காது [ சிறுகதை ]

 காது



சங்கர வடிவு மாமி என்னை அழைத்து விட்டிருந்தார்.அவரிடம் என்னுடைய அழைப்பு எண் உள்ளது.ஆனால் அதில் அவர் அழைக்க மாட்டார்.ஏதேனும் ஒரு காரியத்தின் பொருட்டு இரண்டு பேரிடம் சொல்லி அனுப்புவார்.முதல் நபர் தகவலாகச் சொல்வார்.இரண்டாவது நபரிடம் அவர் சொல்லியனுப்பும் விதம் சற்றே கோணலாக இருக்கும்.நாம் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டது போன்ற நொதி சேர்ந்திருக்கும்.அந்த நொதி வந்ததும் என்ன வேலைகள் ஆயினும் கிடக்கட்டும் என போட்டு விட்டு ஓடிச் சென்று பார்ப்பேன்

என்ன மாமி தேடினிய போலிருக்கு ? என்றபடி வண்டியை வாசலின் முன்பாக நிறுத்திவிட்டு வீட்டினுள் காலடி எடுத்து வைத்தேன்.அவருக்கு சற்றே காது கேட்பதில்லை.அப்படித்தான் அனைவரும் சொல்கிறார்கள்.மாமியின் ஒரே மகன் சௌந்தர்யன் உட்பட்.ஆனால் அனைத்து மீஒலிகளும் அவளுக்கு கேட்கும் என்பதே என்னுடைய அனுபவம்.அதனால் நான் அதனை நம்புவதில்லை.அவள் மிகவும் சன்னமாகவே பேசுவாள்.அதில் மூச்சுக் காற்று மட்டும்தான் வரும்.ஒலி வராது.ஆனால் எனக்கு விளங்கும்.அதுபோலவே நானும் அவளிடம் சன்னமாகவே பேசுவது,அதுவும் அவளுக்கு விளங்கும்.

என்ன மக்கா வந்துட்டியா? இங்க வந்து பாரு..என்ன நாடகம் நடத்திருகானுவன்னு..

நா யாருக்கு அப்புடி என்ன பாவஞ் செஞ்ஞேனு இப்புடி பண்ணுதானுவோ

அங்கே ஹோம் தேட்டர் ,பைவ் இன் ஒன் ஒரு மூலைக்கு தூக்கி வீசப்பட்டு கிடந்தது.அதனை நான் தான் கடையில் இருந்து விற்பனைக்கு மாமியிடம் கொண்டு கொடுத்திருந்தேன்.முதலில் சாமிப்பாட்டு கேக்கணும் மக்கா நீ நல்லதுபாத்துக் கொண்டு தா என்று கேட்டிருந்தார்.அதனையும் மேற்படி இருவரும்தான் என்னிடம் வந்து தகவல் சொல்லி பிறகு நான் சென்று பார்த்து எடுத்துக் கொடுத்திருந்தேன்

முன் அறை பரந்து விரிந்த ஹால்.எல்லா ஜன்னல்களையும் அவள் அடைத்துதான் வைத்திருப்பாள். நான் உள்ளே நுழைந்ததும் அவற்றில் ஒன்றிரண்டைத் திறப்பேன்.இதுவள துறந்து வச்சா என்ன உங்களுக்கு? என்பேன்.அதற்கு அவள் பதில் பேசுவதில்லை,மாறாக நான் வெளியேறியதும் முதல் வேலையாக மீண்டும் திறக்கப்பட்ட ஜன்னல்களை மூடிக் கொள்வாள்.குஞ்சு பொரித்த கோழி ,குஞ்சுகளை உள்ளிளுத்து இரண்டு ரக்கைகளையும் மூடிக் கொள்வது போல

இரண்டு குமருகள் அவளுக்கு இருந்தார்கள்.பையன் ஒருத்தன்.குமருகளைக் கட்டிகொடுத்துவிட்டாள்.மனித காரியமே இல்லாத உழைப்பு அவளுடையது.தனி உழைப்பால் அதனைச் செய்தாள்.மூன்று குழந்தைகளையும் அவளுக்குக் கொடுத்துவிட்டு பால் எங்கு சென்றான் என்பதே தெரியாது.யாரும் அது குறித்து எதுவும் கவலைப்பட்டதில்லை.அவள் காரியம் அவ்வாறானதாகவே இருந்தது.யாரும் கவலைப் படாத காரியம்.பெரிதாகத் தேடியதில்லை,அவளும் கூடத் தான் தேடியதில்லை.

