எட்டு கவிதைகள்


1






அன்பு எப்படிக் கிடைத்தாலும்

வாங்கு
எதிர்பார்த்துக் கிடைத்தாலும் வாங்கு
ஏமாற்றிக் கொடுத்தாலும் வாங்கு
போலியாகக் கிடைத்தாலும் வாங்கு
பொய்யென்றாலும் வாங்கு
விலைக்குக் கிடைத்தாலும்
பரவாயில்லை
வாங்கி வைத்துக் கொள்



2

நீங்கள் ஒரு காரணமும் இல்லாமலேயே
தொடர்பற்று
ஒருவரை
உங்களுக்குள்
வெட்டியாக
கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டேயிருக்கிறீர்கள்
என வைத்துக் கொள்ளுங்கள்
அது வெளியில் கூட தெரிய வேண்டியதில்லை
வளர்ந்து
நீங்கள் கழுவி ஊற்றிய நீராலான
சுவர்
எழும்பிக் கொண்டிருக்கும்
உங்களுக்குள்
அந்தப்பக்கம் பார்க்க இயலாத
அந்த சுவர்

ஒரு நீர்ச் சுவரால்
இருவரும்
பிரிக்கப்பட்டிருப்பீர்கள்

பிறகு நான் கழுவி ஊற்றிய சுவர்தான்
இடையிலிருப்பது என்று நீங்கள் கதறினாலும்
யாரும் நம்ப மாட்டார்கள்

கழுவி கழுவி ஊற்றி
உருவாக்கும் சுவர்
அத்தனை பெரியது.

3

கடல் தானாக வரும்

1

கடற்கரையில் இருந்து
சிப்பி கொண்டு வந்தேன்
சங்கு கொண்டு வந்தேன்
சிறுமணல் கொஞ்சம்

கடலும் உடன் வந்ததை
கவனிக்கவில்லை

நெடுநாள் கழித்து
சிப்பியை தொட்டேன்
அலையடித்தது
சங்கில் கடற்காற்றின் விசில்
சிறு மணலில் கடல்

அப்போது பார்த்தது
எப்போதோ வருகிறது
எப்போதோ பார்க்கத் தானா
அப்போது காண்பது ?

2

குடிகாரன் பார்த்த சாமி
தரிசனம் தந்தார்
மங்கலாக விஸ்வரூபத்தில்
நடுங்கிய வண்ணம் .

அப்போது
குடிகாரனுக்கு அருளிய
சாமியும் மிதமிஞ்சிக் குடித்திருந்தார்

3

என்ன செய்வது இப்படி இருக்கிறது
என்றாள் ஒருத்தி
இப்படியிருப்பதுதானே
உனக்கு சௌகரியமாக இருக்கிறது
என்றானொருவன்

இப்படியிருப்பது மாறினால் எப்படியிருப்பாயோ
அப்படியிருக்கத் தொடங்கு
என்றார் பகவான்

இப்படியிருந்தால் இப்படித்தானிருப்பாய்
என்றானொருவன்

அப்படியிருந்த பின்னர் இருவரும்
வந்து சேருங்கள்
என்கிறார் பகவான்

4

முள் குத்துவது போலும் இருக்கின்றன
உங்கள் வார்த்தைகள்
குத்திக்கிழிக்கட்டும்
உள்ளிருக்கும் தேனை மீட்க
வேறு என்ன தான் வழி ?

5

என்னை என்னை புகார் சொல்லாதே
நான் வழியில் நிற்பவன்
உள்ளே போ என்று சொல்வது என் கடன்
உள்ளே இருப்பதே உட்பொருள்
உள்ளே இருப்பது
உனக்குள்ளும் இருக்கிறது
உனக்குள்ளிருப்பது தெரியவில்லையானால்
உள்ளே இருப்பதும் தெரியாது
வெளியேறு
இனி அடுத்தவருக்கானது
நேரம்

6

யாருக்கும் இல்லையென்று சொல்லாதவன்
இறைவன்
நீ எப்படி கேட்டாயோ
என்னவோ ?

