எனக்கு வந்தா ரத்தம் ,எதிரிக்கு வந்தா தக்காளிச் சட்டினி ?
எனக்கு வந்தா ரத்தம் ,எதிரிக்கு வந்தா தக்காளிச் சட்டினி ?
குண்டர் சட்டம் சரிதான் என்று மட்டுமல்ல,தேச பாதுகாப்புக்கு அவசியம் என வாதிடுகிறார் ஜென்ராம்.புதிய தலைமுறையில் வாதிட இதற்கு ஹென்றி டிபேனை அழைக்கவில்லை.அவருக்கு தன் வாய்கொண்டு கீறிய கோடுகள் இருக்குமாகையால் அதனைத் தாண்டுவதற்கு ஏராளம் பயிற்சிகளும் ஜாலங்களும் அவசியப்படும்.ஒருபடி மேலே போய் ஜனநாயகத்தைக் காத்திட குண்டர் சட்டம் அவசியம் என அவர் பாய்ந்து செல்கையில் அப்படியே புல்லரித்தது..அவர் ஒரு இடதுசாரி ஊடகவியளாளர்.
எனக்கு இந்த இடது முற்போக்குகள்,தி.க,தி.மு.க அல்லகைகள்,லிபரலஸ் ஆகியோர்
நம்முடைய சமுகத்தில் நாலாந்தரமானவர்கள்
என தோன்றுவதற்கு இந்த இரட்டை நிலையே பிரதானமான காரணம்.
கிஷோர் கே சாமியோடு உடன்படும் விஷயங்களும் அல்லாத விஷயங்களும் எனக்கு உண்டு.அவர் ஒரு பைத்தியக்காரர் அல்லர்.குற்றவாளியும் அல்லர்.அவருக்கு தெளிந்த அரசியல் பார்வைகளும் ,சார்பு நிலைகளும் உள்ளன.ஒரு அரசு இப்போது அவரை குண்டர் சட்டத்தில் சிறை பிடிக்கலாம்,மற்றொரு அரசு அவருக்கு பிறிதொரு சந்தர்ப்பத்தில் அமைச்சர் பதவி கூட வழங்கக் கூடும்.ஏனெனில் அவர் அரசியலாளர்.திருமுருகன் காந்தி போல ,திருமாவளவன் போல ,வேல்முருகன் போல அவரும் பெண் பழிச் சொற்களை உபயோகிக்கிறார்.பலசமயங்களில் இங்குள்ள பல அரசியலாளர்களையும் போலவே எல்லை கடக்கிறார்.இவை அனைத்தையுமே அவர் இங்குள்ள பிற அரசியல் தரப்புகளைப் போலவே ,தான் சார்ந்த அரசியல் நிமித்தமாக மட்டுமே செய்கிறார்.அதனை சரியென்று நான் ஏற்றுக்கொள்ளவில்லை.அதனைத் திருமா செய்தாலும் தவறு என்றுதான் சொல்வேன்.தீப்பொறி ஆறுமுகம் போன்ற தி.மு.க அல்லக்கைகள் செய்யும் போதும் தவறு என்றே சொல்லியிருக்கிறேன்.வேல் முருகன் செய்தாலும் தவறுதான்.ஆனால் அரசியல் எதிரிகளை பழி செய்வதற்கு குண்டர் சட்டம் பிரயோகமாகுமெனின்,இன்று பிரயோகம் செய்பவர்களுக்கும் நாளை அது பயன்படும் நிலையே தமிழ் நாட்டில் இருக்கிறது.
குண்டர் சட்டத்தை இன்று ஆதரிக்கும் இடதுகள் நாளையே கூட ஒரு சமயம் அலறுவார்கள்.சந்தேகமே வேண்டாம்.
குண்டர் சட்டத்தின் நடைமுறைகள் அனைத்துமே ஜன நாயகத்திற்கு எதிரானவை.நீதிக்குப் புறம்பானவை.குற்றவாளிகளுக்கே அது முறையான வழிமுறை அல்ல எனும் போது அரசியல் எதிரிகளுக்கு, கொள்கை எதிரிகளுக்கு அதனை பிரயோகித்துப் பார்ப்பது ஒரு போதும் நல்ல முன்னுதாரணம் ஆகிவிடாது.சட்டமும் ,நீதியும் எனக்கு ஒன்றாகவும் எதிரிக்கு இன்னொன்றாகவும் இருப்பதை ஜனநாயக வழிமுறை ஆகாது.
இன்றைய இடது ஊடகங்கள் ஜெயலலிதாவே இந்த குண்டர் சட்டத்தில் புதிய திருத்தங்களை சேர்த்தவர் என வாதிடுகிறார்கள்.இவர்கள் தங்கள் அரசியல் வழிகாட்டியாக ஜெயலலிதாவைத் தான் போற்றுவார்கள் எனில் அந்த அம்மையார் பெயரில் பல் கலைகள்,நூலகங்கள் அமைக்கட்டும்.ஒருவேளை அது பெண்ணைப் போற்றுவதாகவும் பெண்ணியத்தைக் காப்பதாகவும் கூட இருக்கலாம்.வாயுள்ளவர்களின் நா வாய் அப்படியும் உருட்டும் இப்படியும் உருட்டும் தானே ?
நடுநிலையான பதிவு.
ReplyDelete