அதிசயங்கள் மிஞ்சுகின்றன

 அதிசயங்கள் மிஞ்சுகின்றன





வயது ஏறுந்தோறும் என்னுடைய ஆச்சரியங்கள் அதிகமாகின்றன.அதிசயங்கள் எஞ்சுகின்றன.நான் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதை உணர்கிறேன்.இருப்பதே இனியாக.பிறருடைய இருப்பு அதனினும் இனிமையாக.ஒவ்வொருவரும் என்னன்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள்.செய்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன.தீருவதில்லை.அதிலும் சந்தோஷமாகச் செய்வதற்குத்தான் எவ்வளவு காரியங்கள் ?

அத்தனை கோடி ஜந்துக்கள்.எல்லாமே இனிமை.பாம்பு இனிமை.பாம்பின் விடம் இனிமை.பசு இனிமை.ஒவ்வொன்றும் நமக்கு எதையோ வழங்குகிறது.பசு நிறைய வழங்கக் கூடியது.பால் மாத்திரமே வழங்குவதாக நினைத்துக் கொள்வது நம்முடைய அறியாமை.ஒருவகையில் வெளிப்படையாகத் தருவதை மட்டுமே அறிந்து கொள்வதை நுண்ணுணர்வின்மை என்றும் சொல்லலாம்.

எதனையும் வழங்காத ஒன்று என்று இங்கே ஏதுமில்லை.சில பூச்சிகள் ஒரு பையை பின்பக்கமாக தோளில் எறிந்துவிட்டு குழந்தைகள் நடந்து செல்வதைப் போல நடந்து செல்கின்றன.மகிழ்வூட்டும் பணிகளுக்காக,ஏன் இந்த பணிகள் மகிழ்ச்சியூட்டுகின்றன என்பதை கூட அறியாமல்.பறவைகளுக்கோ ஓயாத வேலை,இசையும் நடனமும் அவற்றுக்குப் செய்யும் பணிகளுடன் கலந்தே இருக்கிற வேலைகள்.எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.அவர்கள் பூப்போல வளர்ந்து விட்டார்.என் பருவத்துக்கு வளர்ந்து விட்டார்கள்.இவையெல்லாம் அதிசயமின்றி வேறென்ன?

நான் இங்கிருக்கிறேனே ? இத்தனைக்கும் மத்தியில் இங்கிருக்கிறேனே ? இல்லாதபோது இருப்பதைப் போல இங்கிருக்கிறேனே ,இவையெல்லாம் எவ்வளவு அதிசயங்கள் ?

வளர வளர அதிசயங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.அரச இலைகளை எடுத்து சட்டைப் பையில் சேகரித்து வைக்கிறேன்.பூச்சுகளை ,ஜந்துகளை நின்று நின்று பார்க்கிறேன்.இதற்காகவே வந்தவனைப் போல.மனிதர்கள் தற்குறிகளாக இருந்தாலும் என்ன ? ஆணவகாரர்களாக இருந்தாலும் என்ன ? கருமிகளாக ,கக்கர்களாக எப்படியிருந்தாலும் மனிதர்கள் சுவாரஸ்யமானவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.பெண்கள் தெய்வங்களாகத் தோன்றுகிறார்கள்.சக்திபீடமாக இருக்கிறார்கள்.அவர்களுடைய அத்தனை கசந்த பாவனைகளும் இப்போது லீலை என தோன்றுகிறது.தெய்வங்களின் இருப்பை இரண்டு கண்களாலும் பார்க்க முடிகிறது

நானொரு மனுஷ்ய ஸ்வரூபம் எடுத்து நிற்கிறேன்

1

நானிந்த பிறவி
எடுத்தது எவ்வளவு நல்லது
எப்படியும் புத்திசாலித்தனமாக
முடித்து விடுவேன்
அல்லவா?

நானிந்த பிறவி
எடுத்தது எவ்வளவு நல்லது
என்னுடைய புத்திசாலித்தனத்தின்
அளவை அறிந்து கொண்டேன் அல்லவா?

