"நம்பித்தானே வந்தேன் "என்கிற குரல் குலதெய்வத்தினுடையது

"நம்பித்தானே வந்தேன்  "என்கிற குரல் குலதெய்வத்தினுடையது
-----------------------------------------------------------------------------------------------
பொள்ளாச்சி கிரைம் - குற்றத்தின் புதிய வரவு


பொள்ளாச்சி பாலியல் கிரைம் அதனுடைய புதிய பரிணாமத்தின் காரணமாகவே அதி முக்கியத்துவம் உடையதாகிறது.ஏற்கனவே இங்கே புழக்கத்தில் உள்ள அனைத்து விதமான பாலியல் குற்றங்களிலிருந்து இது வேறுபட்டிருக்கிறது.குற்றங்கள் அனைத்தையும் ஒரேவிதமானதாகக் கருதுவது ஒருபோதும் குற்றங்களின் அசல் தன்மையை புரிந்து கொள்ள உதவுவதில்லை.சகலவிதமான குற்றங்களிலும் ,பாலியல் குற்றங்கள் உட்பட குற்றவாளிகளிடம் அறம் சார்ந்த கண்ணோட்டம் உண்டு.தொழில்முறை  குற்றங்களில் இந்த அம்சம் சற்று குறைவு என்றாலும் கூட,உண்டு அல்லது இல்லை என்று தீர்மானமாக சொல்ல முடியாத அளவிற்கு கொஞ்சமேனும் உண்டு.ஏற்கனவே இருப்பில் உள்ள குற்றங்கள் இத்தகையவை.புதிய தலைமுறையினர் குற்றங்களுக்குள் வருகிற போது முற்றிலுமாக குற்றத்தின் அறம் இல்லாமல் ஆகிவிடுவதை பொள்ளாச்சி பாலியல் கிரைம் உணர்த்துகிறது

குற்றத்தில் எவ்வாறு அறமும் தார்மீகச்  செயல்பாடும்  இருக்கும் என்பதை படித்த புதிய வர்க்கம் அறிவதில்லை.பொதுவில் அறியப்படுகிற பிரபலமான எல்லா குற்றச் செயல்களின் களத்தில் அது அறியப்படும்.அங்கு அமர்ந்திருக்கும் .அடிமட்டத்தில் களத்தில் நின்று கொண்டிருப்போருக்கு அது புலனாகும்.போலீசாருக்கும் தெரியும்.இந்த அறம் எத்தகையது என்பதை தனி உள்ளடக்கமாக எழுதினால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும் . ஒரு வரியில் சொல்லப்போனால் மரபார்ந்த குற்றங்களில் முற்றிலும்  கேளிக்கை அம்சத்திற்கு இடமில்லை என்பதைச்  சொல்லலாம் .பாலியல் குற்றங்களையும் சேர்த்தே இதனைச் சொல்கிறேன் .இருவேறு தரப்பினருக்கு இடையிலான வாழ்க்கை மரபார்ந்த குற்றங்களில் நின்று கொண்டிருக்கும்.குற்றங்களை சற்று கூர்ந்து பார்ப்போருக்கு இருவேறு வாழ்க்கை அதனுடே இருப்பதை விளங்கிக் கொள்ள முடியும்.அத்தகைய குற்றங்கள் மிகவும் தீவிரமானவை .அவற்றில் கேளிக்கை அம்சம் இருப்பதில்லை.பொள்ளாச்சி பாலியல் கிரைம் முழுமையாக கேளிக்கை அம்சத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ள புதிய வகை ,புதிய வரவு.

இந்த குற்றத்தைப் பொறுத்து புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் மூன்று விதமான முக்கிய செய்திகள் உண்டு.  முதலாவதாக அது நிர்மலா தேவி பாலியல் கிரைம் தன்மையில் இருந்து வேறுபட்டது. எப்படி ? அதும் பாலியல் வணிகம் தொடர்பானதுதான்.ஆனால் இதுவல்ல.நிர்மலா தேவி மரபான பாலியல் வணிகத்தில் இருந்து ஒரு எட்டு அதிகமாக எடுத்து வைக்கிறார் என்று சொல்லலாம்.ஒருவிதமாக காலத்திற்கேற்ப அதனை நவீனப்படுத்துகிறார்.அதன் தேவை சமூகத்தில் இருந்தே பெறப்படுகிறது.அந்த வகை பாலியலில் ஒத்துக்கொள்ள முற்றிலுமாக விலகும் ஒருவரிடம் இருந்து வணிகத்தைப் பூர்த்தி செய்ய இயலாது.அந்த வணிக நுகர்வோரிடம் மறுப்பவரிடம் முக்கியமாக குறி விறைப்பு சாத்தியமில்லை.இந்த வகையான பாலியல் வணிகம் இன்று  தமிழகத்தின் அனைத்து தலைநகரங்களிலும் உண்டு.இதனை அறியாத காவல்துறையினரே,அரசியல்வாதிகளோ ,நவீன தொழில் துறையினரே  கிடையாது.இதற்கு ஒரு வகையான சமூக ஏற்பு மேல் மட்டங்களில் இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.உயர் அதிகாரிகள் ,அரசியல்வாதிகள்,நவீன தொழில் துறை செல்வந்தர்கள் இத்தகைய மேம்பட்ட பாலியல் வணிகத்தில் ஈடுபடுகிறார்கள்.அதற்கான சமுக ,பொருளாதார ,உளவியல் காரணிகளுள் இப்போது நான் செல்லவில்லை.மறுப்பவர்கள் மீதான குற்றத் திணிப்பும் வர்த்தகமும் பொள்ளாச்சி குற்றத்தில் புதுமையான விஷயங்களாக உள்ளன.இது ஒரு வேறுபாடு.கேளிக்கை அம்சம் ஒரு வேறுபாடு எனில் இந்த தொழில்நுட்பம் மூலமான குற்றத் திணிப்பு மற்றொரு வேறுபாடு.

