உலகத்திற்கு வெளியில் உள்ள இடம் -13 கவிதைகள்

உலகத்திற்கு வெளியில் உள்ள இடம்



1


முதன்முறையாக பார்த்த மனிதருடன்

பேசிக் கொண்டோம்

அவ்வளவு
புத்துணர்ச்சியுடன் இருந்தார் அவர்
புத்துணர்ச்சியுடன்
பேசினார்
அவரைப் பற்றி எனக்குத் தெரியாது
என்னையும் அவருக்குத் தெரியாது
என்னிடம் புத்துணர்ச்சி கண்டார்
கொஞ்சம் கொஞ்சமாக அவரை எனக்குத் தெரிந்தது
பாதகமாக ஒன்றும் இல்லை
அவருக்கும் என்னைத் தெரிந்தது
பாதகமாக ஒன்றும் கிடையாது
என்றாலும்
முதலில் பார்த்த மனிதனை
தொலைத்து விட்டோம்
சில நாட்களில்
இருவருமே

2

செயல் வேதத்திலிருந்து வருகிறது
1
பறக்கைக்கு வடகிழக்கு
ஆசாரிமார் தெருவிற்கு தெற்குப்பக்கம்
செட்டியாரை
காதலித்து கல்யாணம் செய்து கொண்டேன்
தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் தா ...
என நேற்று கேட்டு வந்தவள்
இசக்கி என்பது விளங்க எனக்கு
இன்று இந்நேரம் வரையில்
ஆகியிருக்கிறது
2
நான் மாரியம்மனாக்கும்
என்று
தாணுமாலயன் சன்னதி முன்னின்று ஒருத்தி
சொன்னாள்
இல்லையென்று நினைத்து
திரும்பி விட்டீர்கள்
அழுதரற்றி சொன்ன கணத்தில்
அவள்
அம்மனாகத்தானிருந்தாள்
3
வேறொரு இடத்தில்
வேறொருவருக்கு
வாழ்க்கைப்பட்டிருக்கிறேன்
என்னையே நினைத்துக் கொண்டிராதே
என்கிறாள் பாருங்கள்
அது
தேவ பாஷை
4
பகவான் பிச்சைக்காரன் வேஷத்தில் வருவாரா
என்று நினைப்பதற்குள்
அவர்
படியிறங்கிப் போய்விட்டார்
5
செயல் வேதத்திலிருந்து வருகிறது
வேதம் பரம் பொருளிலிருந்து வருகிறது
நீயோ நானோ
பொறுப்புதாரி ஆவது
விளைவிற்கு
மட்டுமே

###

3

நானென்பதற்குள் எவ்வளவு அர்த்தங்கள்
1
ஓரிடத்தில் இருக்க முடியவில்லையே
என்றிருந்த கவலை
ஊர் சுற்ற முடியவில்லையே
என்பதாக மாறியிருக்கிறது
2
ஊரூராய்ச் சுற்றி பின் வந்தமர்ந்தால்
இருந்த இடத்தைச் சுற்றிலும்
நின்று கொண்டிருக்கின்றன
எல்லா ஊர்களும்
3
ராமன் எங்கிருக்கிறான் என்றான்
அவனும் உன்னிடம்தான் இருக்கிறான் என்றேன்
அப்படியானால்
ராவணன் எங்கிருக்கிறான் என்றான்
அவனும் உன்னிடம்தான் இருக்கிறான் என்றேன்
ராமனாக இருக்கையில் ராமன்
ராவணனாக இருக்கையில் ராவணன்
அப்படியானால் சீதா எங்கிருக்கிறாள் என்றான்
ராமனாக இருக்கையில்
காதலில்
ராவணனாக இருக்கையில்
அசோகா வனத்தில்
4
மாதவி தெய்வம்
கண்ணகி தெய்வம்
மணிமேகலா
பெருந்தெய்வம்
5
என்னை நிலை நாட்டுவதற்கெல்லாம் ஒன்றுமில்லை
தெய்வங்களின் சூதாட்டம்
நான்
6
பிரித்துப் பிரித்துப் பார்த்தால்
நானென்பதற்குள்
எவ்வளவு
அர்த்தங்கள்
7
நானை விட்டு வெளியேறிய பின்னர்
நானை பார்த்துக் கொண்டிருப்பது
பயங்கர
வேடிக்கை

