லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் 


1

விஜி வரையும் கோலங்கள் 
மையத்தில் நான்கு மலர்கள் கொண்டது 
வண்ணங்கள் இருக்கும்

இல்லாமல் இருக்கும் போதும்
வண்ணங்களை கோலத்தில் அமரச் செய்யும் வித்தை 
விஜி மட்டுமே அறிந்தது

நீர் தெளிக்கும் நேரம் மனதில் 
வரையவிருக்கும் கோலம் நிழலாடும் 
தியானத்தில் இருக்கும் 
தெய்வம்

விஜி வரையும் கோலங்களின் 
சிறப்பு யாவரும் அறிந்ததே

எப்போதும் சாலையில் மேலேறி இறங்கும் 
ஒரு நாசூக்கான சுற்றில் 
விஜி ஒளிந்து கொள்கிறாள் 
அல்லது வெளிப்படுகிறாள்

அதில் எனது நாசிக்கு 
காட்டு விலங்கின் உறுமல் சப்தம் 
மிருக வாசம்
கண்களில் 
யானைத் தடம்

அதனை மட்டும் அவள் 
தன்தசை கொண்டு 
வரைகிறாள்

தெய்வங்கள் அந்த வளைவில் 
வந்தமர்ந்து கொள்கின்றன 
அவற்றுக்கு அவ்விடம் தாங்கள் அமர வேண்டியது 
என்பது கச்சிதமாக 
தெரிந்திருக்கிறது

காட்டுத் தீயை அணைப்பதற்குத்தான் 
விஜி முதலில் தண்ணீர் 
தெளிகிறாள்

2- 

சூக்கும உடலாக கிளைபரப்பி நிற்கிறாள்
அம்மை பேரிசக்கி 
முலை துளிர்த்து அதில் புதுமடலாக 
பூத்துக் குலுங்குகிறாள் 
யுவதி

அரூப சரீரம் 
ஆனந்தக் கூத்தாடுகிறது 
முடிவிலியின் 
ஆனந்தக் கூத்து

பற்றியெரிகிற சரீரத்தை 
அரூப சரீரம் 
பார்த்துக் கொண்டிருக்க

சூரியோதயம் 
ஒவ்வொரு நாளும் 
அடுத்த அடுத்த 
மடலில் 
ஏங்கி நிற்கிறது

ஆலிலைக் கண்ணா
உன்னோடு சேர்ந்து 
நமக்கெல்லாம் 
எப்போதும் 
கோபியர் விளையாட்டொன்றே
மீதம்

3

அனைத்து பிம்பங்களிலும் 
பேசிக் கொண்டே இருக்கிறார் 
மத குரு
சவரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

பிறருடைய பிம்பங்களுக்குக் கண்சிமிட்டி 
தானொரு மத குரு என்கிறார்

ஒரு பிம்பத்தை எதிர்த்து ஒரு பிம்பம் 
மறுபிம்பத்தை எதிர்த்து மற்றொரு பிம்பம் 
சாதகமாக ஒரு பிம்பம் 
உடன்பட்டு ஒரு பிம்பம் 
என 
பேசிக் கொண்டேயிருக்கிறார்

தன் பிம்பம் தன்னை எதிர்க்குமா 
ஆச்சரியப்படுகிறார் 
மத குரு
என்ன இருந்தாலும் 
எனது பிரதி பிம்பங்கள்தானே 
எல்லாமும்

நானெழுந்தவுடன் 
என்னுடன் உடன் வரும் பாருங்கள் 
என்று சொல்லியெழுந்த மத குருவுடன் 
அத்தனையும் இணைந்து 
கொண்டன 
நிழல் எழுந்து உடலில் 
ஒட்டிக் கொண்டது போலே

தலையை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள் 
என்று 
வாயிலில் சென்று 
கைநீட்டிக் கொடுக்கிறான் 
சவரக் கடைக்காரன்
தான் அழகூட்டிய தலையை

பின் திரும்பி
பெற்றுக் கொள்கின்றன பிம்பங்கள்

தேங்க்ஸ் 
சொல்லி
ஏறியமர்ந்து செல்கிறது 
மத குருவின் 
தலை 
மற்றொரு 
தலையின் 
மீது 



எப்போதும் ஒருப்போல
நானிருந்ததில்லை 
சில நேரம் கடவுள் 
சில நேரம் தெருப் பொறுக்கி 
சில நேரம் கையேந்துபவன்
சில நேரம் வழிப்பறி 
அபூர்வமாக சில நேரங்களில் கவிஞன்
நீங்கள் எங்கு வைத்து 
என்னைப் பார்த்தீர்கள் என்பதை 
சரியாகச் சொன்னால் மட்டும்தான் 
நீங்கள் யாரைப் பார்த்தீர்கள் 
என்பதனை 
என்னால் சரியாகச் 
சொல்லமுடியும்



நானுன் தோளின் மேலே போட்டிருக்கும் 
கை அவ்வாறே இருக்கிறது
நீ முகம் 
திரும்பி 
எதிர்க்கத்
தொடங்கியதும்

