தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 13

சுஜாதா பேரில் எனக்குப் பகையொன்றும் இல்லை








அது போலவே கிளியோ பாட்ரா பேரிலும் எனக்கு விரோதம் கிடையாது.ஒவ்வொரு
காலத்திலும் எவ்வளவோ பிரபலங்கள் பிறக்கிறார்கள்.ஒரு காலத்தில் இருந்து
மறு காலத்திற்குள் நுழைய முடியாத எவ்வளவோ பிரயாசைகள் இருக்கின்றன.அதனால்
அவையெல்லாம் தவறென்றும் இல்லை.கோவி மணிசேகரனும் ,சாண்டில்யனும் ,ராஜேஷ்
குமாரும் புதுமைப்பித்தனைக் காட்டிலும் ,மௌனியைக் காட்டிலும் ,சுந்தர
ராமசாமியைக் காட்டிலும் தலை சிறந்தவர்களாகக் கூட இருக்கலாம்.ஆனால்
இரண்டும் வேறு வேறே .அதுதான் முக்கியமானது.அமிதாப் பச்சன் பிரபலம்தான்
அதனால் ரே க்கு என்ன வந்தது ? ஒரு காலத்தில் மஞ்சு வாரியார் மலையாளத்தில்
பிரபலம் .அதன் பொருட்டு அரவிந்தனுக்கு என்ன ?

பாலகுமாரனின் ஒரு பத்தியின் அளவிற்கு கூட எழுத வக்கற்ற பலர் தமிழின்
தீவிர எழுத்தில் கிடந்தது கத்துவது உண்டு.உண்மை.ஆனால் பாலகுமாரன் அடைய
நினைக்கும் இடத்திற்கும் ,இந்த எழுத முடியாதவன் கொண்டு நடக்கும்
இடத்திற்கும் வேறுபாடு அதிகம். கனவும் ஒன்று அல்ல. ஒரே தரத்திலானதும்
அல்ல.

ஒருமுறை தொண்ணுறுகளில் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு விருதை நிராகரிக்கும்
போது ஜெயமோகன் ஒரு விஷயத்தை வெகுஜனப்படுத்தியிருந்தார்.அந்த விருது கோவி
மணிசேகரனுக்கும் ஜெயமோகனுக்கும் சேர்த்து கொடுக்கப்படவிருந்த விருது.ஒரே
மொழியில் ,ஒரேவிதமான கருவிகளைக் கொண்டுதான் நானும் எழுதுகிறேன்,கோவி
மணிசேகரனும் எழுதுகிறார் என்பதால் நானும் கோவி மணிசேகரனும் ஒன்று அல்ல
என்று கூறி ஜெயமோகன் அந்த விருதை மறுத்தார்.சுஜாதா வெகுஜன எழுத்திற்கு
நல்ல குறியீடு.அதில் பிழையில்லை.அதற்கு எதிரான மனோவிஞ்ஞானத்தையும்
,பயணத்தையும் உள்ளடக்கியது தீவிர எழுத்து.அடைப்படை மனோபாவங்களிலேயே
இரண்டும் வேறுபடக் கூடியது.இதன் ஆசையும் அதன் ஆசையும் ஒன்றல்ல.இதன்
கதியும் ஒன்றல்ல.

வெகுஜன எழுத்தாளர்களில் பலரது உரைநடைகளில் பிழைகள் குறைவு.மௌனிக்கு
உரைநடை வராது.சரிப்படுத்த ஒரு இலக்கியம் தெரிந்தவரின் உதவியும்
தேவைப்படுவது அந்த எழுத்து.தீவிர எழுத்தாளர்களின் பலருக்கு வாக்கிய
அமைப்புகளை உருவாக்குவதில் ஏராளமான சிக்கல்கள் .சந்திப் பிழைகளையும்
,எழுத்துப் பிழைகளையும் சரியாக பிரயோகிக்கத் தெரிந்த தமிழ் எழுத்தாளர்கள்
கூட குறைவுதான்.ஒருமை பன்மை பிழைகளை வாழ்நாளில் வென்றெடுக்கத் தெரிந்த
தமிழ் எழுத்தாளர்கள் கூட குறைவுதான்.பிழை திருத்துனர்களுக்கே கற்றுத்
தருமளவிற்கு வித்தை தெரிந்தவர்கள் வெகுஜன எழுத்தாளர்கள்.வித்தகர்கள்
எனலாம்.வெகுஜன எழுத்தாளர்களிடம் இருந்து கற்க ஒரு தீவிர எழுத்தாளனுக்கு
எப்போதுமே பல விஷயங்கள் இருக்கும்.இருந்து கொண்டே இருக்கும்.ஆனால் ஒரு
தீவிர எழுத்தாளனிடமிருந்து கற்க ஒரு வெகுஜன எழுத்தாளனுக்கு எப்போதுமே
எதுவுமே இராது.இதுவும் முக்கியமானதொரு வேறுபாடே .ஆனால் இவன் என்ன
சொல்கிறான் என்பது குறித்த அங்கீகார பயம் மட்டுமே இருந்து
கொண்டிருக்கும்.என்னைப் பற்றி ராகுல்காந்தி என்ன நினைக்கிறார் என்பது
பற்றி எனக்கு ஒருபொருட்டும் கிடையாது.ஆனால் தன்னைப் பற்றி அருந்ததி ராய்
என்ன நினைக்கிறார் என்பது ராகுல் காந்திக்கு மட்டுமல்ல.ஷோபா டேக்கும்
பொருட்டாக இருக்கலாம்.

