கடல் திறத்தல் - லக்ஷ்மி மணிவண்ணன்

 கடல் திறத்தல்





முதலில் ஒரு மணல் வீட்டைக்
கட்டிமுடித்த குழந்தை
பிறகு
அதற்கொரு தோட்டம் அமைத்தது
மெல்லிய அலைகள்
கட்டிய வீட்டை எடுத்துக் கொண்டதும்
கடலுடன்
விளையாடத் தொடங்கியது
குழந்தை
அடுத்து ஒரு கிணறு அமைத்தது குழந்தை
சற்றே பெரிய அலையால் கிணற்றை
வாரிக் குடித்துச்
சென்றது கடல்
மீதமிருந்தது
பருகியது போக மிஞ்சிய நீரூற்று
அதை அப்படியே விட்டுவிட்டு
கட்டி எழும்பியது
பள்ளி மைதானம்
இருவரும் விளையாடுகிறார்கள்
குழந்தைக்கு தன்னைத் திறந்த
கடலுக்குள்
குழந்தையின் கரத்தை பற்றியவாறு
குளிக்கிறேன்
இறங்காமல் குளிப்பது
இப்படித்தான்
போலும்

2

பொழிமுகம்
கடற்கரையைத் தாண்டும்
தணிந்த அலைகள்
ஒவ்வொன்றாகப் பின்தொடர்ந்து
வருகின்றன
வரும் ஒவ்வொரு அலையும்
ஒடிவந்து பின் திகைத்து நிற்கும் நதியை
காயலில் சந்தித்து
கைபிடித்து
கடலுக்குள்
அழைத்துச் செல்கின்றன
மணப்பெண்ணின் தயக்கத்தோடு
கடளுள்
நுழைந்து கொண்டேயிருக்கிறது காயல்
தளும்பி மிளிர்கிறது
கடல்

3

தொலைவு சென்று மீண்டும்
வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்
சில பொருட்கள்
இடம் மாறியிருந்தன
பசு பின்னகர்ந்து மீண்டும் வந்து மோப்பம்
செய்கிறது
தாவர மூடுகள்
எண்ணையற்ற தலைவிரி
கோலத்தில்
இருந்தன
மறக்க முயன்று
எட்டிப் பார்க்கும்
பல்லிகள்.
சாமிப்படம் விலகியிருந்தது
எடுத்து சரியான திக்கில்
வைத்தேன்
இப்படி மொத்தத்தில் இரண்டடிக்கு
அப்பால்
நகர்ந்திருந்தது
என் வீடு

4

மரணிக்கும்போது
ஒன்று வெளியேறுகிறது
இருக்கும்போது
அனைத்தையும் தாங்கிய ஒன்று
வெளியேறியதும்
அனைத்தையும்
சக்கை என மாற்றும் ஒன்று
எச்சமிட்ட பறவை செல்வதுபோல
அனைத்தையும் பீயாக்கிவிட்டு அது
கடந்து செல்கிறது
எதையெல்லாம் முக்கியம் என்றதோ
அனைத்தையும் பீயாக்கிவிட்டு
கடந்து செல்கிறது
இந்த பூமியையே
பீயாக்கி
வெளியேற்றிவிட்டு
கடந்து செல்கிறது
குமிழ் உடைந்து வெளியேறுதல் போல
சிறுவொலி எழுப்பி
அது கடந்து செல்வதை
அருகிருந்து காண
நன்றாகத்தான் இருக்கிறது
ஆனாலும்

5

என்னுடைய
உலகம்
மிகவும் சின்னது
எல்கைகள் அதனினும் சிறியவை
வடமேற்கில் குபேரன்
தென்மேற்கில் பகவதி
வடகிழக்கே கால பைரவன்
தென்கிழக்கே இந்திரன்
மையத்தில் நான்

6


சென்னை

என்னுடைய புலன்களை எழுப்ப இயலாவண்ணம்
இந்த நகரம்
சோர்ந்திருக்கிறது
ஒருசமயம் கவர்ச்சிக்கன்னியின்
நடனமிட்டு
தூங்கவிடாமற்செய்த
அதே பெருநகரம்தான்
இது
ஆயிரம் விளக்கிட்டு
நடித்த இதன் நடிப்பில்
வலிப்பு ஏற்பட்டு
வீழ்ந்திருக்கிறேன்
வேண்டாம் எனச்சொல்லி
வெளியேறியிருக்கிறேன்
இப்போது என்னுடைய இடுப்புக்கும் கீழ்உயரமுள்ள
அது
மண்டியிட்டு
நிற்கிறது
என்னிடம் பேச அதற்கு
யாதொன்றும் இல்லை
என்னுடைய வார்த்தைகளை
மந்திரம் போல
கேட்கிறது
எப்போது வேண்டுமாயினும் வெளியேறவேண்டிவரலாம் என்று
அத்தனை வெற்றி வினாயகர்களும்
எழுந்து நிற்கிறார்கள்
நான் திரிசடை தோய்ந்து
சுற்றியலைந்த நாட்களில்
சிதறுத் தேங்காய் தின்னக் கொடுத்தவர்கள்
ஆயிரமாயிரம் விழாக்கள்
ஆயிரமாயிரம் துஷ்டிகள் பார்த்து
இரண்டும் ஒன்றெனக் காணும்
பாழ்மண்டபம் போலும்
சாப்பாட்டு மேஜையில்
அலுப்புறுகிறார்
ஆயிரமாண்டு மூத்த
பெருநகரக்கிழவி
நகரத்து அரசமரங்கள்
அறியாத பாவத்துக்கு
சுற்றி சுவர் விலங்கிட்டு
அன்னியமாகி நிற்கின்றன
நரம்புவாதக்கைகளால் தீபமேற்றுகிறார்
ஆச்சாரியார்
பார்த்தசாரதிமட்டும்
இன்னும்
கலங்கவில்லை
இன்னும் இன்னும் தாங்குவார்போல
வண்ணம் பூசி நாளான இந்த நகரம்
ஒட்டுமொத்தமாக விலைக்கு விற்கப்படும்
என்கிற தட்டிகளோடு
ஆங்காங்கே
தொங்கிக் கிடக்கிறது

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"