திரும்பி அவன் வரவும் இல்லை.இருக்கிறானா ,இல்லையா என்பதும் யாருக்கும் தெரியாது .அவள் எப்போதுமே அவனுடைய பேச்சை எடுத்ததில்லை.பிறர் எடுப்பார்களேயாயின் அவள் தவிர்த்தாள்.அவர்களை முற்றுப்படுத்திக் கொண்டாள்.

கடைசியில் பையன்.அவன் தான் இந்த வீட்டை அவளுக்கு அமைத்துத் தந்தவன்.இன்று ஊருக்குள் உள்ள வீடுகளிலேயே பெரிய வீடு இந்த வீடுதான்.ஏளனம் செய்தவர்களுக்கு மத்தியில் அவள் கம்பீரமாக வாழவேண்டும் என்கிற வைராக்கியத்தின் பொருட்டு அமைக்கப்பட்டது.பையன் சௌந்தர்யன் சென்னையில் பெரிய கட்டிட மேஸ்திரி.ஊருக்கு வருவதில்லை.வருடத்தின் ஒரு நாள் கோயில்கொடைக்கு வந்து அன்னதானம் செய்வான்,சென்றுவிடுவான்.சிலசமயங்களில் மட்டும் தன்னுடைய மகனை அவன் உடன் அழைத்து வருவதுண்டு,மருமகள் யார் என்பதை சங்கரவடிவு இதுவரையில் அறிந்ததில்லை.அதை அவனிடம் அவள் கேட்டதும் இல்லை.கேட்கத் தோன்றியது கூட இல்லை

எல்லாவசதிகளும் கொண்ட வீடு அது.ஆனால் எந்த வசதிகளுமே பின்பற்றபடுவதில்லை.யாருக்கும் பயனற்ற வசதிகள்.எல்லா அறைகளிலும் தண்ணீர் வசதியும் வென்னீர் வசதியும் இருந்தது.பல அறைகளுக்கு சங்கரவடிவு செல்வது கூட கிடையாது.பால் காய்த்துக் குடியேறிய அன்று முதல் நாள் அவள் அனைத்து அறைகளையும் சென்று பார்த்ததோடு சரி.பின்னர் ஒரு அறைகளுக்கும் போவதில்லை.பெருமழை பெய்து ஓயும் தருணங்களில் ஈரம் கசிந்துள்ளதா என காண்பதற்காக அறைகளை உள்ளே நுழையாமல் வெளியிலிருந்து உற்றுப் பார்ப்பாள் பின்னர் ,பின்னகர்ந்து விடுவாள்

இவையெல்லாம் நமக்கெதுக்கு ? தேவையில்லாம கள்ளன் பயம் தான் வருகு ..அவள் நாவில் சதா முந்துகிற வாக்கியங்களில் ஒன்று இது.

மாமி வெறுஞ்சொல்லுக்கு இப்படி சொல்லுதிய ...
ஆனா அவன் கட்டித் தந்தது நல்லாதானே இருக்கு ? நான் கேட்பதுண்டு.அதற்கு அவள் பதில் சொல்வதில்லை.உண்டென்றும் சொல்வதில்லை.இல்லையென்றும் மறுப்பதில்லை.ஆனால் அவளுடைய பழைய விடிலியை அப்படியே வைத்திருக்கிறாள்.விடிலி என்பது பனை ஓலைகளால் நெய்யபட்டு கூரை போல அமைத்துக் கொள்வது.அது அவளுடைய வீட்டின் கிழக்குப் பக்கமாக பத்துப் பதினைந்து தென்னைகள் கொண்ட விளையில் அமைத்திருந்தாள்.அந்த விளையும் அவளுடைய்துதான்.அந்த விளை அவளுக்கு பூர்வீகமாக வந்து சேர்ந்திருந்தது.அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில்,அதனை அவளிடமிருந்து பறித்து எடுக்க விலைக்குக் கேளாதவர்களே ஊரில் கிடையாது.சற்று மினுமினுப்பு கூடியவர்கள் சாதுர்யமாக கேட்டார்கள் என்றால் ஏழைகள் தவணையில் கேட்டார்கள்.வடிவூ ... என்ன வேணும்னாலும் கேளுடே பட்டினியா மட்டும் கிடந்துராத ... என்று கேட்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அந்த விளை மீது கண்கொண்டிருக்கிறார்கள் என்பது அவளுக்கு விளங்கி விடும்.பிறகு அந்தப்பக்கம் தலைகாட்டி நிற்பதில்லை

