Skip to main content

தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்

தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்

தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்
தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வாழ்தல் என்பது இயலாத காரியம்.அந்த உபகாரம் பொருள் சார்ந்ததாகவோ , இல்லை அதிகாரம் சம்பத்தப்பட்டதாகவோ இருக்கலாம்.ஏராளமான சமூக உதவிகளை இலவசமாகப் பெற்றுக் கொழித்தவர்கள் ; உதவிகளின் பொருட்டு எளிய எழுத்தாளர்கள் மீது அவதூறுகளை பகிரங்கமாக்குவது சுய பரிசீலனை அற்றது.புறம்போக்கு நிலம் அத்தனையையும் பட்டாமாற்றி வைத்திருப்பவன் ;எள்ளுருண்டை வாங்கித் தின்றவன் மேல் குற்றச்சாட்டுகளை நீதிமான் தோரணையில் சொல்வதற்கு ஈடானது.வெட்கக்கேடானது.இதுபோன்ற விஷயங்களை ஒருபோதும் எழுதக் கூடாது என்பதே என்னுடைய பொதுவான எண்ணம்.ஆனால் எழுத வேண்டிய சூழ்நிலையை சூழல் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.ஏனெனில் ஏராளமான பேர்களின் உதவிகளால் உருக்கொண்டது எனது வாழ்க்கை.
தமிழ்ச் சமூகம் ஒருபோதும் எழுத்தாளனுக்கும் ,கலைஞர்களுக்கும் செய்கிற உதவிகளை கணக்கில் கொண்டிருப்பதில்லை.கணக்கு பார்ப்பதில்லை.செய்த உதவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என அவனுக்கு கட்டளைகள் இடுவதுமில்லை.வெளியில் தம்பட்டம் அடிப்பதில்லை.அப்படியடிக்கும் தம்பட்டங்கள் அப்படியே சச்ரூபமாக திரும்பி வந்து சேரும் என்பது தமிழ்ச் சமூகத்திற்குத் தெரியும் .தெய்வங்களுக்கு செய்வதை வெளியில் சொல்வோர் கூட எழுத்தாளனுக்குச் செய்வதை சொல்வதில்லை.அதில் ரகசியம் காக்கிறார்கள்.தமிழ் மிக உயர்ந்த நாகரீக மரபு கொண்டது என்பதற்கு மிகப் பெரிய சான்று இது.
அப்படி வெளியில் தெரிய வராத பல உதவிகளின் பின்னால் அமைத்திருப்பதுதான் தமிழில் எழுதுகிறவனின் வாழ்க்கை.இந்த உதவி காலம்காலமாக கைமாறிக் கொண்டேயிருப்பது .கைமாறிக் கைமாறி வந்து கொண்டிருப்பது. ஒரு எழுத்தாளனுக்குத் தேவையானது அனைத்துமே தமிழ் சமூகத்தில் நடக்கும்.நடக்கிறது.கண்ணுக்குப் புலப்படாத இடங்களில் இருந்து கூட அவை வந்து சேரும்.இது பொது விதி. நான் இதன் பொருட்டு உதவி பெற்றவர்கள்,உதவி செய்தவர்கள் எவரையும் இங்கே பெயர் சொல்லப்போவதில்லை.புரிந்து கொண்டால் போதுமானது.
இருப்பதிலேயே சிறந்த தானம் எழுதுகிறவனுக்கு உதவி செய்வதே என்பதை கண்கூடாக ,அனுபவப்பூர்வமாக அறிந்து வைத்திருக்கும் சமூகம் நம்முடையது.எழுத்தாளன் உதவி கேட்டு வரும் போது கடன் வாங்கி செய்பவர்களும் இங்கே உண்டு.இதுவரையில் கடன் வாங்கி பிறருக்கு உதவி செய்திராதவர்கள் எவரேனும் இருப்பின் ஒரு முறையேனும் செய்து பாருங்கள்;வாழ்க்கை முழுதும் அது தேனாக இனித்துக் கொண்டிருக்கும். அவன் உதவி கேட்டு வருகிற நிலையை ஏற்படுத்தக் கூடாது ;அதற்கு முன்னரே தேவையறிந்து முந்திவிட நினைக்கும் பலரும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.வாழ்வார்கள்.தமிழ்ச் சமூகத்திடம் இருந்து இக்குணத்தை அகற்ற இயலாது.தமிழ்ச் சமூகம் தங்கள் மூதாதையர்களுக்கு உதவி செய்யும் ஒரு வாய்ப்பு கிடைத்ததைப் போன்றே எழுத்தின் விஷயத்தில் மகிழ்கிறது
