14 கவிதைகள்

 


1


ஒரு காலத்தில் உன்னைப் போலவே
இருந்திருக்கிறேன்
முதலமைச்சருக்கு ஆலோசனை
சொல்லியிருக்கிறேன்
ப்ரதான் மந்த்ரியை எதிர்த்திருக்கிறேன்
சாதுக்களிடம் சண்டையிட்டிருக்கிறேன்
தெய்வங்களையெல்லாம்
நிந்தித்திருக்கிறேன்
போவோர் வருவோரையெல்லாம்
தாக்கியிருக்கிறேன்
அடியாரை அடித்திருக்கிறேன்
உடன் ஒருவன் இருந்தால் போதும்
சாமியைத் தோள் எட்டி
மிதித்திருக்கிறேன்
எதற்கும் முயற்சித்ததில்லை
எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டிருக்கிறேன்
ஒருகாலத்திய
கலகக்கடவுள் நானிருந்த இடத்தில்
நீ வந்து முளைத்திருக்கிறாய்
அப்படியே உனக்கு என் வாலிப முகம்
அதே ஆற்றல்
அதனால்தான் எனக்கு பயமாக இருக்கிறது
முற்போக்கு கலகமுகம் கழுவி
வீட்டு நெல்லி மரத்திற்கு
தண்ணீர் விடுவதிலிருந்தே தொடங்கி
முதலில் இருந்து
புறப்பட்டு களத்திற்கு வந்து சேர
நான்கு கடல் தூரம் இருக்கிறது
தாங்குவாயா தம்பி ?

2

எட்டு மரப்பலகைகள் கொண்ட
கடை நீலவேணி அக்காவுடையது
வெற்றிலை பாக்கு ,சர்பத் ,தேன்குழல் மிட்டாய்கள்
குளிர்ந்த பானை மோர்
சுற்றுப் பீடிகள்
சுருட்டு வெம்மை
சாலை சிறுக சிறுக உயர்ந்ததில்
திண்ணை இரண்டடி பள்ளத்தில்
மாட்டிக் கொண்டது
நீலவேணி அக்கா
பாதி உயரத்தில்
நின்று தெரிகிறாள்
அவள் காலடிகள்
மூன்று தலைமுறைகளுக்கு
முந்தைய காலத்தில்
புதையுண்டிருக்கிறது
கடைக்குள் உள்ள காலம்
வெளியில் இல்லை
வெளியில் உள்ள காலத்தை
உள்ளே அனுப்ப
வழிகள் ஏதுமில்லை
நீலவேணி அக்காவாக இருக்கும் போது
அந்த கடைக்குள்
நுழைந்தாள்
அவள் முழு உயரம் அறிந்திருந்த
காலம் அது
இந்த பக்கம் இருந்தால்
அந்த பக்கத்திற்குள் நுழைய முடியாது
அந்தப் பக்கமிருந்தாலோ
இந்த பக்கத்திற்கு
வாசல்கள் இல்லை
இருவேறு காலங்களுக்கு மத்தியில்
வெறுமனே
எட்டு பலகைகள்

3

தனக்கான நிழலையும்
சேர்த்து எடுத்துக் கொண்டே
வளர்கிறது செடி
என்னுடைய நிழலில் நிச்சயம்
நானுமிருக்கிறேன்
என் பின்னால் வருகிற நிழல்
என்னுடையதே

