சிறந்த நல்லுறவே தற்போதைய தேவை

இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் மிகச் சிறந்த நல்லுறவே தற்போதைய தேவை

வரலாற்றில் அப்படியிருந்ததில்லை என்று எவரேனும் கூறுவார்களேயானால் அவர்களின் முன்பாக வைப்பதற்கு ஏராளம் தரவுகள் வரலாறு நெடுகிலும் உண்டு.தவறுகள் இருதரப்பிலும் உண்டா என்றால் உண்டு.மிகப் பெரிய தவறுகள் கூட இருபக்கமும் உண்டு.யாருடைய தவறு உயர்ந்தது ,யாருடைய தவறு செம்மையானது என்றெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்க முடியாது.தவறுகள் அனைத்தும் தவறுகளே . அவை இப்போது தேவையற்றவை.வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்துவதன் மூலமாக ; இன்று இவ்விரு தரப்புகளும் அரசியல் பகடைகளாக ஆக்கப்பட்டிருப்பதன் அபத்ததிலிருந்து தங்களை முழுவதுமாக தற்காத்துக் கொள்ள முடியும்.இது தவிர்த்து வேறு வழிகள் எதுவுமே கிடையாது.
இவ்விரு தரப்புகளில் இணக்கத்திற்கு எதிரானவர்களைக் கண்டறிந்து ஒதுங்கி கொள்ள பழக வேண்டும் .இவர்கள் மாற்று சமூகத்தவர்களைப் பற்றிய அச்சங்களை தங்கள் சொந்த சமூகங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டே இருப்பவர்கள் .பிற சமூகங்களைப் பற்றிய குறைந்த பட்ச அறிவும் இல்லாதவர்கள். இவர்களில் ஒதுங்கி கொள்வதே சிறந்த வழி.இவர்கள் இல்லாமலெல்லாம் ஆகமாட்டார்கள்,ஆனால் சமகாலத்தில் இவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகியிருக்கிறது .இது அபாயகரமானது .
எங்கள் சிறு பிராயத்தில் குடும்ப நண்பராக இருந்தவர் ஹசன் சாஹிப் .என்னுடைய பெரியப்பாவின் வயது அவருக்கு.எங்களுடைய சித்தப்பாக்களுக்கெல்லாம் சிறந்த ஆலோசகராகவும் இருந்தவர் அவர்.ஜவுளி வியாபாரம்.இப்போதும் அவருடைய கடை தெங்கம்புதூரில் சந்திப்பில் உள்ளது.சிறிய கடை .அங்கே ஆடைகளை வாங்கிப் பழகியவர்கள் இன்றும் பிற கடைகளுக்குச் செல்வதில்லை.தொட்டு அடுத்த கடை என்னுடைய ஒரு சித்தப்பாவுடையது.எங்கள் வீடுகளில் நடைபெறுகிற அனைத்திலும் அவர் இருப்பார்.அவருடையதில் நாங்கள் இருப்போம்.அவர் வீட்டு விழாக்களில் ஆட்டுக்கறி மிகவும் விஷேசமான ருசியுடன் இருக்கும் .பெரிய பெரிய துண்டுகளாக நல்ல ருசியுடன் இருக்கும்.எங்கள் வீடுகளில் மிகவும் சிறிய துண்டுகளாக வைப்பார்கள்.அதுவும் எப்போதாவது.விஷேச நாட்களில்.அவர் வீட்டு விருந்து நிகழ்வுகளில் நாங்கள் என்றில்லை.சுற்றுப் பகுதி மக்களில் பெரும்பான்மையோர் கலந்து கொள்வார்கள்.எங்கள் குடும்பத்திற்கு ஹசன் சாஹிப் போல அன்றைய காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சாஹிப் இருந்தார்.அப்போதைய சாஹிப்புகள் வெளிவட்டார பழக்கம் அதிகம் கொண்டவர்கள்.அவர்களுடனான பழக்கமும் உறவும் ,அவர்களுடைய ஆலோசனைகளும் ஊரில் உள்ள ஒவ்வொரு பெரிய குடும்பத்தினருக்கும் தேவையாகவே இருந்தன.குறிஞ்சாலியன் விளை இஸ்லாமியர்களில் பலர் உறவினர்கள்.
