மூட நம்பிக்கைகள் நுட்பமான மனதின் கண்டுபிடிப்புகள்



மூட நம்பிக்கைகள் நுட்பமான மனதின் கண்டுபிடிப்புகள்
போர்ஹே பின்னாட்களில் அவருடைய நேர்காணல் ஒன்றில் "தான் மூட நம்பிக்கையாளனாக மாறிக் கொண்டிருக்கிறேன் " என்று தெரிவிக்கிறார். போர்ஹே இந்திய தத்துவங்கள் குறித்தும் எழுதியவர்.கரடு முரடான முரட்டு மனதிற்கு எதுவும் தேவையில்லை.அதற்கு மதுரையில் பேருந்திலேறினால் நேரடியாக சென்னை சென்று சேரலாம் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதுமானது. ஆனால் கலைஞன் அன்றாடம் பொருள் விளங்காத பல்வேறு விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறான்.சாதாரணமான மக்களும் அப்படி காண்கிறார்கள்.அவற்றில் உண்மை இருப்பது விளங்குகிறது.ஏன் எப்படி என்பவை விளங்குவதில்லை.யாரேனும் அவற்றை விளக்குவார்கள் எனிலும் கூட அவை முறையாக விளங்குவதில்லை.கலைஞனுக்கும் கவிஞனுக்கும் இவையெல்லாம் மிகவும் முக்கியமானவை.
பிரென்ச் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் இரண்டாம் நூற்றாண்டில் தான் தினந்தோறும் கண்ட கனவுகளை பதிவு செய்து வைத்திருக்கிறார்.அவற்றில் இந்திய சமூகத்திற்கு பொதுவான கனவுகள் கூட இருக்கின்றன. பூக்கோ தனது ஆய்வுக்காக இருபதாம் நூற்றாண்டில் அவன் கண்ட கனவுகளை எடுத்துக் கொள்கிறார்.சமகால பிரென்ச் சமூகத்திற்கும் அவற்றிற்கும் உள்ள உறவுகளை அவர் பரிசோதித்துப் பார்க்கிறார்.பூக்கோவின் ஆய்வுகளில் இந்த ஆய்வு சுவாரஸ்யமானது.தன் கைகளில் இருந்த காரணங்களை இந்த கனவுகளின் மீது அவர் போட்டு பார்க்கிறார்.
மிஷேல் பூக்கோ (Michel Foucault அக்டோபர் 15, 1926 – ஜூன் 25, 1984) இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்களுள் ஒருவர். இவரது சிந்தனைகளும் கருத்துக்களும் மெய்யியல், அரசியல், உளவியல், மொழியியல், இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்துகின்றன.தமிழ் நாட்டில் இவருடைய அதிகாரம் தொடர்பான அரசியல் தொடர்பான வாதங்களை மட்டுமே எடுத்துக் கொண்டார்கள்.அவருடையவற்றில் இவையே மிகவும் தட்டையானவை.அதிகாரம் பற்றிய அவருடைய வாதங்கள் இப்போது படிக்க நகைப்பிற்குரியவை.அதிகாரத்தை அதன் அடியாழத்தை அவரால் எதிர்மறையாக மட்டுமே பார்க்க முடிந்தது.அதன் நனவிலி கூட்டு அம்சத்தை அவர் தவற விட்டார்.இருப்பினும் கனவுகளையும் பரிசோதிக்க முனைந்த அறிஞர் அவர்.
மிஷேல் பூக்கோ ,போர்ஹே என அயல்நாட்டிலிருந்து இந்த விஷயத்தைத் தொட்டு பேசுவதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும் என கருதுகிறீர்கள் ? நமக்கு நம்மவர்களில் இருந்து தொடங்கினால் ஏற்படும் அயர்ச்சி ஒரு காரணம்.எப்படியோ நமக்கு நம்மிடமிருந்து தொடங்கினால் அது விஞ்ஞான ரீதியிலானதாக இராது என்று ஒரு அரசியல் நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.அல்லது ஏற்படுத்தப்பட்டு விட்டது.நாம் இப்போது அதிகப்படியான தாழ்வுணர்ச்சியில் இருக்கிறோம்.
எங்கள் ஊர் பகுதிகளில் உள்ள சாலைகளில் எந்தெந்த பகுதிகளில் விபத்து அதிகம் என்பதை நுட்பமான அவதானிப்புகள் கொண்ட சாதாரணர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.அவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தெய்வங்களை குறிப்பிட்டு பேசுவார்கள்.பெரும்பாலும் குருதி பலி கேட்கும் தெய்வங்கள் கூட்டு சேர்ந்து நிற்கும் இடங்களாக அவை இருக்கும்.அருகில் செல்கையில் கவனத்தை சிதறடிப்பதில் வல்லவர்கள் அவர்கள்.குமாரகோயில் முருகன் ,மருங்கூர் முருகன் ,திருவட்டார் ஆதிகேசவன் ,திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் இவர்களெல்லாம் எவ்வளவு செம்மையான இடங்களில் இருக்கிறார்களோ அதற்கு நேர் எதிர்பதம் அவர்கள்.நிலத்தின் எல்லா பகுதிகளும் ,இடங்களும் ஒரேவிதமானவை அல்ல.சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குச் செல்லும் வழியிலும் மூன்று பக்கங்களில் விபத்துத் திரடுகள் உண்டு.மூன்று பக்கமும் குருதி பலி சாமிகளின் பாதுகாப்பில் மையம் கொண்டிருப்பவர் தாணுமாலயன்
மூட நம்பிக்கைகள் சிறுகச்சிறுக சேகரமாகி மொத்த அர்த்தமாக திரளும் சக்தி கொண்டவை.அவை நீங்கள் போகும் திசைக்கு வழிகாட்டிகள்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"