4

நானொரு கடை நடத்திக் கொண்டிருக்கிறேன்
காலையில் பொருட்களையெல்லாம்
எடுத்து திண்ணையில்
வைப்பேன்
வருவதற்கு முன்பாக
சில மூப்புகள்
அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்
வம்பு
பால்யம்
நேற்று இன்று
எல்லாம்
மாலையில் விற்றதுபோக
விற்காததுபோக
அனைத்தையும்
உள்ளே
எடுத்து வைத்துவிடுவேன்
அதன்பின்னர்
நான்கைந்து நாய்கள்
அந்த திண்ணையை
எடுத்துக் கொள்வார்கள்
அந்த கடை அவர்களுடையது
என்றுதான்
அவர்கள் நினைக்கிறார்கள்
நாய்கள் வராதவொரு நாளில்
ஒரு குரங்கு
வந்திருந்தது என கேள்விப்பட்டேன்
விருந்தினராக
வந்தது அது
எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான்
நான் வாடகை
செலுத்திக் கொண்டிருக்கிறேன்
இரவில் சில பறவைகள்
கூரையில் வந்தமர்ந்து செல்லுமாயின்
நான் தருகிற வாடகைக்கு
கணக்கு சரியாக
இருக்கும்

5

இருபது வருடங்களுக்குப் பிறகு
நண்பனை
சந்தித்தேன்
ஹலோ என்றேன்
ஹலோ என்றான்
அடையாளம் தெரியாமல்
நகர்ந்தான்
அடையாளம் தெரியாமல் நகர்வது எவ்வளவு சுகமாயிருக்கிறது ?
நகர்ந்தவன் பின் திரும்பி
உங்கள் குரலை எங்கோ
கேட்டிருக்கிறேன்
என்றான்
உலகில் ஏழுபேரின் குரல்கள்
ஒன்று போலவே இருக்கும்
என பதில் கூறி
திரும்பிவிட்டேன்
எடுத்துக்கொண்ட சுகத்தை
திருப்பித் தரும்
மனம் இல்லாமல்

6

சித்ரா பௌர்ணமியை என்னதான்
செய்து விட முடியும் ?
1
வாழ்வென்பது போர்
என்பதை அறிந்த வினாடியில்
ஆயுதங்கள் அனைத்தையும்
கீழே போட்டேன்
ஏனெனில் இந்த போருக்கு
தனியாக
சென்றாக வேண்டும்
ஆயுதங்களோடு அல்ல
2
அகந்தைதான்
அனைத்து ஆயுதங்களாகவும்
இருந்தது
3
நீயெடுக்கும்
அனைத்து ஆயுதங்களும்
என்னிடமும்
இருந்தவைதான்
4
ஆயுதங்களை
கீழே போடுவதற்கு முன்னர் ஒரு
நானிருந்தான்
அவன்
அகந்தையின்
நான்
ஆயுதங்களை கைவிட்ட பிறகு
ஒரு நானிருக்கிறான்
அவன் தன்னுடைய
நான்
5
ஆயுதம் பிரயோகிக்கத் தெரியாதவனுக்கு
ஆயுதக் கவர்ச்சி
அதிகம்
6
ஆயுதங்கள் ஒருபோதும்
அடுத்தவனைக் கொல்வதில்லை
7
கத்தியிருக்கிறது என்று
நினைத்துக் கொண்டிருப்பது வரையில்
கத்தி இருக்கும்
நீ இருப்பதில்லை
8
ஒருவரையும் நீ ஒன்றுமே
செய்ய முடியாது
9
அகந்தையால் செய்வதெல்லாம்
பாவமாக பின் வந்து நிற்கும்
கதறியழுதாலும் கரையாமல்
10
சூதில் பெற்ற வெற்றி எதிராளிக்கு
எல்லா காலத்திலும்
பகவானைப்
பரிசாகத் தந்து விடுகிறது
11
சூது அகந்தையின்
விஷ மலர்
பழிவாங்கல்
விஷமுலை சுரப்பி
12
விஷமுலை சுரக்கத் தொடங்கும் பெண்
பேயுரு பெறுகிறாள்
13
பால்சுரக்கும் முலை பகவானுடையது என்றால்
விடம் சுரந்த முலை
சுரந்த இடத்திற்கே சொந்தம்
14
அனாதை ஆனபின்னரே
வாழ்க்கை தொடங்கும்
15
எவ்வளவு அகந்தையை தேற்றியெடுத்து
இடுப்பில்
கொண்டு நடந்தாலும்
சித்ரா பௌர்ணமியை
என்னதான்
செய்து விட முடியும் ?
16
அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு
ஓடி வருகிறானே
என்று பதறி விடாதீர்கள்
வழி விடுங்கள்
தன்னைக் கொல்வதற்கு
சென்று கொண்டிருக்கிறான்
அவன்
17
நியாயங்கள் பேசிக் கொண்டிருக்கும்
வரையில்
நியாயங்கள்
கிடைப்பதில்லை
18
அகந்தையை தோலுரித்து அகற்ற வேணும்
பகவான்
ஆடையாக
வேண்டுமென்றால்
19
எத்தனை முறை தோற்றதிந்த ஆயுதம் ?
என்பதே
அகந்தைக்கு
பொருள்
20
ஆயுதத்தை வெல்ல முடியுமானால்
அதுவே
வெற்றி
21
அகந்தையின் மீது படுத்துறங்கிப்
புரள்வோனை
அம்புப் படுக்கைக்கு உருட்டி விடுகிறது
பிரபஞ்சம்

