ்வளவு பரந்து விரிந்த மனம் கொண்ட அறை அது .கதவுக்கு ஒரு சிறிய சாவி உண்டு. சாவியை காட்டிலும் குண்டூசிக்கு சரியாக இணங்கக் கூடியது அதன் பூட்டு. இருந்தாலும் திகைத்து தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்களுக்கு தாக்கோல் எங்கிருக்கிறது? என்பதை சரியாக மார்த்தாண்டன் சொல்லித்தருவார். நானறிந்த அளவில் திருட்டே நடைபெறாத அறை
நம்பியையும் பகவதியம்மாவையும் பார்க்கச் செல்வோருக்கு, அனைத்து பொருட்கள் புத்தகங்கள், சாமிகள் என எல்லோரையும் தரையில் அமர்த்தி; அதன் நடுவில் அமர்ந்து கொண்டிருப்பார்கள்,இந்த காட்சியே அவர்கள் வாழ்வு பிரயாணம் எல்லாம். வேறு வீட்டிற்கு மாறுவதற்கு தயாராக எப்போதும் இருந்து கொண்டிருப்பவர்களாகவே அந்த காட்சி எனது மனதிற்கு பதிவாகியிருக்கிறது. நம்பி ஊரில் இல்லாத சமயங்களில் எல்லாம் தொடர்ந்து பகவதியம்மாவிடம் வசை வாங்குவதெல்லாம் தரையில் அமர்ந்திருக்கும் இந்த புத்தகங்களே. அதன் ஆசிரியர்கள் விபூதிபூஷன் பந்தோபாத்யாவாகவும் இருக்கலாம் ,சபரிநாதனாகவும் இருக்கலாம் .
[ நம்பியெனப்படுவது கவிஞர் விக்ரமாதித்யனே ]

Comments

Post a comment

Popular posts from this blog

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1

முகப்பு 1 சிறு வயதில் கோடை விடுமுறை காலங்களில் சாமிதோப்பில் கொண்டு விடுவார்கள்.எங்கள் ஊரில் இருந்து கடற்கரை வழியாக சிற்றன்னை மாமா ஒருவர் என்னை மிதிவண்டியில் ஏற்றிக் கொள்வார்.மிதிவண்டியின் முன்புறம் தங்கையோ தம்பியோ அமர்ந்திருப்பார்கள். மதிய உணவிற்குப் பிறகாக எங்களை அழைத்துக் கிளம்புவார் மாமா.சாமிதோப்பிற்கு மணக்குடி வழி செல்லும் பாதையே அவர் தேர்வு செய்வது.அதுவே பாதுகாப்பானது என்று அவர் கருதினார்.பறக்கை வழியாகச் சென்று வடக்குத் தாமரைக்குளம் மார்க்கமாக வயல்வழியே இப்போது செல்லுகிற பாதை ,அப்போது இல்லை.வயல்வழியே ஒரு ஒடுங்கிய கோடு போன்ற ஒல்லியான பாதை உண்டு. அது பழையாற்றில் சென்று முட்டும்.சேறும் சகதியும் நிறைந்து பூச்சிகளின் அரவம் நிறைந்த பாதை அது.பெரும்பாலும் பூச்சிகளின் ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருக்கும்.கடப்பவர்கள் பயமுட்டும் கதைகளைப் பேசிய வண்ணம் கடப்பார்கள். குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு உகந்த வழியாகவே மணக்குடி பாதையை அவர் தேர்வு செய்வது.பெரியவர்களும் அந்த பாதையில் செல்லுமாறே அறிவுரை சொல்லி அனுப்பி வைப்பார்கள்.மணக்குடி செல்வது வரையில் கடற்கரை வழியே தொடர் மணற்குன்றுகள் உண்டு