###

4

சவம் ஆவதுவரையில்
இருப்பேன்
சவம் ஆனதும்
சாவேன்

5

எத்தனை நாட்கள் ஆகும் ?
1
எனக்கு ஒரு குழி
வெட்டிக் கொண்டிருக்கிறேன்
அதற்கு இன்னும்
எத்தனை நாட்கள் ஆகும்
என்பதுதான் தெரியவில்லை
2
இரண்டு குழிகளுக்கு
ஆசைப்பட்டாலும்
ஒரு குழிதான்
கிடைக்கும்
3
எறும்பும் புழுவும் உண்பதற்கு
எவ்வளவு மேன்மை பொருந்திய
வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது ?
மேன்மை இங்கே தங்க
சவம்
மேலே செல்கிறது
4
சந்தனத்தில் வைத்து எரித்தாலும்
சுடலைக்கு ஒரே
மணம் தான்
ஒரே
ஜ்வாலை தான்
5
குழியை எவ்வளவு வடிவாக வெட்டுகிறோம் என்பது
வாழ்வதைப் பொறுத்து
இருக்கிறது
6
மேற்கொண்டு குழிமேல்அமைப்பு
ஏற்படுத்தாத குழிகளே
அழகாக
இருக்கின்றன
அவை பாவங்களைத்
துலக்குவதுமில்லை
துருத்துவதும் இல்லை
7
மழை நாளில் மரணம்
போகிறவனுக்கோ சிறப்பு
அழைத்துச் செல்பவர்களுக்கோ
சிரமம்
8
மரணம் அவ்வளவு எளிமையில்லை
நிறைய காத்திருக்கவேண்டும்

###

6

இன்றைய நிறையே
யாம்
இன்றைய குறையே யாம்
இன்றைய நிறை குறையே
யாம்

7

லாடத்தடம்
சாலையின் கீழ் தாழ்ந்த வீடு
உயர்ந்த சுற்றுச்சுவர்களில் குள்ளத்தின் பித்த நெடி.
காம்பவுண்டு வாலுக்குக் கூன்முதுகு
நவீனசாலையின் மூன்று அடுக்குகளுக்குக் கீழுள்ள சாலையில்
வண்டி மாடுகள் ஓடும் ஒலி
லாடத்தடம்.
இற்றுத் துருவேறிய சுவர்ச்சிங்கம் ஒன்று மரித்துப் போக
மற்றது படுத்துக் கிடக்கிறது.
சிங்கத்தின் மீது கிடந்து வாகன உருளல் மேற்சாலைக்கு
சிங்கம் மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
சாலைகளை சீரமைப்பாரும் யாருமில்லை.
சீரமைக்கக் கேட்பாரும் யாருமில்லை.
முன் கதவு திறக்கபடாத உள்ளிருள்
சிம்னி கொண்டு நடந்த திருக்கல்யாணத்தை
இனி காக்க முற்படவில்லை என்பதை
பாவமன்னிப்பு கோருகிறது.
விழாக்கள்,படுகொலைகள் ,தெய்வகாரியங்கள் எல்லாவற்றுக்கும் சேர்த்து.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் என ஆசி கூறிக் கொண்டிருக்கிறார்
பனையுயர்த்திலிருந்து ஒரு பழைய பாட்டா
அவர் இப்போது தூங்குவதே இல்லை
ஆறடிக் கிணற்றில் நீர்வாரி மாடுகளை நள்ளிரவில்
குளிப்பாட்டிக் கொண்டேயிருப்பவர் அவர்தான் இப்போது
சாமிகள் விட்டொதுங்கி வேறு இடங்களுக்கு நகர்ந்து விட்டார்கள்
தனக்குக் கீழுள்ள சாலையில்
மாடுகளொன்றும் நடமாடவில்லை என்னும் எண்ணத்தில் தீ மிதித்தோடுகின்றன
உள்ளுர் வெளியூர் வாகனங்கள்
டிராபிக் போலீஸ்காரர் முன்னின்று வழி நடத்த
ஒரே விசில் சத்தமாக இருக்கிறது.

