14 Poems


 1

நான் யாருக்கும் போட்டியில்லை

என்னிடம் போட்டியிட்டால் நீங்கள்
விறுதேதான்
போகவேண்டி இருக்கும்
ஒன்றுமே
நடைபெறாது

2

அவற்றில் இல்லாதது
1
அத்தனை
பொருட்களையும்
எனது அறையில் வந்து
விசாரித்துக் கொண்டிருக்கும்
வயோதிகர்
அதன் வழியே
அவையல்லாத வேறொன்றை
அறிய விரும்புகிறார்
ஏதேனும் தடயம்
அவற்றில்
இருக்கிறதா என
நானும்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அவற்றில்
இல்லை
அவற்றின்
தடயம்
2
கடுமையான
சுய நலம்
கடுமையான பொது நலம் போல
பாவனை
செய்தபடி
இருக்கிறது
3
வீட்டின் புண்கள்
வெளியே
இறங்கியதும்
சாலை விதிகளை
மீறி நின்று
கனைக்கின்றன
4
ஒத்தையடிப்பாதையில்
தென்படும்
கடைக்கு
பலபக்க
வாசல்

###

3

ஒருவர் இறப்பதற்கு
ஒத்துழைத்துத்தான் ஆகவேண்டும்
எவ்வளவு தூரத்திற்கு தீவிரமாக
அதை எதிர்ப்பதற்கு ஒத்துழைத்தாரோ
அதே அளவுக்கு தீவிரத்துடன்
இறப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்
அப்போதுதான்
மருந்துகளை குறைப்பார்கள்
அறுவை சிகிழ்ச்சைக்கு தயாராக
மாட்டார்கள்
எப்படியும் வேறு வார்த்தைகளில்
என்றாலும்
ஒருவரிடம்தான்
கேட்பார்கள்
எதற்கு ஒத்துழைக்கப் போகிறீர்கள் என்று.
இறப்பிற்கா ? இறப்பை எதிர்ப்பதற்கா ?
பதில்படியே நடந்து கொள்வார்கள்
ஒரு மாற்றமும் இல்லை
எல்லோரிடமும்
கேட்கப்படும் சாதாரணமான கேள்விதான் இது
ஒருவரிடம்
கேட்கப்படுகையில் திகைக்க வேண்டியதில்லை
இல்லையெனில்
நீட்டிக் கொண்டே போவார்கள்
கடினமாக இருக்கும்
மேலும் ஒருவர்
பண்பட்டவரா இல்லையா
என்பதை அறிவதற்கும்
இந்த ஒரு வழி மாத்திரமே
இருக்கிறது

4

சூத்திரம்
1
சுயநலன் தான்
வாழ்க்கை என்பதை
எவ்வளவு தாமதமாக
கண்டுபிடித்திருக்கிறேன்
என்றான்
ஒருவன்
அப்படியானால்
இன்னுமிவன்
சுயநலத்தைக் கைவிட்டால் தான்
மகிழ்ச்சி என்பதை அறிய
எவ்வளவு தூரம்
செல்ல வேண்டியிருக்கும் ?
2
அறிந்த ஒன்று
அறிந்திராத ஒன்றின்
முதற்படி
3
சூத்திரம் ஆனதுமே
உடைந்துவிடுகிறது
சூத்திரம்
4
அறிய அறிய
ஆழம் தெரிகிறது
5
ஆழம் தெரிந்தால் என்ன கிடைக்கும் ?
யோகம்
கிடைக்கும்
எப்போது
என்பதை மட்டும்தான்
கணிக்க இயலாது

###

5

ஒருவிதமான மனநிலைக்குள்
இருக்கும் போது
அந்த மனநிலைக்கு உகந்ததெல்லாம்
சரியென்றே படுகிறது
அந்த மனநிலைக்கு உட்பட்டதெல்லாம்
சரியென்றே ஆகிறது
சரியான இடத்திற்கு
வந்திருக்கிறோம்
என்றே தோன்றுகிறது
அந்த மனநிலைக்கு உகந்தவை
இன்பமென ஆகின்றன
அந்த மனநிலைக்கு
பக்கத்து வீட்டில் வேறொருவர் இருக்கிறார்
இந்த மனநிலையை
ஒரு வெற்றிலையில் மடித்துத் தின்று
துப்பி விடக் கூடியவர்

6

ஒரு சிறு இலை விழுந்தால்
இறந்துவிடுவோம்
எனப் பதறும் எதுவும்
இருப்பதற்கு உரியது அல்ல.
தன்னை நோக்கி எழும்
சிறு கேள்விகளுக்கும்
திரளும் தன்னிலை இரக்கத்திற்குரியது
அரண் கட்டிக் கட்டி எழும் கோபுரங்களை
உடைப்பதற்கே
அரசு
தளிர்ப்பது