தொடர்ந்து விளையை பரமாரித்து அழகுபடுத்துகிறாள்.செவ்வனே வைத்திருக்கிறாள். ஊரில் உள்ள தென்னைகளிலேயே ,கர்ப்பிணியின் தனம் போல தொங்கும் தென்னைகள் அவள் விளையில் மட்டுமே உண்டு.விடியற்காலை துலங்கியதும் அங்கே சென்று படுத்துக் கொள்வாள்.மதியம் வரை அவளை யாருமே எழுப்ப இயலாது.புதிய வீட்டில் அவளுக்கு தூக்கம் ஒட்டுவதில்லை.மதியதிற்கு மேல் மீண்டும் புது வீட்டுக்குள் செல்வாள்.புதுவீட்டிலும் ஏகதேசம் இந்த விடிலியினை ஒத்த புளங்கும் தளம் செய்து வைத்திருந்தாள்.அவளுடைய சமையல் வேலைகள் ,பிற வேலைகள் எல்லாம் அங்கே தான்.வீட்டினுள் அவள் மிரண்டிருந்தாள்

தனிமைப்படுபவர்களை கிராமம் வேகமாக தனிமைப்படுத்துகிறது.கண்காணிக்கிறது.தனிமைப்படுத்துதல் ஒருவகையான தீவிரமான கண்காணிப்பு தான்.தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மீண்டெழுந்து மேலேறி வந்தாலும் தீவிரமான கண்காணிப்பை கிராமம் நிறுத்துவதில்லை.கண்காணிப்பிற்குள்ளாபவர் களாலும் மேலேறி முந்தையை நிலைக்கு செல்ல முடிவதில்லை.கிராமத்து சக உரையாடல்களில் மெல்லிய கேலியை பரஸ்பரம் தூவுவார்கள் .உள்வைத்து ஒலிப்பார்கள்.சங்கர வடிவு அல்லாடித் திணறி இவற்றை எதிர்கொள்வதற்கான சுயமுறை ஒன்றை பயின்று வைத்திருந்தாள்.எதிர்வினை போல தொனிக்கும்,ஆனால் கொடுக்காது.அதேசமயம் தளராத ஒரு முறை.

நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அவள் எல்லோருக்கும் தேவைப்பட்டாள்.அவள் இல்லாவிட்டால் சடங்குகள்,கோயில் கொடைகள் ,சிறப்புகள் எதையுமே செய்ய இயலாது.ஊரில் ரைஸ்மில் கிடையாது.கைக்குத்தலில் அரிசியை குத்தி பக்குவமாக்க வேண்டும்.ரைஸ்மில் வந்த பிறகும் ஊர்க்கோயில்களில் நெடுங்காலம் கைக்குத்தல் அரிசியே.சமூகம் புதியவற்றுக்கு மாறினாலும் கூட,சாமிகள் அதற்குப்பிறகும் மாற்றத்துக்குள் நகர அதிக காலம் எடுத்துக் கொள்கிறார்கள்.எப்படியிருந்தாலும் கைகுத்தல் போல வருமா? வருமா ? என்று ஒவ்வொருவரும் சாமியின் மனம் பேசினார்கள்.இப்படி நெடுங்காலம் சாமிப்பேச்சு பேசி ரைஸ்மில் அரிசியை புத்தரிசியோடு சேர்த்துப் படைத்தார்கள்.

