ஊட்டி காவிய முகாம் மூன்று நாட்கள்

ஊட்டி காவிய முகாம் மூன்று நாட்கள்

"பெருவனத்திடம் விடைபெற்று திரும்புகிறேன்
வனம்
விட மனமின்றி
காட்டுமாட்டின் ரூபத்தில்
பனிப்புகை மூட்டமாய்
பின்தொடர்ந்து வருகிறது
சிறுபொட்டாய் எனை எடுத்து
அதற்கொரு திலகமிட்டேன்
நாளைய புலரி திலகமிட்ட வண்ணம் உதிக்கும்
இவ்வனத்தில்
வனம் முளைக்கும்
என் முற்றத்தில்
திலகமும் வனமும்
இருவேறிடங்களில்
இருந்தாலும் "


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கழிந்த மூன்று தினங்களில் ஊட்டியில் ஏற்பாடு செய்திருந்த காவிய முகாமில் முழுமையாகப் பங்கேற்றேன்.இப்போது நடைபெறுவது 25 ஆவது முகாம் என்று சொன்னார்கள்.சில காலங்களுக்கு முன்பிருந்தே பங்கேற்றிருக்கலாம் என்கிற எண்ணம்; இப்போது கலந்து கொண்ட போது தோன்றியது.அவ்வளவிற்குச் சிறப்பு. எவ்வளவோ காலங்களை வீண் விரயம் செய்திருக்கிறேன்.செய்திருக்க வேண்டியவற்றைச் செய்யவில்லை.இனியேனும் சில காரியங்களை செய்ய வேண்டும் என்கிற தூண்டுதலை இந்த முகாம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.இந்த உளத் தூண்டுதல் எனக்கு மிகவும் முக்கியமானது.
ஒரு மிகப் பெரிய படைப்பாளியின் இருப்பு எப்போதும் இலக்கிய இயக்கங்களுக்கு ;அது தனது சாரத்தில் தகுதி கொள்வதற்கு மிகவும் தேவைப்படுகிறது.படைப்பாளிகள் மையமாக இல்லாமல் பெரும் இலக்கிய இயக்கமோ ,இலக்கிய இதழ்களோ சாத்தியமற்றது.ஒரு இலக்கிய இயக்கத்தில் எந்த படைப்பாளி மையமாக இருக்கிறார் என்பதனை வைத்தே அதற்கான வீச்சு உருவாகும்.சாதாரணமானவர்கள் தங்களின் மட்டத்திற்கு பிறரையும் கொண்டு வந்து விடுவார்கள்.தங்களின் மட்டத்திற்கு மேல் உள்ளவர்களை சிதைத்து விடுவார்கள்.அகந்தையை மட்டுமே எடுத்துக் கொண்டு நடக்கும் பாத்திரங்களாக பிறரை சமைத்து விடுவார்கள்.
சு.ரா இரண்டாயிரம் வரையில் இலக்கிய இயக்கமாகவும் இருந்தார்.என்னை போன்றோரின் பயணம் அவரில் சுடர் ஏற்றப்பட்டது.அவர் உருவாக்கிய பல அமர்வுகள் அறிவை விரிவு செய்து கொள்ள உதவியவை.அது எந்த பண்புகளால் சாத்தியமாகும் என்பதனை உணர்த்தியவை.சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு அது போன்றதொரு இடத்தில் இருந்த மேன்மையை இந்த ஊட்டி காவிய முகாமில் கண்டேன்.ஜெயமோகன் என்னும் அரிய கலைஞனால் அது உருவம் பெற்றிருக்கிறது.ஜெயமோகனின் இருப்பும் அவருடைய பரந்து பட்ட விரிவான அறிவும்,படைப்புக் கண்ணோட்டமும் அதனை அவர் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் விதமும் ;பல படைப்பாளிகள் இந்த இயக்கத்திலிருந்து உருவாவதற்கு துணை செய்யும் என்பதில் எனக்கு சிறிய ஐயமும் இல்லை.இது இக்காலத்தின் அருங்காரியம்.
தமிழ் சூழலில் படைப்பு கண்ணோட்டங்கள் என்பவை யாவை என்பதனை தனது இளம் வயதிலேயே அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.அல்லது பொதுவாக அது கிடையாது என்றும் கூட சொல்லலாம்.அரசியல் கண்ணோட்டங்களின் தடித்தனங்களில் இருந்து அவன் மீளும் போது, அவனுடைய படைப்பாற்றலை அவன் பெரும்பாலும் இழந்திருப்பான்.பெரும்பாலோர் எளிய காரியங்களின் பக்கமாகத் திரும்புவதற்கு இதுவே காரணமாக அமைந்து விடுகிறது.இலக்கியம் வாழ்வின் சாத்தியத்திலும் படைப்பிலும் ஏற்றெடுக்க வேண்டிய கனவு மிகப் பெரியது.எளிய காரியங்களில் அது நிறைவெய்த கூடாது.படைப்புக் கண்ணோட்டங்களின் திக்கு வேறுவகையானது என்பதனை இளம் வயதிலேயே ,படைப்பாற்றல் மிதமிஞ்சியிருக்கும் போதே எழுத்தாளன் அறிந்து கொள்வானாயின் அவனுக்கு மித மிஞ்சிய காலம் சேமிப்பாகிறது.கனவுகளை அவன் மெல்ல அடியெடுத்து நெருங்க இது அவனுக்கு பெரிய அளவில் உதவி செய்யும்.ஆனால் இந்த படியில் அவன் காலடியெடுத்து வைக்க முன்முடிவுகளிலும் அகந்தையிலும் கீழிறங்கி வருகிற தீரம் அவசியம்.தனது செயல் என்ன என்பதனை முதலில் உணர்வதற்கான வாய்ப்பை இது போன்ற இலக்கிய முகாம்களே எழுத்தாளனுக்கு ஏற்படுத்தித் தரும்.
