பகைவன் இல்லாத மனம் காற்றைப் போலிருக்கிறது

பகைவன் இல்லாத மனம் காற்றைப் போலிருக்கிறது

1

எனக்குள்ளிருந்தான்
பகைவன்
அழித்தேன்
வெளியிலிருந்த பகைவரெல்லாம் அழிந்தனர்

அவனை கண்டறிய வயதில் பாதியாயிற்று

எவ்வளவு பேர்களென
ஆச்சரியமாக இருந்தது

விரைவில்
பகைவனைக் கண்டடைந்து விடு இளைஞனே

பாதி வயது
மிச்சமாகும்
மீதி வயது உனதாகும்

2

உள்ளில் இருக்கும்
பகைவனுக்கு
முதலில்
சோறு போடுவதை நிறுத்து
நான்கு நாளில்
ஓடிப்போவான்

நீருற்றுவதை நிறுத்து
இரண்டு மணிநேரத்தில்
மாறி விடுவான்

மூச்சுக்கு ஒருதரம் நினைப்பதை நிறுத்து
கணத்தில்
விலகிவிடுவான்

நீ அவனை காதலிக்கிறாய் என்பது
தெரிந்து
நானிதை
உனக்குச் சொல்கிறேன்

3

பகைவன் ஒருபோதும்
உன்னைத் தேடுவதில்லை
நீதான் சதா அவனைத் தேடித் கொண்டிருக்கிறாய்

4

எத்தனை பகைவன் எத்தனை பகைவன்
என்பதுதானே
உன் பிரச்சனை ?
அத்தனை பகைவனும்
ஒருவனே
உன்னகங்காரன்

5

பகைவன் இல்லாத மனம்
காற்றைப் போலிருக்கிறது

6

உனக்கு இரண்டு பாத்திரங்கள் உண்டு
அதிலொன்று
உன்னுடைய
பகைவனின் பாத்திரம்

7

நீ சோறு வைத்தால் மட்டுமே
எடுத்துத் தின்னும் அளவிற்கு
உன் பகைவன்
பலகீனமானவன்

8

பகைவன் பகைவன்
என நீ பயந்து கொண்டிருப்பதெல்லாம்
உன்னைப் பற்றித்தான்

###

பிரதோஷ சிவன்

1

இடர் தோன்றும் மறையும்
இடரை முன்வைத்து
சிவத்தை காக்காமல் இயலுமோ

2

அத்தனையும் சிவமென்றால்
சிற்றெறும்பும் சிவமன்றோ

3

நீ சிவமென்றுணர்ந்தால்
பின்னர்
நானும் சிவம்
என்பது
தெளியும்

4

முழுதும் சிவமாயிருந்தால்
சோதனைகள்
இல்லை

5

சிவமல்லாதது அத்தனையும் இணைந்து
நின்று எதிர்த்தால்
எளிது

சிவம்
விஸ்வரூபக் காட்சியாக

6

சிவத்துக்கு அபிஷேகம் மட்டும்தான்
செய்ய வேண்டுமென்பதில்லை
சமையல் வேலைகள் கூட
பணிக்கலாம்

7

அத்தனை சிவத்திற்கு
மத்தியில்தான்
ஆதி சிவனும்
சென்று கொண்டிருக்கிறான்

8

தொட்டுத் தொட்டு
சிந்தையெல்லாம் சிவமானால்
சிவனைத் தேடித் செல்லத்
தோன்றாது

9

ஆயிரம் சிவத்திற்கு மத்தியில்
விந்தை தீராது நிற்கிறேன்
அனைத்திலும் ஒரு
அரை நிர்வாண
பக்கிரி

10

ஆடுவதை நிறுத்த முடியாது

11

அரை நிர்வாணத்தில்
அமர்ந்திருப்பது
அரை
சிவம்

12

சுகம் அல்லாதது எல்லாம்
சிவம் அல்லாதது

###

இவையெல்லாம் கேட்பதற்கு
நான் எதற்கு
இவையெல்லாம் காண்பதற்கு
நான் எதற்கு
இவையெல்லாம் பேசுதற்கு
நான் எதற்கு
இவற்றிற்கெல்லாம் எதிர்வினை புரிய
நானெதற்கு
அதற்குள்
சிவம் தான் எதற்கு ?

###

அவளுடைய சுபாவத்தில்
இவளுடைய சுபாவத்தை
இல்லாமல்
ஆக்குவது கடினம்
சொந்த சுபாவம் ஒன்றிரண்டிருந்தால்
சிறப்பு

அவர் கொடுத்துச் சென்ற கொஞ்சம்
என் கையை
அடைத்துக்
கிடக்கிறது
யாரிடமேனும்
ஏற்பிக்க
ஏங்கி

இதற்கு
அப்பால்
நானென்பதும்
நீயென்பதும்
கொஞ்சம்
கொஞ்சம் தான்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"