அய்யா வைகுண்டர் இதிகாசம் 2

அவதாரத்தை நெருங்குதல் குன்றின் மேல் ஒவ்வொரு படியாக ஏறிச் செல்லுதலுக்கு நிகரானது அது.அவதாரத்தை நோக்கிய பிரயாணம் இல்லாமல் அது சாத்தியமில்லை .தெரிந்தோ தெரியாமலோ நமது ஒவ்வொரு செயலிலும் அங்கு நோக்கித் திரும்பி இருக்க வேண்டும்.படைத்தலின் ரகசியம் காண அங்கு நோக்கி நம் கண்கள் திரும்பி இருக்க வேண்டியிருக்கிறது.எப்படியெனில் தெருவில் குழந்தையை விளையாட விட்டிருக்கும் தாய்,பல வேறுபட்ட வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் அதன் பேரில் ஒரு கண்ணாக இருக்கிறாளே அப்படி.சிலருக்கு கண்ணாகவும் இருக்கத் தெரியாது,ஆனால் குழந்தையை தெருவில் இறக்கி விட்டிருப்பார்கள் . கோயில் வாசலில் நிற்கிறோம்,பரம்பொருளுக்கும் நமக்குமிடையில் உள்ள தூரமும் இடைவெளியும் நமக்கு முன்பாக தெளிவாக இருக்கிறது.நாம் வேறாகவும் அது வேறாகவும் இருக்கிறோம்.அது வேறாக இருக்கிறது .நாம் வேறாக இருக்கிறோம்.உண்மையில் பரம்பொருளும் நாமும் வேறு வேறு இல்லையே...பரம்பொருளில் என்னவெல்லாம் இருக்கின்றதோ அத்தனையும் நம்மிடமும் இருக்கிறது.இல்லாதது எதுவொன்றும் இல்லை.சிவ சிவ நான் ஆனோம் என்கிறார் வைகுண்டர்.அப்படியானால் இந்த வேற்றுமை எங்கிருந்து தோன்றுகிறது.நான் ஒவ்வொரு முறையு

அய்யா வைகுண்டர் இதிகாசம் முன்னொட்டு 3

அய்யா வைகுண்டர் இதிகாசம் முன்னொட்டு 3 தெய்வங்கள் நமக்குள் மிகவும் நுட்பமான இடத்தில் இருக்கின்றன.நாம் எப்போது என்ன நினைப்போம் என்பதை அவை அறிந்து கொள்ளுகின்றன.சிண ுங்கினால் அவை சென்றுவிடும்.ஓங்கி மிதித்து அதிர்ந்தால் விலகும்.பிறர் ஒடுங்கச் சத்தமிட்டால் ஒடுங்கும் இடம் அது.பத்து ஆண்டுகள் கழித்து இவன் நம்மை வைவான், என்றால் பத்து வருடங்களுக்கு முன்பே அவை நம்மில் விலகத் தொடங்கும்..அதற்காக எதையும் செய்யாமலோ கொள்ளாமலோ இருப்பதில்லை.வழக்கம் போல எல்லாம் நடக்கும்.நடக்க வேண்டியவை அத்தனையும் நடக்கும்.அது விரோதிப்பதில்லை.வஞ்சிப்பதில்லை.அது நமக்குள்ளும் .ஒவ்வொருவருக்குள்ளும்,என்னுடைய தெய்வம் எனக்குள்ளிருப்பதைப் போல உன்னுடைய தெய்வம் உனக்குள்ளிருக்கிறது.அவரவர்தான் ஏதேனும் துணையோடு எப்படியேனும் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.அதனை தெய்வங்கள் என எடுத்துக் கொண்டாலும் சரிதான்,தெய்வம் என்று எடுத்துக் கொண்டாலும் சரிதான்.எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் சரிதான்.ஒன்றென்று கொண்டால் ஒருமைக்கு எளிமை.பலது எனும் போது பழக்கக் கடினம்.பலதென்று கொண்டு பழக்கத் தெரிந்திருந்தால் அதிலும் பாதகம் ஏதுமில்லை.குரு என்றாலும் திரு என்றா