மசூதி இடிப்பிற்குப் பிறகு இரண்டு தரப்புகள் மத்தியிலும் ஒருவித அச்சம் உண்டானது.அது இடைவெளியாகி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு இருண்ட சுவர் எழும்பியது.இறந்த காலத்தில் வாழ்பவர்கள் இருதரப்பிலும் இந்த விரிசலை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
இதையெல்லாம் மீறி யதார்த்த வாழ்வில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் உறவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.எந்த இரு பக்கத்து பக்கத்து சமூகங்களும் முற்றிலும் சச்சரவுகள் இல்லாமல் வாழ முடியாது.அத்தகைய சச்சரவுகள் மிகவும் எளிமையானவை.அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய சச்சரவுகள்.அன்றாட வாழ்வில் அதன் காரணமாகவே எளிதில் ஆறிவிடக் கூடியவை.எடுத்து வைத்து சேகரிப்பவை,இறந்த காலத்தில் இருந்து திரட்டியெடுத்து கொண்டு தரப்படுபவை எளிதில் ஆறுவதில்லை .
இறந்த காலத்தை முன்வைத்து பிளவில் காலுன்றி நின்றால் இந்தியா போன்றதொரு நாட்டில் எந்த சமுகமாவது இங்கே நிம்மதியாக வாழ முடியுமா ?
அஜீஸ் நந்தி தன்னுடைய ஒரு கட்டுரையில் வடக்கில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே "ஹே ராம் " என்று கூறி முகமன் சொல்லிக் கொள்ளும் பழக்கம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கூட பல இடங்களில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.நாம் நமஸ்காரம் என்று சொல்லிக் கொள்வதை போல ,வணக்கம் என்று சொல்லிக் கொள்வதை போல.
எந்த விஷயமானாலும் சரிதான் எந்த சமூகம் விட்டுத் தருகிறதோ அதுவே உயர்ந்த சமூகம்.சந்தேகமே வேண்டாம் . விட்டுத் தர இயலாதவனை பீடை கொஞ்சம் கொஞ்சமாகப் பற்றத் தொடங்கி முற்றிலும் பற்றி முடக்கிவிடுகிறது .கோயில் கட்ட வேண்டும் ,கோயில் உடைக்க வேண்டும் என்கிற இரு தரப்புகள் ; நீ கக்கூஸ் வேண்டுமானாலும் கூட கட்டிக் கொள் என்று விபரமறிந்தவர்களால் புறக்கணிக்கப்படுவார்களேயாயின் செயல் இழந்து போவார்கள்.மஹா விஷ்ணுவிற்கும்,ஆதி சிவனுக்கும் ,அல்லாவிற்கும் தாங்கள் ஒருவர்தான் என்பது இதுகாறும் தெரியாமலா இருந்திருக்கும் ?
சிறுவயதில் கிருபானந்த வாரியார் போன்ற பெரியோர்கள் இந்து மத கோயில்களில் உரையாற்றுவார்கள்.இனிமையாக இருக்கும்.சகல மதத்தவர்களும் அவ்வகை பேச்சுக்களைக் கேட்கலாம்.இப்போது நாகராஜா கோயில் பிரசங்க மேடைகள் கொலைக் கூச்சலாக இருக்கிறது.அங்கே ஒருவன், அது ஆன்மீகத்தை பேசுவதற்கான மேடை என்பது கூட தெரியாமல் நின்று கொண்டு போருக்கு எப்போது போவது ? என்பது போல பேசிக் கொண்டிருக்கிறான்.மசூதிகள் முன்பாக நாலாந்தரமான அற்பப் பிரசங்கிகளின் ; தலை சுற்றுமளவிற்கு வன்முறையின் தடித்த வார்த்தைக் கொப்புளங்கள்.இவர்களுக்கெல்லாம் வேறு ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது.அது நமக்குத் தேவையற்றது.
