முத்தரப்பிற்கு மத்தியில் ...

முத்தரப்பிற்கு மத்தியில்  ...



நம்மிடையே மூன்று வகையான சிந்தனைப் போக்குகள் முன்வைக்கப்படுகின்றன.உலகெங்கிலும் மூன்றாம் உலகப் பின்னணி கொண்ட அடிமைச் சமூகங்களில் உலவுகிற பொதுவான போக்குகள் இவை.முதல் வகை மேலை நாட்டுச் சித்தாந்தங்களை அப்படியே வாரிச் சுருட்டி நம்மிடத்தில் சேர்க்கக் கூடியவை.இவை நம்முடைய மிகையுணர்ச்சில்,ரொமேன்டிக் தளத்தில் வந்தது கலப்பவை.ஒரு சமூகத்தின் விடலைகள் ,அதிருப்தியாளர்கள் இந்த போக்கிலேயே வசீகரம் கொள்கிறார்கள்.பெரும்பான்மையான ஆதரவு ,அரசியல் ஆதரவு எப்போதும்  இந்த வகைக்கு கிடைக்கிறது.இவர்கள் தங்களிடம் இருப்பதனைத்தையுமே தாழ்வுணர்ச்சியில் வைத்து ரொமேன்டிக்காக சிந்திக்கக் கூடியவர்கள்.இவர்கள் செயல்வடிவத்திற்குள் ஒருபோதுமே நுழைவதில்லை.கலை, இலக்கியம் உருவாக்குகிற பார்வைகளை புறக்கணிப்பவர்களாகவும் ,எதிர்ப்பவர்களாகவும்,சுய சமூகத்தை வெறுப்பவர்களாகவும் இவர்கள் இருக்கின்றார்கள். காலனிய பிளவு உத்திகள் அனைத்தும் இவர்கள் வழியாகவே சமூகத்திற்குள்  உள் நுழைகின்றன.கலையிலக்கிய அச்சம் என்பது இவர்களின் பொது மனப்பாங்கு.

இரண்டாவது வகையினர் உலகத்தின் சிந்தனைகளை நடைமுறை சார்ந்தது தன் வயப்படுத்த விரும்புபவர்கள்.அதே நேரத்தில் சுயமான சிந்தனைகளையும் இவர்கள் கைவிடுவதில்லை. நடைமுறை சாராதவற்றிற்கு இவர்களிடம் செல்வாக்கு எதுவும் கிடையாது.மரபின் ஆழமான கால்களிலும் நடைமுறைத் தன்மையிலும் நின்று சிந்திப்பவர்கள் இவர்கள்.பிற தரப்பினர்களால் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய பிரிவினர் இவர்கள்.பிற இரு பிரிவினரும் இவர்களையே தொடர்ந்து தாக்க முற்படுகிறார்கள்.சிந்தனையை செயல் வடிவம் நோக்கி நகர்த்துபவர்கள் இவர்கள்.சமூகத்தில் இவர்களுடைய சிந்தனைகளே ஆழமான தாக்கத்தை,திறப்பை ஏற்படுத்துகின்றன.முதல் வகையினரின் செயல்பாடற்ற கூச்சல்களுக்கு மாற்றாக ஏராளமான பங்களிப்புகளை தங்கள் அர்ப்பணிப்புகளின் மூலமாக நிகழ்த்துவார்கள் இவர்களே .கலையிலக்கிய படைப்புச் செயல்பாடுகளைப் பொருட்படுத்துகிற தரப்பினர் இவர்கள்.

மூன்றாவது வகையினர் அனைத்து சிந்தனைச் சரக்குகளையும் சுய மரபிற்கு அர்த்தம் ஏற்படுத்த,வேடம் பூண பயன்படுத்தக் கூடியவர்கள் .முதல் வகையின் நேரெதிர் பண்பு கொண்ட திருப்தியாளர்கள்.இவர்களையே அடிப்படைவாதிகள் என்கிறோம். அச்சம் இவர்களின் பிரதான பண்பு.அச்சத்தின் காரணமாகவே தாக்கவும் முற்படுபவர்கள் இவர்கள்.இவர்கள் பிறவற்றில் மீதெல்லாம் பயம் கொண்டவர்கள்.other என்பதில் இவர்களுக்கு ஏற்பில்லை.கலையிலக்கிய படைப்புச் செயல்பாடுகளில் சந்தேகம்  நிரம்பியவர்கள்.other என்று எதையெல்லாம் அடையாளம் காண்கிறார்களோ அனைத்தும் அழிக்க முற்படுபவர்கள்.

நம்மிடம் புழங்குகிற சிந்தனையாளர்களில் முதல் வகையினரையும்,மூன்றாவது நபரையுமே நாம் அதிகம் அன்றாடம் எதிர்கொள்கிறோம்.இரண்டாவது வகையினரோடு உறவு கொள்ள நமக்கு நிஜமான அக்கறைகள் தேவைப்படுகின்றன .இவர்கள் மூவருக்குமே நீங்கள் இவர்களுடைய தரப்பில் நிற்கிறீர்களா இல்லை எதிரில் நிற்கிறீர்களா  என நோக்கும் தன்மை உண்டு.இவர்கள் வாதங்களை ஏற்றுக் கொண்டால் தரப்பில் நிற்பதாகவும் ,மறுத்தால் எதிரில் நிற்பதாகவும் இவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.முதல் வகையினருக்கும் ,கடைசி வகையினருக்கும் காட்டமான எதிரிகள் தேவை.

படைப்புக் கண்ணோட்டம் என்பது இந்த மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்டது.இந்த மூன்று தரப்பினராலும் குழப்பமானது என வரையறை செய்யப்படுவது.நிரந்தரத்தன்மையும் நோக்கமும் அற்றது.ஆனால் பிறரால் எப்போதும் நோக்கமுடையது என உளவு பார்க்கப்படுவது.நோக்கம் கொண்டவர்களால் நோக்கம் கொண்டது இதுவென சாடப்படுவது.

இவையெல்லாம் நதிகள்.எதில் போய் விழுதாலும் இழுத்துச் சென்று கொண்டேயிருக்கும்.இதில் முதலும் மூன்றாவதும் பாலைவனத்தில் கொண்டு இறக்கிவிடக்கூடியவை.

நாம் யாராக இருந்தாலும் இவர்களில் ஒருவராகவே நின்று உரையாடிக் கொண்டிருக்கிறோம்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"