எல்லா விஷேசங்களுக்கும் சங்கர வடிவு தேவைப்பட்டாள்,அவள் இல்லாத குறை விஷேசங்களில் வெட்ட வெளி என உணரப்படும்.ஒருமுறை நடராஜன் வீட்டு விஷேசத்தின் போது என்ன நினைத்தாளோ தெரியவில்லை,செல்ல வில்லை.கால் வாசி வேலைகள் முடியவில்லை. நடராஜன் முக்கால்வாசி முடிந்திருக்க வேண்டிய நேரத்தில் அவள் இல்லை என்பதை கவனித்து அலறிப் புடைக்க தேடிச் சென்றார்.அவளை சத்தமிட்டார்.

எல்லாமே பாக்கிக் கிடக்கு,ஒண்ணுமே நடக்கல்ல..இப்படி ஆக்கிபுட்டிய நீ

யாரும் ஒண்ணுஞ்செல்லலயே

எதுக்கு உனக்கு சொல்லணும் ,இங்க எல்லாரு வீடும் ஓங் வீடுதான அக்கா

உனக்கு தனியா சொல்லணுமோ? சொல்லுவாவளா ?ஆரு மறந்தாலும் நீ வந்து நிக்காண்டாமா ? எல்லாம் கெடுத்துபுடப் பாத்தியே ..

எனக் கூறி அவளை அழைத்துச் சென்றார்.யாராச்சும் கூப்பிடனுன்னு இருந்திருக்கா கிறுக்கி.அவ வீடு,அவ ஊரு வந்து நிக்காண்டாமா ? என அனைவர் முன்னிலையிலும் அவர் கூற அனைவரும் சிரித்தார்கள்

அவ தன் மானம் உள்ளவால்லா என்றான் தங்க நாடான்

எல்லாம் நிறைவேறி மணமகன் வீட்டுக்காரர்கள் கிளம்பிய பிறகு மூன்று குழந்தைகளுக்கும் என்று அடுக்களையில் சோறு எடுத்துக் கொண்டிருந்த போது,நடராஜன் தன்னுடைய மனைவியிடம்

பாத்துகிடுங்கட்டி பரட்டையள்வளா,
எல்லாங்கூட்டி அள்ளிட்டுப் போயிருவா அறுதாலி ,ஒண்ணும் இருக்காது
என்று மெல்லச் சொல்வது தெளிவாக அவள் காதில் கேட்டது.அடுத்து உடனடியாக அடுக்களைக்கு வந்த நட ராஜன் ,சங்கர வடிவுக்கா உனக்கு எது வேணும்னாலும் எடுத்துக்க ,பிறகு குறையொண்ணும் தோணப்பிடாது என்று சொன்னார்.அவளுக்கு காது கேளாக்காது என்பதால் இதனை ஓங்கிச் சொன்னார்

ஒண்ணும் எனக்கு கேட்கும் காதுக்கும்,ஒண்ணும் கேளாகாதுக்கும் இரண்டு பங்கா எடுத்துகிடுதேங்
என்றாள் சங்கர வடிவு.என்றாலும் முதலில் அவர் மனைவியிடம் சொன்னது ஓர்ம குரலா இருக்குமோ ? என்று ஆவளுக்குத் தோன்றியது.அப்படி சொல்லியிருக்கமாட்டார்களோ ?

இரண்டு காதுகளாலும் அவளுக்கு நிறைய ஆதாயங்கள்.அதுபோல தொல்லைகளும் உண்டு.அவளுக்கு யாரிடமும் பராதிகள் இல்லை.அவள் பற்றிய முணுமுணுப்புகளை ,எதிர்மறைகளை ஒரு காது கேட்டது என்றால் அது கேளாகாது.நல்லவற்றைக் கேட்பது கேட்கும் காது மற்றொன்று.ஊரையே இரண்டு காதாலும் இரண்டாகப் பிரித்து வைத்திருந்தாள்.அவ்ளுக்கு ஊர் என்பதே இரண்டு காதுகளால் ஆனது.ஒவ்வொரு நபரையும் கூட இரண்டாகப் பிரித்திருந்தாள்.கேட்கும் காதால் நெருங்குபவர்கள்,கேளாக்காதால் நெருங்குபவர்கள்.