வைக்கம் முகம்மது பஷீரும் ,சுஜாதாவும் உண்ட உணவு கூட ஏதோ ஒரு வகையில்
இந்திய தென்னிந்திய வகைபட்டதுதான் என்று முடிவு செய்யப்பட இயலலாம்.ஆனால்
இருவரையும் ஒன்றென ஒருபோதும் முடிவு செய்ய இயலாது.ஒன்று ஏற்கனவே இருந்த
அகம் உடைந்ததிலிருந்து கட்டியெழும்பியது .அது பெயரிடப்படாத கூட்டான்
சோறேயாயினும் கூட .மற்றொன்று ஏற்கனவே இருந்த அகத்திலிருந்து எழுகிற
பழஞ்சோறு.

நா.பார்த்தசாரதியின் கால்களின் பளபளப்பின் நளினம் கண்டு வியந்த ஒரு பெண்
எழுத்தாளரை பற்றி சுந்தர ராமசாமி ஒருமுறை பேசும் போது அவர் சொல்லிய
விதத்திலிருந்து அந்த கால்கள் எப்படியிருந்திருக்கும் என்ற யூகத்தை சில
நிமிடங்கள் வர்ணித்துக் கொண்டிருந்தார்.நா .பா அவருடைய நண்பரும்
கூடத்தான்.ஆனால் நா.பாவின் கால்களுக்கும் நாகராஜனின் கால்களுக்கும்
இடைப்பட்ட வேறுபாட்டை துல்லியமாக அறியும் அவர் கண்கள். படைப்பின் கால்கள்
அறியாத பாதையைத் துலக்குவதை அறிதலாகக் கொண்டவை என்பதை நா.பா வின்
பொற்பாதம் அறியுமா ?

சுஜாதாவைச் சென்று சேர உருவானதல்ல இந்த அடியாற்றின் இழுவிசையும் நவீன
இலக்கிய இயக்கமும் .
கால்பாதம் ஒன்றுதான் பாதைகள் வேறு

சமுத்திரம் எவ்வளவு அழகான பெயர் .இந்த பெயரை வைத்துக் கொண்டு ஏன் இவ்வளவு
மோசமாக எழுதுகிறீர்கள் ? என்று சு.சமுத்திரத்தை நோக்கி க.நா.சு ஒருமுறை
கேட்டதும் ,சுஜாதா இப்போது நவீன இலக்கியத்தின் பால் கொண்டாடப்படுவதற்கான
என்னுடைய விசனமும் பொருளில் ஒன்றுதானே தவிர வேறுபட்டவை அல்ல

