நாகர்கோயிலில் ராமனைப் பார்த்தேன்

நாகர்கோயிலில் ராமனைப் பார்த்தேன்

வணக்கம் தெரிவித்தேன்.அவன் வெகுவாகக் களைத்திருப்பதைப் போன்று தோன்றினான் .அவன் திருவடி அருகில் ஒருவர் அவ்வளவு வெடிச் சத்தத்திற்கு முன்பும் அமர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். சரியாக முச்சந்தியில் ராமன் எனக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான் .சோடியம் ஒளிக்கும் ,பரிவாரங்களின் அதிகாரக் கதறலுக்கும் நடுவில் அவன் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.ஒப்பற்றவன் நீ ,என்னால் உன்னை வணங்குவதைத் தவிர்த்து வேறென்ன செய்ய முடியும் ? அவன் எனது கண்களை நேருக்கு நேராகப் பார்த்து என் நிலை பற்றி ஏதேனும் சொல்லேன் எனக் கேட்பது போன்றிருந்தது.நானும் அவனும் மட்டுமே ராக்ஷஸ சத்தத்திற்கு நடுவில் மிகவும் அமைதியாக இருந்தோம்.
நீ இன்னும் எவ்வளவு இடங்களுக்கு இவர்களோடு செல்ல வேண்டியிருக்கிறதோ ? நான் அறிய மாட்டேன்.
நீ அறிவாய்தானே ...இப்படி இவர்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக ; என்னைப் போல முச்சந்தியில் நின்று தரிசனம் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது ராமா ...
நீ ஒப்பற்றவன் ,அளவிடற்கரியவன். சீதாதேவியோ உன்னிலும் பெரியவள் ...அவளுடைய புனிதத்தின் முன்பாக நின்று சரியாக முகம் பார்ப்பதற்கு கூட எனக்கு போதிய வல்லமை கிடையாது.
நீ அனைத்தையும் கடந்தவன்.அவதாரம் .ஆனால் எனக்கு இவ்வளவு அதிகாரச் சத்தங்களை உன் அளவிற்கு பொறுக்கும் சக்தி இல்லை.அதிகாரத்தின் முன்பாக எனது இருதயம் வெட்கக் கூடியது.உனது விதியை எண்ணி கவலையாக இருக்கிறது.அவதாரமாக இருப்பதைக் காட்டிலும் என்னைப் போன்று எளிய கவியாக இருந்து விடுவது எளிமையானதுதான் போலும் ?
மசூதியை இடித்த இடத்தில் உனக்கு கோவில் கட்டிக் கொள்ள உண்மையாகவே நீ விரும்புகிறாயா என்ன ? நீ விரும்ப மாட்டாய் என்றுதான் நான் நினைக்கிறேன்.நான் அறிந்திருக்கும் ராமன் அத்தகையவன் என்பதே என் மனப்பதிவு. அவ்வளவு குரூபியாக நீ ஒருபோதும் மாற இயலாது என்பது எனது நம்பிக்கை.ஒருவேளை உன்னைப்பற்றி நான் கொண்டிருப்பதெல்லாம் எனது மிகை மனதின் தனிப்பட்ட கற்பனைகளாக இருக்கக் கூடுமோ ? இவ்வாறே என் மனம் அவன் கண்களோடு பேசியது.டீசலின் உறுமலுடன் அவன் வாகனம் பின்னகர நான் திரும்பிவிட்டேன்.காவிய நாயகனாக வந்த ராமனும் ,அவதாரமாக மனதில் நின்ற ராமனும் நீயேதான் சந்தேகமில்லை.இப்போது பிற்படுத்தப்பட்டவர்களின் ராமனாக இந்தியா முழுதும் சுற்றிக் கொண்டிருக்கிறாய்,பொலிவு பெற்றிருக்கிறாய் . வாழ்த்துகள்.