பெண் பிள்ளைகள் உணரும் பிராயத்திற்கு வளர்ந்த பிறகு
இதெல்லாம் வேண்டாம் பாத்துக்க ,வெளிச்சோறு எடுத்திட்டு வான்னு இங்க யாரு சொல்லுகா ?
இங்க யாரும் வச்சி திங்கமா என்ன ?
நாய்க்கும் மறுவீட்டு மாட்டுக்குங் தாம்போவு
என்றார்கள்.
தம்பிக்கு அக்கா மார் சொல்வதுதான் சரி என்று படும். அம்மா வெளியில் என்கோ அவமானப்படுகிறாள் என்பது மட்டும் புரிந்தது

அது இல்லட்டி.
உங்கள்வளுக்கு விளங்காது.நீங்க சீமக்காரியல்ல்லா ஆயிட்டிடு வாறிய..
அந்த மனுஷன் ஆகாயத்துல நின்னு வழி நடத்துகதாக்கும் இதெல்லாம்.
அதம்படி நடக்கேன்.அது வேணாங்க எதூம் நாங் செய்யேல

அந்த மனுஷன் போட்டுட்டு போகச்சில தறிக்குண்டுக்குள்ளயாக்கும் கிடந்தேன்.தற்க்கூண்டுக்குள்ளயே கிடந்தா சுகமாத்தான் இருக்கும்.ஆனா வெளியில வெயிலடிக்கும்னு கூட் தெரியாம போய்டும்.கேக்காது கேக்காதுங்கியளே அந்த காத்துல வந்து பேசுவாரு மனுஷன்.தறிக்குண்டுக்க இருந்து வெளியேறுட்டினு எத்தனை நாளு எங்கிட்ட செறுமியிருப்பார் அறிவியளா ?குண்டுக்குள்ள கிடந்தீன்னா புள்ளையளும் குண்டுக்குள்ள போயிரூம்பார்

முதல்ல கோயில்ல போயி நெல்லு குத்து,
இப்படி குண்டுக்குள்ள கிடக்காத,சாமி உனக்கு வழி காட்டும் எண்ணு சென்னது அவருதாம்ட்டி,நம்பிவியளாக்கும் என்றாள் சங்கர வடிவு.அப்படித்தான நான் இந்த குண்டுக்குள்ள இருந்து வெளிய துள்ளுனது ?

கோயிலுக்கு நெல்லு குத்த போனெங்.பிறகுதாங் பள்ளக்குடிக்கு நெல்லுகொண்டு போனது.நெல்ல வாங்கி அவிச்சி குத்தி தலசெமடா எடுத்துட்டுப் போவேன்.பள்ளத்துகாரன் காவல் கிடந்து வாங்குவாங்.சம்பா,ஐயார் எட்டு,பொன்னி.இப்போ வளந்து நிக்கியளே ,உங்க மேல அடிக்குதே வாசம் எல்லாம் கோயிலுக்கு முதல்ல போய் குத்துனப்போ வந்த நெல்லு வாசம்தாங்.சம்பான்னா இப்ப உள்ள சோனி சம்பா இல்ல,புடச்சி எடுத்த ரத்தம் போல இருக்கும் கோதம்பு சம்பா

சங்கர வடிவின் சிறுபிராயம் முழுக்க முழுக்க தறிக்குண்டுதான்.குழந்தையில் ஒரு நாள் அதற்குள் தெரியாமல் விளையாடிக் கொண்டேயிருக்கும் போது தவறி தறிக்குண்டுக்குள் விழுந்து விட்டது போலிருந்தது.பின்னர் இருபது வருடங்களை முழுவதுமாக தறிகுண்டு எடுத்துக் கொண்டது.தறிகுண்டு இருளால் படைக்கப்பட்டது.ஆனால் குண்டுக்குள் இருப்பவர்களுக்கெல்லாம் நன்றாக கண் தெரியக் கூடிய இருள் அது.வெளியில் வந்தால் கண் தெரியாது.தறிகட்டைகள் அங்கும் இங்கும் ஓடும் ஒலியினூடாகத்தான் அத்தனை கதைகளும்,பேச்சுகளும்.தறியடி கலக்காமல் அவள் கேட்ட சத்தங்கள் பிறிது இல்லை.