8

நேற்றிருந்தவன் இன்றில்லை
1
நேற்று எனக்குள்ளிருந்தவன்
முசுடாக இருந்தான்
அவனுக்கு என்ன பிரச்சனை என்பதே விளங்கவில்லை
தூக்கமின்மையை பிராண்டிக் கொண்டிருந்தவனை
கடைசியில்
கனவின் குகைக்குள் புதைத்தேன்
இன்று காலையிலேயே புத்துணர்ச்சியுடன் இருந்தவன்
ஏராளம் வேலைகள் செய்தான்
புத்தம்புதிதாய் பிறந்த பெண் குழந்தையை பார்த்து விட்டு
வந்தான்
அறிமுகமற்ற தாதியரிடன் நலம் விசாரித்துக் கொண்டான்
சலிப்பே இல்லாமல் பேசிக் கொண்டேயிருக்கிறான்
நாளைக்கு வருகிறவன் எப்படியிருப்பானோ
தெரியவில்லை
எப்படியிருந்தாலும்
இடுப்பில் கொண்டு நடக்கத்தானே
வேண்டும் ?
இப்படியிருந்தாலே
சில நேரம் அலுக்கிறது
எப்போதும் ஒருபோல இருப்பவனை
சுமந்து திரிபவர்கள்
எப்படித்தான்
வாழ்கிறார்களோ
புரியவில்லை
2
நான்
கண்ணாடி பார்ப்பது
இன்று இவன் யாராக இருக்கிறான்
என்பதைத்
தெரிந்து
கொள்வதற்காகத்தான்
3
நேற்று உங்களை சந்தைக் கடையின்
மாடியில் பார்த்தேன்
என்றான் ஒருவன்
அவனை அங்கேயே
விட்டு விட்டு வந்து விட்டேன்
வேண்டுமானால் அங்கே போய்
அவனைப் பார்
என்றேன்
அவனிடம்
4
நீங்கள் யாரையோ போல இருக்கிறீர்கள்
என்கிறாள் மனைவி
அப்படியென்றால் சரிதானே
என்னைப் போலத்தானே
இருக்கிறேன் ?
5
முன்னர் சிலகாலம் உன் அப்பாவைப் போல
இருந்தேன்
பின்னர் சிலகாலம் உன் காதலனைப் போல
இருந்தேன்
பிறகு கணவனைப் போல
இருந்தேன்
இப்போது
என்னைப் போல
இருக்கிறேன்
இருந்ததில் இதுதான்
எளிதாக இருக்கிறது
6
எதிரி எதிரி என்கிறார்கள்
நாளைக்கே நமக்குள்
அவன்
நுழைந்து விட்டால்
என்ன செய்வது ?