உண்மையாகவே அசாதாரணமான கூட்டம் .பெண்கள் வழிநெடுக ஆரத்தியெடுக்கிறார்கள்.ஆண்கள் கோஷமிடுகிறார்கள் .சிறு வயதிலிருந்தே ஏராளமான கோஷங்களை வித விதமாகக் கேட்டாயிற்று.ஒவ்வொரு கோஷத்திலும் தெறிக்கிற அதிகாரத்தின் துளிகளும் எனக்கு நன்றாகவே தெரியும்.அவற்றின் பொய் உள்ளடுக்கும் ஓரளவு தெரியும்.இந்த ராம கோஷம் வினோதமாக இருக்கிறது.காந்தி இந்த கோஷத்தை முன்வைத்த போது தெரிய வராத வினோத அகம்பாவம் இப்போது மேலோங்கித் தெறிக்கிறது.
நான் வழக்கம் போல திருப்பதிசாரம் திருவாழ்மார்பனை, பெருமாளை தரிசிப்பதற்காக சென்று கொண்டிருந்தேன் .இந்த கூட்டமும் ஊர்வலமும் நாகர்கோயில் வருகிறார்கள் என்பது கேள்விப்பட்டதுதான் என்றாலும் என் பிரக்ஞய்யில் அது வேலை செய்யவில்லை.காவலர்கள் எல்லா பாதைகளிலும் பதற்றத்துடன் நின்று வழிமறித்துக் கொண்டிருக்கிறார்கள்.பொதுவாக இங்கே இப்படி ஏதேனும் நடந்து கொண்டிருக்கும் .கட்சிகள் மாநாடுகள்,மறியல்கள்.ஒருபோதும் என்னை இவை தடுத்து நிறுத்தாது.ஏனென்றால் நாகர்கோயிலில் சந்து பொந்துகள் அனைத்துமே எனக்கு மனப்பழக்கம்.எங்கு நின்று மறித்தாலும் இன்னொரு பாதையில் என்னால் கடந்து செல்ல முடியும். விஷ்ணுவை காணச் செல்கையில் ராமன் வந்து வழிமறித்தது அவ்வளவு எளிதாக இல்லை.எல்லா சந்துகளும் அடைக்கப்பட்டிருந்தன.சாமர்த்தியமாக பெருமாளிடம் சென்று சேர்ந்து விட்டேன்.திரும்பி வருவதற்கு கடினமாக இருந்தது.எனது வாகனத்தில் காவிக் கொடியுடன் வந்து மோதியவன்
"போடா ...திரும்பிப் பாராமல்" என மூலாதாரத்தில் இருந்து குரைத்தான் .அவன் கண்களில் அதிகாரத்தின் மூர்க்கம்.முதுகில் ராம நாமம் . சாலையின் நடுவில் பட்டாசுகள் வெடித்துச் சிதறுகின்றன.
பெருமாள் கோயிலில் பூஜை வைத்துக் கொண்டிருந்த ஐயரும் சரி , பிற ஐயர்களும் சரி இவற்றை கவலையின்றி என்னைப் போலவே இருந்தார்கள்.அப்படியாயின் இது யாருடைய பொருள் இப்போது ?இது யாருடைய முறை ?
பொதுவாகவே மத, சாதி அதிகாரங்களின் வெறியில் புதிதாக வந்து சேர்ந்தவர்களே அதிகம் தீவிரமாக இருக்கிறார்கள்.தங்கள் புதிய அதிகாரத்தை பிறரிடம் ஜெயிக்க விரும்புகிறார்கள்.
புதிதாக மதம் ,சாதி மாறுபவர்கள் வெறியுடன் பிறரை ஜெயிக்கும் சந்தர்ப்பங்களுக்குக் காத்திருக்கிறார்கள்.பிற்படுத்தப்பட்டவர்கள் பெரும்பான்மையாக குழந்தை குட்டிகளுடன் இவற்றில் பங்கெடுக்கிறார்கள்.தங்களை ஊர்ஜிதம் செய்ய விரும்புகிறார்கள்.அவர்கள் இந்துவாக மாறி குறைய காலம் தானே ஆகிறது இல்லையா ? சத்தம் இப்போது பெரிதாகக் கேட்கிறது.
இதனையும் உள்ளடக்கியதே நாமெல்லோரும் வாழும் இந்தியா
பெருமாள் புகைப்படம் - ராஜேஷ் குமார் 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்