18 கவிதைகளின் தொகுப்பு - லக்ஷ்மி மணிவண்ணன்


18 கவிதைகளின் தொகுப்பு - லக்ஷ்மி மணிவண்ணன்




1

சிறிதுக்கு

வருவீர்கள்
அப்போது தெரியும்
சிறிது எவ்வளவு பெரியது
என்று

2

என்னை
சிறிதாக்கிக் கொண்டே இருக்கிறேன்
ஒரு எறும்பின் முன் அமர்ந்து
ஆசி கேட்கும் அளவிற்கு
எறும்பு
யானையின் துதிக்கை நீட்டி
ஆசி வழங்கும் அளவிற்கு

3

இறந்தவள் கூட்டிய அண்டை அடுப்பை
தோட்டத்தில்
கிளறிக் கொண்டிருக்கிறது கோழி
முதலில் பரவி விரிகிறது குப்பை
குப்பையின்
அடியில் குவிந்திருக்கிறது
அவள் காட்டிய
ருசி
காலால் கிளற கிளற
நெஞ்சைப் பிளக்கும்
நினைவு

4

திடீரென...
1
திடீரென ஒரு பையன் வந்து
பெட்ரோல் பங்கில் வேலைக்கு நிற்கிறான்
திடீரென ஒரு மகள்
ஒரு நகலகத்தில்
வேலைக்கு சேருகிறாள்
திடீரென அவர்கள் உடல் வற்றியிருக்கிறது
திடீரென அவர்கள் முகம்
வேலைக்காரர்கள் முகமாக
மாறிக் கொண்டிருக்கிறது
திடீரென அவர்கள்
உலகத்தின் முன்பாக
நிறுத்தப்படுகிறார்கள்
திடீரென அவர்கள் உலகத்தின் முன்பாக
நிறுத்தப்படுவதை
இதுவரையில்
யாரோ இருந்து
தடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்
வந்த புயலை பெய்த மழையை
ஓங்கிய கரத்தை என
அனைத்தையும்
தாங்கிப்
பிடித்திருக்கிறார்கள்
அவர்கள் திடீரென உலகத்தைப் பார்க்கின்ற
இடைவெளி வழியாக
தடுத்து நிறுத்திய கரங்களைக் காண்கிறேன்
கிடந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறது
அவற்றின்
மனது
2
எல்லாமே பற்றுச்சீட்டில் இருப்பது என்பது
பாதிக்குப் பின்பே தெரிகிறது
3
இளமையில் ஏழுவருடங்கள்
சிறையில் இருந்தவனுக்கு
மீதி வருடங்கள்
லாபம்
இளமையில் ஏழுவருடங்கள்
வெளியில் இருந்தவனுக்கு
வாழ்நாள் முழுதும்
சிறை
4
தங்கம்மை ஹோட்டல்
என பெயர் வைத்ததால்
தப்பித்தான்
என்கிறார்
அதன் பக்கத்தில்
ஹோட்டல் வைத்து அழிந்தவர்
இருபது
வருடங்களுக்குப் பிறகு
5
இரட்டைக் குழந்தையாகப் பிறந்தவர்கள்
இருவருக்கும்
இருவேறு விதி
முதலில் அறிந்தவன் தப்பித்தான்
தாமதித்தவன்
மாட்டிக் கொண்டான்

###

5

நான் ஒரு அவளை நேசிக்கிறேன்
அவளில் அவள் இல்லையென்றானால்
விலகிக் கொள்கிறேன்
நான் ஒரு அவன் மீது
அன்பாயிருக்கிறேன்
அவன் இல்லை இவன் என்று அறிந்தால்
இறங்கிக் கொள்கிறேன்
அவளும் அவனும் இருந்து கொண்டே இருக்கிறார்கள்
நெஞ்சுள்
எப்போதும்
ஒரு வாட்டமும் இல்லாமல்
அவர்கள் யாரில் இருந்தாலும் சரி
இல்லையென்றாலும் சரி
யாரில் பொருந்தினாலும் சரி
பொருதா நின்றாலும் சரி
இருந்து கொண்டே இருக்கிறார்கள்
எப்போதும்