###

9

எட்டாத உயரம்
1
ஒவ்வொரு நாளையும்
ஏதேனும் அபூர்வம் நடக்கும் நாளாகவே
எதிர்கொள்கிறேன்
அது
சட்டைப் பையில் ஒரு வெட்டுக்கிளி
வந்து அமர்வதாகவும்
இருக்கலாம்
களங்கமற்ற புன்னகையைத் தந்து
நீ திரும்பி
செல்வதாகவும்
இருக்கலாம்
2
இரண்டாவது முறை நீ
திரும்பி பாராமல்
போவதால்
முதல் முகம்
அழுத்தமாக பதிந்து
விடுகிறது
3
பறவைகளிடம்
இயங்கும் காலத்திற்கு
அவ்வளவு
துல்லியம்
உன் பிரியத்தின்
வாள்முனை போல
4
இந்த நாளை இறைவனிடம்
சமர்ப்பிக்க
ஏதேனும் அதிசயம் அவசியம்
அது முதலில் பூத்திருக்க வேண்டும்
5
தரையெல்லாம் ஊர்ந்து கொண்டிருக்கும்
தீனியெறும்புகளை
தலையில் மிதிக்காமல்
தாண்டித் தாண்டி
வந்து கொண்டிருப்பதெல்லாம்
நான்
உன்னிடத்தே சென்று சேரத்தானே
தாயே
6
இன்றைய நாளின் முடிவில்
மடியெல்லாம் நிரம்பியிருப்பது
நீ தந்து சென்ற அன்பே
7
அன்பெல்லாம் வண்ணத்துப் பூச்சிகளாகவோ
தேன் மதுர பூக்களாகவோ
மாறிவிடுகின்றன
8
எட்டாத உயரம் என்று ஒன்று
உண்டு
அதுதான் நீ
எட்டுகின்ற
உயரம்

###

10

எனக்கு சொல் உயரத்தில் இருந்து கிடைக்கிறது
1
இந்த சாலையிலிருந்து
அடுத்த சாலைக்கு
அனைத்தையும் மாற்றிக் கொண்டேன்
விதி விலகி
வழிவிட்டது
2
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளாமல்
வெறுமனே பேசிக் கொண்டிருப்பவன் பீடை
3
ஐந்தடி தூரத்தில் இருக்கலாம்
உனக்கான சுனை
4
ஊழ் நிரந்தரமாக பற்றிக் கொண்டிருப்பதில்லை
தொட்டு எடுத்து
விடத் தெரிய வேண்டும்
அவ்வளவே
5
ஒவ்வொன்றையும் மாற்ற வேண்டும்
ஒன்றை விட்டு வைத்தாலும் அது வந்து
மற்றதை
பிடித்துக் கொள்ளும்
6
மாற்றிக் கொண்டிருப்பவனுக்கு மட்டுமே
ஒவ்வொன்றும்
அமுதென தோன்றும்
விட்டதும் அமுதம்
பட்டதும் அமுதம்
இன்று நின்று பார்ப்பதும்
அமுதமே
7
உன்னை மாற்றி கொள்ள முடியவில்லையெனில்
எதற்காக
சித்தாந்தம் பேசித் திரிகிறாய் ?
மாற்றிக் கொள்ள இயலாமைக்கா
இவ்வளவு காரணங்கள்?
8
எனக்கு சொல் உயரத்தில் இருந்து
கிடைக்கிறது
எழும்பி விடுகிறேன்
அடுத்த சொல் கிடைக்கும் போது
பறந்து
செல்கிறேன்
9
என் பொறுப்பு எதையும்
நான் ;
என் பொறுப்பில்
வைத்துக் கொள்வதில்லை
10
பகவான் உனக்குள் நுழைவதற்கு
ஒரு சிறு துவாரத்தையேனும்
திறந்து
வைத்துத்தான் பாரேன்
நான் சொல்வதெல்லாம்
விளங்கி விடும்
11
எப்போது பார்த்தாலும் நிம்மதியாக இருக்கிறீர்கள்
என்கிறாய் ...
இடுப்பிற்கு கீழே
எனது கால்களை நீ அறிந்ததில்லை
சதா நீருக்குள் அவை
ஓய்வின்றி
நீஞ்சுகின்றன
12
உன்னிடம் எல்லாமே
இருக்கின்றன
எடுத்து வைத்து சாப்பிடுவதையா
விதி நின்று
தடுத்து விடும் ?