தரைமட்ட நாலாந்தரமான பாலியல் வணிகம் மட்டுமே இங்கே கண்காணிக்கப்படுகிறது,தண்டனைக்குள்ளாகிறது .ஏனென்றால் இன்றைய மேல்மட்ட பாலியல் வணிகம் என்பது உயர் அதிகாரமட்டத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது.காவல் துறை,அரசியல் வாதிகள்,அதிகாரிகள் என புழங்கும் தளம் அது.இது எவ்வாறு கீழ் மட்டங்களுக்கு கசிகிறது என்பது சுவாரஸ்யமானது.இந்த வணிக உபயோகம் மேற்கண்ட உயர் மட்டங்களில் பயன்பட்ட பிறகு இதன் முகவர்களின் கூடுதல் சுரண்டல் ஆசை காரணமாக அடித்தட்டு கடைமடை ரௌடிகளிடம் கொண்டு சேர்ப்பிக்கிறார்கள்.அப்போதும் கூட இந்த வகை வணிகத்தில் துன்புறுத்தலுக்கோ ,விருப்பங்களுக்கு மாறாக நடந்து கொள்வதற்கோ வாய்ப்புகள் குறைவு.அப்படி ஏதேனும் நடைபெறுமானால் முகவர்கள் உடனடியாக மேல்மட்டத்திற்கு செய்தியை கொண்டு சென்று பாதுகாத்துக் கொள்வார்கள்.இது கடைமடை ரௌடிகளுக்கும் தெரியும்.தெரியும் என்பதால் அவர்களும் இக்கட்டுகளுக்குள்  வலிந்து சென்று மாட்டிக் கொள்ள விரும்புவதில்லை. பாலியல் வணிகம் என்பது இன்று ஒரு உயர்மட்ட வணிகம்.இந்த முகவர்கள் அனைவருமே அதிகார செல்வாக்கு நிரம்பியவர்களாகவும் ,அரசியல் செல்வாக்கு நிரம்பியவர்களாகவும் இருக்கிறார்கள்.பல முகவர்களுக்கு இது ஒரு வணிகம்தானே அன்றி ,இதில்  அவர்கள் நுகர்வோராகக் கூட பங்கெடுப்பதில்லை என்பதும் ஒரு உண்மை. வெளிப்டையாகச் சொல்வதானால் தங்கள் வணிகத்திற்காக அழைத்து வரும் பெண்களுடன் முகவர்கள் பலர் உறவு ஏதும் வைத்துக் கொள்வதில்லை.இத்தகைய பாலியல் வணிகம் எதிர்தரப்பை பழிவாங்குதலுக்கு  பயன்படுத்தப்படுவதும் உண்டு.காவல் துறையினர் இந்த வணிகத்தை மிகவும் நன்றாக அறிந்தவர்கள்.இதில் யார் யார் ஈடுபடுகிறார்கள் என்பது உட்பட .தங்களுடைய துறையில் யார் யாருக்கு இதில் சம்பந்தம் உண்டு என்பது உட்பட.தங்களால்  பெரும்பாலும் இதில் தலையிட இயலாது என்பதும் காவல்துறைக்குத் தெரியும்.கூடங்குளம் அணுவுலை பிரச்சனை தலைதூக்கிய போது ரஷ்ய விஞ்ஞானிகளுக்குப் படைக்கப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்ட பாலியல் வணிகம் இத்தகையதே.நவீன தொழில் உயர்மட்ட விருந்துகளில் போதை குறைந்து பாலியல் வணிகம் குறைந்திருக்கும்  மதுவின் இடத்தை பிடித்திருக்கிறது என்பதும் உண்மை.அதிகப்படியான பாலியல் வறட்சி,நவீன பெருந்தொழில் உழைப்பிற்குத் தேவைப்படுகிற  பாலியல் வேட்கை இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதே இந்த பாலியல் வணிகம்.பெரும்பாலும் இந்த வணிகம் பணத்தை மையமாகக் கொண்டது.பாதுகாப்பானது.இதனை புரிந்து கொண்டால் மட்டுமே பொள்ளாச்சி விவகாரம் எத்தகையது என்பதை புரிந்து கொள்ள முடியும்.பாலியல் வணிகத்தை முற்றிலுமாக அழித்துவிட முடியும் என்பது ஒரு நப்பாசைதான்.ஒருவர் விதிவசமாக இதில் அழிந்து போவாரேயாயினும் அவர் அழிந்த இடத்தில் இருந்து மற்றொருவர் வணிகத்தைப் புதுப்பித்துக் கொள்வார். வணிகத்தில் ஒருவர் தோற்கும் போது மற்றொருவர் அந்த இடத்தை எட்டிப் பிடித்து விடுவதை போன்றதுதான் இதுவும்.உலகம் முழுதும் பாலியல் வணிகம் பலவேறு தேவைகளின் மீது அமர்ந்திருக்கிறது என்பதும் இதற்கு ஒரு காரணம் .