7

எதனைக் கேட்டாலும்
அருகே திரும்பி வேறொரு முகத்தைப் பார்த்து பேசத் தொடங்கும் ஒருவன்
அவர் என்ன நினைக்கிறார் இவர் என்ன நினைப்பார்
என கருதும் ஒருவன்
ஒன்றும் கருதாமல்
மரித்தான்
கட்டை அடுக்கி வைக்கப்பட்டது
அதன் மேல்
அவன் கட்டை
ஏற்றி வைக்கப்பட்டது
என்னம்மோ என்னைய்யோ
கொள்ளிக்குடம் உடைய
ஒரேயொரு கணம்
கண்கள் சொருக விழித்தவன்
அவர்கள்
என்ன நினைப்பார்கள்
என முனகியவாறு மீண்டும்
படுத்துக் கொண்டான்
விழித்தவுடன் எழுந்திருந்தால்
கட்டை எரிந்திருக்காது

8

யாருடைய திரு உருவையும்
தினந்தோறும் பார்த்துக் கொண்டிராதே
உன் திரு உரு
அழியும்

9

மேலிருந்து
விழும் சொட்டு நீர்
மெல்ல வாய்பிளந்து உறிஞ்சிக்
குடிக்கிறது தண்ணீர் தொட்டி
பாறையின் மேலிருந்து விழும்
பெருவெள்ளம்
முதலில்
கைவிரித்து
அணைத்து
எடுத்துக் கொள்கிறது குளம்
தன் நீரால் தன்னை மூடி
தன்னுடலால்
தான் சுருண்டு
லாவகமாய்
படுத்திருக்கும்
ஏரிக்கு நிகர்
ஏரியன்றி வேறில்லை

10

நான் உள் ஆழம் பார்ப்பதில்லை
தெரியாது
ஆனால் வெளியாழம் அறிவேன்
அரச மரமென்றால் இவ்வளவு
ஆலமரமென்றால்
இவ்வளவு
பனையுயரம் இப்படி
மற்றபடி உள்ளே வைத்திருந்தால்
எனக்குத்
துலங்குவதில்லை
நீ
வெளியாழம் காட்டு
கவிழ்த்தியிட்டு
நான்
உள் உயரம்
அறிந்து கொள்கிறேன்

11

கடந்துபோனபிறகு நின்றுநாம்
திட்டும்போதெல்லாம்
நம்மைத்தான்
திட்டிக் கொள்கிறோம்
கடப்பதற்கு முன்பிருந்த
நம்மை
துள்ளத்துடிக்க
கண்கூடாக
உள்ளிருந்து
கண்ட சாட்சியல்லவா ?

12

ஒரு நாள் எப்படியோ
மிஸ்
ஆகிவிட்டது
தினசரியின் நாள்காட்டியை
புரட்டிக் கொண்டேயிருந்தேன்
எப்படி
போனது
நினைவில் நில்லாத ஒரு நாள்
போதையில்லை
பிராந்தில்லை
கிறக்கம் இல்லை
நோயுமில்லை
இப்படியொரு நாள்
எல்லா நாளும் ஆகக் கூடுமா
ஏதேனும் ஒரு நாளில் ?
அப்படியொரு நாளுக்குள்
அமிழ்ந்து
திரும்பி
எழக் கூடுமா ?
மிஸ் யூ வான நாளை
தேர்ந்தெடுக்கக் கூடுமா ?
நம்மால் அப்படி என்னதான்
கூடும் ?
குளத்தில் நீர்மூழ்கி
ஒருநாள் தொலைந்து
எழும்பும்போது
இரண்டிற்கும் இடைபட்ட நாள் இல்லாத
மறு நாளுக்கும்
மறுநாள்
தங்காத ஒரு நாளின் மீது கடக்
என ஏறி
நிற்கிறது இந்த நாள்
அந்த இனிய நாளுக்குப் பெயர்தான்
என்ன ?

13

ஓடும் பேருந்தில்
ஜன்னல் வழியே வந்து செல்லும் பாடல்கள்
துக்கம் சிதறுபவை
தெருவில் ஒலிக்கிற பழைய பாடல்கள்
அப்படியே தூக்கி
பாலியத்தின்
ஓரிடத்தில்
கொண்டு நிறுத்துகின்றன
பலசமயம் கசந்த இடம்
கசந்த தேன் போலும் இனிக்கும் இடம்
மயங்கி முன் எழுகிறது
அந்த இடத்தோடு தொடர்புடைய
யாரும்
இப்போது என் அருகில் இல்லை
சிலர் இல்லவே இல்லை
ஏன் அந்த இடம் கூட இப்போது இல்லை
நான் தரையிறங்கிய இடம்
அவ்வளவு
பரிசுத்தமாக இருக்கிறது

14

தன்னையே
பண்டமென நினைத்திருக்கும் பெண்
யாரேனும் பறித்து தின்னக்கூடும் என பயந்து
நடந்து செல்கிறாள்
யாரேனும் திருடக்கூடும்
என நினைத்துச் செல்கிறாள்
திருடட்டும்
தின்னட்டும்
என்றும்கூட
அவள்
நினைத்துச் செல்கிறாள்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"