எனக்குத் தொடர்ந்து பல காலமாக உதவி வருவோர் பலர்.எனது கணக்கில் மாதந்தோறும் முடிந்ததை அனுப்பி வைக்கும் முகம் தெரியாத வாசர்களும் உண்டு.பணத்திற்காக ஒரு காரியத்தையும் நான் தள்ளிவைத்ததில்லை.காரியங்களை மேற்கொள்ள வேண்டியவற்றை செய்வது மட்டுமே என் வேலை.பணம் தானாக வரும்.எவ்வளவு பணமாக இருந்தாலும் அது மேற்கொள்ள வேண்டிய வேலையைப் பொறுத்தது.அல்லது தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையாக இருப்பினும் சரி.பெருமாளை கும்பிட்டு விட்டு வந்து நிற்பேன்.கணக்கில் பணம் வந்து சேர்ந்திருக்கும்.எவ்வளவு தேவையாக இருந்ததோ அவ்வளவிற்கு சற்றும் குறையாத பணம்.எனக்கு உண்மையில் பெருமாள் தான் ஒளிந்திருந்து எனது கணக்கில் பணம் போடுகிறாரோ என்கிற சந்தேகம் கூட உண்டு.பெருமாள் நேரடியாகவே வந்து கணக்கில் பணம் போடக் கூடியவர்தான் என்பதும் எனக்குத் தெரியும்.பலமுறை போட்டிருக்கிறாரே ? இல்லையென்று சொல்ல முடியுமா ! அப்படி போடுபவர் சிவனாகவும் இருக்கலாம்.கர்த்தராகவும் இருக்கலாம்.அல்லாஹ்வும் பல சமயங்களில் எனது கணக்கு எண்ணை உபயோகப் படுத்தியிருக்கிறார்.
இவர்கள் களைத்துச் சடைந்தால் வந்து உதிப்பான் பரசுராமன்.யார் கைவிட்டாலும் எழுப்பி நிப்பாட்ட என்னுடனேயே இருக்கிறார்கள் அன்னை பகவதியும்,சுடலை மாடனும்.சுடலை வழிப்பறி செய்தேனும் என் பையில் கொண்டு நிறைப்பான்.எனது கைகள் நீண்டு கொண்டேயிருக்க வல்லவை.இத்தனைக்கும் என்னுடைய படைப்புகளின் அலைவரிசையில் ஏதேனும் ஒருவிதத்திலேனும் தொடர்பு இல்லாத எவரிடமும் ஏதும் பெறுவதில்லை.அல்லது அவருக்கு படைப்பியக்கங்கள் பேரில் சிறு துளி நம்பிக்கையெனும் இருக்க வேண்டும்.இல்லாதபேர்கள் முன்வந்தும் திரும்பியிருக்கிறார்கள்.தபால் கார்டை உண்டியலில் போடுவது போலெல்லாம் இங்கே வந்து எதையும் போட்டுவிட்டுப் போக முடியாது. பல உதவிகளின் முகமே நான் அறிய மாட்டேன்.எந்த திருவிழாவிற்கும் நானோ, எனது குழந்தைகளோ புது துணி உடுத்தாமல் இருந்ததில்லை.பண்டிகைகளைக் கொண்டாடாமல் விட்டதில்லை.
சில விஷயங்களை சொன்னால் வியப்பாக இருக்கும் . அற்புதங்களை கடவுள் வாழ்க்கையில் நிகழ்த்துவார் என்பதற்கு சாட்சி சொல்ல பயன்படும் வாழ்க்கை என்னுடையது.தேவைக்கு அதிகத்தை வைத்துக் கொள்ளும் பழக்கமும் எனக்கில்லை.அது பிறரிடம் போய்விட வேண்டும் என நினைப்பேன்.அது உடு துணியாக இருந்தாலும் சரி ; உணவாக இருந்தாலும் சரி.எனக்கு புதிதாக ஒரு துணியுடுத்தும் ஆசை உண்டானால் கடவுள் உடனடியாக யாரையாவது பிடித்து அனுப்பி விடுகிறான்.
ஒரு இஸ்லாமிய வாசகர்,அடிக்கடி வருவார்.இந்த அனுபவத்தை விக்ரமாதித்யன் நம்பியிடம் சொல்லும் போது அவர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.அந்த வாசகர் உயர்ந்த ஜவுளிக் கடைகளில் ஏற்றுவார்.துணிகளில் விலையை பார்ப்பது எனக்கு வழக்கம்.அதனை மாற்றிக் கொள்ளயியலவில்லை .அவர் துணியைப் பாருங்கள்,விலையை பார்க்காதீர்கள் என கட்டளையிடுவார்.பெரும்பாலும் அது அவர் ஏற்கனவே இருந்த வேலையில் இருந்து வெளியேறிய சமயமாக இருக்கும்.