2

நான் எனது தாத்தாவாக மாறிக் கொண்டிருக்கிறேன்



சமீபமாக ஒருநாள் இந்த சட்டை ஆடைகள் இவற்றையெல்லாம் கழற்றி போட்டு விட்டு வெறும் ஒற்றை வேட்டியும் ஒரு துண்டும் போர்த்திக் கொள்ள போதாதா ? என்று தோன்றியது.கொஞ்சம் கூடுதல் ஆடம்பரமாக அது இருக்கும் மற்றபடி ஒன்றுமில்லை .வேட்டியைப் போல சுகமான ஆடை எனக்கு வேறில்லை.மேலாடை உள்ளாடை இவையெல்லாம் வழியில்லாமல் அணிந்து கொள்கிற வஸ்திரங்கள் தாம்.ஜீன்ஸ் அணிவதில் உள்ள வசதி அதில் பர்ஸ் வைத்துக் கொள்ளலாம்.அலைபேசியை சொருகிக் கொள்ளலாம் ,காய்கறிகள் வாங்குவதற்கு பை எடுத்துச் செல்ல வில்லையெனில் சமாளிக்கலாம்.இத்யாதி வசதிகள் .நம்முடைய சீதோஷ்ண நிலைக்கு உடுப்பு போட்டுக் கொள்வது சுகமின்மையே.
நான் தோன்றுபடி மாறிக் கொண்டேயிருப்பவன்.எவன் ஒருவன் தொடர்ந்து மாறுகிறானோ அவனிடம் மட்டுமே நாம் மாற்றம் குறித்து பேச வேண்டும்,உரையாட வேண்டும்.பொதுவாக நம்மில் தலைமுறை தலைமுறையாக ஒரு மாற்றமும் பெறாதவர்கள் மாற்றங்கள் குறித்து போதனைகள் செய்கிறார்கள்.வாழ்வில் சிந்தனையில் பழக்கத்தில் எதிலும் மாற்றமில்லை ஆனால் வழிமறித்து மாற்றம் பற்றி போதிக்கிறார்கள்.வாழ்வை உன்னால் மாற்ற முடியவில்லையெனில் எதனை நீ மாற்றுவாய் ? ஆணோ பெண்ணோ மாறிக் கொண்டிரு,மாறுவதில் எவ்வளவு கடினமும் வலியும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்பது விளங்கும் .யாராக இருந்தாலும் நான் வாழ்வையும் சேர்த்தே பார்க்கிறேன்.
சுந்தர ராமசாமி தேங்கியவர் அல்ல.ஜெயமோகன் ஓடும் காட்டாற்றின் மாற்றம்.பெருந்தேவி துணிகிறார்.அவர் சாரதா அன்னையாகக் கூட மாறிவிடக் கூடும். லீனா மணிமேகலை வேறொரு பெண்ணையிங்கே இங்கே முன்வைக்க முயல்கிறார்.அதற்கு என்னவெல்லாமோ செய்கிறார்.அவர் பேரிலுள்ள மதிப்பிற்கு அது முக்கியமான காரணம்.விக்ரமாதித்யன் ஏழாள் மாடன் . ஒராளாக இருப்பதற்கே விழி பிதுங்கி விடும் .ஒருவன் நம் முன்பாகவே எழாளாக உலாவிக் கொண்டிருக்கிறான்.புராண பாத்திரம் போல.உள்ளூர் தெய்வம் போல .
எனக்கு என்னுடைய தாத்தாவாக மாறுவதிலேயே விருப்பம்.அது வர வர தெளிவாக புரிகிறது.அப்பாவாக மாறுவதில் எனக்கு சுவாரஸ்யம் இல்லை.அவர் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் பலருக்கு கலைகளில் விருப்பம் இருக்காது.விருப்பம் இல்லாதது குறையில்லை மிதமிஞ்சிய வெறுப்பிருக்கும்.தி.க.தி.மு.க தலைமுறை அது.அவர்களுக்கு அரசியல் ஆர்வமே பிரதானமாயிருக்கும்.பிறவற்றுக்கு அர்த்தம் விளங்காது.அறத்தின் பொருளும் அவர்களுக்கு விளங்குவதில்லை. பலர் இளவயதில் அப்பாவை கடுமையாக எதிர்த்து பின்னர் அப்பாவாக மாறிக் கொண்டிருப்பார்கள்.தாத்தாவாக மாறுவது என்பதற்கு ஆடைகளை மாற்றிக் கொள்ளுதல் என்கிற சிற்றர்த்தம் இல்லை.
அப்பையா விவசாயி.வாழ்வின் பெரும்பகுதியை விவசாயத்தில் கரைத்தவர்.ஒருபோதும் அவர் சட்டையணிந்ததில்லை.இந்திரா காந்தி நாகர்கோயிலுக்கு வருகை புரிந்த போது எங்களையும் அவர் ஒரு சந்தர்ப்பம் காரணமாக அழைத்து செல்ல வேண்டியிருந்தது.அப்போது அவர் சட்டையணிந்து வந்தார் என்று நினைக்கிறேன்.மற்றபடி புகைப்படம் எடுப்பதற்காக குடும்ப விஷேட தினங்களில் சட்டையணியச் சொல்வார்கள்.எடுப்பார்கள் எடுத்ததும் கழற்றி வைத்து விடுவார்.அவருக்கு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக சில சட்டைகள் இருந்தன.வேட்டி ,ஒரு துண்டு அதனை அவர் தலைமுண்டு என்று சொல்வார் இவைதாம்.ஒரு நீளமான குடை உண்டு வெளியில் செல்வதற்கு.பின்னால் ஒரு சிறிய கொண்டை அவருக்கு உண்டு.இப்போது பேஷனாக சில பையன்கள் வைத்துக் கொள்கிறார்களே அது போல
என்றேனும் ஒருநாள் இந்த உடுப்புகளை கீழே போட்டு விடுவேன்.வெளியில் அவற்றை கைவிடுவதற்கு முன்பாக உள்ளத்தில் அவற்றைக் கைவிட வேண்டும் .விட்டால் இரண்டிலும் சரிந்து விழுந்து விடும்

3


சந்நியாசமும் ,துறவும் பெருமரபு.





