அவர் வீடுதிரும்பியது உண்மைதான்

அவர் வீடுதிரும்பியது உண்மைதான்
என்னுடைய நண்பர் ஒருவர் கொலைவழக்கு ஒன்றில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சட்டம்சாரா காவலில் காணாமல் ஆக்கப்பட்டார்.மனைவியின் உறுதியான போராட்டத்திற்குப் பின்னரும் அவர் எங்கே வைக்கப்பட்டார் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.எங்களிடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.காரணம் தெளிவாக இருந்தது.கொலையுண்ட நபரின் மனைவி இவர் பெயரை மனுவிலேயே சந்தேகத்தின் பெயரில் இணைத்திருந்தார்.
இத்தனைக்கும் வீட்டில் வந்து இவரது மனைவியின் முன்னிலையில் அவரைப் போலீஸார் பிடித்துச் சென்றிருந்தார்கள்.அந்த வழக்கில் காணாமலாக்கப்படும் காவலில் ஆறுபேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்
உடனிருந்த ஆறுபேரும் ஏற்கனவே ஒன்டென் வழக்கு பதியப்பட்டிருப்பவர்கள்.பதினைந்து நாட்களுக்குப் பிறகு : காணாமலாக்கப்படும் காவலின் விருந்திற்கு எவ்வளவு நாட்கள் எந்த எந்த வைத்தியர்களிடம் வர்மம் எடுக்கவேண்டும் என்கிற அறிவுரையும் வழங்கப்பட்டு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.விடுவிக்கப்பட்டமைக்குக் உண்மையான குற்றவாளி பதினான்காவது நாளில் சரணடைந்திருந்ததே காரணம் .அவர் சரணடையவில்லை எனில் இந்த அறுவரில் பின்னணி குறைந்த ஒருவர் இவ்வழக்கில் ஏற்றப்பட்டிருப்பார்.இல்லையெனில் குலுக்கல் முறையில் கூட ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருக்க முடியும்
வெளியில் வரும் போது அவருக்கு சித்தபிரேமை ஏற்பட்டிருந்தது.மருத்துவ மொழியில் மனச்சிதைவு மனநோய் என்று பெயர்.காலம் முழுதுமாக அவரிடம் குழம்பிப் போயிருந்தது.பதினான்கு நாட்களை மூன்றுமாதங்கள் எனக்குறிப்பிட்டார்.நுட்பமான சித்திரவதைகளில் காலத்தின் அளவு வெகுவாக அதிகரிக்கும் தன்மை கொண்டது
முதல் ஒன்றரை மாதங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதிலேயே குறியாக இருந்தார்கள்.ஆறுபேரிடமும் இவ்வாறே.நாம்தான் செய்யவில்லையே என்பதால் மறுத்துக் கொண்டே இருந்தேன்.ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு நான்தான் செய்திருப்பேனோ என்று தோன்றத் தொடங்கிவிட்டது.இறந்தவன் நேரடியாகவே வந்து தொந்தரவு செய்யத் தொடங்கிவிட்டான்.மேலும் ஒருமாதம் அவர்களிடம் இருந்திருந்தால் ஒப்புக் கொண்டிருப்பேன்.என்னை தம்பிமாதிரி கவனித்துக் கொண்ட ஒரு போலீஸ்காரர் ஒருவரும்கூட இப்படி கிடந்து சாவதற்குப் பதிலாக செய்தேன் என ஒத்துக் கொண்டு சிறையில் சுகஜீவியாக இருக்கலாமே என்றுதான் அறிவுரை கூறினார் என்றார்.அவர் ஒருமாதம் எனக் குறிப்பிட்டமைக்கு ஐந்துநாட்கள் என்று பொருள்
இத்தனைக்கும் கொலை வழக்குகள் போலீஸாருக்கு மிகவும் எளிதானவை.வெளிப்படையானவை.மர்மம் நிறைந்த கொலை வழக்குகளைக்கூட ஒருபாட்டில் பீர் சுவைத்தபடியே யோசித்து கணநேரத்தில் கண்டுபிடித்துவிடும் சாமர்த்தியம் தனிப்படை போலீஸாருக்கு உண்டு.கொலை செய்யப்பட்டவனின் பிணத்தின் மீது அழுது உருளும் கொலையாளியைக்கூட மறுநாள் காலையில் அவன் பல் விளக்கிக் கொண்டிருக்கும் போதே அள்ளிச் சென்றுவிடுவார்கள்.என்றாலும் தவறினால் என்ன செய்வது என்பதற்காக மேற்படி வாய்ப்பையும் கையில் வைத்திருப்பார்கள்