இவற்றை நான் அறிந்தது பின்னாட்களில் .துணியை எடுத்து திரும்பும் வழியில்; "எனக்கு ஏதேனும் வேலைக்கு யாரிடமேனும் சொல்லுங்களேன்" என்பார்.நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லிவைப்பேன்.நான் தகவல் சொல்லுகிற யாரிடமும் அவர் செல்லமாட்டார்.சென்றதுமில்லை.இதுபோல ஒன்றிரண்டு முறைகள்.பின்னர் ஒருமுறை அவர் தேடி வந்த போது; துணிக் கடைக்கு உடன் செல்ல மறுத்து விட்டேன்.நீங்கள் தற்போது வேலையில்லாமல் இருக்கலாம்;பின்னர் நீங்கள் வைக்கும் கோரிக்கையை எனக்கு செய்ய இயலாமல் போகலாம் என்றேன்.நீங்கள் எதற்கும் மெனக்கெட வேண்டியதில்லை.உங்களிடம் சொல்லிவிட்டுச் சென்றால் ஒன்றிரண்டு நாட்களில் அது உண்மையாகவே நிறைவேறிவிடுகிறது;அதற்காகத் தான் சொல்கிறேன் வேறொன்றுமில்லை என்றார் அவர்.நீங்கள் மொழியில் பற்றிப் புழங்கும் போது ;அது பகிரமாக உங்கள் மீது சில ஆற்றல்களை ஏவி விடுகிறது.இதனை ஆராய்ந்தெல்லாம் அறிந்து கொள்ளமுடியும் என்று தோன்றவில்லை.
வருடம் ஒரு முறை மட்டுமே வந்து சேருகிற வாசகியொருவர்,என்னுடைய ஒரேயொரு கவிதையால் அமைந்த உறவு அது.ஊன்றுகோல் என்னும் கவிதை.கல்குதிரையில் வெளிவந்தது.அந்த கவிதை கொலையுண்ட ஒருவனின் மனைவியைப் பற்றியது.அவர் அக்கவிதைக்காக ஒரு மோதிரத்துடன் காண வந்திருந்தார்.மறுமுறை அவரை காண்கையில் அது எங்கே என்றார் .அப்போது அது அடகுக்கடையில் இருந்தது.திருப்பி கையில் கொடுத்தார்.இப்போது வருடத்திற்கு ஒருமுறை வந்து அதனைத் தொடர்ந்து திருப்பி தந்து கொண்டேயிருக்கிறார்.சலிப்பேயில்லாமல்.நான்கைந்து வருடங்களாக .எழுத்தாளனுக்கான சன்மானங்கள் இவ்வாறாக தமிழில் மாற்று வழிகளில் வருபவையே அன்றி இங்குள்ள பதிப்பகங்கள்,இதழ்கள் ஆகியவற்றை நம்பி எழுதுகிறவன் வாழ முடியுமா என்ன ?
எனது வீட்டின் உணவுச் செலவிற்கு சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாக மாதம் தோறும் உதவி வருபவரை இதுகாறும் நான் சென்று பார்த்ததில்லை.அவரும் என்னை வந்து பார்த்ததில்லை.அவர் முகம் எவ்வாறு இருக்குமென எனக்குத் தெரியாது.இத்தனைக்கும் எனக்கு உதவுகிறவர்களுக்கு திருப்பி பகிரமாக எதையுமே செய்வதில்லை. இவையெல்லாம் சில.இன்னும் ஏராளம் விஷயங்கள் உண்டு.இத்தனைக்கும் தமிழில் எந்தவொரு எழுத்தாளனுமே செய்யத் துணிந்திராத அத்தனை வேலைகளையும் உச்சி முதற்கொண்டு ,அடி பாதாளம் வரையில் செய்திருக்கிறேன்.எதனைச் செய்யும் போதும் எழுத்து தொடர்பான விஷயங்கள் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.மலம் அள்ளும் போதும் சரி,செய்தி ஆசிரியராக தினசரியில் பணிபுரிந்த போதும் சரி .இரண்டுக்கும் அதிக வேறுபாடு ஒன்றும் கிடையாது
இங்கே பதிப்பாளர்கள் உதவி செய்து விட்டேன் என கதறுவதனைப் பார்க்க பரிதாபமாக உள்ளது.எழுத்தாளனே அவனுடைய மூலதனம்.ஆனால் அதன் பேரிலேயே அவன் மதிப்பற்றவனாக இருக்கிறான்.இப்படியான கேட்டை வேறு எந்த வணிகத்திலும் காண முடியாது. உலகத்தில் பிற எந்த வணிகத்திலும் இல்லாத அதிசய பண்பு தமிழ் புத்தக பதிப்பாளனுடையது.கத்தரிக்காய் வியாபாரம் செய்கிறவன் கூட இங்கே விவசாயியை கேவலம் செய்வதில்லை. . தமிழில் பதிப்பாளர்கள் ஆதிவாசி நடனங்களைக் காணும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் மனநிலையில் எழுதுகிறவனைப் பார்க்கிறார்கள்.