நானிந்த பிறவி எடுத்தது
எவ்வளவு நல்லது
என்னுடைய புத்திசாலித்தனம் எதுவுமே
என்னுடையதல்ல என்பதைத்
தெரிந்து கொண்டேன்
அல்லவா !

இல்லையெனில்
தெரியாது இருந்திருப்பேன்
நானிந்தப் பிறவி எடுத்ததை
அறியாமல்
இருந்திருப்பேன்
இல்லையா?

2

தற்காலிகமாக இங்கே இருக்கிறேன்
தற்காலிகமாக தொழில் செய்கிறேன்
தற்காலிகமாக ஊரில் இருக்கிறேன்
தற்காலிகமாக நீர் உண்ணுகிறேன்
தற்காலிகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
தற்காலிகத்திற்கு அப்பால் ஒரு இடமுண்டு
துள்ளிச்சாடிக்குதிக்க
அள்ளிச்சாடிக்களிக்க

அதுவரையில்
தற்காலிகத்தில்
இருக்கிறேன்
தற்காலிகமாக

3

என்னுடைய அப்பைய்யா

என் வழியாகத்தான்
பறவைக்குரல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்
எதன் குரல் எதுவென அவர் பிரித்துக் கொள்வார்
அவருக்கு அது தெரியும்

என்னுடைய அப்பம்மை பொங்கி எழும்
கடல் நாதம் காண்பது என் வழியாகவே...
அறிந்து கொண்டிருக்கிறாள்
அது கேட்பதல்ல
காண்பது

என்னுடைய தெய்வங்கள்
என்னுடைய நாவிலிருந்து
பதனீரின் கருப்பட்டியின் ருசியை
எடுத்துக் கொள்கின்றன

என்னுடைய மூச்சை இழுத்து எடுத்து
அமரர் மேடைக்குள்
அனுப்பிக் கொண்டிருக்கிறேன்
என்னுடைய அன்னை
சுவாசித்துக் கொண்டிருக்கிறாள்

ஒரு காலத்திற்குள்ளிருந்து வேறொரு காலத்திற்குள்
தானியங்களை நீட்டும்
நீள் அலகு என்னுடையது

4

கொல்லையில் பசுக்கள்
தெய்வம் போல
நின்று
அசைந்து கொண்டிருக்கின்றன

முன்பக்கக் கொன்றை
தெய்வம் போல நின்று ஆடிக் கொண்டிருக்கிறது
தழுவிய காற்று
உள் வந்து நிறையும்
வீட்டினுள்
தெய்வம் போலே
குழந்தைகள்
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

நடுவில் நானொரு மனுஷ
சொரூபம்
எடுத்து நிற்கிறேன்

5

ஒரு காலத்தில் உன்னைப் போலவே
இருந்திருக்கிறேன்

முதலமைச்சருக்கு ஆலோசனை
சொல்லியிருக்கிறேன்
ப்ரதான் மந்த்ரியை எதிர்த்திருக்கிறேன்
சாதுக்களிடம் சண்டையிட்டிருக்கிறேன்
தெய்வங்களையெல்லாம்
நிந்தித்திருக்கிறேன்
போவோர் வருவோரையெல்லாம்
தாக்கியிருக்கிறேன்
அடியாரை அடித்திருக்கிறேன்

உடன் ஒருவன் இருந்தால் போதும்
சாமியைத் தோள் எட்டி
மிதித்திருக்கிறேன்

எதற்கும் முயற்சித்ததில்லை
எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டிருக்கிறேன்
ஒருகாலத்திய
கலகக்கடவுள் நானிருந்த இடத்தில்
நீ வந்து முளைத்திருக்கிறாய்

அப்படியே உனக்கு என் வாலிப முகம்
அதே ஆற்றல்
அதனால்தான் எனக்கு பயமாக இருக்கிறது
முற்போக்கு கலகமுகம் கழுவி
வீட்டு நெல்லி மரத்திற்கு
தண்ணீர் விடுவதிலிருந்தே தொடங்கி
முதலில் இருந்து
புறப்பட்டு களத்திற்கு வந்து சேர
நான்கு கடல் தூரம் இருக்கிறது
தாங்குவாயா தம்பி ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"