எட்டு கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்

எட்டு கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்


1


நான் என்னைப் பற்றி
ஒன்றை நினைத்து வைத்திருக்கிறேன்
அது அப்பழுக்கு இல்லாதது
அது குற்றங்கள் புரியும்
தவறுகள் செய்யும்
பிழை புரியும் ஆனால்
அமிர்தமானது
ஒருவரை அழைத்தால் அங்கு நோக்கியே
அழைக்கிறேன்
ஒருவர் என்னைப் பிரிந்து சென்றால்
அங்கிருந்தே பிரிந்து செல்கிறார்

2

ஒருவர் உயிருடன்
இந்த முச்சந்தியை பார்த்துக் கொண்டு நிற்கிறார்
உண்மையாகவே ஒருவர்
உயிருடன் நின்று இந்த முச்சந்தியை
காண்கையில்
ஒரு வினோதம் நிகழ்கிறது
அவர் உயிருடன் நிற்கிற
வினோதம்
அவர் மட்டுமல்ல இந்த முச்சந்தியும் தோன்றி நிற்கிற
வினோதம்.
எவ்வளவு பொருள் கொடுத்தும்
வாங்க இயலாத வினோதம்
எத்தகைய அதிகாரத்தாலும் பறிக்க இயலாத வினோதம்
அவர் வேறு எதையுமே செய்யவில்லை
நின்று பார்க்கக்கூடிய வினோதத்தை
நின்று
பார்த்துக் கொண்டிருக்கிறார்
அவ்வளவுதான்
தோன்றி நிறைகிறது
மாபெரும்
வினோதம்

3

எதிரே அமர்ந்திருக்கிறேன்
ஒரு கைப்பிடியளவு முருங்கை இலைகள்
கண்களில்
அசைகின்றன
அதுவே இப்போதைய எனது காடு
அதன் மூட்டில் குழந்தை
சிறுநீர் களிக்கிறாள்
அதுவே இப்போதைய என்னுடைய கடல்

4

மேஜை பன்னீர் பாட்டில் நீர்
எதிர்பக்கமிருந்து வருகிற
விசிறியின் காற்றில்
குழந்தை நடனமென
அசைகிறது
என் உள்மன அசைவுக்குத் தக்க
இன்றைய
பிரபஞ்சம்
லேசாக
குலுங்குகிறது

5

என்னை கோபமூட்டுவது எளிது
என்னை சிறுமைப்படுத்துவது எளிது
அவமானப்படுத்துவது அதனினும் எளிது
தாழ்வுணர்ச்சியைத் தூண்டுவது எளிது மிக எளிது
காதலிப்பதும் எளிது
பின் கைவிடுவதும் எளிது
மிக எளிது

6

தினமும் தண்ணீர் வைக்கும்
நாய்களை
நான் கண்டு மூன்று நாளாச்சு
வேறுவேலைகளில் இருக்கிறேன் என்றால்
புரியுமா அவற்றுக்கு
நேரத்தில் வந்து காணாது
திரும்பி இருக்கும் .
என்னை நீரென நினைத்திருக்கும்
அவை ,
அள்ளியெடுக்க
எட்டாமல் சென்றிருக்கும்
தண்ணீர் வைக்கும் அந்த இடம் நோக்கித்தான் திரும்பிக் கொண்டிருக்கிறேன்
நண்பர்களே பொறுத்துக் கொள்ளுங்கள்
வேறு இடம் நோக்கிப் போகத் தெரியாதவன்
அங்குதான் திரும்பிக் கொண்டிருக்கிறேன்
தண்ணீர் வைக்கும் இடம் நோக்கி ...
நீங்கள் சளப் சளப் என
எடுத்துக் கொள்ளும் இடம் நோக்கி ...
அங்கு நோக்கித் தான் இழுபட்டுக் கொண்டிருக்கிறேன்
என்னவானாலும்
அதுதானே எனது இருப்பிடம்
இல்லையா?

7

எவரைப் பார்ப்பதற்கும் வெறுங்கையோடு
சும்மா வருவதில்லை நான்
மடங்கி மடங்கிச் செல்லும் மலைத்தொடரில்
நடுவில் தோற்றங்காட்டும் பௌர்ணமியை கொண்டு வந்தேன்
நேற்று உங்களிடம்
மொய் எழுதாமல் சோற்றில் கைவைக்கும் பழக்கம்
எனக்கில்லை
வழிநெடுக உதிர்ந்து கிடந்த மஞ்சள் பூந்தரையை
மரங்களுடன் அள்ளியெடுத்து வருவது எனது வாடிக்கை
கைபிடித்து என்னை வரவேற்றுப் பாருங்கள்
நீங்கள் விட்டகலும் காட்சிகளின் வெப்பம் உண்டு என் கையில்
சிறுவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பேருந்துக்கு வெளியே
ஓடிக்கொண்டிருக்கும் தாவரங்கள்
யுவதிகளுக்கோ பகலில் தருவேன்
இரவின் நட்சத்திரங்கள்
எனினும் குழந்தைகள் வசிக்கும் வீட்டில்
வேடிக்கையைத் தரயியலாமல் வெறுங்கையோடு செல்பவர்கள்
துரதிர்ஷ்டவசமானவர்கள்
கூர்ந்து என் கண்களை பார்க்கச் செய்தவர்களுக்குக்
கடல் காட்டுவேன்

8

அப்பா இறந்து போய்விட்டாரென
செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன
யாருடைய அப்பா ?
அப்பா இறந்து போனாரென பேசிக் கொள்கிறார்கள்.
எல்லோருடைய அப்பாக்களும் ஒரேநாளில் எப்படி
இறந்து போக முடியும் ?
யாரைக் கேட்டாலும் அப்பா இறந்து போய்விட்டார்
என்று சொல்கிறார்கள்
அப்பா எப்படி இறக்க முடியும்
நடுவயதுதானே ஆகிறது அவருக்கு ?
அம்மாவைக் காட்டிலும் ஓரிரு வயது அதிகம்
அவ்வளவுதானே விஷயம்
அப்பா அவ்வளவு எளிதில் இறந்து போய்விடுவாரா
என்ன
நடுவயதிற்குப் பிறகு வயதே ஆகாத
அப்பா
நீ பெரியவனாயிருந்தால் இனி அவர் உனக்குள் நுழைய போகிறார்
நீ தாத்தாவாயிருந்தால் உனக்குள் இருந்து சற்றைக்கு முன் அவர் வெளியேறினார்
நீ குழந்தையாயிருந்தால் உனக்குள் அவர் வளர்ந்து கொண்டிருக்கிறார்
நீ சத்ருவாக மாறினால் தொடர்ந்து அவர்
கொலைமுயற்சியில் ஈடுபடுகிறார்



புகைப்படம் -
வண்ணதாசனின் கரங்கள்




Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"