ஒரே இரவுக்குள் இருப்பது ஒரே இரவல்ல - எட்டு கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்

  எட்டு கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்









1

நேற்றைய நாளுக்குள்
புக விருப்பம் கொண்ட குருவி
நெடுநேரமாக ஜன்னலைத் தட்டிக்கொண்டிருக்கிறது
அலகில் ரத்தம்
உள்ளத்தில் பதற்றம்
நேற்றைய நாள் தானே
வாவென
ஜன்னலைத் திறந்தேன்
கம்பியில் கால்கள் உதைத்து
வேண்டாமெனக் கூறி
திரும்பி இன்றைக்குள்
பறந்தது
இன்று எவ்வளவு
விரிந்தது என பார்த்துக் கொண்டிருக்கிறேன்
விரித்து விரித்து
செல்கிறது
அது

2

விபத்தில் மண்டை நைய்ந்து
பிழைத்த நபர்
தெருவில் நுழைந்ததும்
புன்னகை
செய்கிறார்
அரவணைப்பு ததும்பும்
புன்னகை
வடு ஆழமாக தெரியும்
அதனை
அப்படியே
எடுத்துக் கொள்ளத்தயங்கி
பதில் புன்னகை செய்கிறார்கள்
பிறர்
ஒரு புன்னகையில் இவ்வளவு பாடங்கள்
இருக்குமானால்
எவரால்தான்
அப்படியே
எடுத்துக்கொள்ள
இயலும்?
ஒருவரிடமிருந்து பிதுக்கி எடுத்த
புன்னகை போலுமல்லவா
இருக்கிறது அது?

3

ஒரே இரவுக்குள்
இருப்பது ஒரே இரவல்ல
9 மணி இரவு
10 மணிக்கு மாறிவிடும்
11 மணி இரவு இரவின் நிசப்த நாதம்
மூண்டது
நள்ளிரவு வேறு இரவு
அதன் பின் வேறு
உங்கள் நாளின் இறுதியாக
ஏடிஎம்மில் பணம் எடுத்துத் திரும்பிய போது
காவலாளிக்கு
சிறு புன்னகையைத் தந்திருக்கலாம்
இரவுக்கு ஒற்றையில்
காவலிருப்பவன் அல்லவா அவன்?
அதிலும் தூக்கம் எட்டாத
காவலாளி எனில்
எத்தனை இரவுகளைக் காண்பவன்
அவன் ?
இரவு இரவாக அடர்ந்துவிரியும் மலரான
ஒரு இரவை !

4

மகள் நடத்துகிற
டியூஷன் முடிந்து பிள்ளைகள்
போய்விட்டார்களா என்று எட்டிப்பார்த்தேன்
அவர்கள் அனைவரும் போன பிறகுதான்
அப்படிப் பார்த்தேன்
போய்விட்டார்கள்
மீண்டும் ஒருமுறை எட்டிப் பார்த்தேன்
அவர்கள்
படித்துக் கொண்டிருக்கிறார்கள்

5

பாய் ஒருவர்
தன் குழந்தையின் படத்தைப் பதிவிட்டார்
அவருடைய குழந்தைதான்
அதனால் குழந்தை முஸ்லீமாக இல்லை
பாதிரியார் பதிவிட்ட குழந்தையும்
குழந்தையாகத்தான் இருந்தது
கிறிஸ்டீனாக இல்லை
இந்து ஒருவர் குழந்தைப் படம் போட்டார்
அதுவும் இந்துவாக இல்லை
குழந்தையாகவே இருந்தது
பாய் தன் படத்தைப் போட்டார்
இஸ்லாமியராக இருந்தார்
கிறிஸ்தவர் தன் படத்தைப் போட்டார்
கிறிஸ்தவராக இருந்தார்
இந்து இந்துவாக இருக்கிறார்
அவரவர் உலகத்தில்தான்
அவரவரால் இருக்க முடியும் போலிருக்கிறது
குழந்தைகளுக்கு பொதுவாக
வேறொரு மதம் இருக்கிறது போலும்
இன்னும் பெயரிடப்படாத
மதம்

6

நகுலனைப் போலிருந்த
ஒருவரைப் பார்த்தேன்
என்ன நகுலன் சவுக்கியமா ? எனக்
கேட்கலாம் என்றிருந்தது
தயங்கிப் பின்வலித்தேன்
அவர் நகுலன் போலிருப்பதைக் கலைக்க
விரும்பாமல்
அப்படியே இருந்து விட்டுப் போகிறார்
நகுலனைப் போலிருப்பவர்
நகுலனைப் போல அல்லாதவர் எனத் தெரிவதால்
எனக்கென்ன பலன்
அவருக்கென்ன லாபம் ?
நகுலனுக்குத்தான் என்ன சம்பந்தம் ?