அப்படி நிறைய தறிகுண்டுகள் ஊரில் இருந்தன.ஒரு குண்டுக்குள் இரண்டு தறிகள் குறுக்கும் மறுக்குமாக அமைந்திருக்கும்.தெற்கு வடக்காக ஒன்றென்றால் ,கிழக்கு மேற்காக ஒன்று.ஒவ்வொரு குண்டுக்குள்ளும் ஐந்து பெண்கள்.யாரேனும் சப்பிட்டு முடித்தவர்கள் ஒவ்வொருவராக வந்து பிறரை சாப்பிட வழியமைப்பார்கள்.

தறிக்குண்டுகள் பூமிக்கு கீழே தோண்டி எடுக்கப்பட்டு ,அதில் நாட்டுக் கைத்தறிகள் அமைக்கப்பட்டிருக்கும்.தறி ஓட்டும்போது ,ஓட்டுவோர் அமர்ந்திருக்க ,கால்கள் பூமிக்குள் இறங்கிக்கிடக்க தோதாக குழிக்குள் மற்றொரு சிறு குழி.உள்ளே இறங்கினால் வெளியே ஏற முடியாது.ஒரு கருவறையின் அத்தனை இதத்தையும் கொண்டது இந்த தறிக்குழி.ஆனால் ஒருபோதும் வெளியேற முடியாது.ஐந்து பேர் இந்த குழிகளுக்குத் தேவை.சில இடங்களில் ஆண்களும் பெண்களுமாகவும் இந்த குண்டுகளுக்குள் இருப்பார்கள்.தறிக்குண்டுகளுக்குள் தவறும் ஆண்களுக்கு வெளியிலும் ஒரு உலகம் உண்டு.அவர்களுக்கு இருளும் ஒளியும் உண்டு.தறி குண்டுகளுக்குள் விழும் பெண்களுக்கு இருள் மாத்திரமே உண்டு.தறிக்குண்டு ஐந்து பேர் நிரம்பிய ஒற்றை மிருகம்.தறிக்குண்டுக்குள் வசிப்பவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அறிந்துவிடலாம்.புற உலகத்தைப் பார்க்கையில் அவர்கள் சிரிப்பார்கள்.புற உலகத்தோடு சிரிப்பதால் மட்டுமே தொடர்பு பெறுவார்கள்.எதற்கும் ஒரு புன்சிரி

எங்கள் ஊரில் வெயில் விழுவதில்லை.தென்னைகளின் ஊடாக நெளிந்து வரும் நிழல்கள் வெயிலுடன் புழுக்கள் போல நிலத்தில் பதியும்.கால்முட்டுக்கு வளர்ந்து நிற்கும் பசலைகள் மீது வெயில் கறுப்பு பார்டர் போட்ட பட்டு வஸ்திரம் போல விழும். வினோத நிழல் நடனம் அது.இங்குள்ளவர்கள் வானம் திறந்திருக்கும் வெளியூர்களுக்குச் சென்றால் மிரண்டு போவார்கள்.அதனால் கூட்டமாகவே செல்வார்கள்.இருள் இங்கே சாதுவான ஒரு பொருள் .வெயிலென்பது அதன் மேல் அனங்கும் ஒரு நீரோட்டம்.பெரிய நாடார் தறிக்குண்டுகளுக்குள் இருந்து தனது பெண்டுகளை இசக்கியம்மன் பூஜைக்கு தான் வெளியே அழைத்து வருவார்.மூன்று பெண்டுகள்.மூவரின் மேலும் இசக்கியின் பண்ணியார எண்ணை மணம் வீசும்.

