அழிக்கவே இயலாதவன்

அழிக்கவே இயலாதவன்

1

எந்த ஒருவனை அழித்துவிட்டால்
அதன்பிறகு
நிம்மதியாக
இருந்துவிடலாம்
என மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறீர்கள் பாருங்கள்
அந்த ஒருவன்தான்
உங்களால்
அழிக்கவே
இயலாதவன்

2

அவற்றில் இல்லாதது

1

அத்தனை
பொருட்களையும்
எனது அறையில் வந்து
விசாரித்துக் கொண்டிருக்கும்
வயோதிகர்
அதன் வழியே
அவையல்லாத வேறொன்றை
அறிய விரும்புகிறார்

ஏதேனும் தடயம்
அவற்றில்
இருக்கிறதா என
நானும்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

அவற்றில்
இல்லை
அவற்றின்
தடயம்

2

கடுமையான
சுய நலம்
கடுமையான பொது நலம் போல
பாவனை
செய்தபடி
இருக்கிறது

3

வீட்டில் ஏற்பட்ட வடுக்கள்
வெளியே
இறங்கியதும்
சாலை விதிகளை
தாறுமாறாகக் கடக்கின்றன

4

ஒத்தையடிப்பாதையில்
தென்படும்
கடைக்கு
பலபக்க
வாசல்

3

அதனதன் நிழல்

1

வீட்டிற்குள்ளேயே
பதுங்கியிருப்பவனுக்கு முன்கோபம்
அதிகம்

நாயிடமென்றாலும் வள் எனக் குரைப்பான்

அடங்கியே இருப்பவனுக்கு
ஆத்திரம் அதிகம்

2

கடற்கரை விகாசம்
கடலம்மை
மனம் போல

3

பூர்வ குடிப்பெண்
ஆண் விலங்கு கேட்பாள்

ஆண் விலங்கு கிடைத்தால்
பெண் விலங்கால்
மோதுவாள்

4

மோதுவதற்கு எதற்காக
கொள்கையும்
கோட்பாடும்

5

எல்லா விலங்கும்
பக்தியில்
கரையும்

6

விலங்கை அடக்கி
மனிதனாய் மாறுவது
பெரும்பாடு

7

அழுகின்றத்தத்தனையும்
ஆபத்து

8

புறத்தே புகார் சொல்லி நடப்பவளின்
அகமெல்லாம்
அழுக்கு

9

எடுத்து வைக்கும்
ஒவ்வோர் அடியும்
ஒவ்வொரு விதை

10

நடக்காதவனுக்குப்
பாதை
விளங்காது

11

சீக்கு மரமேறி
சீரழியவா
மூப்பு நோக்கி
வந்தாய் ?

12

அப்பாவைப் போலவே
உன் முகம் தெரியத் தொடங்கினால்
ஒன்றில்
கண்ணாடியை மாற்று
இல்லை
உன்னை மாற்று

13

மாறிக் கொண்டேயிருப்பவனுக்காகத் தான்
இந்த வாழ்க்கை
இன்னும் இருந்து கொண்டிருக்கிறது

14

மாறாதவன் உண்பதெல்லாம்
எச்சில்
புழுக்கைகள்

15

எல்லா மரமும் நிழல் தரும்
அதனதன் நிழல்

4

இணைந்தால் மதுரம்

1

சமபாதி கிடைத்ததும்
சண்டையிடத் தொடங்குகிறாள்
பார்வதி

2

உள்ளுக்குள்
பதட்டத்தில் இருப்பவன்
வெளியிலும்
பதட்டத்தை ஏற்படுத்துகிறான்

உள்ளுக்குள் கோபம் நிறைந்தவன்
வெளியில்
சண்டையிடத்
தொடங்குகிறான்

3

சுய ரூபம்
எப்படி மறைத்தாலும்
வெளியில் கசிந்து விடும்

4

அகம் சரியாக புறத்தில்
இணைந்தால்
மதுரம்

5

தட்டிப் பறித்துக் கொண்டு
ஓடி விட முடியாது

6

போரிடத் தெரிந்தவனுக்கு
விரோதிகள்
இல்லை

7

இறுதியில் ஒரேயொரு கேள்விதான்
மிஞ்சும் .
நீ வாழ்ந்தாயா இல்லையா ?

8

தன்னை நல்லவன் என்று சதா சொல்லிக் கொண்டிருப்பவனிடம்
மட்டும்
எச்சரிக்கையாயிருங்கள்

9

சுய ரூபம்
சொல்லிக் கொடுத்து
வருவதில்லை
கலைஞன் அதனை
அழகூட்டித்
தருகிறான்

10

நல்லதும் கெட்டதும்
தீயதும் சிறப்பும்
எல்லாம்
அவன்தான்
அவன்தான்

11

பிரகலாதனை
பிச்சையெடுக்க வைத்தால்
பெருமாள்
பொறுத்துக் கொள்ள
மாட்டார்

12

ஆனது எதுவானாலும்
தன் குழந்தையை
சபிக்காதிருங்கள்
சாபம்
உங்களை
வந்தடைந்து விடும்

13

நான் எழுதும் வரிகள்
என்னுடையவை
அல்ல

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"