பதிப்பாளர்களாக இருக்கும் ஒன்றிரண்டு நண்பர்களை தவிர்த்து எந்த பதிப்பாளன் பேரிலும் எனக்கு எந்த காலத்திலும் மதிப்பிருந்ததில்லை.அது அவசியமில்லை.ஒன்றுக்கும் உதவாதவனே தமிழில் பதிப்பு வணிகத்தில் ஈடுபடுகிறான் .எந்த பதிப்பாளனைச் சார்ந்தும் இருக்க வேண்டிய தேவை எனக்கில்லை.எனது எழுத்தின் உருப்படி தெரிந்த வாசகன் அது எங்கே இருந்தாலும் தேடி பிடித்துக் கொள்வான் என்பது எனக்கு நன்கு தெரியும்.எதனை எழுதும் போதும் சரி ;இதனை யார் வெளியிடுவார்கள் ? என்று சிறு வயது முதற்கொண்டு இன்று வரையில் கிஞ்சித்தும் யோசித்துப் பார்த்ததே கிடையாது.
தேவைப்பட்டால் துண்டுப் பிரசுரங்களாகக் கூட என்னால் விநியோகிக்க முடியும்.என்னுடைய பதிப்பாளர்களாக அகரம் கதிர்,சந்தியா நடராஜன் ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தவர்கள்.அவர்கள் ஒருபோதும் என்னிடம் கணக்கு பார்த்தவர்கள் இல்லை.ஆனால் நிறைய செய்தவர்கள்.அவர்களை பதிப்பாளர்கள் என்று நான் கருதி மதிப்பு மேற்கொண்டதில்லை.அவ்வாறு அவர்களும் பழகியதுமில்லை. ஒரு சமயம் சந்நியாசி போல எங்கெங்கோ சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறேன்.ஒரு கட்டத்தில் விட்டு நகருவதற்கு பணம் தேவை .சந்தியா நடராஜனின் தொலைபேசி எண் மட்டுமே என்னிடம் இருந்தது.பப்ளிக் பூத்திலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தில் பேசினேன். அதே இடத்தில் சில மணிநேரம் காத்திருக்கும் படி சொன்னார். இருக்குமிடத்திற்கு தேடி வந்து; தந்து திரும்பினார்.எவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பார்,எப்படி வந்திருப்பார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
உலகத்தின் பதிப்புத்துறை கணக்கு சட்ட திட்டங்களை கொண்டு தமிழ் எழுத்தாளன் தலையில் கொட்ட நினைக்கிறவன் நிச்சயமாக முற்றிய மனநல சீர்கேடு அடைந்தவனாகவே இருக்க முடியும்.ஆயிரம் பிரதிகளுக்கும் குறைவாக ஐநூறு ,முந்நூறு என நூல்கள் பதிப்பிக்கப்படுகிற ஒரு மொழியில் நின்று கொண்டு அவன் சர்வதேச கார்பொரேட் சட்ட திட்டங்களை வாரியிறைப்பான் எனில் அவனை வேறு எவ்வாறு கணக்கிடுவது ? கிராமத்து வீடுகளில் டாரஸ் டேங்கர் லாரிகளை முன்னிறுத்தி பால் விநியோகம் செய்பவன் போல !
வீடுகளில் பீடி சுற்றுவது போன்ற குடிசைத் தொழில் தமிழில் நூல் பதிப்பு. எத்தனைபேரின் கழுத்தை அறுத்து இந்த தொழில் செய்கிறீர்கள் என்பதும் தெரியாத விஷயங்கள் இல்லை.பத்தாயிரம் பிரதிகளுக்கு குறைவாக அச்சிட்டு விநியோகிப்பதை எல்லாம் பதிப்பு என்றே சொல்லக்கூடாது.
எழுத்தாளர்கள் நக்கிப் பிழைக்கிறார்கள் என்னும் எண்ணம் கொண்டோர் ஆன்ம தைரியம் இருப்பின் நக்கிப் பிழைத்துப் பாருங்கள்.
தேனீ கூட்டில் கல் கொண்டெறிபவன் ஒற்றைத் தேனீயை மட்டுமே குறி கொண்டு தாக்குகிறான் என்று எடுத்துக் கொள்ள இயலாது.
எழுத்தென்பது வினையை அறுக்கும் வேலை .புரிந்து கொள்ள முடியவில்லை எனில் பரவாயில்லை.வீணுக்கு வந்து விளையாடாமலிருங்கள்.