###

7

ஆனை நடந்தால் குழந்தையாவேன்
1
எத்தனையோ வாகனங்கள் கடக்கின்றன
சாலை அழுத்தமாக இருக்கிறது
கனரக வாகனம் கடக்கும் போதும்
ஒன்றுமே சொல்லாத
சாலை
கோபத்தில் வந்தவனின்
சிறு விபத்தில்
ஓ ...
வலிக்கிறது
என்கிறது
2
பள்ளிக் குழந்தைகள்
ஊளையிட்டுச் செல்கிற
சுற்றுலா
வாகனம்
குதூகலமடைகிறது
சாலை
3
விடியலில் சாலை வேறு விதம்
பகலில் சாலை வேறு விதம்
சாயுங்கால சாலை வேறு விதம்
நள்ளிரவின் சாலை
இருதயம்
4
நாய் சிறுநீர் கழிப்பதும்
பையன் சிறுநீர் கழிப்பதும்
சுவை ஒன்றுபோலில்லை
என்று சொல்வதும்
சாலை தான்
5
இந்த பஜாரில்
குடல் போலும்
நடுவில்
படுத்திருக்கிறது
நெடுஞ்சாலை
6
கடைகள் அடைத்துவிடுவார்கள்
நான் வீட்டுக்குச் சென்று விடுவேன்
பின்னர் இரவில்
என்ன செய்வீர்கள்
என்றேன் சாலையிடம்
ஆகாயத்துக்குச் சென்று விடுவேன்
என்கிறது சாலை
7
மன நிம்மதியோடு இருக்கும் சாலையை காண
ஒரு நாள் முழுதும் காத்திருக்க வேண்டும்
8
மனிதர்களை இஷ்டத்திற்குப் பிடித்துப் போயிருக்கிறது
இந்த பஜார் சாலைக்கு
9
உறங்குவீர்களா என்றேன்
பகலில் தூங்கி விடுவேன்
இரவில் விழித்திருப்பேன்
என்கிறது சாலை
10
அப்படியானால் நீங்கள் யார் சாலையாரே ...
பஜாரில் உள்ள அத்தனைபேருக்கும்
நானே
வயிறு
11
கோபுர விளக்கொளியில்
கனவு காண்பேன்
ஆனை நடந்தால் குழந்தையாவேன்
ஸ்கூட்டியோட்டிக் செல்லும் யுவதியின்
பின்னிருக்கையில்
ஏறி அமர்வேன்
அதனால்தான் அவள் அத்தனை அழகு ?
ரோட்டோரத்தில்
கடை வைத்திருப்பவன்
நண்பன்
சந்தில்
கடை வைத்திருந்தால்
காதலி

###

8

தாகம் வெறித்து
கர்ப்ப ஸ்திரி
வாங்கி அருந்தும் நன்னாரி
சர்பத்
கோடை மழையாக
உள்ளிருக்கும் குழந்தைமேல்
பெய்கிறது
கண்ணன் வெண்ணைச் சட்டி
நோக்கி
எழுகிறான்

