உடலே ஒரு மொழிதான்

உடலே ஒரு மொழிதான்


1


இந்த வாழ்க்கையை ஏன் வாழ்கிறான் ?
என்று தோன்றிற்று
இன்றோர் ஆக்காட்டி ஏற்படுத்திய
அதிர்ச்சி

இந்த சிறுகூலியின் பசியை எங்கிருந்து பெற்றான் ?
இந்த ஆக்காட்டி
என்று தோன்றிற்று
இரண்டாவதாக

கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள்
நீ காட்டிக் கொடுத்தவர்கள்
"இருந்து விட்டு போ "
என்கிறார் காட்டிக் கொடுக்கப்பட்டவர் 
இந்த வாழ்க்கையை நீ ஏன் வாழவேண்டும்
என்று அவர் கேட்கவில்லை
இந்த வாழ்க்கையை ஏன் வாழவேண்டும்
என்று
ஆக்காட்டியும்
கேட்டுக் கொள்ளவில்லை

எப்படியிருந்தாலும்
இந்த வாழ்க்கை சுவாரஸ்யம்
குன்றுவதில்லை போலும்
இருவருக்கும்

2

என்னை கோபமூட்டுவது எளிது
என்னை சிறுமைப்படுத்துவது எளிது
அவமானப்படுத்துவது அதனினும் எளிது
தாழ்வுணர்ச்சியைத் தூண்டுவது எளிது மிக எளிது

காதலிப்பதும் எளிது
பின் கைவிடுவதும் எளிது
மிக எளிது

3

எனது உடலே ஒரு மொழிதான்

சிறுகச் சிறுக திரண்டு வந்தது அது
அதற்கு நிறைய காலங்கள் தேவைப்பட்டது
அதனுள் சில புத்தகங்கள் உண்டு,ஓவியங்கள் , கவிதைகள் ,இசை ,இசைவின்மை
எல்லாம் உண்டு
காயங்கள் உண்டு
பிரதானமாக மகிழ்ச்சியும் உண்டு

எந்த பாகத்தை தொட்டாலும்
எப்படித் தொட்டாலும் அதற்குத் தெரிந்து விடும்

பல சமயங்களின் தொடுவதற்கான தேவையைக் கூட அது தருவதில்லை

சிறுமைப்படுத்த முயல்வது அதற்குத் தெரியும்
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சிறுமைப்படுத்துவீர்கள் என்பதும் அதற்குத் தெரியும்
அவமானப்படுத்த முயல்வது அதற்குத் தெரியும்
இன்னும் எத்தனை முறை அவமானப்படுத்துவீர்கள் என்பதும் அதற்குத் தெரியும்
புறக்கணிப்பும் அதற்குத் தெரியும்
புறக்கணிக்கவே இயலாத போது கசந்து
ஏற்பீர்கள் என்பதும் அதற்கு தெரியும்

இத்தனைக்கும் அது ஒருகாலத்தில்
ஒன்றுமே தெரியாமல் இருந்தது தான்

புறக்கணிப்பிற்கு சாதி காரணமென்றால் தெரிந்து விடுகிறது
மௌனத்திற்கு அதிகாரம் காரணமென்றால் தெரிந்து விடுகிறது
குரல் உள்ளுக்குள் பதற்றமுறத் செய்வது தெரிந்து விடுகிறது
இதற்கெல்லாம் எவ்வளவு புத்திசாலித்தனத்தை விரயம் செய்கிறீர்கள்
என்பதும் தெரிந்து விடுகிறது

ஒன்றுமே செய்யாமல் ஒதுங்கியிருந்தாலும் தெரிந்து விடுகிறது

பழைய வஞ்சம்,வெறுப்பு
எல்லாமே தெரிகிறது

அதற்காக அது ஏதேனும் திருப்பி செய்யுமா ?
செய்யாது
ஒரு கவிதை எழுதும்
பின்னர் சும்மா இருக்கும்

4

அந்த தாய்
திண்ணையின் ஓரத்தில்
சுருண்டு படுத்திருக்கிறாள்
முதலில் தனக்குள்ளிருந்த குழந்தையை
வெளியேற்றினாள்
குழந்தை விட்டு வெளியேறிய இடத்தில்
பிரகாசமாயிருக்கிறது
தாயின் முகம்

அந்த தாய் நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள்
மனதின் சிறுமி வெளியேறிய தடத்துடன்
பூரித்துப் போயிருக்கிறது
வெளிப்படும்
சொல்

அந்த தாய் ஓலைக்கீற்றில்
பாய் முடைந்து கொண்டிருக்கிறாள்
தனது உள்ளத்தில் இருந்த மாமியாரை
வெளியேற்றிய பின்னர்
அவளிடம்
ஒட்டிக் கொண்டிருக்கிறாள்
இப்போதைய
அன்னை