Comments

Popular posts from this blog

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1

முகப்பு 1 சிறு வயதில் கோடை விடுமுறை காலங்களில் சாமிதோப்பில் கொண்டு விடுவார்கள்.எங்கள் ஊரில் இருந்து கடற்கரை வழியாக சிற்றன்னை மாமா ஒருவர் என்னை மிதிவண்டியில் ஏற்றிக் கொள்வார்.மிதிவண்டியின் முன்புறம் தங்கையோ தம்பியோ அமர்ந்திருப்பார்கள். மதிய உணவிற்குப் பிறகாக எங்களை அழைத்துக் கிளம்புவார் மாமா.சாமிதோப்பிற்கு மணக்குடி வழி செல்லும் பாதையே அவர் தேர்வு செய்வது.அதுவே பாதுகாப்பானது என்று அவர் கருதினார்.பறக்கை வழியாகச் சென்று வடக்குத் தாமரைக்குளம் மார்க்கமாக வயல்வழியே இப்போது செல்லுகிற பாதை ,அப்போது இல்லை.வயல்வழியே ஒரு ஒடுங்கிய கோடு போன்ற ஒல்லியான பாதை உண்டு. அது பழையாற்றில் சென்று முட்டும்.சேறும் சகதியும் நிறைந்து பூச்சிகளின் அரவம் நிறைந்த பாதை அது.பெரும்பாலும் பூச்சிகளின் ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருக்கும்.கடப்பவர்கள் பயமுட்டும் கதைகளைப் பேசிய வண்ணம் கடப்பார்கள். குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு உகந்த வழியாகவே மணக்குடி பாதையை அவர் தேர்வு செய்வது.பெரியவர்களும் அந்த பாதையில் செல்லுமாறே அறிவுரை சொல்லி அனுப்பி வைப்பார்கள்.மணக்குடி செல்வது வரையில் கடற்கரை வழியே தொடர் மணற்குன்றுகள் உண்டு