சந்நியாசமும்,துறவும் தேவைதானா என்பது வேறு பிரச்சனை.எல்லா விஷயங்களையும் லௌகீகத்தின் கண்கொண்டு மட்டுமே பார்க்க வேண்டும் என்றெல்லாம் விதிக்க முடியாது. அதுபோல இல்லறத்தைத் துறந்துதான் சந்நியாசம் மேற்கொள்ள முடியும் என்பதும் இல்லை.இல்லறத்தில் பொறுப்பேற்காத துறவு அது ஒரு பழமை வாய்ந்த முறை. மட்டுமல்லாமல் தற்போது யோகா ஆசிரமங்கள் என்கிற பெயரில் நடப்பவையெல்லாமே மனிதனின் ஆன்மிகம் மட்டுமே தொடர்பானவை என்றும் சொல்வதற்கில்லை.வைகுண்டசாமி போன்ற இந்துமத அவதார புருஷர்கள் இல்லறமல்லாது நல்லறமில்லை என்றுதான் போதித்திருக்கிறார்கள் .வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி வாழ்க்கையில் நின்று கருமங்களை செய்து மேம்படவே போதிக்கிறார் .எனினும் துறவும் ,சந்நியாசமும் ஒருவரின் தனிப்பட்ட தேர்வாக அமைவதை கேள்வி கேட்க இயலாது.
அமைப்பாக மாறுகிற எல்லாவிஷயங்களிலும் பல இடர்பாடுகள் உண்டு.எல்லா அமைப்புகளுக்கும் பொதுவானவைதான் அவை.மார்க்சின் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்ட ஒரு மடத்திற்கு எத்தகைய இடர்பாடுகளிலெல்லாம் உண்டோ அவை அத்தனையும் ஆன்மீக ,மனித மனவள அமைப்புகளுக்கும் உண்டு.அதை வைத்து காரியம் தவறு என்றெல்லாம் சாதிக்க முடியாது.துறவும் ,சந்நியாசமும் வெறுமனே மதமும் , சாதியையும் சார்ந்த விஷயங்கள் இல்லை.உலகளாவிய அளவில் அவற்றுக்கென முக்கியத்துவங்கள் உள்ளன .அவர்கள் மனித போதத்தை வளப்படுத்துகிறார்கள் நேரடியாகவும் , மறைமுகமாகவும் என்பதை மறுக்கவே முடியாது.
இதில் இந்துமத சார்பு கொண்ட துறவு முறைகளே இப்போது,தாக்குதலுக்கும் ,கேவலத்திற்கும் உட்படுத்தப் படுகிறது.இது நோக்கம் கருதி நடைபெறும் செயல் .துறவை கேள்வி கேட்பவர்கள் கிறிஸ்தவ ,பௌத்த ,சமண மற்றும் பல்வேறு விதமான துறவுகளை கேள்வி கேட்பவர்கள் இல்லை.தனிப்பட்ட முறையில் எனக்கு துறவுக்கான நிறுவன கோலங்களில் நம்பிக்கையோ,ஏற்போ இல்லை.அதைக் கொண்டு ஒருபோதும் அவை அவசியமற்றவை,சாரமற்றவை என்றெல்லாம் சொல்லவே மாட்டேன். கலையிலக்கியத்தைப் போலவே மனிதனை வளப்படுத்தும் பகுதிகள் அவற்றில் உண்டு.
பொறுப்பேற்காத சந்நியாசத்தைக் காந்தியும் குறை கூறியிருக்கிறார்.துறவில் பொறுப்பு வேண்டுமா வேண்டாமா என்பது விவாதம் .அது தொடரும் . ஜே.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி ,பௌத்த மடாலயங்கள் வரையில் நவீன சந்நியாசிகள் இருக்கிறார்கள்.அதனைத் தடைசெய்ய இயலாது.இங்கே காதல் திருமணங்களுக்கு ,புத்தக படிப்பிற்கு,கலையிலக்கிய ஈடுபாடுகளுக்கு எவற்றிற்குமே பெற்றோர் சம்மதம் இல்லை என்பதால் அவையெல்லாம் தவறென்று ஆகிவிடுமா?
சந்நியாசம் கேவலமானது என்பது கேவலமான சிந்தனை.அதிலும் இந்து சந்நியாசத்திற்கும் துறவிற்கும் எதிராக தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அது உங்களுக்கு ஒவ்வொமையைத் தருவதால் எல்லோருக்கும் அப்படிதான் இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை.ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்தில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் அந்த குழந்தைகள் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்பதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறார்கள்.டாக்டர் ,இன்ஜினியர் என்று சொன்னால்தான் சமூகத்தில் ஏற்றுக் கொள்வீர்களா ? சந்நியாசிகள் ,துறவிகள் என்றால் ஏற்கமாட்டீர்களா ? என வெளிப்படையாகக் கேட்கிறார்கள்.இந்த கேள்வியைக் கேட்கிற அந்த குழந்தைகள் தொழில்நுட்பத்தில் உயர்கல்வி படித்தவர்கள் என்பதை நாம் உணரவேண்டும்.அவர்கள் ஏதுமேயறியாத,பிரஞைக் குறைவான சிறுபிள்ளைகள் அல்லர். அவர்களின் கேள்விக்கு இன்றைய நிலையில் பதிலில்லை என்பதே உண்மை.நாம்இன்று கொண்டுநடக்கும் லௌகீகத் காய்ச்சல் அவ்வளவிற்கு வீங்கியிருக்கிறது .