6

எப்போதும் நான்கைந்து பேரோடு
சேர்ந்தே வருகிறேன்.
கமுகு மரங்களைக் காணும் இடங்களில்
எனக்குள்ளிருக்கும் குழந்தை
குதித்து அங்கே
இறங்கிக் கொள்கிறது
பூவரச மரங்களைக் காணும் இடங்களில்
சிறுவன்
தரை இறங்கி விடுகிறான்
நாலுகட்டு வீடுகளுக்கு அருகாமை என்றால்
முதியவர் இறங்கிக் கொள்கிறார்
நாழிகிணறு என்றாலோ
நாலுபேரும் சேர்ந்து குதிக்கிறோம்
திரும்பும் போது
ஒவ்வொருவரையாக ஏற்றிக் கொண்டு
என்னிடம் வருகிறேன்
பயணச் சீட்டு ஒருவருக்கென்றுதான்
தருகிறார்கள் ஆனாலும்
எப்போதாவது சில நேரங்களில்
நீங்கள் எத்தனைபேர்
என்று கேட்கையில்
திக்கென்று இருக்கிறது
கண்டுபிடித்து
விட்டார்களோ ?
என

7

முலையிலிருந்து பற்றி இழுத்து
விடுவித்தபின்
பற்றில்
வாய் வைத்துக் கொண்டேன்
விடாது ஒருவாய்
மற்றொரு வாய் என
விழுந்தேன்
பற்றின் வாய்முலைக் கசப்பில்
விலக்கி
பற்றறுக்கிறாள்
பராசக்தி
பற்றில்
பருகத்தந்த அதே
பராசக்தி

8

என்னைப் பெற்றார்கள்
1
எடுத்து வைக்கத் தெரிந்தால்
எடுத்து வைத்துக் கொள்
பொட்டென்றாலும் சரிதான்
பூவென்றாலும் சரிதான்
2
தின்பண்டங்களில்
குழந்தைகள்
உண்பதெல்லாம்
திரவியங்கள்
3
அம்மை ஊட்டுவதெல்லாம்
அமுதம்
4
அமுது தீண்டினால்
எச்சில்
ஒழுகும்
5
அடையாதோர்க்கு
அம்மாவும் இல்லை
அமுதும் இல்லை
6
என்னைப் பெற்றார்கள்
ஏராளம் அம்மைகள்

###

9

உத்தமர்களைப் பார்க்க
பயமாக இருக்கிறது
அதி உத்தமர்கள் என்று சதா சொல்லிக் கொள்பவர்களைக்
காண
அதிலும் பயமாக இருக்கிறது
சிலநேரம் நானும் உத்தமராகி விடுகிறேன்
பாருங்கள்
அப்போது என்னைக் காண்பதே
எனக்கு
பயங்கரமாக இருக்கிறது

10


நாங்கள் ஒன்றாகத் தான் இருந்தோம்
அவனை கைது செய்தார்கள் அதன் பிறகு
அவனைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டோம்
ஒன்றாகத்தானிருந்தோம்
அவன் வீட்டில் சோதனையிட்டார்கள் அதன் பிறகு
ஒன்றாக இருப்பதைத் தவிர்த்து விட்டோம்
ஒருநாளில் அவனை மர்மமாக்கினார்கள்
அதன் பிறகு நாங்கள் அனைத்திலும் பின்வாங்கி விட்டோம்
நாங்கள் பிறழ்வடையாமல்
தப்பித்துக் கொண்டதன்
வரலாறு
இதுதான்
அவனைப் பைத்தியம் என்று
ஊர் கூடி கத்திய நாளில்
அப்படியே ஆமோதித்துத் திரும்பினோம்
அவன் எப்படி பைத்தியமானான் என்பது
மேலதிகமாக
தெரியும் என்பதால்

( மீள் - அணுவுலைகள் எதிர்ப்பு போராளி முகிலனுக்கு இந்த கவிதை தாள்வைப்பு)


11

கறுப்பு வெள்ளை
பூனை
என்னை கூர்ந்து பார்த்து
உடம்பை வளைத்து வாலை நிமிர்த்தியது
ஒரு கால் வழியே நுழைந்து மறு கால் வழியே வெளியேறியது
மீண்டும் முதல் கால் வழியே நுழைந்து
உரசிக் கொண்டு நின்றது
காலையில்
சற்று நேரம் முன்னர்
கடந்து சென்ற கண்காணி
இன்று உங்களுடைய கண்கள்
பூனையின்
கண்களை ஒத்திருக்கிறது
என்றார்
உடலை வளைத்து
ஒரு கால் வழியே நுழைந்து
மறு கால் வழியே
மீண்டும்
உரசத் தொடங்கிற்று
பஞ்சுப்பட்டு ஸ்பரிசம்
பலமுறை மீண்டும்
சுற்றத் தொடங்கிற்று
பூனை