இந்த நல்லுறவை எவ்வாறு ஏற்படுத்துவது ? இருதரப்பு அரசியலை பேசுவதை இரு தரப்பிலும் நிறுத்துவது,ஒதுங்கி கொள்வது.இந்துக்களை திட்டுவோரிடம் இஸ்லாமியர்கள் மிகவும் எச்சரிக்கையும் இருக்க வேண்டும்.இந்து ஆகமங்களை, நம்பிக்கைகளை தாக்குபவர்கள் இஸ்லாமியர்களுக்கும் எதிரானவர்களே.அது போலவே இஸ்லாம் வெறுப்பை கக்குவோர்களிடம் இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.நாம் முற்போக்கு இடைத்தரகளிடம் காரியத்தை விடுவோமேயானால் அது குல நாசம்.பிளவின் இடைத்தரகர்களாக பலகாலமாக செயல்பட்டு வருபவர்கள் அவர்கள்.
இங்கே ஒவ்வொரு சாதியினரும் ,மதத்தினரும் பொருளாதார உயர் நிலை ஏற்பட்டதும் பிறரிடம் மேலாதிக்கம் செலுத்தும் போக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.நம்முடைய அன்றாட அரசியல் உளறல்கள் அனைத்துமே இதன் நிமித்தமானதே அன்றி வேறில்லை.மேலாதிக்கம் செலுத்தாத சமூக உறவுகளே நாகரீக சமூகத்திற்கு ஏற்பானவை.அது இயலும்.முயற்சிக்க வேண்டும்."பைய பைய தின்றால் பனையையும் தின்னலாம் "என்று ஒரு பழமொழி உண்டு.இருபக்க உறவு சாத்தியம்.சாத்தியமாக்க வேண்டும்.முற்போக்கு இடைத் தரகர்களிடம் எச்சரிக்கையுணர்வுடன் இருப்போமேயானால் இது சாத்தியமாகும்.
ஒரு சமயம் ஒரு நண்பர் அளித்த விருந்து.மயக்கம் உண்டு பண்ணும் பெரு விருந்து.பிரபஞ்சனும் அந்த விருந்தில் அன்று எங்கள் மேஜையில் இருந்தார். தாமதமாக விருந்திற்கு மேஜையை நோக்கி வேறொரு நண்பர் வந்து கொண்டிருக்கிறார்.அவர் எனக்கு ஆகாதவர் என்று கருதி சில அல்லக்கைகள் அவரை வாயிலிலேயே வழிமறித்து ஒரு பக்கமாக இழுக்கிறார்கள்,என்னை மேலும் சில அல்லக்கைகள் மேஜையில் இருந்து இழுத்து மறுபக்கமாக இழுக்கிறார்கள்.இருவரும் நேரில் சந்தித்தால் அடித்துக் கொள்வோம் என்கிற கவலையாம் அல்லக்கைகளுக்கு.
அவர் விடுங்கடா என்று கத்த;நான் மறுபக்கம் எதுக்குடா பிடித்து இழுக்கிறீர்கள் என்று கத்துகிறேன்.வலியேற்படுமளவிற்கு பலவந்தம் செய்கிறார்கள்.கொஞ்சம் நேரத்தில் என்ன நடந்தது என்றே அனுமானிக்க இயலவில்லை.என்னைப் பிடித்து இழுத்தோரை தூக்கியெறிகிறேன்,அவரும் அது போலவே செய்து முன்னேறுகிறார்.அவர்கள் எதிர்பார்த்தது போலவே காரியம் சிறப்பாக நடந்து முடிந்தது.அல்லக்கைகள் ஆனந்தத்தோடு வீடு திரும்பினார்கள்.ஒன்றுமில்லாததையும் ஊதி பெருக்கி கலவரம் நிகழ்த்திக் காட்டுவதில் சமர்த்தர்கள் இந்த அல்லக்கைகள்;அதில் உண்மையாகவே அவர்களுக்கு ஏதோ ஒருவித மகிழ்ச்சி இருக்கிறது.நமக்கு ஒருபோதும் தேவைப்படாத பிறழ்ந்த மகிழ்ச்சி
இந்த இரண்டு தரப்புகளில் இருந்தும் இழுத்துக் கொண்டிருப்போரை ஒதுங்கிச் சென்றாலே போதும் . தானாக எல்லாம் சரியாகும்.அறிய வேண்டும்.அதுவே வேலை

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"