பொள்ளாச்சி சம்பவம் இந்த வணிகத்தை முழுவதுமாக திருப்புகிறது.பண்பாட்டு ரீதியாக நமக்குள் உறைந்திருக்கும் தாழ்வுணர்ச்சியை பாலியல் கிரைம் நோக்கித் திருப்புகிறது.பல்வேறு கலாச்சாரமும் வேறுபாடுகளும் நிறைந்திருக்கும் சமூகத்தில் தாழ்வுணர்ச்சி என்பது பொதுவான குணம்.பெண்ணை என்றில்லை.வயது முதிர்ந்த ஆணாக இருந்தால் கூட "நீங்க செமையா இருக்கீங்க சார் "என்று சொன்னால் அவர் கொஞ்சம் நிமிர்ந்து நோக்குகிறார்.கரிசனம் ஏற்படுகிறது.பெண்குழந்தைகள் இதற்கு அடிமையாக இருக்கிறார்கள்.இது விசித்திரமாக அவர்களுக்கு இருக்கிறது.இது தொடர்பான கல்வி ஏதும் குழந்தைகளுக்கு இல்லை.பொதுவாக குழந்தைகளை நாம் ஏற்பதில்லை.வளர்க்கிறோம்,செலவு செய்கிறோம் என்பதெல்லாம் வேறு.நீ சரியாகத் தான் இருக்கிறாய்,நீ நன்றாகத் தான் இருக்கிறாய் என்றெல்லாம் ஏற்பதில்லை.நாம் இறக்கும் போது கூட இந்த ஏற்பின்மையோடு தான் இருக்கிறோம்.பெண்குழந்தைகள் தங்கள் உடல்ரீதியிலான ஏற்பை மிகவும் விரும்புகிறார்கள்.எப்போதும் ஒரு ஒப்பீடை இது தொடர்பாக பிறருடன் ஏற்படுத்தி கலங்கி கொண்டே இருக்கிறார்கள்.இந்த கலக்கத்திற்கு சாதியோ,நிறமோ இல்லை.நீ ஆற்றுகின்ற காரியம் எதுவோ அதுவே உனது அழகு என நாம் எப்போதாவது யாராலாவது பாடம் புகட்டப்பட்டிருக்கிறோமோ ? கல்வியின்மை அறியாமை இந்த இரண்டையும் நவீன தொழிநுட்பங்களுடன் இணைத்து இந்த சமூகவிரோதிகள் கையாண்டிருக்கிறார்கள்.முழுக்க முழுக்க இது பண்பாட்டைச் சுரண்டுவதில் வெற்றியடைந்த கிரைம்.ஒவ்வொரு வீடும் தமிழ்நாட்டில் இந்த கிரைமால் நடுங்கி கொண்டிருப்பதற்கு இது பாலியல் குற்றம் என்பது மட்டுமே காரணமில்லை.இதில் இருக்கிற நிதானம் மிகவும் நுட்பமானது.இதுவரையில் நாம் யோசித்திராது.யோசித்திராததில் இருந்து தோன்றி எழும்பிருப்பது.

"நம்பித்தானே வந்தேன் "என்கிற குரல் நிச்சயமாக நம்முடைய குலதெய்வங்களுடைய குரல்.பொள்ளாச்சி கிரைமில் நம்முடைய குல தெய்வங்கள் மாபெரும் தோல்வியை அடைந்திருக்கின்றன.என்னுடைய ஈடு செய்ய இயலாத வலி என்பது இந்த விஷயத்தில் இங்கிருந்தே ஏற்படுகிறது.குல தெய்வங்களைத் தோற்கடிப்பவை நானோ  நீங்களோ கற்பனை செய்து கொள்வது போல அறியப்பட்ட மிருகங்கள் அல்ல,அறியப்படாத எந்திரங்கள்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"