நீ 
ஏன்
எதிர்க்கிறாய் 
என்பது 
தெரிந்து 
விடுகிறது

என்றாலும் தோளிலிருக்கும் 
கையை நான் விலகுவதில்லை 
அது அவ்வாறேயிருக்கிறது 
நீ மீண்டும் 
வந்து 
அதனுள் 
பொருந்திக் கொள்கிற வரையில்

வா வந்து பொருந்திப் பார் 
நீ ஏன் எதிர்த்தாய் என்பது 
இப்போது உனக்கு 
மிக நன்றாக 
விளங்கிவிடும்



எனது உடலுக்குள் தான் 
நானிருந்தேனா 
என்றே 
விளங்கவில்லை 
உடலே சமாதியாக இருந்த போதில்

சமாதியின் கதவைத் திறந்து
மெல்ல மெல்ல 
கைநீட்டிப் 
வெளியே பார்க்கிறது 
வானம்

மூடுவதற்குத்தான் 
அநேக சட்டைகள் 
தேவையாக இருக்கின்றன 
திறந்து வெளியேற 
எத்தனை எத்தனை 
புரவிகள் 
அருவிகள்



தற்காலிக துறவி
தன்மீதே படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்
ஒவ்வொரு புலனும் 
மற்றொரு புலனை கட்டியணைத்து 
தூங்கி கொண்டிருந்தன
சதா விழிப்புடன்

துறவு முடிய 
புலன்கள் தங்கள் தங்கள் திசை நோக்கி 
விரைந்தோடுகின்றன 
கட்டி வைத்திருந்த 
உடலில் இறங்கி 
வேறு உடல் நோக்கி

துறவியின் உடல் மறுதிசைக்கு 
திரும்புகிறது
புலன்கள் கூடி வந்து 
ஏறியமர
சவாரி தொடங்கிற்று 
புலங்களின் சவாரி
மறுகரை 
நோக்கி



சுற்றிச் சுற்றி 
தெருவைச் சுற்றி 
ஊரைச் சுற்றி
நாட்டைச் சுற்றி 
எனது காலை நானே சுற்றி 
வந்தடைந்து 
எனது கொட்டாலை திறந்து 
விளக்கேற்றி 
அமர்ந்தேன் 
கொட்டாலையின் குறுக்கு விட்டத்தில்
ஒற்றைக் காகம் 
அகாலத்தில் நின்று கூவுகிறது 
அகாலம் என்ற சொல் அகாலத்தைத் தான் 
சுட்டுகிறது எனில்

அகாலம்தான் 
எவ்வளவு விரிந்து கிளைவிட்டு 
சுடருகிறது 
சிறுவிளக்கொளியில் 
நண்பகலை வாரி விழுங்கும் 
அளவிற்கு

அகாலத்தில் அமர்ந்தழைக்கும்
காகத்தின் பெயர் 
காகமாகவும் 
இருக்கலாம்
அல்லதிந்த நண்பகலெனவும் அதனைக் 
கருதலாம்

அது கரையாது அமர்ந்திருந்தால்
அறிந்திருக்காது இந்த ஒற்றைச் சுடர் 
அகாலத்தை ஒரு போதும்



அந்த காட்சியில் பிழையொன்றும் 
கிடையாது 
பனிபொழிவில் பூமரத்தின் கிளையில் 
ஒரு நொண்டிக்காகம் 
அமர்ந்திருந்த எளிய காட்சிதான் அது 
காகத்தின் தலையில் பூவொன்று தலைகவிழ்ந்து 
அழகு தருகிறது

நானதனை 
உடலெங்கும் தீப்பற்றி எரிந்த முதியவன் 
அனுமதிக்கப்பட்ட 
ஜெனரல் வார்டுக்குள்ளிருந்து 
பார்த்தேன் 
நீங்கள் வெளியிலிருந்து கண்டீர்கள் 
நீங்கள் விளங்கவில்லையே எனக் கூறி புரியாமல் கடந்தமைக்கு 
வேறொரு காரணங்களுமில்லை

தீமருந்தின் நறுமண காட்சியை 
போ போ என விரட்ட 
பற்றி படர்ந்து 
உடலெங்கும் அது 
ஏறி விளையாடுகிறது

10  

சந்தையில் 
என்னை நோக்கி ஏராளமான உண்மைகள் 
வந்து கொண்டிருக்கின்றன 
எல்லாமே முழு பூரணம் 
ஒவ்வொன்றும் சமமான நம்பகத்தன்மையை வேறு 
கோருகின்றன 
எல்லாவற்றிற்கும் கிராபிக்ஸ் மிருகங்களின் 
உருவம் 
ஒன்றை எடுத்துக் பார்த்தால் 
மற்றொன்று 
சீறுகிறது 
சிங்கத்தை எடுத்தால்
புலி உறுமுகிறது
யானையைத் தொட்டால் 
கழுதைப் புலி 
பதற்றமடைகிறது 
கைகாசிற்கு ஏற்றபடி 
ஒரு எலியை எடுத்துக் கொண்டு 
வீடு 
திரும்பினேன் 
நிஜ எலிகள் 
கனவில் வந்தென்னைக் 
கடித்து 

குதறுகின்றன

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்