9

சற்றைக்குள் அந்த காட்சி
விலகியது
ஓடிச் செல்லும் வாகனம்
பின்னிருக்கையில் தாய்க்கு
உதடு வரையில் வளைந்த மூக்கு
தகப்பன்
வண்டியோட்டிக் கொண்டிருக்கிறான்
நடுவில்
நசிங்கி பிதுங்கும் மகளுக்கு அதே மூக்கு
மீண்டும் வளைந்து
நேராகிவிட்டது
அவள் மூக்கே அவளுக்கு
முதலில் வளைந்து நெளிந்தும்
பின்னர் சரிசெய்யப்பட்டிருந்ததையும்
பார்த்தேன்
ஒரே மூக்குதான்
இருவரிடத்திலுமாக
இருக்கிறது
சற்றைக்குள்
விலகிய காட்சி
மீண்டு
நிலைத்தது

10

மசால் வண்டிக்காரனின் மகள்
"அப்பா வண்டிய மாத்துப்பா" என்ற போது
மகள் பெரியவளாகிவிட்டாள் என்பதை அப்போதுதான்
கவனித்தான் மசால் வண்டிக்காரன்
"நீ தேவைப்பட்டால் வாடகைக் கார் அமர்த்தி
சென்று வா மகளே"
என்கிற பதிலில் அவன் கோபம் கொள்ளவில்லை.
இயல்பாகச் சொன்னான்
அழுக்கடைந்த தனது டி.வி.எஸ்.50
இருபுறமும்
மசால் பாக்கட்டுகள் சுமந்து இந்த நகரத்தின் சந்து பொந்தெல்லாம்
சுற்றித் திரும்பும்,
அழுக்கடைந்தது அதன் புறம் மட்டும்தான்
இன்ஜினுக்கு இருப்பதோ மகளின்
இருதயத் துடிப்பு
பின்னிருக்கையில் இருந்து
"நான் அவனிடம் பேசவில்லை" என்னும் தொனியோடு
காதலனுடன் பேசிக் கொண்டு வந்தவளை
வேண்டுமானால் வண்டியை ஓரமாக நிறுத்துகிறேன்
"பேசி முடித்த பின் செல்லலாம் மகளே"
என்றவன் சொன்னபோது
எங்கோ உள்ளுக்குள் பட்ட அடியின் வலி
அவள்
உணரத் தகாது என்பதுதான் அவன் விருப்பம்
அவளும் உணரவில்லை
நன்று
அப்பாவுக்கு எதுவுமே புரியாது என்பதில்தான் என்னே ஒரு சந்தோசம்
மசால் வண்டிக்காரனின் மகளுக்கு

11

ஆம் என்றொரு பதில் கிடைக்கும்
1
பேண்டழிக்கிற குண்டிதான்
பெண்ணிடம் இருக்கையில்
எத்தனை அழகு?
பாய்ந்தழிக்கிற நஞ்சுதான்
பாம்பின் நாவில்
எத்தனை வசீகரம் ?
2
தெரியாதவற்றை
தெரிந்த அளவிற்கு மட்டுமே பேசுகிறான்
கவிஞன்
3
வயதாகிக் கொண்டேயிருக்கும்
இளங்குமாரன் நான்
4
ஐந்தடி தூரத்தில் அருவி
தினமும் சென்று குளித்துக் கொண்டிருப்பதில்லை
சப்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறான்
சாறு மட்டுமே எடுத்துக் கொள்கிறான்
முழுமையாக அடிமுறை தெரிந்தவன்
யாரையும் அடிப்பதில்லை
5
யாருக்கேனும் பயன்படுகிறீர்களா
என்று கேட்டுப் பாருங்கள்
இல்லை என்று பதில் வரும்
போகட்டும்
உங்களுக்கேனும் பயன்படுகிறீர்களா
என்று கேட்டுப் பாருங்கள்
அதற்கும் இல்லை என்றே பதில் வரும்
யாருக்கேனும் பயன்பட்டுப்பாருங்கள்
உடனடியாக
உங்களுக்கும்
பயன்பட்டுவிடுவீர்கள்
ஆம் என்றொரு பதில் கிடைக்கும்
6
பட்டினி கிடப்பதை விடவும்
சாப்பிடுவதுதான் நல்லது
7
பசிக்கு உணவு
பாபத்திற்கு விஷம்
விஷம் மண்டிக்கிடந்தால்
உணவு கொடுத்து சரிசெய்யலாம்
பாபம் மண்டிகிடந்தால்
விஷமுண்டு
குணப்படுத்தலாம்
8
ஏறுவதற்கானாலும்
இறங்குவதற்கானாலும்
ஒரே ஏணிதான்