12

ஆடுகடித்து காயம் பட்ட
சரக்கொன்றையை
மிசுறு எறும்புகள் கூடி
காப்பாற்றுகின்றன
ஒரு காரணத்திற்குள் ஒன்று
ஒன்று மற்றொன்று என
நீள்கிறது யாத்திரை
யாருடைய காரணத்திற்காகவோ
நீங்கள்
என்னுடைய காரணத்திற்காக அவர்
அவருடைய காரணத்திற்காக
மற்றொருவர் என
ஒரே பொதிதான்
பிரிக்க பிரிக்க
பொதி பொதியாக வருவது

13

உடல் விடர்த்து
தளிர்க்கும் அரசமரம்
மரத்தின் எலும்புக்கூடென
நிற்கிறது
கிளைகளில் அமர்ந்திருக்கும்
காகங்கள்
கிளிகள்
கொக்குகள் மரத்தின் பழங்களென
தொங்குகின்றன
அடுத்த பருவம் இவை உதிர்த்து
பச்சயம் பூக்கும்
பழங்களை மூடிக் கொள்ளும்
பச்சயம்
எல்லாமே வெட்ட வெளியில்
நடக்கின்றன
ஒளிவு மறைவு என்று
ஒன்றுகூட இல்லை
பிரதான சாலையோரம்
இது

14

நீங்கள் பரிகசிக்கிறீர்களே
அவரும் உங்களுக்குள் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறார்
அதனால்தான்
இப்படி விழுந்து கிடந்து சிரிக்கிறீர்கள்
நீங்கள் வெறுக்கிறீர்களே
அவரும் ஒருதுளியேனும் உங்களில்
இருக்கிறார்
இல்லாமல்
இப்படி
வெறுக்க முடியாது

15

காலம் எதற்குத் தேவையோ அதற்குத் தேர்வு செய்கிறது
பலசமயங்களில் அடுத்தவருக்காக உங்களை தேர்வு செய்கிறது
சிலசமயம் சிலவேலைக்காக உங்களைத்
தேர்வு செய்கிறது
சிலசமயம் நட்புக்காக உங்களை
பகைக்க சிலசமயங்களில்
தேர்வு செய்து கொள்கிறது
ஒருகாரணமும் இல்லாமலும்
அபூர்வமான சந்தர்ப்பங்களில்
உங்களை தேர்வு செய்து கொள்வதும்
உண்டு
தெய்வங்கள் அவற்றின் காரியங்களுக்காக
பலசமயங்களில் உங்களைத்
தேர்வு செய்து கொள்கின்றன
சிலருடைய பிரார்த்தனைகளுக்காக
நீங்கள் தேர்வு செய்யப்படுதலும்
உண்டு
உங்களுக்குத் தெரியாத பிரார்த்தனைத்
தட்டுகளில்கூட
வைக்கப்பட்டு
விடுகிறீர்கள்
உங்களைத் தேர்வு செய்ய
ஒருபோதும் காலத்திற்கு
உங்கள் அனுமதி
தேவைப்படுவதே இல்லை
சில சக்தி பீடங்களில்
நீங்கள் தேர்வு செய்யப்படுதல் உண்டு
காதலிக்கும் போதுமட்டும்
நீங்கள் உங்களுக்காக
தேர்வு செய்யப்படுகிறீர்கள்
காதலித்து முடித்தீர்கள் எனில்
மீண்டும் இறக்கி வைக்கப்பட்டு
பழையபடி
மற்றவர்களுக்காக
தேர்வு செய்யப்படுகிறீர்கள்
காலம் மீண்டும் பிறருக்காக
உங்களை
தேர்வு செய்யத்
தொடங்குகிறது