###

11

ஏராளம் நான்களில் ஒரு நான்
1
நான் இல்லாத போது
நான் இருக்க மாட்டேன் தானே
இல்லாத போது இருப்பதைப் போல
வாழ்தல்
எவ்வளவு
சுகம்
2
இல்லாத போது வருகிற நிலவு
இருக்கும் போது வருகிற நிலவைக் காட்டிலும்
பிரகாசமானது
இப்போதெல்லாம்
இல்லாத போது வருகிற
நிலவைத்தான்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
3
இல்லாத போது தட்டியெழுப்பும்
குயில்கள்
இனிமையானவை
இல்லாத போது இசைக்கும்
கடல்
இனிமை
4
இருப்பது என்பது
வெறும் சாக்குபோக்கு தானே
இல்லாமல் இருப்பதுதானே
இயல்பானது ?
5
இல்லாத போது வருகிற
சூரியன்
முதல்
ஆதித் தகப்பன்
6
இருப்பதால் ஏதேனும் லாபமுண்டா
இல்லாதிருப்பதின்
சுகம் இல்லையானால் ?
7
ஏராளம் நான்களில்
ஒரு நான்
ஏராளம் நான்களிலும்
உண்டு
8
இல்லாதிருப்பதே
பெரும் போதை

###

12

ஆசை அவளுடைய உயரமிருக்கும்
1
காலிரண்டை நீட்டி
செல்லக் குழந்தையை அதன் மேல் அகட்டி
அந்த அறையிலிருந்தும் சென்ற அறையிலிருந்தும்
கொண்டு வந்த
சோப்புத் துண்டுகளை இணைத்து
ஆசை தீருகிறதா பார்
ஆசை தீருகிறதா பார்
எனக் கேட்டு குழந்தையை
தேய்த்துக்
குளிப்பாட்டுகிறாள்
தெய்வம்
குனிந்தமர்ந்து
குளிக்கிறது
துண்டு துண்டு சோப்புகளையெல்லாம்
எதற்காக
எடுத்து வருகிறேன்
என கண்ணாடியில் கேட்கையில்
அவள் முகம்
பூரித்தடங்குகிறது
ஆசையாசையாக அவள் அறையெங்கும்
சிதறிக் கிடக்கின்றன
துண்டு சோப்புகள்
நிலம் பூத்திருக்கும்
நீல வண்ண
மலர்களை ஒப்ப
2
மடியெல்லாம் நீல பூக்களால்
நிறைந்தவள்
ஒருத்தி
உலகத்திற்கு வெளியில்
தனித்திருக்கிறாள்
உலகத்திற்கு வெளியில்
சென்றால்
பார்க்கக் கூடிய
இடம் அது
3
உலகத்திற்கு வெளியில் உள்ள இடம்
இருப்பதும்
உலகத்திற்கு
உள்ளேயே
4
காத்திருந்து
உலகத்திற்கு
அழைக்கிறீர்கள்
காத்திருந்து
அவள்
உலகத்திற்கு
வெளியில்
அழைக்கிறாள்
5
நீதிமான்களை அவள் பொருட்படுத்துவதில்லை
வெப்பம் ஏறினால்
எல்லோருக்கும் பொதுவாக பெய்யும்
பேய்மழை என்பதை
அவள் அறிவாள்
6
ஆசை
அவளுடைய
உயரமிருக்கும்
7
எந்த உயரமும் அதிசயமில்லை அவளுக்கு
தனது சொந்த உயரத்தைத் தவிர்த்து

###

13

எனக்குப் பிடித்தமாதிரியான பெண்களின்
தன்மை
இவளிடமும் உண்டு
ஆனால் பாவம்
என்னிடம்
காட்ட முடியாது
அவளுக்குப் பிடித்த மாதிரியான ஆண்களின்
குணம்
என்னிடமும் உண்டு
ஆனால் பரிதாபம்
அவளிடம்
காட்ட வராது





Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"