###

12

நேரடியாக
மன்னிக்க வாய்ப்பிருக்கும்
எல்லா தீமைகளையும்
நீங்கள் எனக்கு செய்யலாம் பராதியில்லை
வயிற்றில் அடிப்பதானால் பிள்ளைகளுக்கு
பாதகம் ஆகக் கூடாது
எனது குடும்பமும் சேர்ந்து மன்னிக்கும்படிக்கு
நேரக்கூடாது
எனது அப்பா வந்து பதில் பேசக் கூடாது
அம்மா இடம்பெறல் வேண்டாம்
ஆசிரியர்களும் சேர்ந்து அவமதிப்புக்குள்ளாதல்
அவசியம் இல்லை
அப்படியானால்
என்னால் எதுவும் செய்வதற்கில்லை
அவர்களும் சம்பந்தப்பட்டுவிடுகிறார்கள்
மற்றபடிக்கு எந்த தீமையும்
துணிந்து செய்யுங்கள்
ஒன்றுமில்லை
என்பொருட்டு அருள்பவன்
அந்த அருளாளன்
நானல்ல
அப்போது அவன்தான் அருளாளன்
வேறல்ல

13

அயர்ன் பாக்ஸை நோக்கி
விரைந்து வந்த சிற்றெறும்பை
அதனோடு ஒட்டியிருந்த சிறுமியின் நளினம்
கசங்காமல்
எடுத்து
தரையில்
விடுகிறான் மகன்
தன்னைச் சுற்றி சிறிது
தடுமாற்றத்துடன்
கிறங்கிய
சிற்றெறும்பு
மீண்டும்
தன் உலகிற்குள்
நுழைகிறது ,
தன்னுடைய பாய்ச்சலில் இருந்த
சிறுமியின் நளினத்தை
மகனின் கைகளில்
பரிசளித்து விட்டு
காப்பாற்றிவிட்டேன் என்று இங்கோர் கூச்சலும் இல்லை
பரிசளித்து விட்டேன்
என்றோர்
பேச்சும்
இல்லை

14

சொல்லிக் கொள்ளும் படியாக
ஒரு வேலையும் இல்லாமல்
வந்து திரும்புகிறவனிடம்
வேறொரு மொழியில் இந்த நகரம் உரையாடத் தொடங்குகிறது
தனது ஒப்பனைகளில் ஏன் உனக்கு ஆர்வமில்லை என அது
கேட்பதில்லை
ஒளி ஆபரணங்களைப் பூட்டி
அவனை அந்தியில் வழியனுப்பும் போது
என்னைப் பரபரப்பில்லாமல் பார்த்துச் செல்பவனே நீ வாழ்க என வாழ்த்துகிறது
வாழ்த்தொலி கேட்கையில் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டேன்
எனினும் சபையில் கவனிக்கப்படாத பேரரசியை ஒப்ப
எனது முதல்பார்வையில் நகரத்தின் உடல் நடுங்கியதை
நகரமும் பார்த்தது
நானும் பார்த்தேன்




Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"