வெளி நடமாட்டம் என்பதே ஊரில் சாயுங்காலம் ஆறு மணிவரைக்கும் தான்.சில மாதங்களில் ஆறரை.அதற்குள் இருள் ஊரை மெல்ல நெருங்கி மூடிவிடும்.எட்டி மணிக்கு மேல் ஊர் விழித்திருப்பதில்லை.காலையில் ஐந்து மணிக்கு மேல் ஊர் படுத்துறங்கியதும் கிடையாது

இசக்கியம்மன் கோயில் பூஜைகள் மட்டுமே ஆறு மணிக்கு மேல் இருளுக்குள் சூல் கொள்பவை.பெரிய நாடாரின் பெண்டுகள் தறிக்குண்டின் இருளுக்குள் இருந்து இசக்கியின் இருளுக்குள் அப்போது வருவார்கள்.அவர்களின் ஒரே வெளியிடம் இதுதான்.

###

நான் குனிந்து அந்த ஹோம் தேட்டரை கையில் எடுத்தேன். நாம் நம் கையால் எடுத்துவிற்கும் பொருட்கள் உடைந்து அல்லது பளுதுற்றுக் காண்பது சற்றே வலி தருகிற விஷயம்.அந்த வலி அப்போது இருந்தது.அது விலை அதிகம் உள்ளதும் கூட.இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை.அதன் ஒரு மூலையில் பிரஸ்ஸிங் கிலிப் உடைந்திருந்தது.ஆனால் வேறு பிரச்சனை ஏதும் இல்லை

எவ்வளவு பொறாமையா இருக்கானுவ பாத்தியா மக்கா..இழுத்து எடுத்து எறிஞ்சிருக்கானுவோ ? போட உடமாட்டானுவ மக்கா ...இது இங்க இரஞ்சிட்டு இருக்கும் அவனுவ வெளிய வீட்டச்சுத்தி நின்னு இரஞ்சிட்டு கடக்கானுவ ? சாக போற வயசுல இவளுக்கு பாட்டானு கேக்காங்

நா பாட்டு கேக்கதுக்கு ஆசப்பட்டுதான வாங்கிருக்கேன் மக்கா,
கேக்க உடமாட்டானுவ..சாமியாட்டம் தான்,
அதுல அந்த வெள்ளரி மூக்கி இருக்காளே ...நாலு ஊருன்னாலும் நின்னு தாங்குவா ,வாய்ல உள்ளதையெல்லாம் பேசுகா..

இந்த காது கேக்குவுல்லல்லா மக்கா அதன் கொஞ்சம் சத்தமா வைப்பேன்,இதுவொரு குத்தமா ?

நா எவ்வளவு கஸ்டப்பட்டவா ஏங்கிட்ட இப்படி செய்யலாமா மக்கா?

சரி மாமி.எப்படி இருக்கானுவ பாருங்க ..எப்படி புரிஞ்சுகிறதுன்னே தெரியல.நா இத சரி பண்ணி எடுத்திட்டு வாரேன்.நீங்க யாருகிட்டயும் ஏதும் பேசாண்டாம் என்ன மாமி.

நா எதுக்கு பேசப் போறேன் ?.உனக்கு என் பிள்ளைக்கு தெரியட்டுனு சென்னேன்,வேரோண்ணுமில்ல

இரண்டொரு நாளில் அதனை சரி செய்து கொடுத்துவிட்டேன்.வாரன்டி உடைவுக்குப் பொருந்தாது என்பதால் எழு நூறு ரூபாய் செலவு பிடித்தது.
மக்கா சாமி பாட்டே எவ்வளவு நேரந்தான் ஓடும்.பிடிக்கல மக்கா என்று அடுத்த கோரிக்கையை வைத்தார்.சினிமா பாட்டா கொண்டு வா மக்கா..கிராமத்து வியாபாரம் அடுக்களைப் பணியும் சேர்ந்ததுதானே என்று ஒரு பென்டிரைவ் நிறைய அறுபதுகளின்,எழுபதுகளின் பாடல்கள் நாநூறுக்கும் அதிகமாக பதிவு செய்து கொடுத்தேன்.இத்துடன் மாமியிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் பணி முடிந்தது என்றுதான் நான் நினைத்துக் கொண்டது

இரண்டு நாளில் மீண்டும் முதலாமவர் தேடி வந்தார்.உங்க சங்கர வடிவு மாமி தேடினாவ..அந்த பக்கம் போனே,செல்லிவிட்டாவ.பெட்டில பின்னுக்கும் ஏதோ பிரச்சன தாம் போல .எனக்கு எரிச்சலாக இருந்தது.நினைத்தது போல இரண்டாமவரும் இரண்டு நாளில் வந்தார்.