குடிபோதையில் கேட்டிருந்தால்
அவனும்
குடிபோதையில்
தருகிறான்

கேட்கத் தகாததைக் கேட்டிருந்தால்
கேட்கத் தகாததை தந்து விடுகிறான்

அனைத்தையும் கேட்பவனுக்கு
அள்ளியெடுத்துக் கொள்ளச் சொல்லி
பிராந்தைத் தருகிறான்

அல்லல் கேட்டவனை அல்லல்படுத்துகிறான்
ஆகாரம் கேட்டிருந்தால்
அமுது செய்கிறான்

அறிந்து கேட்பானென்றால் மட்டும்
முன்னமே செய்கிறான்

7
முன்னர் வினைகளை ஒன்றுமே செய்ய இயலாது
கேட்கும் அத்தனைக்கும் அடியில்
அது இருக்கும்
விடை கேட்கும்
துடிகொள்ளும்
வலியேற்கும்


8

முதலில் கடற்கரைக்கு போ
சிப்பி எடுத்து வா
சங்கு எடுத்து வா
பின்னொரு நாளில் கடல் தானாக வரும்

###

4

நான் கைவிடப்படும்போது
கைவிடுவார்கள் என நினைத்தில்லை
சேர்த்துக் கொள்ளும் போது
சேர்த்துக் கொள்வார்கள் என நினைத்ததில்லை
பகைத்தபோது பகைப்பார்கள்
என அறியவில்லை
அனாதையாகத் தெருக்களில் சுற்றியபோது
அணைத்துச் சோறிடுவார்கள்
என்பது
புதுமையாக இருந்தது

ஒவ்வொன்றும் புதுமை
கசப்பும் புதுமை
கனியும் புதுமை

தூணை மலையென்று நான்
கட்டும்போது
சத்தியமாக
இத்தனைபேர் உடன் நிற்பார்கள்
என்பது எனக்கு
தெரியவே
தெரியாது

5

தன்னை பத்திரமாக
ஒவ்வோரிடத்திற்கும் அழைத்துச் செல்பவன்
தன்னையே
எடுத்துக் கொண்டு
திரும்புகிறான்

சேர்ந்து கொண்டிருக்க வேண்டிய
வெட்ட வெளி
ஒவ்வோர் இடத்திலும்
அவனைப் பற்ற முயன்று
தொப்பென்று
கீழே விழுகிறது

ஏதோ சத்தம் கேட்கிறதே
என்று திரும்பி பார்க்கும்
வேறு ஒருவனிடம்
சென்று ஒட்டிக் கொள்கிறது அது

ஒவ்வொரு முத்தாக
நான் எடுத்துக் கொண்டது
இப்படித்தான்

6

மரணத்திற்கு முந்தைய தினத்து
மகளின் திருமணக் காட்சி

குளுக்கோஸ் புட்டி
சொருகிய கோலத்துடன்
அலங்கரித்து
அவனை அழைத்து வந்திருந்தார்கள்

மேள தாளங்கள்
மங்கலாகக் கேட்க
கனவுச்சாயல் நிரம்பியிருந்தது
மணமேடை

கையைப் பிடித்து
கையில் ஒப்படைத்தான்

அவன் காணவிரும்பிய
காட்சியை
உடன் அழைத்துச் செல்லும்படிக்கு
கடைசியில் அவனுக்கு
அருளப்பட்டது

மங்கலாகத்தான் இருந்தது
இருந்தாலும் என்ன ?
இறுதியஞ்சலியில்
இந்திரனைப் போல காணப்பட்டான்
என்றார்கள்

7

ஒவ்வொருவரின் முதுகிலும்
அடித்து வீழ்த்த
ஆயிரம் கரங்கள்
அறியாமல் கடப்பவனை
அடிக்க முடிவதில்லை

திருடிச் செல்ல
ஆயிரம் கண்கள்
தெரியாத ஒருவனை
திருட முடிவதில்லை

8

ஒரு சருகின்
இடைவெளி
போதும் போலும்
ஒரு தப்பித்தலுக்கு







Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"