எனக்குச் சொல்ல உள்ளவை - லக்ஷ்மி மணிவண்ணன்

எனக்குச் சொல்ல உள்ளவை - லக்ஷ்மி மணிவண்ணன்





1


நான் வெளியுலகத்திலிருந்து
வந்திருக்கிறேன்
விருந்துண்ண
வந்திருக்கிறேன்

வாய்த்த உடல் முதல் விருந்து
வாய் வைத்த முலை இரண்டாவது விருந்து
வாய்த்ததோர் உலகு
மூன்றாவது

இத்தனைக்கும் அது
பெரிய உலகத்துக்குள்
உள்ள
சின்ன உலகம்
சிறு குமிழ் வடிவம்

அதுவுடைந்தால் நானுடைவேன்
நானுடைந்தால் அது உடையும்
அத்தனைக்குச்
சிறிது

ஆனால் அதனுள் இருப்பதோ
எனது
பந்தி
பெரிதினும் பெரிது

2

தின்று போட்ட மீதி போல

கிடந்தார்
மரக்கறிக்கடை பலவேசம்
ஏனிப்படி ?

காய்ச்சல் குணமாகும்
உடல் தேறும்
அத்தனைக்குக் கடும் அறிகுறி ஏதுமில்லை
தின்று போட்ட மீதம் ஆனது
என்னவாகும் ?

யார் தின்று இப்படியெறிந்தார்கள்
மனைவியா
மக்களா
சமூகமா
அண்ணன் தம்பிகளா
யார் எறிந்திருந்தாலும்
இப்படித்தானே
ஆகும் ?

வெடுக் வெடுக் என
மனைவியின் சொற்கள்,
புறந்தள்ளும் மகளின் வார்த்தைகள்
தின்றுபோட்ட இலையை நாய் இழுப்பது போலும்
உணர்வு
படுத்திருக்கிறார் பலவேசம்
பேச்சு மூச்சில்லை

காய்ச்சல் இன்றோ நாளையோ
குணமாகி விடும்
எந்த மாற்றமும் இல்லை

3

அவளுக்கு முற்றிலும் பிடிக்காதவாறு
அவனை அழித்துக் கொண்டான்
அவனுக்கு முற்றிலும் பிடிக்காதவாறு
அவளும் அழித்துக் கொண்டாள்

ஒவ்வொரு நாளாக வாழ்ந்து இருவரும் இதனை சாதித்துக் கொண்டார்கள்
ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக
அழித்து இப்படி வந்து சேர்ந்தார்கள்
ஐம்பது ஆண்டுகள் ஓடிற்று

அழித்து முடித்த பின் அரவணைத்து நிற்கிறார்கள்
தன்னை அழித்து உருவான
சுவர்
தன்னை அழித்து கரைந்த சுவரும்
கூட

இப்படித்தான் கரையக் கரைய
எழும்பிய இந்த சுவர்
எழும்ப எழும்பக்
கரைந்தது

4

நான் என்னை
நிரப்பிக் கொண்டிருக்கிறேன்

பூர்ண நிலாவின் கொஞ்சும்
துளியெடுத்து
உள்ளே
போட்டு வைப்பேன்

மாமழைக்கால தவளை இசை
சேர்த்து வைப்பேன்

தனிமை பெருகும் கடல் அசைத்து
குழந்தையர் விட்டுச் சென்ற சிப்பிகள்
பொறுக்கி
அகம்விடுவேன்

கன்னியர் பிரேமை அன்பை
உளம் நிரப்புவேன்

நிரம்பி வழிந்து
கசிந்து பெருகும்
சாறினை
ஸ்ற்றா போட்டு
உறிஞ்சிக் குடிப்பேன்

இதுதான்
எனது சர்பத்

5

யாரோ
தடவுவது போல
இந்த அந்தி
யாரும் தடவவில்லை
யாரும் தொடவில்லை
யாரும் அருகில் இல்லை
என்றாலும் யாரோ தடவுவது போல
இருக்கிறது இந்த அந்தி
விசிறியில் இருந்து காற்று தொடுவது போல
கடலில் இருந்து காற்று வந்தடைந்தது போல
ஆனால் எதுவும் நடைபெறவில்லை

6

முற்றிலும் ஏற்றுக்கொண்ட பிறகு
எனக்கு யாதொரு பிரச்சனையும் இல்லை
அதன் அழகும்,அவலட்சணங்களும்
பொருட்டல்ல
இந்த பிரபஞ்சம்
என்னை வைத்துக் கால்பந்து
விளையாடினாலும்
சரிதான்
நான் அதனைக் கால்பந்தாகி
விளையாடினாலும்
சரிதான்
என்னுடைய பிரச்சனை எல்லாமே
ஏற்குமுன்னர்
இருப்பவை

7

என்னைப்பற்றி என்ன வேண்டுமாயினும்
நினைத்துக் கொள்ளுங்கள்
ஒன்றுமில்லை
ஆனால் நீங்கள் நினைப்பவற்றையெல்லாம்
நிறைவேற்ற வாய்ப்பில்லை
பொறுத்துக் கொள்ளுங்கள்

8

நீயும் என்னைப் போலத்தான்
என்று கூறி எழுந்த பைத்தியம்
கத்தத் தொடங்கியது

என்ன துவைத்து அணிகிறாய்
குளித்துக் குடிக்கிறாய்
மாஸ்க் போட்டிருக்கிறாய்
வேறென்ன வித்தியாசம்?

நீயும் அப்படி அணியலாம்
குளித்துக் குடிக்கலாம்
மாஸ்க் போட்டுக் கொள்ளலாம்
அவை அப்படியொன்றும் கடினம் அல்ல
இப்படிக் கிடந்து நடிப்பதைவிட

வேறென்ன
வேறுபாடு?
நான் திறந்துசெல்லும் கதவுகளையெல்லாம் நீ மூடிக் கொண்டேயிருக்கிறாய்
நீ மூட மூட
நான்
திறந்து செல்கிறேன்

மூடுவதற்கும் திறப்பதற்கும் இடைப்பட்ட இடைவெளி
நான் மாஸ்க் அணிவதற்கும்
நீ அணிய மறுப்பதற்கும் இடைப்பட்ட
இடைவெளி

9

எதை வேண்டுமாயினும்
சொல்லிக் கொண்டே வா
முடிவில் என்ன சொல்லப் போகிறாய்
என்று பார்க்கலாம்

முடிவில் சொல்லமுடிவதை
இப்போதே
சொல்ல முடிகிறதா
என்றும்
பார்க்கலாம்

10

உன்னுடைய ஞானத்தை
உன்னிடம் தருவான்
பெற்றுக் கொள்ளும் பாத்திரம்
உன்னிடம் உண்டா
உனக்குரியதையெல்லாம்
எடுத்துக் கொள்ளலாம்
அள்ளியெடுக்கும்
அகப்பை உன்னிடம் உண்டா
எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்
யாத்திரைச் சீட்டு
எடுத்துவிட்டாயா ?
தன்னிடம் உள்ளதைத் தனக்கருள்
செய்ய
தக்கவிதத்தை
அறிந்து கொண்டாயா ?

11

மேலே செல்லச்செல்ல
இணங்கிக் கொண்டேயிருங்கள்
இணங்கத்தான்
உங்களுக்கு சமயம்
இருக்காது
கீழே செல்லச்செல்ல
விலகிச் செல்லுங்கள்
இணங்கி இணங்கித்தான்
இப்படி
கீழ்நோக்கிப் போனீர்கள்




Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"