அவர்கள் இப்போதுள்ள துறவுக் கொள்கையை எப்போது வேண்டுமாயினும் முடிவுக்கும் கொண்டுவரலாம்.நாளையே கூட அவர்கள் இப்போது கொண்டுள்ள நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.அல்லது தொடரலாம்.வாழ்வில் மிகச் சிறிய விஷயங்கள் கூட தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதுண்டு. கத்தோலிக்க சந்நியாசத்தைப் போன்று இது வாழ்நாள் தண்டனை முறை இல்லை. அந்த குழந்தைகள் பேரில் போதைப்பொருள் குற்றச்சாட்டு போன்ற அவதூறையும்,பழியையும் உங்கள் தனித்த நோக்கங்களுக்காக பரப்பிக் கொண்டிராதீர்கள்.அது நல்லது அல்ல.உங்களுக்கு இந்து மதத்தின் மீது பெரும் பராது இருக்குமாயின் அதனை நிறைவேற்றிக் கொள்ள நிறைய வழிகள் உள்ளன.
ஒரு குருமடத்தை நடத்துபவர் தனது குழந்தைக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கும் ,சந்நியாசத்திற்கும் என்ன சம்பந்தம்?.கடவுள் நம்பிக்கையற்றவர்கள் தங்கள் குழந்தைகளைக் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று இன்று சொல்ல முடியுமா? ஒருவர் கொண்டிருக்கும் கொள்கைகள் நம்பிக்கைகள் குழந்தைகள் மீதும் பலவந்தமாக சவாரி செய்யவேண்டும் எனக் கருதுவது குருரமில்லையா ? நிறைய கொம்யூனிஸட் குழந்தைகள்தான் கார்ப்பரேட்டுகளில் வேலை செய்கிறார்கள்.என்ன செய்வது?
சந்நியாசம் என்பது உலகமெங்கும் இருக்கிறது.இந்தியாவில் அது பெரிய மரபு.உங்கள் தனிப்பட்ட ஒவ்வாமைகள் உலக நியதியாகவெல்லாம் மாறிவிடாது.இந்தியாவில் சந்நியாசத்தின் உள்மன சஞ்சாரமற்ற விஷயங்கள் எதுவுமேயில்லை .அந்த அளவிற்கு ஆழமான தாக்கத்தைக் கொண்ட ஒரு மஹா மறை பொருள் சந்நியாசம்.இன்றும் இந்தியாவிலும் அதன் பிராந்திய மொழிகளிலும் எழுத்தாளர்கள்,கவிகள் ,கலைஞர்கள் ஆகியோர் லௌகீகத்தின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் காரியங்களில் ஈடுபடுவதற்கு உள்ளிருந்து இயங்கும் துறவின் ஆற்றலே காரணம்.
ஒரு ஏழைக்கவி குக்கிராமத்திலிருந்து கொண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும் என் படைப்பின் முன்பாக ஒன்றுமில்லை என லௌகீகத்தின் அனைத்து பாதைகளையும் ஒரு பெறுமதி கூட இல்லாமல் எதிர்த்து நிற்கிறானே அந்த ஆற்றலை அவன் வேறு எங்கிருந்து பெறுகிறான்? சந்நியாசத்தின்,துறவின் பொருள்பொதிந்து நிற்பது அந்த உள்முக வைராக்கியம்.வணிக வெற்றிகளுக்கும்,லௌகீக ஆலாபனைகளுக்கும் இதில் ஒரு தொடர்பும் இல்லை.அவற்றை அவன் எளிமையாகவே புறக்கணித்து விடுவான்.மறைபொருளின் வேலை இது.
செய்ய வேண்டியவற்றைச் செய்துவிட்டு எல்லாவற்றிலிருந்தும் விலகிப் போய்விடவே விரும்புகிறேன் என்பவர்களை நீங்கள் இந்தியாவின் குக்கிராமங்களில் கூட அடிக்கொருதரம் காணமுடியும்.துறவின் தாக்கத்திலிருந்து வருகிற குரல்கள் இவை.மாயம்மை,யோகி ராம்சுரத்குமார் எல்லாம் நமக்கு அணுக்கமான காலத்தில் வாழ்ந்தவர்கள்தாம். ஜே,கே,ஓஷோ உட்பட அந்த மரபை நவீனப்படுத்திய யாருமே வெறுமனே உண்டிபெருத்தலைந்தவர்கள் மட்டும் இல்லை

