குழந்தை ரௌடி

குழந்தை ரௌடி

1

ரௌடி கொல்லப்பட்ட
ஊரில்
அடக்கம் முடிந்ததும்
அடங்கா பிணம்
எல்லார் மனதிலும்
மேலெழும்பியது

என்னை ஆதரித்தோர்
எதிர்த்தோர் எல்லாம் நீங்கள்தானே
அல்லவா

என்று கேட்டது

உங்களிடம்
எழும்புவதும் அடங்குவதுமாக
நான்
இருக்கிறேன்
அல்லவா

தெருமுனையில்
நான் வெட்டிச் சாய்கையில்
நீங்களும் உடன்சேர்ந்து சாய்ந்தீர்கள்
அல்லவா

பிறகு இப்போது
எழும்பி நிற்கிறேன்
அல்லவா

மீண்டும் ஒருமுறை
முதலில் தொடங்கி
சடங்குகள் செய்து
அடக்குங்கள்
மீண்டும் மேலெழும்ப
இயலாவண்ணம்

என்னை மீண்டும் ஒருவன்
எடுத்து
அணிந்து கொள்ளல்
ஆகாது

மீண்டும் ஒருவனுக்கு நீங்கள்
அணிவித்து விடுவதும்
கூடாது

கோரிக்கை செய்தது பிணம்

என்னை நானாக எடுத்து
அடக்கம் செய்ய இயலாது

மீண்டும் ஒருமுறை
அடக்கம் செய்யுங்கள்
தேவைப்பட்டால்
என்னுடைய குழந்தைகள் அறியாமல்
மனைவிக்குத் தெரியாமல்
மீண்டும் மீண்டும்
அடக்கம்
செய்து கொண்டிருங்கள்
நீங்களோ நானோ
அடங்குவதுவரை

2

வெட்டிச் சாய்ந்ததும்
தேனாய் இனித்து
குருதியை வற்றக்
குடித்தது
நிலம்
சுற்றிலும்
வட்டக்கறைகள்

3

பிணச்சோறு
தின்றவர்கள்
விட்டுச் செல்கிறார்கள்

சபதமிட்டவர்கள்
மீண்டும்
குழந்தை ரௌடியை
எடுத்துச் செல்கிறார்கள்
குடித்த குருதியில் பொதிந்து
கொடுத்தனுப்புகிறது
நிலம்

4
பின்பு மீண்டும்
குழந்தை ரௌடியை
தழுவக் குழைகிறாள்
நிலமென்னும்
நங்கை

###

1

இன்னும் யானையை அதே
அதிசயத்தோடு
பார்க்க முடிகிறது
ரயிலுக்கு டாட்டா காட்டும்
பழக்கம்
நிற்கவில்லை
புட்டான்களைப் பிடிக்க
கைகள் நீளுகின்றன
கருடனைத் தொட்டு
கண்களில் போட்டுக் கொள்கிறேன்
கொடிமரத்தில்
சாஷ்டாங்கமாக விழுவது கண்டு
அமர்ந்திருக்கும் பெருமாள்
எழுந்து நின்று
பார்க்கிறார்
திரையில் மழை பெய்தால்
சிகிரெட் பற்றத்
தோன்றுகிறது

என்றாலும்
தாடி இவ்வளவு
நரைத்திற்றே
ஏகச்சி ஏகம்பனே

2

இந்த சந்திப்பிலிருந்து
கடையின் கண்ணாடிக்கு வெளியில்
பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்

போதுமான அளவிற்கு
பிச்சைக்காரர்கள் காணாமலாகிவிட்டார்கள்
சண்டியர்கள் இல்லை
பைத்தியக்காரர்கள்
காணாமலாகிவிட்டார்கள்
நோயாளிகள் காணாமலாகிவிட்டார்கள்

சுவாரஸ்யம்
காணாமலாகிவிட்டது

பனிவெயில் விறுதே மூடி
உணர்வுகள் அற்ற வெறுமையுடன்
ஊரைக் கடக்கிறது
ஒவ்வொரு நாளும்

குருதியில்லை
கோபமில்லை
என்ன இழவு
வாழ்க்கை இது ?

3

நான் இந்த சந்தியில் இருந்தபடியே
நான் இல்லாமையை கொஞ்சநேரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

வழக்கம் போல
வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன
கொத்துக் கொத்தாக மின்விளக்குகள்
தேவதைகள் இறங்கி வராத
கத்தியின் துல்லியம் கொண்ட
வணிக விளக்குகள்
தூரத்து வெளிச்சம் மெல்ல நகர்ந்து
அருகில் கடக்கிறது

பெருங்கம்பத்து வெளிச்சம்
நான் மீது
அப்படி
சாரல் மழையில்
பூவாய்ச் சொரிய

மீண்டும் நான் உள்ள நான்
சந்தியை
நோக்கத்
தொடங்குகிறது

வழக்கம் போல
வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன
கொத்துக் கொத்தாக மின்விளக்குகள்
தேவதைகள் இறங்கி வராத
கத்தியின் துல்லியம் கொண்ட
வணிக விளக்குகள்
தூரத்து வெளிச்சம் மெல்ல நகர்ந்து
அருகில் கடக்கிறது

###

பருகிய விஷம்

1

நண்பனை அழைத்துக் கொண்டு
கடற்கரைக்குச் சென்றேன்
அவன்தன் நண்பனை உணர்ந்து
நடந்து வருகிறான்

மனைவியை அழைத்துச் சென்றேன்
அவள்
காதலனை நான்போல நினைத்து
உடன் வருகிறாள்

குழந்தைகளோ
அப்பாவின்
கரம்பற்றிக் கொள்கிறார்கள்

கடலின் கரம்பற்றி நடக்கிறேன்
அப்போது
எனக்கும் பெயரில்லை
கடலுக்கும்
பெயரில்லை

2

எப்போது
நானாக மட்டும்
இருக்கிறேனோ
அப்போது
மீதமெல்லாம்
கரைந்து
விலகிச் செல்கிறது

எப்போது எல்லாம்
விலகிச் செல்கிறதோ
அப்போதெல்லாம்
சிவம் உடலைத்
தழுவிக் கொள்கிறது

3

தழுவிய இடை
பருகிய விஷம்

4

கடலின்
அக்கரைக்குக்
கொண்டுவிடச் சொல்லி
கதறியழும்
குழந்தையை
எங்ஙனம்
ஆறுதல் சொல்லித்
தேற்றுவேன் ?

5

பருகிய விஷம் அத்தனையும்
பருகப்படாமல்
இருக்கிறது
குழந்தையின்
கைகளில்

###

மூன்று தெப்பக்குளங்கள்
எனக்கு சொந்தம்
இரண்டு கடல்கள்
எனக்கு
உண்டு
மலைகள் நான்கைந்து

அம்மா என்னிடம் விட்டுச் சென்ற
பௌர்ணமி
ஒன்றுண்டு என்னிடம்

இதையெல்லாம் யாரிடமேனும்
விட்டுச் செல்வதற்காக
வைத்திருக்கிறேன்

உங்களுக்கு என்ன உண்டு ?
தெளிவாக
எனக்குச் சொல்லுங்கள்

விட்டுச் செல்வதற்காக
என்ன வைத்திருக்கிறீர்கள் ?

###

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"