###

7

இல்லாத போது வருகிறவன்
1
இல்லாத போது வருகிறவன்
எனது இருப்பையும் இன்மையையும்
ஒருசேர காண்கிறான்
நான் அவனுடைய
இருப்பை மட்டும் காண்கிறேன்
2
பயணம் இவ்வளவு குறுகியது
என்பது தெரிவதற்குள்
பாதி வழி
கடந்து விட்டேன்
3
உப்பளத்தை ஒட்டிய ஊரில்
ஒரு பகல் இருக்கிறது
அந்த பகலை தனியே கடக்கிறான் ஒருவன்
தென்னைகளின் ஊரில் பகல்
நிழல் இருள் தனிமை
தனிமைக்குள் ஒரு பகல்
எப்படியிருந்தால் என்ன
ஆனால் மதிய வெயிலில்
கடற்கரை நாயின் தனிமை
அகோரமாக
உச்சியைப் பிளக்கிறது
4
இருக்கும் போது வந்தவன்
அவன் இருப்பை காண்கிறான்
என்னை எனதிருப்பை காணச் செய்கிறான்
5
உறுதுணைக்கு ஒரு சிட்டுக் குருவியை
எடுத்துச் செல்லுங்கள்
பயணம்
நல்லபடியாக
இருக்கும்

###

8

ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ?
1
சாலையின் மத்தியில் ஆலிலை ஒன்று
சற்றே பழுப்பு சற்றே பச்சை
நிமிர்ந்து நிற்கிறது
அந்த பக்கமாக வாகனம் செல்கையில்
இந்த பக்கமாக சுழன்று
திரும்புகிறது
இந்த பக்கம் வாகனத்திற்கு அந்த பக்கம்
ஒற்றைக்கால் நடனம்
என்ன நினைத்தானோ சிறுவன்
ஊடே புகுந்து
இலையை
ஓரத்திற்கு உயரே
எறிந்தான்
நடனம் இப்போது மேலே
பறக்கிறது.
2
ஒன்பது மகன்களை பெற்ற
அப்பாவின் இளைய மகன்
அப்பாவின் ஒரு கைமட்டும் பறந்து செல்வது போல
வாகனத்தில் விரைகிறான்
அப்போதுதான் கவனித்தேன்
மீதமுள்ளோர்
மீதமுள்ள அவயங்களாயிருப்பதை
ஒன்பது அவயங்கள்
பதினெட்டு கைகள் கால்கள் கண்கள் செவிகள்
ஒரே புருஷன்
3
ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ?
மிச்சம் வைத்த ஆசைகள்
மிச்சம் வைத்த தகிப்புகள்
மீதமிருக்கும் தாகங்கள்
மீதமிருக்கும் வஞ்சம்
உறுப்பு தேடித் கொண்டிருக்கின்றன
ஒவ்வொன்றும்
4
சரியாகவே வாழ்ந்ததாகச் சொல்லி ஒரு பிழை விட்டீர்கள்
அந்த பிழையே நானாக வளர்ந்து பெரிதானது
இந்த பிழையைக் கொண்டு போய் அந்த இடத்தில்
நட்டு வைக்க வேண்டும்
இல்லாமல்
தர்க்கம் பண்ணுவதில்
ஒரு பலனும் இல்லை
5
நீ செய்ததை நீ மட்டுமே
எடுக்க முடியும்
நீ செய்தது சீறுமானால் அதுவும் நீ செய்ததுவே
நீ செய்தது பணியுமானால் அதுவும் நீ செய்ததுவே
6
யாருக்கோ நடப்பவையெல்லாமே
எல்லோருக்குமே நடக்கும்
இன்பமானாலும் சரிதான்
துன்பமானாலும் சரிதான்
எடுத்தகற்ற விரும்பினால்
யாருக்கோ நடக்கையில் எடுத்தகற்றவேண்டும்
இன்பமென்றாலும் சரிதான்
துன்பமென்றாலும் சரிதான்
7
அதர்மம்
காத்திருந்து அழும்
அப்போதும் அதற்கு அது
தனது அதர்மம்
என்பது
விளங்காது
அதனால்தான் அது அதர்மம்
8
என் கையில் எல்லாம் ஒழுகுகிறது
என்னது இது சிவன் கை
பாத்திரமல்லவா ?
என் கையில் ஏன்
இருக்கிறது
9
பிரம்மகத்தி தோஷத்திற்கு பரிகாரம்
ஜீவகாருண்யம்
10
எம தர்மனைப் பார்த்துத் திரும்பியவன்
சொல்கிறான்
எம தர்மனும்
தர்மன்தான் என்பதை

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"