4

விருதுகளைப் பொறுத்தவரையில் ...







பெறுவதைப் பற்றியோ , தவிர்ப்பதைப் பற்றியோ யாருக்கும் பரிந்துரை செய்ய
இயலாது.அது நிச்சயமாக பெறுபவரின் சுயமரியாதையுடனும் ,வாழ்வியல்
கண்ணோட்டத்துடனும் தொடர்பு கொண்டது.அதே சமயத்தில் பொதுவான மதிப்பீடுகளை
அது புறக்கணிக்காமல் இருப்பதே நல்லது.உதாரணமாக வைரமுத்து விருதை
விக்ரமாதித்யன் பெற்றால் அதில் குறை சொல்ல ஏதுமில்லை.பசிக்கும் குழந்தை
வழிப்பறி செய்து உண்பதற்கு இணையானது அந்த செயல் . முற்றிலுமாக
புறக்கணிப்பிற்குள்ளாகி வருகிற அவருக்கு இதைச் செய்யாதீர்கள் என்று
அறிவுரை சொல்லும் தார்மீகம் இங்கே எவருக்குமே கிடையாது.அதே சமயத்தில்
கல்யாண்ஜி,கலா ப்ரியா போன்றோர் பெறும்போது இவர்களில் ஒரு சாக்கடைத் தன்மை
தோன்றுவதைத் தவிர்க்க இயலாது.ஒருவேளை வைரமுத்து விருதை அசோகமித்திரனோ
,ஞானக்கூத்தனோ பெற்றிருப்பார்களேயாயினும் கூட ஒருகுறையும் ஏற்படாது.இந்த
வேறுபாடு என்ன என்பது பற்றி ஒருவர் அறிந்திருப்பாரேயாயின் அவரே விருது
பெறுவதில் பொறுப்பேற்பவர் ஆகிறார்.இது முதல் விஷயம்.

இரண்டாவதாக அந்த விருது நமது முன்னோர்களில் எவர் எவரையெல்லாம் சென்று
சேர்ந்திருக்கிறது என்பது முக்கியம்.அதையேன் நான் கருத்திற்
கொள்ளவேண்டும் ? என்று பெறுபவர் கேட்பாரேயாயின் நல்லதுதான்.அவருடைய
பின்நவீனத்துவ ஊழலுக்கு நன்றி கூறலாம்.தேவை புணர்ச்சிதான் என்றான பிறகு
நாயுடன் புணர்ந்தாலென்ன ,நரியுடன் புணர்ந்தாலென்ன ? என்று விகடம்
பேசுவதற்கு ஒப்பானதுதான் இந்த பின்விகடமும்.உதாரணமாக சந்ரு மாஸ்டர்
முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிற இடத்தில் சென்று மணிவண்ணனுக்கோ
,நடராஜுக்கோ , அபராஜித்துக்கோ ,ராமச்சந்திரனுக்கோ பெற்றுக் கொள்ளும்
தைரியம் ஏற்பட வேண்டுமாயின் அதற்கு சில சிறப்பு காரணங்கள் இருந்தே ஆக
வேண்டும்.ஆதிமூலம் புறக்கணிக்கப்படுகிற இடத்தில் சென்று அபராஜித் ஒரு
பரிசைப் பெறலாம் அதில் தவறேதும் கிடையாது.ஆனால் சந்ரு புறக்கணிக்கப்
படுகிற இடத்தில் சென்று அவர் கை நீட்டினால் அது பொறுப்பான ஒரு செயல்
இல்லை.இதனையெல்லாம் விலாவாரியாக தர்க்கங்களைக் கொண்டு விளங்க
இயலாது.இருதயம் கொண்டு விளங்கவேண்டும்.ஒரு சம்பவத்தை உங்களுக்கு நினைவு
படுத்துகிறேன்.ராஜமார்த்தாண்டன் விருதென்று
நினைக்கிறேன்.ஷங்கர்ராமசுப்ரமணியனுக்குக் கிடைக்கவிருந்த சமயத்தில் அவர்
மறுத்தார்.மறுப்பிற்கான விபரத்தில் லக்ஷ்மி மணிவண்ணனை முற்றிலுமாக
புறக்கணிக்கிற ஒரு இடத்தில் எனக்கு கைநீட்டி பரிசைப் பெறுவது என்பது
சங்கடத்தைத் தரக்கூடியது என்று தெரிவித்திருந்தார்.அந்த பதில் உண்மையாகவே
எனது மனதை நெகிழ வைத்தது.நாம் வாழ்வதற்கான அர்த்தம் எங்கேனும் ஒரு
சிற்றிடத்தில் சுடர்விட்டால் போதுமானது என்று தோன்றியது.எனக்கு ஒரு
பெருமை நிகழும் அரங்கில் தப்பித் தவறி விக்ரமாதித்யனோ ,வண்ணநிலவனோ
,நகுலனோ , சுந்தர ராமசாமியோ வந்து விடுவார்கள் எனில் அந்த பெறுமதியை
அவர்கள் கால்மாட்டில் வைத்து விட்டு ஓடிவிடுவேன் நிச்சயமாக .நானொரு
வெற்றுப் பரதேசிதான் ஆனாலும் கூட . இதனையும் தர்க்க ரீதியில் உணர இயலாது.

