சும்மா இருப்பவனை ஆறு கடந்து செல்கிறது

சும்மா இருப்பவனை ஆறு கடந்து செல்கிறது

1

நான் சும்மா இருக்கையில்
அனைத்தும் நிகழத் தொடங்குகின்றன
கொந்தளிக்கையில்
அணைந்து விடுகின்றதத்தனையும்

2

ஊரையெல்லாம் அறிந்து
திண்ணையில் வைக்கிற
பெரியவரிடம்
உங்களை
அறிந்து கொண்டீர்களா
என்று கேட்டேன்

3

சும்மா இருக்கையில்
ஒரு நட்சத்திரம்
உள்ளிறங்கிச் செல்கிறது

4

அனைத்து சந்தடிகளும் ஆசைகள்

5

சந்தடியில் சிக்கியவன் ஆற்றினைக் கடந்து செல்கிறான்
சும்மா இருப்பவனை ஆறு கடந்து செல்கிறது

6

மனித வெடிகுண்டு
பேராசையின்
வடிவம்

7

எத்தனை அடிபட்டாலும்
கவிதையே
என்னைக் கரையேற்றுகிறது

8

வெளியூர் சென்று திரும்பி
குளிக்கிறேன்
மொத்த வெயிலும்
நீராய்
இறங்கி
பூமியில்
மறைகிறது

9

தண்ணீரில் எவ்வளவு மறைபொருட்கள் ?

10

எல்லாம் அப்பட்டமாக வெளியே புலப்படுவது போல தான் தோன்றச் செய்கிறது
மாயை

11

சும்மா இருக்கத் தெரிந்தவன்
ஒரு போதும் சும்மாவே
இருப்பதில்லை

நான் என்னை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் ?

1

வீழ்த்த நினைக்கிறோம் என்பது
வீழ்த்த நினைக்கிறவனுக்கு தெரிய வேண்டும்
அதற்குப் பெயரே
யுத்த தர்மம்

2

ஒவ்வொருவரைப் பற்றியும்
அப்படி
என்னதான் விஷேசமாகச் சொல்லிவிட முடியும் என்று
நினைக்கிறீர்கள் ?

3

என்னுடைய மனதை சவுக்கால் அடித்து
கலங்கச் செய்வது
வேறு எவரும்
கிடையாது

4

அத்தனை கதவுகளையும்
திறந்த பின்னர்
தெரிகிறது
இந்த உலகம்
வெறும் வெட்ட வெளி
என்பது

5

ஒரு துளி விஷத்தைத் தின்ற பிறகு
ஒரு துளி தேன் கிடைக்கிறது

6

துயரம்
ஆனந்தத்தின்
இருள் பிரதேசம்

7

எவ்வளவு பெரிய மரம் என்பது
தெரிய வேண்டியதில்லை
அங்கோர் குருவி
கூடு கட்டிக் கொள்வதற்கு

8

எத்தனை லிட்டர் ரத்தம் குடித்தாலும்
எல்லாம் மலமாகவே வெளியேறும்
பிறகு எதற்காக
இப்படி
கொந்தளிக்கிறாய் ?

9

ஒரு அரக்கனை வதம் புரிகையில்
அத்தனை அரக்கர்களும் மரிக்கிறார்கள்
ஒரு அரக்கி வீழும் போது
அத்தனை அரக்கிகளும்
அழுகிறார்கள்

10

நான் என்னை வைத்துக் கொண்டு
என்ன செய்யப் போகிறேன்
என்பதே
எனது
பிரச்சனை

11

இல்லாத இடத்திலெல்லாம்
இறைவன்
நிரம்பியிருக்கிறான்

12

பெருமாள் அதிகமாக இருக்கையில் பிரச்சனை இல்லை
குறையக் குறைய
பேராபத்து

13

அந்த கடையில் வேலைக்கு வந்தவன்
உரிமையாளராக நின்று கொண்டிருக்கிறான்
அவன் தரப்பு சரியாகக் கூட
இருக்கலாம்
இருப்பினும்
அதே கடையில் அப்படி பார்ப்பதில்
கஷ்டம் இருக்கிறது

அண்ணனின் அகால மரணத்திற்கு பின்
அண்ணிக்கு அடைக்கலம் செய்தவன்
பெரிய முற்போக்கு சந்தேகமில்லை
என்றாலும்
பஜாரில் அவர்கள் நடந்து செல்கையில்
வானத்தில் இருந்து அண்ணன்
சற்றே
திடுக்கிட்டு விடுகிறான்
எவருக்கும் தெரியாமல்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"