அன்னை ஆண்டாளின் விஷயத்தில்

அன்னை ஆண்டாளின் விஷயத்தில்


எல்லா மதங்களிலும் புனித அன்னையர் உள்ளனர்.
அவதாரங்களும் உள்ளனர். வரலாற்றுத் தரவுகளை மேற்கொண்டோ ,தகவல்களின் தரப்பான விஷயங்களை முன்வைத்தோ எந்த தரப்பைச் சேர்ந்தவர்களை வேண்டுமானாலும் சுருக்கவோ,பிழையான அர்த்தங்களை அவர்களில் தொனிக்கச் செய்யவோ முடியும்.அது பெரிய காரியமெல்லாம் ஒன்றுமில்லை.அப்படியொருவர் முன்வைக்கும் வாதத்தை எடுத்துக் கொண்டு விவாதிக்கவே இயலாது.
ஒரு மதத்தைச் சார்ந்த நம்பிக்கைகளில் புனிதங்களில்
வெறுப்பை மேற்கொள்ளும் இந்த உத்தி இன்று
செல்லுபடியாகக் கூடியதல்ல.அது வெறுப்பை பொதுவில் இறக்கி வைப்பது ,இப்படி இறக்கி வைத்த பிற்பாடு அதற்கு வருகிற எதிர்வினைகள் நாங்கள் நினைத்த விதத்தில் நாகரிகமாக இல்லை என்று வாதிடுவதில் பொருளேதும் கிடையாது.அன்னை தெரசா கிறிஸ்தவத்தில் புனித அன்னை.எனக்கும் அவர் புனித அன்னைதான்.இந்து மதத்தில் காரைக்கால் அம்மையும் ,அன்னை ஆண்டாளும் ஒப்பீட்டிற்கு அப்பாற்பட்ட தெய்வங்கள்.
இங்கே எந்த சொற்களுக்கும் ,பொருளுக்கும் ஒரே விதமான அர்த்தங்கள் கிடையாது.பொதுமக்கள் கொண்டுள்ள அர்த்தங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொதுவில் பேச இயலாது.இதற்கு உதாரணம் கேட்பீரேயாயில் உங்கள் பிரதான துளைகளில் ரத்தம் கசியும் படியான பல உதாரணங்களை எனக்குச் சொல்ல முடியும் . சுருக்குபவர் யாராக இருந்தாலும் அவர் எந்த தர்க்கத்தை முன்வைத்தாலும் பொதுமக்களின் அர்த்தத்தையே குறிக்கோளாகக் கொள்கிறார்.பொதுமக்களுக்கு உங்கள் நோக்கம் பிரகாசமாகப் புரிந்து விடும்.அவர்கள் அதனை பிடித்துக் கொள்வார்கள்.அவர்களை நீங்கள் இன்னும் நெடுங்காலத்திற்கு முட்டாள்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பீர்களாயின் ; நான் உங்களைத் தான் முட்டாள்கள் என்று மதிப்பிடுவேன்.
இல்லை அப்படியில்லை என்று ஜனநாயகவாதிகள் யாரேனும் கருதுவீர்களேயாயின் வரலாற்றுத் தரவுகளைக் கொண்டே உங்கள் புனித பிம்பங்களையும் நீங்கள் கொந்தளிக்கும் விதத்தில் காறி உமிழ்ந்து விட முடியும் என்பதனையும் புரிந்து கொள்ளுங்கள்.ஏனெனில் வரலாற்றுத் தரவுகள் அனைத்திற்குமே இணங்கக் கூடியவை. எனவே தான் பின் வந்த சிந்தனை மரபுகள் வரலாற்றுப் பார்வையையும் நிரூபண வாதங்களையும் ஏற்பதில்லை.வரலாற்றையும் புனைவே என்கின்றன அவை.உங்களுடைய நோக்கத்தைப் பொறுத்து வரலாற்றை திரிவு செய்வது என்பது மிகவும் எளிதான காரியம்.
பல்வேறு நம்பிக்கைகள் ,பழக்க வழக்கங்கள் ,வழிபாட்டு முறைகள் என கூறுபட்டு நிற்கிற சமூகத்தில் ஒன்றை இழிவுபடுத்தும் நோக்கில் சுருக்குதல் என்பது நோக்கமுடைய செயல் .அதற்கு எதிர்வினை ஏற்படக் கூடாது என நினைத்தால் எப்படி நடக்கும் ? இந்த எதிர்வினையை எதிர்பார்த்துத் தானே நீங்கள் உங்கள் பழைய காலத்து கெட்டிச் சோறு வாதத்தை முன்வைக்கிறீர்கள் ?
இந்து மதம் பற்றிய தாழ்ந்த வாதங்கள் அரசியல் பிழைகளால் காலம்காலமாக முன்வைக்கப்படுபவை.அது இன்றைய காலத்தில் ஏன் எதற்கு என்பது உட்பட வெளிப்பட்டு விட்டது.எல்லாவிதமான நோக்கங்களும் எல்லோருக்கும் தெரிந்து விட்டன.அந்த செல்லுபடியாகாத வாதங்களை எடுத்துக் கொண்டு ஆதாரத்தைக் கண்டீரோ என்றெல்லாம் வராதீர்கள்.இப்படியொரு கண்டீரோவை முன்மொழிந்தால், எதிர்த்தரப்பு முன்வைக்கும் கண்டீரோவையும் நீங்கள் கண்டு தெளிவதே நல்லது. இது ஒருவகையான நோய்மை.அரசியல் பிழைகளின் கற்பித்தத்தால் உருவான நோய்மை.இந்த நோயிலிருந்து நீங்கள் வெளிவராத வரையில் மக்களை உங்களால் புரிந்து கொள்ளவே முடியாது.நீங்கள் ஏன் அரசியல் அரங்குகளில் போலி முற்போக்குகளால் மண் தின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு இந்த நோய்மையே காரணம்.
பொது நியதிகளுக்கும் ,பிற மதங்களையும் ஏற்கும் பண்பிற்கும் கட்டுப்பட வேண்டியது இன்று அனைத்து தரப்பினருக்கும் தேவையான பண்பு.அதனை இந்து மதத்திற்கு மட்டும் அனுசரிக்கவே முடியாது என்றால் அதனை புண்படுத்தும் போது ; புண்பட்டவர்கள் எதிர்வினை புரிவதும் தவிர்க்க
இயலாதுதானே ?.சமூக அமைதி காக்கப்பட வேண்டும் என்பதில் அனைவருக்கும் பொறுப்புணர்ச்சி இருக்கிறது.அந்த பொறுப்புணர்ச்சி அனைவருக்கும் பொதுவானது.
இரு தினங்களுக்கு முன்னர் எனது நண்பரும் தமிழ்நாட்டில் மதிக்கத்தக்க மார்க்சிய அறிஞருமான ராமானுஜம் இப்போது நடக்கிற ஆண்டாள் விவகாரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று என்னைக் கேட்டார்.மிகவும் கசந்து உணருகிறேன் என்று சொன்னேன்.இந்த கசப்பிற்கு பொதுமக்கள் அல்ல காரணம், நாலாந்தரமான முற்போக்கிகள்தான் என்றும் சொன்னேன்.சமூக சமநிலையை சீர்குலைப்பவர்களாக அவர்கள் இப்போது முழுமையாக பிறழ்வடைந்து விட்டார்கள் என்றேன்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"