மூன்றாவதாக முக்கியமானதொரு விஷயம் ; உங்களை ஒரு பெறுமதி வந்தடைந்த பிறகு
அதுவே பிற்காலங்களில் மோசமான பன்னாடைகளின் கைகளை சென்று சேராது
என்பதற்கான சிறிய உத்திரவாதமேனும் கொடுக்கும் தரப்பில் இருக்கவேண்டும்
.இதனை பெறுபவன் நிச்சயமாக உணரமுடியும் .

பல சமயங்களில் பத்து பதினைந்து பன்னாடைகளைக் குளிப்பாட்டுவதன் பொருட்டுத்
தான் ஒரு மூதாதைக்கு நெய்யபிஷேகம் நடைபெறுவது.ஒரு உருப்படியை மட்டும்
காட்சிப்படுத்தி விட்டு கவரிங் வியாபாரம் செய்வது போலே.பிரான்சிஸ்
கிருபாவை முன்வைத்து மிச்சமெல்லாம் தகரமென்றால் அது வெறும் தகர வியாபாரம்
தானே ? இனி சாண்டில்யன் விருது ,மெகா ஸ்டார் ராஜேஷ் குமார் விருது என்று
நாய்ப்படைகள் கிளம்பினால் எந்த நாடு தாங்கும் ? அம்மை காளி அனைத்தையும்
அறிந்துவிடமாட்டாளா என்ன ?

5

சாமிக்கு ஏதேனும் கொடுத்தால் மட்டும்தான்
அருள் கிடைக்குமா ?









என்று சிலர் அடிக்கடி கேட்கிறார்கள்.நிச்சயமாக அதில் சந்தேகமே
கிடையாது.உங்களிடம் சாமிக்குக் கொடுக்கும்படியாக அப்படி என்னதான்
விஷேசமாக வைத்திருக்கிறீர்கள் ? போதிய ஞானம் இருக்கிறதா ? இல்லாமை இல்லாத
மனம் உண்டா ? வஞ்சம் கீழிறங்கியிருக்கிறதா ? இல்லாமைக்கு இரங்கும் வழி
தெரியுமா ? அப்படி என்னதான் பெரிதாக இருக்கிறது உங்களிடம் ? பணம்
தவிர்த்து உங்களிடம் ஒன்றுமே இல்லையாயின் பணத்தைத்தான் கொடுத்தாக
வேண்டும் வேறு வழி கிடையாது .அம்மை அவ்வையிடம் கவியமுது இருந்தது அதனைக்
கொடுத்தாள்.காரைக்கால் அம்மை ஞானத்தை கொடுத்தாள். சாமிக்கு ஆண்டாள்
காமத்தைக் கொடுத்தாள் .எதுமே இல்லாதவன் இருப்பதைத் தானே கொடுக்க முடியும்
? உன்னிடம் இருப்பதெல்லாம் பணம் மட்டும்தான்.அப்படியானால் நீ அதனைத்
தவிர்த்து வேறு எதனையும் தரயியலாது. ஏதேனும் கொடுத்தால் மட்டும்தான்
அருள் கிடைக்குமா ? என்று கேட்கிறவனிடம் கொடுப்பதற்கு இடமற்ற வறிய மனம்
மட்டுமே இருக்கிறது என்று பொருள்