தமிழ் நாட்டில் கழிந்த இருபது வருட காலங்களாக ; வெற்றுக் கேளிக்கைகள் பொதுவில் இலக்கிய பாவனை செய்து காலம் கடத்தியிருக்கின்றன .எழுத்தாளனின் பேரிருப்பற்ற வெற்றகந்தையின் பாவனைகள் இவை.இவற்றிலிருந்து சில்லறை சாதனங்களைத் தவிர்த்து உருப்படிகள் உருவானதாக எனக்கு நம்பிக்கையில்லை.ஏராளமான சில்லறைகளால் தமிழின் படைப்பியக்கம் உண்மையாகவே முடங்கியிருக்கிறது எனலாம்.தமிழில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் போன்ற செயல்பாடுகளே சோர்வை அகற்றிக் கொள்ள உதவக் கூடியவை.கேளிக்கை அரங்குகளால் ஏராளமான வெற்றகந்தைகள் மதம் கொண்டு அலைதல் மட்டுமே மீதமானது.காரியங்கள் இல்லை.
இந்த முகாமில் என்னை கவர்ந்த முக்கியமான விஷயம் , புத்தகங்கள் குறித்த ,உள்ளடக்கம் குறித்த நேர்மையான உரையாடல்கள்.ஒருவர் ஒரு நூலைப் பற்றி பேசும் போது,அரங்கில் உண்மையாகவே அதனை நேர்த்தியுடன் கற்ற ,பத்து இளைஞர்கள் புதிய செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் மனதின் கோணல்களில் சரியாமல் உள்ளடக்கத்தில் நின்று பேசுகிறார்கள்.இதனை காணவே ஆனந்தமாக உள்ளது.படிக்காமல் உளறும், அகந்தையை துருத்திக் காட்டும் ஒரு இளைஞனைக் கூட நான் இந்த அரங்கில் காணவில்லை.பெண்குழந்தைகள்,பெண்கள் இவ்வளவு தூரத்திற்கு படைப்பின் நுட்பங்களை கண்டு உரையாடுதலைக் காண ஆச்சரியமாக உள்ளது.பொதுவாக தமிழ் நாட்டில் நான் காண்பவை இந்த பண்புகளுக்கு நேர் தலை கீழானவை.நூல்களை படிப்பதற்கு முன்னரே மனதின் அனைத்து விதமான சிறுமைகளையும் பொதுவில் கொட்டுவதையே பல காலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.மனதின் அற்பத்தனங்கள் வெளியில் கசியாமல் ,கழிவிரக்கமும் ,பொய்மையும் சிந்தப்படாமல் உள்ளடக்கத்தைப் பற்றி உரையாடுதல் என்பது இலக்கியத்தை பற்றி பேசுதற்கு தலையாய குணம் .இதனை இந்த மூன்று நாட்களும் பேசிய அனைத்து இளைஞர்களிடமும் பார்த்தேன்.இந்த குணத்தை அவர்களிடம் வெளிப்படச் செய்வதில் ஜெயமோகன் கொண்டிருக்கும் தாக்கத்தையும் புறக்கணிப்பதற்கில்லை.
நாஞ்சில் நாடன் நடத்திய கம்பராமாயண வகுப்பு மரபிலக்கியங்களை படிக்கத் தேவையில்லை என்னும் திமிர் கொண்டு நடப்போர்க்கு மிகவும் பயனுள்ளது. பலரும் பாடல்களை பாடும்போது பாடல்களின் சிறப்புகள் மனதில் பாடமாகி விடுகின்றன.செவ்விலக்கியங்களைப் பயில இது சிறந்த முறை.திருக்குறள் வகுப்பும் இது போன்றே.
இந்திய சிந்தனை முறைகள் பற்றிய அறிமுகம் மிகவும் சிறப்பானது.உள்ளடக்கத்தை அவர் ஆழ்ந்து அறிந்து பின்னர் அறிமுகம் செய்தார்.அது புதிய திறப்பாக அமைந்தது.அவர் இதுவரையில் அறிமுகம் இல்லாதவராகவும் ,புதியவராகவும் இருந்தார்.அவர் பெயர் எனது நினைவில் இன்னும் பதியவில்லை.அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
சந்ரு மாஸ்டரின் ஓவியங்கள் பற்றிய உரையை புரிந்து கொள்வதில் இருந்த சிரமத்திற்கு ஓவியங்கள் பற்றிய அறிதலும் உறவும் பொதுவாக நமக்கு இல்லாததே காரணம் என்று நான் நினைக்கிறேன்.தமிழின் சமகால ஓவியங்கள் ஓவியர்கள் ஒருவரைப் பற்றி கூட இங்கே அறிமுகம் ஏற்படவில்லை. அவர் கூறும் கலை பற்றிய புரிதல்களை எனக்கு விளங்கிக் கொள்ள இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக தேவைப்பட்டன.அவருடன் உடனிருந்து அவற்றைக் கற்றேன் என்பதே உண்மை.அவருடைய உரையை புரிந்து கொள்ளுதலில் அதனால் எனக்கு எத்தகைய பிரச்சனைகளும் ஏற்படவில்லை.
கவிதைகள் ,நாவல் ,சிறுகதைகள் என நிறைய உரையாடல்கள். கள்ளுண்ட போதை.முன்முடிவுகளை மட்டுமே கொண்டிருந்தால் அதனையே கட்டிப் பிடித்துக் கொண்டு சாக வேண்டியதுதான் வேறென்ன சொல்ல ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"