16

இருக்கும் போதே இறந்தவன்
இறந்து போனான்
ஏற்கனவே உதிர்ந்த மாலைகள் கொண்டு அவனுடைய தேர் அலங்கரிக்கப்படுகிறது
புதிய புதிய மாலைகள்தாம் ஏனிப்படி
உடனுக்குடன் உதிர்கின்றன ?
விழாக்களுக்கு அவன் வந்து செல்லும் போது
பொது மண்டபங்கள் அவனைப் புகைப்படம் எடுப்பதில்லை
ஒருமுறை வாயிற்காவலன் ஏற்கனவே இறந்து போனவர்தானே?
எனக் கேட்டே விட்டான்.
சுய செல்பியை நிராகரித்த தெரு நிர்வாகிகள்
நீங்கள் வாழுங்காலத்தில் சுய செல்பி
கிடையாது என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்
என்று அறிவுரை சொன்னார்.
பந்தி பரிமாறியவன்
இவன் இலையை கடந்து சென்றதை
இவனும் ஏனென்று கேட்கவில்லை
அவனும் ஏனென்று சொல்லவில்லை
இவன் ஏன் இங்கு வந்து நிற்கிறான் ?
யாராவது விளக்குங்களேன் என்று கும்பிடப் போன சாமி
கேள்வி கேட்டதை விளங்காத இவன்
இறந்து கிடக்கிறான்.
எல்லாம் நடைபெறுகின்றன
ஆனால் எதுவோ நடைபெறவில்லை
இறந்தவனின் ஊர்வலம்போல இந்த ஊர்வலம் செல்லவில்லை.
எனக்கோ அவன் இன்னும் இருக்கிறானோ ?
என்னும் சந்தேகம்
வீதி வலம் வந்து கொள்ளிக்குடமுடைத்து
என்னென்னமோ என்னய்யோ சப்தமிட்டு
எரியூட்டித் திரும்பிய பின்னும்
சுடலையில் இறுதியாக எரிந்தவனுக்கும் முன்னர் முன்னர் என
பழைய எரியடுக்கு ஒன்றில்
அவனை இட்டுத்
திரும்பிக்கொண்டிருக்கிறோம்

17

அழகியலின்மை என்பது வேறொன்றுமில்லை.ஒருங்கிணைவின்
மைதான்
சொல்லும் சொல்லில் ஒருங்கிணைவின் மை
செய்யும் சடங்கில் ஒருங்கிணைவின் மை
புனைவிலும் செயலிலும் ஒருங்கிணைவின் மை
அத்தனை துடியோடு நடைபெறும் குற்றம்
ஆகச்சிறந்த கவிதை
ஆகச் சிறந்த கவிதையில்
அவ்வளவு சிறந்த தம்மம்

18

ஸர்ப்பம் தோற்கும்
அழகு
மினுங்கும் ஒளி மேனி
நாவால் தீண்ட நினைக்கும்
வடிவம்
ஜொலித்துக் கொண்டிருக்கிறாள்
அன்னை பல் விளக்குவது அவளுக்குப் பிடிக்கவில்லை
பின்னரும்
எச்சை பல்லிடுக்கில் இருக்கிறது என்கிறாள்
அன்னை கண்ணாடி பார்த்தால் பிடிக்கவில்லை
எவ்வளவு முடி உதிர்கிறது என்கிறாள்
அன்னை சேலை உடுத்தினால்
பிடிக்கவில்லை
இதை எப்படித்தான் உடுக்கிறாளோ என்கிறாள்
அன்னை நகம் பார்க்கப் பிடிக்கவில்லை
எவ்வளவு அழுக்கு
நகமே வெட்டமாட்டியா என்கிறாள்
ஏட்டி இப்படி பேசாத பாத்துக்கோ
இப்படி இருக்கியே அது நாந்தா பாத்துக்கோ
மூக்கு கொஞ்சம் எனக்கு வளைவு
உன்னில் நேராகியிருக்கிறது
எனக்கு உதடு சிறு பிளவு
உன்னில் சரியாகியிருக்கிறது
எனக்கு நாக்கு கருநீலம்
உன்னில் நேர்செய்யப்பட்டிருக்கிறது
எனக்கு இடுப்பு தடிமன்
உன்னில் கோடாகியிருக்கிறது
எனக்கு வண்ணம் கலங்கல்
உன்னில் தெளிவாகியிருக்கிறது
நான் தான் நான் தான்
உன்னில் அழகாகியிருப்பது
என்னுடைய கொளுப்பு
உன்னுடைய தோலில்
கொதிப்பது
என்னைத்தான்
ஏந்திக் கொண்டிருக்கிறாய்
சற்றே உயரமாய்
வேறொன்றுமில்லை
என்கிறாள்
அன்னை







Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"