ஆனால் அரசியல் தொடர்புபட்டுவிடும் வழக்குகள்,திருட்டு வழக்குகள்,பாலியல் வழக்குகள் அவர்களுக்கு சவாலானவை.தெருவில் சத்தம் அதிகப்பட்டு அழுத்தம் அதிகமானால் பின்னணி இல்லாமல் தெருவில் நடப்பவன் அத்தனைபேர் மீதும் அவர்கள் பார்வை படத் தொடங்கும்.இன்னும் இந்த வழக்கிற்கு ஆள் கிடைக்கவில்லையா ? என்று மேலிடத்தில் இருந்து வருகிற குரலுக்கு நீங்களோ நானோ நினைத்துக் கொள்ளும் அர்த்தம் கிடையாது
ஒன்டென் வழக்குகள் என்பது சிறிய மீறல்களில் தொடர்ந்து ஒன்றிரண்டு முறைக்கு மேல் ஈடுபடும் பின்னணி அற்றவர்கள் மீது பதியப்படும் வழக்கு.ரௌடி லிஸ்ட் என்கிறார்களே அது இதுதான்.இந்த வழக்கு ஒருவர்மீது பதிவாக தாசில்தாரின் ஒப்பம் தேவை.பின்னணி அற்ற புது சண்டிகளை போலீஸார் வளைத்து செட்யூஸ் செய்து தாசில்தாரிடம் அழைத்துச் சென்று பதிந்துவிடுவார்கள்.விஷயம் தெரிந்த குற்றவாளிகள் இதில் சிக்குவதில்லை.குற்றவாளிகள் என்பதில் பெருமிதம் கொண்ட தமிழ் சினிமா அதிகம் பார்க்கும் சிறுவர்களே பின்னணி அற்றவர்களே இதில் சிக்குவார்கள்.வெகு அபூர்வமாக இவர்களிலும் ரௌடிகள் இருப்பதுண்டு
இந்த ஒன்டென் வழக்குகள் மிகவும் சிக்கலானவை.இந்த வழக்கு பதியப்பட்டவரை எந்த சம்பவம் நடைபெற்றாலும் எந்த நேரத்திலும் போலீஸார் தேடுவார்கள்.தேடலாம் .இன்னொரு வாய்ப்புக்கு அவர்களை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று யோசிப்பார்கள்.ஒருவன் தன்னுடைய அனைத்து உரிமைகளையும் இழந்து நிற்கும் வழக்கு இது.
ஒருவர் மீது கொலை வழக்கு இருக்கலாம் ஏனென்றால் எதிராளி இப்போது உயிருடன் இல்லை.வசதி இருக்குமாயின் வழக்கின் போக்கில் பிறரை எதிர்கொள்வது எளிது.கொலைமுயற்சி எனில் எதிரி உயிருடன் இருப்பார் கடினம் என்று சொல்லப்படுவதுண்டு.என்றாலும் எல்லா வழக்குகளிலும் குற்றவாளி , குற்றத்தைப் பொறுத்து தன்னுடைய உரிமைகளைக் காத்துக் கொள்ள வழியுண்டு.ஒன்டென் வழக்குகள் அப்படி அல்ல.ஆளில்லாத இடத்தில் இவர்கள் சென்று பொருந்த வேண்டியிருக்கும்
இதனை ஏன் சொல்கிறேன் என்றால் போலியான குற்றவாளிக்குக் கிடைக்கும் தண்டனைகளே பெரும்பாலும் குற்றத்தை பரிபூரணமாக்குகின்றன.குற்றம் அதனால் மவுசடைகிறது.அழகு பெறுகிறது.போலீஸ் என்கிற அமைப்பு நமது நாட்டைப் பொறுத்தவரையில் குற்றங்களை அழகூட்டும் தன்மை நிரம்பிய பேரமைப்பு.அதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன.நீதியமைப்பின் காலதாமதங்கள் பெரிய குறைபாடுதான் இல்லையென்று சொல்லவில்லை.அதற்காக போலீஸ் அமைப்பிடம் தண்டனை வழங்கும் அதிகாரம் இருக்கவேண்டுமென உயரும் சப்தங்கள் சந்தேகமே வேண்டாம் அவை காட்டுமிராண்டிகளுடையவை
அந்த நண்பரை இப்போதும் எதேச்சையாக சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.அவர் காணாமலாக்கப்பட்ட காவலில் பிடிபட்டு வீடு திரும்பி பதினைந்து ஆண்டுகளும் மேல் ஆகிறது.காலக்குழப்பம் அப்படியே இருக்கிறது.அதே மூன்றுமாதம்.பதினைந்து வருடங்களாக கணவனை குழந்தையாக பாவிக்கும் மனைவியை தெய்வம் என்றால் சிறுமை.அவள் பெருந்தெய்வம்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"