அந்த தாய் பிரகாரத்தில்
வந்து அமர்ந்திருக்கிறாள்
அனைத்தையும் வெளியேற்றிய பின்
காதலுடன்
சுடர்கிறது
அவள் நெருப்பு

5

முறிந்த கலவியில் இருந்து பெற்ற
சிடுசிடுப்பை
எடுத்துக் கொண்டு
களம் வந்திறங்கிய சிங்காரவேலர்
தேநீர்கடையில் நின்று
சூரியோதயம் தவறென்றார்
இன்னும் சில நாளில் உலகம் அழியுமென்றார்
ஓடும் நாயை கல்கொண்டெறிந்தார்

சிடுசிடுப்பில் விலகிய
மற்றொரு சிங்காரவேலர்
இந்த காலைக்கு இப்படியா நேர வேண்டும் ?
என்று மெளனமாக முனகிய போது
தன்னிடம் வந்து ஒட்டிக் கொண்ட
அந்த சிடுசிடுப்பை
கண்ணால் பார்த்தார்

இந்த சிடுசிடுப்பை நாம் யார்மீதும் செலுத்தாமலிருக்க
என்ன செய்யலாம் ?
மற்றொரு சிங்கார வேலர்
தனியே காலைக்காட்சிக்கு
திரையரங்கிற்குச் சென்றார்
மதிய வெயிலில்
அப்படியே இருந்தது சிடுசிடுப்பு

வீட்டிற்குச் சென்று
மதியக் கலவியில்
சிடுசிடுப்பகற்றிய மற்றொரு சிங்காரவேலர்
மறுநாள் காலையில்
சிங்காரவேலரைப் பார்த்து சொன்னார்
சூரியோதயம் தவறொன்றுமில்லை
சிங்கார வேலரே ...

தேநீர் கடையில்
மீண்டும் பொழுது புலர்ந்தது

6

மனதுக்கு சரியாக நடிக்க வராது

1

மனம் ஒரு நோய்
மனம் ஒரு பகவான்
மனதில் மகாதேவன்
ஏறி அமர்ந்திருக்கிறான்

மனம் ஒரு பேய்
மனம் இருப்பு
மனம் நடனம்
மனம் அழகு

இவையெல்லாம்தான்
எப்போது எப்போது
என்பதே
பிரச்சனை

2

மனம் சொல்பேச்சு கேட்பதில்லை
அதற்காக பிரம்பால்
அடிக்கவும் முடியாது

3

உடல் நிறைய நோயென்றால்
உடல் நிறைய மனம்

மனதில் மகாதேவன் ஏறி
அமரும் போதில்
உடல் தெளிவாகிறது

4

போகத்திற்கு முந்தைய
மனம்
போகத்திற்கு பின்பு இல்லை

5

ஒரு துளி விந்து
உள்ளில் கிடந்து உறுத்திக் கொண்டிருத்தல்
போதுமானது
மனம்
உடுத்தியிருக்கும்
அத்தனையாடைகளையும்
கழற்றியெறிவதற்கு

6

எத்தனை ஆடையாபரணங்கள்
பௌடர் களபம்
சந்தனம்
பூசி வைத்திருந்தாலும்
அது அதற்குள் இருந்து
துள்ளித் துள்ளி
குதிக்கத்தான்
செய்கிறது

7

மனம் கொந்தளிக்கையில்
உடல் பார்த்துக் கொண்டு
சும்மா கிடப்பதில்லை

8

மனதுக்கு
சரியாக
நடிக்க வராது
கசிந்து விடும்

9

அடுத்தவனுக்கு ஒன்று சொல்லும் மனம்
தனக்கு வேறொன்று சொல்லும்

10

எவ்வளவு உயரத்தில் பறந்தாலும்
அடிப்படை மனம்
அப்படித்தான்
இருக்கும்

எங்கிருந்து புறப்பட்டதோ
அங்கேயே அப்படியே

11

ஆயிரம் வருடத்து மனம்
உடல் தான்
புதிது

12

ஏர் கொண்டு உழுகிறவன் மனதில்
பச்சையாய்
எழுகிறது
வயல்
மற்றபடி
ஏறி நின்று
மிதித்தாலும்
அடங்காது

13

மனம் எங்கிருந்தோ புறப்பட்டு
வருகிறது
எங்கேயோ
புறப்பட்டுச் செல்வதற்கு

14

எல்லாம் கொடுத்துப் பார்த்தும்
துயரம் துயரம் என ஓலமிட்டு அழுமானால்
அது இங்கிருக்க விரும்பவில்லை
என்றுதானே
பொருள் ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"