என்ன ?

உங்கிட்ட வாங்கான்டானுதாம்போ அப்போவே சொன்னேன்.அவளுக்கு உங்கிட்ட தான் வாங்கணும் இருக்கு.இப்போ அங்க நட இங்க நட; எனக்கு வீண் அலைச்சல் .என்றார்

இந்த இரண்டாவது மனிதனுக்கு பதில் சொல்லவே முடியாது என்பது எனக்குத் தெரியும்.

வாரேண்ணு சொல்லு போ என்று அனுப்பினேன்

மறுநாள் காலையில் தூங்கி எழுந்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.கடைக்கு செல்வதற்கு முன்பாக பார்த்துவிட்டு வந்து விடுவோம் என்று மாமியின் வீட்டை நோக்கி ஓடினேன்.வீட்டின் வெளியில் நின்ற நான் அழைக்கவில்லை.பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.நிதானமான ஒலி தான்.முடிந்ததும் பாட்டு நிறுத்தப்பட்டது.மாமி ஆகிரோஷமாகி சுற்றியிருந்த வீட்டுக்காரர்கள் அத்தனைபேரையும் தாக்கத்தொடங்கினாள்.தெறி வசவுகள்.

உங்களுகெல்லாம் இன்னிக்கு வாழ்வு வந்துட்டுலாட்டி செறுக்கி உள்ளையளா ,நா பாட்டு கேக்கப்படாது இல்லட்டி.ஏம்புருசன் கிட்ட நாங்கிடந்தா என்ன மறிஞ்சா உங்களுக்கு என்னட்டி ?

மீண்டும் இரண்டு பாடல்களை ஓடவிட்டாள்.நிறுத்தினாள்.மீண்டும் தெறி வசனங்கள்.எல்லாம் வழக்கம் போல பாலியல் பார்ன் வசனங்கள்.பிறகு அதனை அவள் வெறி கொண்டு எடுத்து சுற்றில் வீசி ஏறிவது கேட்டது.

நான் வீட்டினுள் நுழைந்து மாமி என்றேன்.இது எனக்கு வேண்டாம் மக்கா
என் பைய வந்தா ஏசுவான் மக்கா
தேவடியானு கேவலமா கேப்பாம் மக்கா
கண்டார ஓளின்னு செல்லுவாம் மக்கா
அவ நல்லவந்தான் இல்லங்கல
உங்களுக்கு நல்லவன் மக்கா
எனக்கு இல்ல மக்கா
நீ இத எடுத்துக் கொண்டு போயிரு மக்கா ,
நா உங்கிட்ட இத கேட்டு வாங்கினேன்னு சொல்லிராத மக்கா

கொன்னுபோடுவாம் மக்கா
எவங்கூடல்லாம் தொடுப்புனு ஏயிவாம் மக்கா
அவிய அப்பா கிட்ட செல்லிக் குடுத்துபுடுவாம் மக்கா
அவரு ஓயாம காத்துல வந்து ஏயிவாரு மக்கா
என ஓங்கி கதறி அழத் தொடங்கினாள் மாமி.நான் நெடு நேரம் சமாதானம் செய்தேன்.

நீங்க இப்போ காது மாத்திக் கேக்குதிய மாமி
கேக்குத காது கொண்டு பாட்டு கேக்கப்படாது,
கேளாத காதால பாட்டு கேட்கணும் .
நீங்க மாத்திச் செய்து புட்டிய
அதுதான் பிரச்சன

சரி பெட்டிய நா எடுத்துக் கொண்டுபோறேன்.எப்போ வேணுமோ கேளுங்க தரேன் என்று சொல்லி எடுத்து வந்துவிட்டேன்.

மாமி இதுவரையில் கேட்கவில்லை,ஆள் அனுப்பவும் இல்லை.மூன்று வருடம் ஆகப் போகிறது

[ சுந்தர ராமசாமிக்கு தாள்வைப்பு ]

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"