.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கவச குடலங்களோடு பிறந்த கர்ணனிடம் அவனுடைய வள்ளல்
தன்மையைக் கேட்டார்.அவன் அவனுடைய வள்ளல் தன்மையோடு அகந்தையைப் பொருதி
வைத்திருந்தான்.அகந்தையில் பொருதி இருக்கிற அத்தனையும் கழன்று விழுகிற
வரையில் அவன் கேட்டுக் கொண்டேயிருப்பான் .ஏனென்றால் அகந்தையில்
பொருந்தியிருக்கிற எல்லாவிதமான ; அது நல்லவிதமான அலங்காரங்களாக
இருப்பினும் சரி.தீமையின் அலங்காரங்களாக இருப்பினும் சரி அவை அனைத்துமே
அகந்தையின் அற்பத்தனங்கள்தான் .அவன் கணக்கு அது.
இதில் சாமிகளுக்கென்றில்லை மனிதர்களிடம்கூட இலவசமாகக் காரியங்கள் நடக்க
வேண்டுமென விருப்பம் கொள்ளாதீர்கள்.அது தீங்கின் விருப்பம்.ஒரு வித்தையை
கற்றுத் தந்து விட்டு அவன் தோளில் போட்டு மினுக்கியலைந்த தோள்ப்பையை
அவனிடம் அனுமதி கேட்காமல் கூட நீங்கள் எடுத்துச் சென்று
விடலாம்.எதிராளிக்கு உங்களின் செய்கை முழுவதுமாக புரிய வேண்டும் என்கிற
அவசியமில்லை .ஆனால் அவனுக்கு நீங்கள் கற்றுத் தந்த வித்தை அவனுக்கு
பயன்படாது எனில் அது திருட்டாகி விடும்.பொன்னை வைத்து விட்டுத்தான் பூவை
எடுக்க வேண்டும்.நீங்கள் சாமியைத் திருட வேண்டுமெனில் உங்களில் இருந்து
இறங்கி இறங்கி சாமியில் இணைந்து விட வேண்டும்.

சாமிகள் நம்மிடம் நாம் கொண்டுவந்ததாகக் கருதுகிற அனைத்தையும் கேட்டு
பிடுங்குவதற்காகத் தானே இருக்கிறார்கள்.அகந்தையின் பெருமிதங்களாக நாம்
கொண்டிருக்கும் அனைத்தையும் அவர்கள் பிடுங்கியாக வேண்டுமே ? மரணம் கடைசி
பற்று வரவுச் சீட்டை கிழித்தெறியும் போது நடக்கும்.மரணம் நடந்து முடிந்த
பின்னரும் வாழமுடியும் என்பதையும் ,அது கடவுளுக்கு இணையானதொரு வாழ்க்கை
என்பதும் உணர்ந்தோர் அறிவர்.

ஒரு கவிஞனைச் சந்திக்கிறீர்கள்.நீங்கள் கொண்டு சென்ற வெறுமை அத்தனையையும்
அவன் தலையில் சுமத்தி விட்டு ஒரு புட்டி மது ஈடாகாகக் கொடுத்து அவனுடைய
ஒரு புத்தகத்தை வாங்காமல் திரும்புகிறவர் நீங்கள் எனில் ; உங்களை அவனுடைய
கடும் விதியும் இணைந்து அலைக்கழிக்கப் போகிறது என்று பொருள் .
சாமர்த்தியம் என்றுதான் நினைப்போம்.ஆனால் அதுயொரு வினையின்
விபத்து.செய்யக் கூடாதது .பலசமயங்களில் சாமர்த்தியமாகக் கடந்து விட்டோம்
என்று நாம் கருதுகிற பல விஷயங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை.முப்பது
வருடம் கழித்து ஒரு முட்டுச் சந்திற்குள் வந்து நிற்கையில் விளங்கி என்ன
பலன் ?

எங்கள் ஊரில் எல்லாசாமிகளும் கேட்கும் .பெரிய சாமிகளை திருப்தி செய்து
விட முடியும் .சிறிய சாமிகளிடம் கதையெல்லாம் விட முடியாது . கொண்டு வா
மகனே கொண்டு வா அவ்வளவுதான்

ஆடு ,கிடா ,கோழி ,பன்றி அத்தனையும் கொண்டு வா.நீ சாப்பிடுவதில்லையாக
இருக்கலாம் சாமிகள் சாப்பிடுவார்கள் கொண்டு போ.அமர்ந்திருந்து தலை
குனிந்து சாப்பிடுகிறார்களே ; அத்தனை பயல்களும் சாமிதான் கொண்டு போ

கேள்வி கேட்காதே.

 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"