அய்யா வைகுண்டர் இதிகாசம் 2

அவதாரத்தை நெருங்குதல் குன்றின் மேல் ஒவ்வொரு படியாக ஏறிச் செல்லுதலுக்கு நிகரானது அது.அவதாரத்தை நோக்கிய பிரயாணம் இல்லாமல் அது சாத்தியமில்லை .தெரிந்தோ தெரியாமலோ நமது ஒவ்வொரு செயலிலும் அங்கு நோக்கித் திரும்பி இருக்க வேண்டும்.படைத்தலின் ரகசியம் காண அங்கு நோக்கி நம் கண்கள் திரும்பி இருக்க வேண்டியிருக்கிறது.எப்படியெனில் தெருவில் குழந்தையை விளையாட விட்டிருக்கும் தாய்,பல வேறுபட்ட வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் அதன் பேரில் ஒரு கண்ணாக இருக்கிறாளே அப்படி.சிலருக்கு கண்ணாகவும் இருக்கத் தெரியாது,ஆனால் குழந்தையை தெருவில் இறக்கி விட்டிருப்பார்கள் . கோயில் வாசலில் நிற்கிறோம்,பரம்பொருளுக்கும் நமக்குமிடையில் உள்ள தூரமும் இடைவெளியும் நமக்கு முன்பாக தெளிவாக இருக்கிறது.நாம் வேறாகவும் அது வேறாகவும் இருக்கிறோம்.அது வேறாக இருக்கிறது .நாம் வேறாக இருக்கிறோம்.உண்மையில் பரம்பொருளும் நாமும் வேறு வேறு இல்லையே...பரம்பொருளில் என்னவெல்லாம் இருக்கின்றதோ அத்தனையும் நம்மிடமும் இருக்கிறது.இல்லாதது எதுவொன்றும் இல்லை.சிவ சிவ நான் ஆனோம் என்கிறார் வைகுண்டர்.அப்படியானால் இந்த வேற்றுமை எங்கிருந்து தோன்றுகிறது.நான் ஒவ்வொரு முறையு

அய்யா வைகுண்டர் இதிகாசம் முன்னொட்டு 3

அய்யா வைகுண்டர் இதிகாசம் முன்னொட்டு 3 தெய்வங்கள் நமக்குள் மிகவும் நுட்பமான இடத்தில் இருக்கின்றன.நாம் எப்போது என்ன நினைப்போம் என்பதை அவை அறிந்து கொள்ளுகின்றன.சிண ுங்கினால் அவை சென்றுவிடும்.ஓங்கி மிதித்து அதிர்ந்தால் விலகும்.பிறர் ஒடுங்கச் சத்தமிட்டால் ஒடுங்கும் இடம் அது.பத்து ஆண்டுகள் கழித்து இவன் நம்மை வைவான், என்றால் பத்து வருடங்களுக்கு முன்பே அவை நம்மில் விலகத் தொடங்கும்..அதற்காக எதையும் செய்யாமலோ கொள்ளாமலோ இருப்பதில்லை.வழக்கம் போல எல்லாம் நடக்கும்.நடக்க வேண்டியவை அத்தனையும் நடக்கும்.அது விரோதிப்பதில்லை.வஞ்சிப்பதில்லை.அது நமக்குள்ளும் .ஒவ்வொருவருக்குள்ளும்,என்னுடைய தெய்வம் எனக்குள்ளிருப்பதைப் போல உன்னுடைய தெய்வம் உனக்குள்ளிருக்கிறது.அவரவர்தான் ஏதேனும் துணையோடு எப்படியேனும் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.அதனை தெய்வங்கள் என எடுத்துக் கொண்டாலும் சரிதான்,தெய்வம் என்று எடுத்துக் கொண்டாலும் சரிதான்.எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் சரிதான்.ஒன்றென்று கொண்டால் ஒருமைக்கு எளிமை.பலது எனும் போது பழக்கக் கடினம்.பலதென்று கொண்டு பழக்கத் தெரிந்திருந்தால் அதிலும் பாதகம் ஏதுமில்லை.குரு என்றாலும் திரு என்றா